இந்திரனின் ஆரத்தில் ஒரு ரத்தினம்

By ஷங்கர்ராமசுப்ரமணியன்

இந்திரனின் மாளிகை ஒன்றை இந்திரலோகத்தின் சிறந்த கலைஞன் நிர்மாணித்தான். அதன் மேல் முகத்திரையைப் போல எல்லையற்ற மடிப்புகள் கொண்ட அனைத்துத் திசையிலும் நீளும் அற்புத வலை ஒன்றையும் தொங்கவிட்டான். இந்திரனைத் திருப்திப்படுத்துவதற்காக அந்த வலையின் ஒவ்வொரு துளையிலும் ஒரு ரத்தினத்தையும் பதித்தான். நட்சத்திரங்களைப் போல அந்த மாளிகை ஓவியமாக மின்னியது. ஒருவர் அருகில் போய் அந்த வலையில் இருக்கும் ஒரு ரத்தினத்தைத் தூக்கிப் பார்த்தால் அந்த வலையில் தொங்கும் மற்ற எல்லா ரத்தினங்களையும் அது பிரதிபலிக்கும். அதில் பிரதிபலிக்கும் எண்ணற்ற எல்லா ரத்தினமும் மற்ற எண்ணற்ற ரத்தினங்களைப் பிரதிபலித்தன.

காரணங்களும் விளைவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இணைப்பில் ஒவ்வொரு உயிரும் நிகழ்ச்சியும் இன்னொன்றைப் பிரதிபலித்தபடி உள்ளன என்பதை மகாயான பவுத்தத்தில் இப்படி இந்திரனின் ஆரம் என்ற படிமத்தால் குறிப்பிடுகின்றனர்.

கோடிக்கணக்கில் பிரதிபலித்தபடியும் பிரதிபலிப்புக்கு உள்ளாகியும் உயிர்களும் நிகழ்ச்சிகளும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில், கவிஞர் இசை எழுதிய ‘போலீஸ் வதனம்’ கவிதையில் அருள் என்னும் அருநீர் போலீஸ்காரனில் துவங்கி ஒரு சொறிநாய்க்குட்டிக்கு ஆரஞ்சுத் துண்டாகப் போய்ச் சேர்கிறது.

கடவுள் தோன்றும் நிகழ்ச்சி எப்படி நடக்கிறது என்று பெட்ரண்ட் ரஸ்ஸல் கூறுகிறார். ‘ஆக்சிஜனும் ஹைட்ரனும் இங்கே எப்போதும் இருக்கிறது. அது சேர்ந்து தண்ணீராகும் கணம்தான் கடவுள் தோன்றும் கணம்’ என்பதாகக் குறிப்பிடுகிறார்.

இசையின் கவிதையில், நான்குமுனைச் சந்திப்பொன்றில் ஒரு போலீஸ்காரரும் குடியானவனும் மோதிவிடுகிறார்கள். அவனுக்கு ஒரு அறைவிழும் என்று எதிர்பார்க்கும் வேளையில் அந்த போலீஸ்காரர் நேசத்துடன் சிரிக்கிறார். வானத்தில் ஒன்றுகூடும் தேவர்களின் ஓசை கேட்டது என்று கடவுள் உருவாகும் அந்த முகூர்த்தத்தைத்தான் கவிஞர் குறிப்பிடுகிறார். போலீஸாரிடமிருந்து அந்த அருள், ஒரு கந்துவட்டிக்காரனிடம் பத்தவைக்கப்படுகிறது. அன்று வட்டி கட்ட இயலாமல் போன ஆரஞ்சுப் பழம் விற்கும் பாட்டியிடம் அந்த அருள் போய் விழுகிறது. அது ஒரு குப்பையள்ளும் பெண் தொழிலாளிக்குக் குட்டிப் பழங்களாகச் சென்று அவளிடமிருந்து ஒரு யாசகச் சிறுமிக்குப் போகிறது. அவளிடமும் நிற்காத அருள் ஒரு சுளையாக விள்ளப்பட்டு சொறிநாய்க்குட்டியின் வாய்க்கு வருகிறது.

இசையின் கவிதை, அருள் என்னும் வெளிச்சம் விழுந்து ஒவ்வொரு உயிர்கள் மீதும் பிரதிபலிப்பதைக் காட்டுகிறது. அருள் மட்டுமல்ல மருள், பயங்கரம், குற்றம் தோன்றும் இடத்திலெல்லாம் கடவுள் தோன்றுகிறார். நாம் மொழிபெயர்த்து வேறு கயிறுகளால் கட்டுகிறோம். போக்கும் வரவும் என்று புரிந்துகொள்கிறோம்.

பழம் சாப்பிடும் நாய்களையோ நாய்க்குட்டிகளையோ எனது இதுவரையிலான ‘கள’ அனுபவத்தில் பார்த்ததில்லை. அருளின் சோதி சுடரும் ‘ஒளிநறுங்கீற்று’ அல்லவா அந்தப் பழம். அதைச் சாப்பிட்டுத்தான் மீட்சியைப் பெறட்டுமே அந்தக் குட்டிச் சொறிநாய்.

அத்வைதத் தோட்டத்திலும் அலையும் நாய்க்குட்டி என்று சொல்லலாமா கவிதையை?

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்

இசை

காலச்சுவடு பதிப்பகம்

விலை: ரூ.100

  9677778863

போலீஸ் வதனம்

நான்குமுனைச் சந்திப்பொன்றில்

ஒரு போலீஸ்காரரும் ஒரு குடியானவனும்

கிட்டத்தட்ட மோதிக்கொண்டனர்

குடியானவன் வெலவெலத்துப்போனான்

கண்டோர் திகைத்து நின்றனர்

அடுத்த கணம் அறைவிழும் சத்தத்திற்காய்

எல்லோரும் காத்திருக்க

அதிகாரி குடியானவனை நேர்நோக்கி

ஒரு சிரி சிரித்தார்.

அப்போது வானத்தில் தேவர்கள் ஒன்றுகூடும்

ஓசை கேட்டது.

“நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே!”

என வாழ்த்தியது வானொலி.

போலீஸ் தன் சுடரை

ஒரு கந்துவட்டிக்காரனிடம்

பற்றவைத்துவிட்டுப் போனார்.

அவன்

ரோட்டோரம் கிடந்து பழம் விற்கும் கிழவியிடம்

கந்து வசூலிக்க

வந்தவன்.

கிழவி தலையைச் சொரிந்தபடியே

“நாளைக்கு…” என்றாள்.

ஒரு எழுத்துகூட ஏசாமல்

தன் ஜொலிப்பை அவளிடம் ஏற்றிவிட்டுப் போனான்.

அதில் பிரகாசித்துப்போன கிழவி

இரண்டு குட்டி ஆரஞ்சுகளைச் சேர்த்துப் போட்டாள்.

அது ஒரு குப்பைக்காரியின் முந்தானையில் விழுந்தது.

எப்போதாவது ஆரஞ்சு தின்னும் அவளை

ஒரு பிச்சைக்காரச் சிறுமி வழிமறிக்க

அதிலொன்றை ஈந்துவிட்டுப் போனாள்.

சிறுமியின் காலடியில்

நாய்க்குட்டியொன்று வாலாட்டி மன்றாடியது.

அதிலொரு சுளையை எடுத்து

அவள் அதன் முன்னே எறிய

சொறிநாய்க்குட்டி

அந்த ‘ஒளிநறுங்கீற்றை' லபக்கென்று விழுங்கியது.

- இசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

மேலும்