மரணம் ஒரு கலை 26: கடைக்கண் பார்வையில் சரிந்த மாமலை

By அ.வெண்ணிலா

அலெக்ஸாண்டர் புஷ்கின்

வரலாற்றையும் இலக்கியத்தையும் இணைத் தவர், தன் கவிதைகளை வெடிமருந்தாக்கும் வித்தையறிந்தவர், யதார்த்தவாத இலக்கியத் துக்கு வித்திட்டவர் என புஷ்கினை ஓராயிரம் சொற் களில் வியக்கலாம். ஒரே வரியில் ‘ருஷ்ய இலக்கியத்தின் தந்தை’ எனலாம்.

19-ம் நூற்றாண்டுக்கு முன்பு ருஷ்யாவுக்கு என தனித்துவ இலக்கிய வரலாறு இல்லை. ஆசிய கண்டத் தில் அமைந்திருந்தாலும், ஐரோப்பிய நாடுகளுக்கு அருகில் அமைந்த ருஷ்யா, ஆசியாவைப் போலிருக்க வேண்டுமா? ஐரோப்பாவைப் போலிருக்க வேண்டுமா என்ற குழப்பத்தில் இருந்தது.

 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தனக்கென அரசியல், இலக்கிய கொள்கைகளைக் கண்டடைந்த ருஷ்யா, ஒரே நூற்றாண்டில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. ருஷ்ய இலக்கியத்தின் முன்னோடியானார் அலெக்ஸாண்டர் புஷ்கின்.

உருவானது ஓர் அமைப்பு

ஆப்பிரிக்க  கருப்பின ராணுவ அதிகாரியின் மகள் வழிப் பேரனான புஷ்கின் 12 வயதில் பீட்டர்ஸ்பர்க் நகரத்துக்குப் படிக்க வந்த நேரம், ருஷ்ய அரசியல் வரலாற்றில் சூறாவளி வீசிக் கொண்டிருந்தது. நெப்போலியன் ருஷ்யாவைத் தாக்கப் பெரும்படையுடன் வந்தார். ருஷ்ய மன்னன் நிக்கோலஸ் நெப்போலியனை வீழ்த்தியதோடு, பிரான்ஸ் வரை விரட்டிச் சென்றார். படையுடன் சென்ற வீரர்கள் நெப்போலியனை வீழ்த்தும்வரை பிரான்ஸில் தங்கினர். ஜார் அரசனை வீழ்த்தும் புரட்சி சிந்தனையுடன் நாடு திரும்பினார்கள். மா பீட்டரால் உருவாக்கப்பட்ட செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில், அவருடைய மகன் நிக்கோலஸை வீழ்த்த முதல்முறையாக ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

அரசின் கொடுங்கோன்மைக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களைப் புரட்சிக்கான ஆயுதமாக்க புஷ்கினின் கவிதைகள் இளைஞர்கள் மத்தியில் வாசிக்கப்பட்டன. அவரின் ‘விடுதலைக்கு' என்ற கவிதையை ஆயிரக்கணக்கானவர்கள் கைகளால் எழுதியே புரட்சிக்காரர்களுக்கு அனுப்பினார்கள். புரட்சி வீரர்களின் கை விளக்கைப்போல் புஷ்கினின் கவிதைகள் வலம் வந்தன.

‘டிசம்பரிஸ்ட்கள்’

புஷ்கினின் கவிதைகளைப் பற்றி அறிந்த ஜார் அரசன் தெற்கு ருஷ்யாவுக்கு அவரை நாடு கடத்தினார். ஆச்சர்யம் என்னவெனில் புஷ்கின் நாடு கடத்தப்பட்ட பிறகுதான் அவரின் முதல் கவிதைத் தொகுதி ‘ரஸ்லனும் லுட்மிலாவும்' வெளியானது. தெற்கு ருஷ்யாவில் இருந்த காகஸஸ் மாகாணம் ருஷ்யாவின் சொர்க்கம். புஷ்கின் அங்கிருந்த நான்காண்டுகளே அவரின் மிக அமைதியான காலம்.

1825-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் நாள் நடந்த டிசம்பரிஸ்ட்களின் (டிசம்பர் மாதம் புரட்சி செய்ததால் டிசம்பரிஸ்ட்கள்) புரட்சி, ஜார் அரசனால் முறியடிக்கப்பட்டது. புரட்சியாளர்கள் சிறைபிடிக்கப்பட்டு, சைபீரிய சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். எழுத்தாளர்களில் சிலர் தூக்கிலிடப்பட்டார்கள். புஷ்கின் தொலைதூரத்தில் இருந்ததால் தப்பித்தார்.

புஷ்கினின் படைப்புகள்மேல் கோபம் கொண்டாலும் ஜார் அரசன் நிக்கோலஸ் புஷ்கினை தண்டித்த விதங்கள் ஆச்சர்யப்படும்படி, புஷ்கின் அதிகம் எழுதும் சூழலையே உருவாக்கித் தந்தன. காகஸஸ் மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட புஷ்கின் அவருடைய சொந்த கிராமத்திலேயே குடியேற்றப்பட்டார். கிராமத்தைவிட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனை மட்டுமே. புஷ்கினை கண்காணிக்கும் பொறுப்பு அவருடைய தந்தைக்கு. புஷ்கினை தண்டிப்பதைவிட சரிசெய்து தன்னருகில் வைத்துக்கொள்ளவே நிக்கோலஸ் விரும்பினார்.

‘கேப்டன் மகள்'

 "புஷ்கினுக்கு அரசியல் தணிக்கை கிடையாது, நானே அவரின் கவிதைகளைப் படித்து தணிக்கை செய்து கொள்வேன்" என்றார்.

புஷ்கின் நிக்கோலஸுக்கு அருகில் இருந்தாலும் அதிகாரத்தின் மாய வலைக்குள் சிக்கிவிடாமல், சைபீரியச் சிறையில் இருந்த புரட்சிக்காரர்களுக்கு செய்திகள் அனுப்பிக் கொண்டுதான் இருந்தார்.

அதிக தெளிவும், கச்சிதமான உரைநடையும், துல்லியமான சொற்களும், வேகமான கதைப் போக்கும் கொண்ட ‘கேப்டன் மகள்' நாவலை, புஷ்கினின் மிகச் சிறந்த கொடையாக உலகம் முழுக்க உள்ள வாசகர்கள் இன்றும் கொண்டாடுகிறார்கள். ருஷ்யாவில் 1773-75-ல் நடந்த விவசாயப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய புகச்சோவ்தான் இந்நாவலின் கதாநாயகன். நீண்ட சரித்திரக் கவிதையான  ‘யூஜின் ஓனிஜின்',  ‘ஜிப்ஸிகள்'  ஆழமும் துணிவும் கலைநயமும் மிக்க கவிதையான ‘வெண்கலக் குதிரை வீரன்', ‘இவான் பெல்கின்' தொகுப்பில் உள்ள ஐந்து சிறுகதைகள் ஆகிய புஷ்கினின் படைப்புகள் ருஷ்யாவின் இளைஞர்களால் மனனம் ஆகும் அளவுக்கு மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டன.

புஷ்கின் சிறந்த ஓவியராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

எழுத்தின் உயரங்களைத் தொட்டுக் கொண்டிருந்த புஷ்கினுக்கு, வீழ்ச்சியின் உருவமாகக் காதல் வந்தது. இளம்பிராயத்தில் சூதாட்டமும், மதுவும், பெண்கள் தொடர்பும் இருந்தபோதும் புஷ்கினுக்கு 30  வயதில்தான் காதல் வந்தது. நடாலியா கன்சாரோவா என்ற அழகியை நேசித்தார். 3 ஆண்டுகள் காக்க வைத்தே ஏற்றுக்கொண்டார் நடாலியா. உண்மையான காதல் கொண்டிருந்த புஷ்கினை அவரளவுக்கு நடாலியா நேசிக்கவில்லை.

அவருக்குப் பிரபுக்களைப் போல் குடிக்க வேண்டும், சூதாட்ட கிளப்புகளில் நடனமாட வேண்டும். ஆடம்பரமான வாழ்வும் வறட்டு கவுரவமும் தேவைப்பட்ட நடாலியா தினம் தினம் பிரச்சினைகளைக் கொண்டு வந்தார். நடாலியாவின் நடவடிக்கைகளை அறிந்திருந்தபோதிலும் புஷ்கினுக்கு அவர்மேல் இருந்த காதல் குறையவில்லை.

உடல்நலமின்மையும், பொருளாதார வீழ்ச்சியும் அரசின் கட்டுப்பாடுகளும் புஷ்கினை பலவீனமாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் நடாலியாவின் புதிய நடவடிக்கை, புஷ்கினுக்குப் பெரும் துயரத்தைக் கொண்டு வந்தது. டச்சு தூதர் ஒருவரின் வளர்ப்பு மகனான பிரெஞ்சுக் காவல் படைவீரன் டி’ ஆந்தே என்பவன் நடாலியாவின் சகோதரியை திருமணம் செய்துகொண்டான். நடாலியாவிடமும் நெருக்கமாக இருப்பதாகக் கூறி புஷ்கினுக்குக் கடிதங்கள் வந்தன.

முதலில் பொறுத்துக்கொண்டவரை தொடர்ந்து வந்த கடிதங்கள் கோபப்படுத்தின. கடிதங்கள் எழுதுவது டச்சுத் தூதுவன்தான் என்று நினைத்து அவருக்கு புஷ்கினும் கோபமாகப் பதில் எழுதினார். டச்சுத் தூதுவரைப் பழித்ததால் பிரெஞ்சு வீரன் டி’ஆந்தே புஷ்கினை டூயல் என்ற ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு அழைத்தான்.

1837-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி காலை சூரியன் உதிக்கத் தொடங்கும் நேரம். புஷ்கினும் டி’ஆந்தேவும் பீட்டர்ஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியொன்றில் மோதிக் கொண்டனர். டி’ஆந்தே துப்பாக்கியால் புஷ்கினை சுட்டுவிடுகிறான்.

புரட்சிக்காரர்களின் போர்வாளாக, ஜார் அரசனால்கூட வெறுத்து தண்டனை கொடுக்க முடியாத ருஷ்யாவின் ஆன்மாவாக இருந்த புஷ்கின், பொருத்தமில்லாத காதலால், வாழ்க்கைப் பயணத்தின் இடையிலேயே, சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். ‘புஷ்கின் காலத்தவர்கள் நாங்கள், புஷ்கின் இங்கு வந்திருக்கிறார், புஷ்கின் அங்கு பேசியிருக்கிறார், புஷ்கினின் வழியில் வந்தவர்கள் நாங்கள்' என்றெல்லாம் நூற்றாண்டுகளைக்

கடந்தும் ருஷ்யாவின் அடையாளமாகப் போகிற புஷ்கின், ஒரு காவல் வீரனால் எளிதாக சுடப்பட்டு வீழ்ந்து கிடந்தார்.

"எழுத முடியாத அடக்குமுறை காலகட்டத்தில் புஷ்கினும் பீட்டர்ஸ்பர்க் நகரமும் மட்டும்தான் என் நினைவில் இருந்தார்கள்" என்று பின்னாளில் ருஷ்யாவின் தலைமைக் கவியான அன்னா அக்மதோவாவால் கொண்டாடப்பட இருக்கின்ற புஷ்கின் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். தன்னுடைய நூற்றாண்டு விழாவில்தான் ‘ருஷ்யாவின் தீர்க்கதரிசி' என தஸ்தயேவ்ஸ்கியை ருஷ்யா அடையாளம் கண்டுகொள்ளப் போகிறது என்பதறியாமல் மாபெரும் இலக்கியகர்த்தா மண்ணில் கிடந்தார்.

இரண்டு நாட்கள் மரணத்துடன் போராடிய புஷ்கின் தன்னுடைய நிலைக்குக் காரணமான நடாலியாவின்மேல் அப்பொழுதும் கோபம் கொள்ளவில்லை. இறப்பதற்கு சற்றுமுன்பு கூட தன் காதலிக்கு ஒரு முத்தம் கொடுக்கிறார்.

படைப்பாற்றலின் உச்சத்தில் இருந்த புஷ்கின் தன் 38  வயதில் மரணத்தைத் தழுவினார்.

புஷ்கின் இறந்த செய்தி அறிந்து பீட்டர்ஸ்பர்க் நகரமே கொந்தளித்தது. புஷ்கின் வீட்டின் முன்னால் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அறியாமல் அவரின் உடலை வெளியேற்றி அருகில் இருந்த கிராமமொன்றில் புதைத்தது ஜார் அரசு. தங்கள் போராட்ட நாயகனாகக் கொண்டாடிய மக்களுக்கு மத்தியில், தோற்றுப்போன ஒரு காதலுக்காக மாண்டு போனார் புஷ்கின். புரட்சியும் காதலும் தோல்வியில்தான் அதிக வீரியம் கொள்கின்றன.

- வருவார்கள்...

எண்ணங்களைப் பகிர: vandhainilia@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

23 days ago

இலக்கியம்

23 days ago

மேலும்