சமீப காலத்தில் தமிழ்ப் புத்தகங்களின் விற்பனை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி! எனினும், சென்னை புத்தகக் காட்சியில் பெரும்பாலான நூல்கள் குறைபாடுகளுடனேயே இருப்பதைக் கண்டபோது நம் பதிப்பாளர்கள் பெரும்பாலும் புத்தக உருவாக்கம், வடிவமைப்பு போன்றவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு புத்தகத்தின் அங்கங்கள் எவையெவை என்பதையும் பதிப்பு நெறிமுறைகளையும் நியதிகளையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.
புத்தகக் காட்சிக்காக அவசர கதியில் உருவாக்கப்படும் பல நூல்களில் விடுபடல்கள் இருக்கும். தவறுகள் மலிந்திருக்கும். பொருளடக்கம் பகுதியில் தலைப்புகள் இருக்கும். ஆனால், பக்க விவரம் இருக்காது. சில நூல்களில் ஆசிரியர் குறிப்பு இருக்காது. அவரது பிற நூல்கள் பற்றிய விவரமும் கொடுக்கப்பட்டிருக்காது. நூலைப் பற்றிய பின்னட்டைக் குறிப்பு இருக்காது.
தமிழில் எழுதும்போது தசம அளவீடுகளைத்தான் பயன்படுத்த வேண்டும். ஃபாரன்ஹீட், அடி, மைல் போன்ற பழைய அளவீடுகள் இருந்தால் மயக்கத்தை ஏற்படுத்தும். அதே போல் நாடுகளின் பெயர்களும் சரியாக எழுதப்பட வேண்டும். பர்மா அல்ல. மியான்மர்.
பெயர்கள் ஒரே சீராக எழுதப்பட்டிருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். ஒரு நூலில் ஒரே பத்தியில் ஒரு பெயர் - முத்துலெட்சுமி ரெட்டி, முத்து லட்சுமி, முத்துலெட்சுமிரெட்டி, முத்து லட்சுமி அம்மை என-பல விதங்களாக இடம்பெற்றிருக்கிறது. இதைக் கணிணியின் மூலம் சில நொடிகளில் நூல் முழுவதும் சீராக்கிவிட முடியும். நூலுக்கு மதிப்புரை எழுதுபவர்களும் இந்த அம்சங்களை - நேர்த்தியாக இருந்தாலும், குறைபாடுடன் இருந்தாலும்- கண்டுகொள்வதில்லை. நம்மிடையே செப்பனிடுவதில் தேர்ந்தவர்கள் மிகக் குறைவு என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
நூலாசிரியர் எந்த வெளியீடுகளை ஆய்வுக்குப் பயன்படுத்தியுள்ளார் என்பதைக் காட்டும் பகுதி நூலடைவு (Bibliography). ஆதார நூல்கள் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் ஆசிரியர் முன்வைக்கும் விவரங்களின் நம்பகத்தன்மை கூடுவது மட்டுமன்றி இந்தத் தளத்தில் மேற்கொண்டு ஆய்வுசெய்ய முற்படுபவர்களுக்கு அது ஒரு கைகாட்டி மாதிரியும் அமையும். கல்விப்புலம் செழுமையுற இந்த அங்கம் அவசியம். நூல்களின் முழு விவரங்களும் இங்கே கொடுக்கப்பட வேண்டும். இப்போது ஆங்கில நூல்களின் தலைப்பை வைத்து முழுப் பதிப்பு விவரங்களை இணையத்தில் பெறலாம். தமிழில் அந்த வசதி இன்னும் வரவில்லை. ஆகவே, வேலை சற்றே அதிகம். ஆனால், இப்பகுதி நூலின் ஒரு முக்கியப் பகுதியாக அமையும். சீராக அமைந்தால் அது நூலின் பயனை மட்டுமல்ல, மதிப்பையும் கூட்டும்.
அபுனைவு நூல்களில் சொல்லடைவு ஒரு முக்கியப் பரிமாணம். அதிலும் கட்டுரைத் தொகுப்புகளில் பொருளடக்கத்தைப் போலவே இதுவும் அவசியமான ஒரு அங்கம். புனைவிலக்கியத்திலோ கவிதையிலோ இந்தப் பிரச்னை வருவதில்லை. அதனால்தான் என்னவோ இதைப் பற்றி எழுத்தாளர்கள் பேசுவதேயில்லை. இதில் வியப்பு என்னவென்றால் 50-களில் வெளியான மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘பெளத்தமும் தமிழும்’ போன்ற பல நூல்களில்கூட விலாவாரியான சொல்லடைவு இருப்பதைக் காண முடிகிறது. இன்று ஆ. சிவசுப்ரமணியன், தொ. பரமசிவன், ராஜ்கெளதமன், அ. மார்க்ஸ், ஜெயமோகன் போன்றோரின் சீரிய கட்டுரைகளைக் கொண்ட தொகுப்புகள் பல சொல்லடைவு இல்லாமலே பதிப்பிக்கப்பட்டுள்ளது அவலம். எந்தெந்தப் பொருட்களை, கருதுகோள்களை அவர்கள் தொட்டுச் செல்கிறார்கள், அவர்களின் எழுத்துக்களின் வீச்சு என்ன என்று எப்படித் தெரிந்துகொள்வது? சொல்செயலியின் (word processor) உதவி இருப்பதால் சொல்லடைவு தயாரிப்பது இன்று எளிதாகிவிட்டது. ஒரு சொல் நூலில் எங்கெங்கு வருகிறது என்பதை இன்று கணிணியின் மூலம் சடுதியில் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு புத்தகத்தின் முதுகில் (spine) அதன் தலைப்பையும் ஆசிரியரின் பெயரையும் அச்சடிப்பது ஒரு அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும் மரபு. அலமாரித் தட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்போது, நாம் தேடும் நூலைக் கண்டுபிடிப்பது எளிதாகிறது. படிப்பதற்கு வசதியாகத் தலைப்பு மேலிருந்து கீழாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். சில நூல்களில் கீழிருந்து மேலாக அச்சிடப்பட்டிருப்பதைக் காணலாம்.
கழுத்தை இடதுபுறமாக வளைத்துக்கொண்டுதான் தலைப்பைப் படித்து அறிந்துகொள்ள முடியும். வெற்று முதுகுடனும் பல நூல்களை நான் பார்த்திருக்கிறேன். அசோகமித்திரன் போன்றோரின் கட்டுரைத் தொகுப்புகள்கூட இந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல. ஒளிப்படங்களை எடுத்தது யார் என்பது போன்ற விவரங்களை வெளியிடுவது பதிப்பு அறம். இணையத்திலிருந்து எடுத்தாலும் அது குறிப்பிடப்பட வேண்டும். முயற்சி செய்தால் இத்தகைய தவறுகளைக் குறைக்க முடியும். பதிப்பாளர்கள் சரிபார்ப்புப் பட்டியல் (Checklist) ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு நாட்காட்டி போல் அலுவலகச் சுவரில் தொங்க விட்டுக்கொள்ளலாம். புத்தகத்தின் எல்லா அங்கங்களும் இருக்கின்றனவா, சரியாக இருக்கின்றனவா என்று கவனிக்க முடியும்.
அதே போல, மொழியைச் செப்பனிடுதல் என்ற பணி தமிழ் எழுத்துலகில் உரிய கவனத்தைப் பெறுவதில்லை. இன்று பெருவாரியான வெளியீடுகள் செப்பனிடப்படாமலேயே வெளிவருகின்றன என்பதைச் சில பக்கங்கள் படித்ததுமே உணர முடிகிறது. ஆசிரியர் கூறும் கருத்து வெளிப்பாடு தெளிவாக இருக்கிறதா என்று செப்பனிடுபவர் பரிசோதிப்பார்.
இது வைரத்தைப் பட்டை தீட்டுவது போன்ற இன்றியமையாத பணி. இந்த எழுத்துப் பணியில் உதவப் பல நல்ல நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தின் ‘பிழை நீக்கி எழுது முறை’ (1956), மொழி வெளியிட்டுள்ள ‘தமிழ் நடைக் கையேடு’ (2001) போன்ற நூல்கள் எழுத்தாளர்கள் கைவசம் எப்போதும் இருக்க வேண்டியவை.
இன்றைய சூழலில் பல புதிய கரிசனங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. பெண்ணியம், மனிதவுரிமை, போர் எதிர்ப்பு, அணு எதிர்ப்பு, சூழலியல், கட்டுடைப்பு, கதிரியக்க மாசு, மத நல்லிணக்கம் இவற்றைப் பற்றிப் பேச, எழுத, சொல்லாடல் உருவாக்க மொழியை நாம் தயார் செய்தாக வேண்டும். இந்த அக்கறைகள் பற்றிய புதிய நூல்கள் தோன்றும்போது, அவை முழுமையான படைப்புகளாய், அங்கக் குறைபாடில்லாமல், உருவாக்கப்பட வேண்டும். தமிழ் மொழியின் பாரம்பரியத்தைக் குலைக்காமல் இந்தப் பணியைச் செய்ய முடியும்.
- சு. தியடோர் பாஸ்கரன், சூழலியல் ஆர்வலர், ‘சோலை எனும் வாழிடம்’, ‘கல் மேல் நடந்த காலம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago