தமிழின் மிகவும் பெறுமதியான நாவல், சம்பத்தின் ‘இடைவெளி.’ இந்நாவல், முதலில் 1975-ல் ‘தெறிகள்’ இதழில் பிரசுரமானது. அன்று குறிப்பிடத்தகுந்த கவிஞராக அறியப்பட்டிருந்த உமாபதியால், அவர் அச்சமயம் பணியாற்றிய நாகர்கோவிலிலிருந்து மிகச் சிறப்பாகக் கொண்டுவரப்பட்ட இந்த இதழ் அந்த ஓர் இதழோடு நின்றுவிட்டது. அது நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காலம். சிறுபத்திரிகை இயக்கமும் கண்காணிப்புக்கு உட்பட்டிருந்தது. ‘புதுக்கவிதை’ என்ற சொல்லே ஒரு சங்கேதமாக இருக்கக்கூடும் என உளவுத்துறை வல்லுனர்கள் சந்தேகப்பட்ட காலம். இதன் காரணமாக, உமாபதிக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து இவ்விதழ் நின்றது. என் 23-வது வயதில் வெளியான இந்த இதழுக்கு, என் இலக்கிய வாழ்வின் தொடக்கத்தை வடிவமைத்ததில் முக்கியப் பங்குண்டு. இந்த இதழில் இரண்டு பெரும் படைப்புகள் வெளிவந்திருந்தன. ஒன்று, கலாப்ரியாவின் ‘சுயம்வரம்’ குறுங்காவியம்; மற்றொன்று, சம்பத்தின் ‘இடைவெளி’ நாவல்.
‘தெறிகள்’ இதழில் சம்பத்தின் ‘இடைவெளி’ நாவல் முடிந்திருந்த பக்கத்தின் கீழ் இருந்த சிறு வெற்றிடத்தில், தமிழில் அதுவரை வாசித்த நாவல்களில் அதுவே மிகச் சிறந்ததென்றும், அந்நாவல் வாசிப்பு என்னுள் எற்படுத்திய அதிர்வுகளையும் அலாதியான எக்களிப்பையும் பரவசத்தையும் நுணுக்கிநுணுக்கிக் குறித்து வைத்திருந்தேன். இன்றும்கூட மேலதிகமான புரிதலுடன் இந்நாவல் மேலும் மேலும் கிளர்ச்சியும் பரவசமும் அளித்துக்கொண்டிருக்கிறது.
சம்பத் என்ற பெயர் என் மனதில் பதிந்தது அப்போதுதான். அதற்குப் பின்னரே அவருடைய சிறுகதைகள், குறுநாவல்களை ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன். ‘கணையாழி’, ‘சதங்கை’ இதழ்களிலேயே அவருடைய படைப்புகள் பெரிதும் வந்துகொண்டிருந்தன. அடிப்படைகளில் உழலும் அவருடைய கலை மனம் என்னை வெகுவாக ஆகர்சித்தது. அவரைத் தமிழின் இளம் தஸ்தாயெவ்ஸ்கி என்பதாகத்தான் என் மனம் பாவித்துக்கொண்டிருந்தது. அவரோடு இணைந்து ‘இடைவெளி’ நாவலை மேம்படுத்தும் பணி அமையும் என்பது அப்போது நான் சற்றும் நினைத்துப்பார்த்திராதது.
‘தெறிகள்’ இதழில் வெளியான பின்னர், ‘இடைவெளி’ நாவல், 1984-ல் ‘க்ரியா’ வெளியீடாகப் புத்தக வடிவம் பெறுவதற்கு முன்னர், இரண்டு முறை அதன் பிரதியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த நாவல் பிரதியின் இரண்டாம் வடிவம் சம்பத் தானாகவே மேற்கொண்டது. இப்பிரதியை முன்வைத்து நானும் சம்பத்தும் இணைந்து மேற்கொண்ட சிற்சில மாற்றங்களுடன் புத்தக வடிவம் அமைந்தது.
மதுரையில் என்னுடைய திறமைகளை நான் துருப்பிடிக்கவிட்டுக்கொண்டிருப்பதாகக் கருதிய ராமகிருஷ்ணன், ‘க்ரியா’வில் இணைந்து பணிபுரிய வரும்படி ஒரு நீண்ட கடிதம் மூலம் அழைத்தார். “ராமகிருஷ்ணன் ஒரு பல்கலைக்கழகம். அவரோடு இணைந்து பணியாற்றுவது உங்களுடைய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்” என்று சுந்தர ராமசாமி உத்வேகம் அளித்துக் கடிதம் எழுதினார். இரு கடிதங்களும் அளித்த உந்துதலோடு 1983 ஜூன் மாதம் 3-ம் தேதி ‘க்ரியா’வில் பணியாற்றுவதற்காக சென்னை வந்துசேர்ந்தேன்.
‘க்ரியா’ புத்தக வெளியீட்டைத் தீவிரப்படுத்த முனைந்திருந்த காலமது. அப்போது ‘க்ரியா’ ராமகிருஷ்ணனிடம் ‘இடைவெளி’யை வெளியிடலாமென்று யோசனை தெரிவித்தேன். ராமகிருஷ்ணன் புன்சிரிப்புடன், வெளியிடப்படுவதற்கான கையெழுத்துப் பிரதிகளின் அடுக்கிலிருந்து ஒரு டயரியை எடுத்துக் கொடுத்தார். ராமகிருஷ்ணன் ஏற்கெனவே கேட்டுக்கொண்டதற்கிணங்க சம்பத், ‘தெறிகள்’ இதழில் வெளியான பனுவலில் சில திருத்தங்கள் செய்து ஒரு டயரியில் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதை என்னிடம் கொடுத்த ராமகிருஷ்ணன், “அவரோடு உட்கார்ந்து எடிட் செய்யலாமென்றால் அவர் அதற்குத் தயாராக இல்லை. நீங்கள் வேண்டுமானால் முயன்றுபாருங்கள்” என்றார். இதையடுத்து, அதைக் கவனமாகப் படித்து குறிப்புகள் எடுத்துக்கொண்டேன். ‘க்ரியா’ அலுவலகத்தில் சம்பத்துடனான முதல் சந்திப்பு நிகழ்ந்தது. செமத்தியான உடல்வாகு. நல்ல பருமன்; நல்ல உயரம். தோற்றத்துக்குச் சற்றும் பொருந்தாத குழந்தைமை முகம்.
‘இடைவெளி’ நாவல் குறித்த என்னுடைய பரவசங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டேன். பின்னர், பனுவலில் சில திருத்தங்கள் மேற்கொள்வது பிரதியை மேம்படுத்துவதோடு வாசிப்புக்கும் படைப்பின் இசைமைக்கும் பெரிதும் உதவும் என்பதை வெளிப்படுத்தினேன். பனுவலை என்னுடன் சேர்ந்து பார்க்க அவரைப் பக்குவமாக நகர்த்திக்கொண்டு வந்துவிட வேண்டுமென்ற என் முன்ஜாக்கிரதைகளுக்கு மாறாக, முதல் ஓரிரு பக்கங்களை முன்வைத்துத் தெரிவித்த ஓரிரு யோசனைகளின் அளவிலேயே அவர், “சரி, நாம் சேர்ந்து பார்க்கலாம்” என்று சம்மதித்துவிட்டார்.
வெளியீட்டுக்கு ஏற்கும் படைப்புகளைச் செழுமைப் படுத்துவதையும் மேம்படுத்துவதையும் ‘க்ரியா’ ஒரு பொறுப்பாக உணர்ந்திருந்தது. ‘எடிட்டிங்’ என்பது தணிக்கை என்ற அர்த்தத்திலேயே அறியப்பட்டிருக்கும் தமிழ்ச் சூழலில், தன்னை ஊனப்படுத்தும் காரியமாகவே இச்செயலைப் படைப்பாளி கருதுகிறார். பிரதியை வெட்டிச் சிதைப்பதல்ல. பிரதியை மேம்படுத்தும் செயல்பாடு அது. பிரதிக்கும் வாசிப்புக்குமான உறவில் படைப்பாளி அறியாது பிரதியில் நேர்ந்துவிட்ட சிடுக்குகளை விடுவிப்பதும், படைப்புலகின் இசைமைக்கு அனுசரணையானதுமான ஒரு காரியம். மேலைநாடுகளில் எடிட்டிங் என்பது பதிப்புத் துறையில் முக்கியமான தொழில்சார் அம்சமாக இருக்கிறது. படைப்பாளிகள் சிலர் தங்களுக்கென்று பிரத்தியேகமான எடிட்டர்களைக் கொண்டிருக்கிறார்கள். எடிட்டரின் கால அவகாசத்துக்காகப் படைப்புகள் காத்திருக்கின்றன. இன்று இந்த மனோபாவம் மாறி வருவதைக் காண முடிகிறது. அதேசமயம், ஓர் இசைமையோடும் நுண்ணுணர்வோடும் படைப்பை அணுகும் தொழில்முறைசார் எடிட்டர்கள் நம்மிடையே உருவாகாத நிலையே இன்றும் தொடர்கிறது.
பகலில் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் வீட்டில் நானும் சம்பத்தும் பணியைத் தொடங்கினோம். சென்னை வந்த முதல் சில மாதங்கள் நான் ராம் வீட்டில்தான் தங்கியிருந்தேன். ராம் வீட்டுக்குக் காலை 10 மணியளவில் சம்பத் வந்துவிடுவார். ஆரம்பத்தில் சம்பத்துக்கு என்னோடு அமரத் தயக்கமிருந்தது. தேவையற்ற வேலை என்ற எண்ணமிருந்தது. முதல் அமர்வுக்குப் பின்னர் அப்பணியில் உற்சாகத்துடன் ஈடுபட்டார். அவ்வேலையில் ஈர்ப்பும் ஈடுபாடும் அவருக்கு நாளுக்குநாள் கூடிக்கொண்டேவந்தது. சிறு சிறு மாற்றங்களில் நிகழும் மாயங்களை அவர் மிகவும் ரசிக்கத் தொடங்கினார். மிகுந்த லயிப்போடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஓர் இதமான நட்பும் அரும்பியது.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago