இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜாவும், பேராசிரியர் ந.முத்துமோகனும் இணைந்து ‘மார்க்ஸ் அண்ட் அம்பேத்கர் - கண்டினியூயிங் தி டயலாக்’ என்ற நூலை எழுதியுள்ளனர். ‘கோட்பாட்டு, வரலாற்றுப் பின்னணி’, ‘சாதியும் மதமும்’, ‘சாதி, வர்க்கம், அடையாள அரசியல்’ என இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பாவில் வளர்ந்த நிலையில் காணப்பட்ட முதலாளித்துவத்தின் முரண்பாடுகளே மார்க்ஸியத்தின் கோட்பாட்டு அடிப்படையாக அமைந்ததால் அதை ஒரு ஐரோப்பியக் கோட்பாடு எனக் கூறுவதில் தவறில்லை என்ற சுயவிமர்சனக் குறிப்போடு தொடங்கும் இந்நூலின் முதல் அத்தியாயம் மார்க்ஸின் பார்வையில் 1860-க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களைப் பேசுகிறது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவிலிருந்த கம்யூனிஸ்ட்டுகள் காலனிய எதிர்ப்புப் போராட்டத்தை முதன்மையாகக் கருதி அணி சேர்க்கையை உருவாக்கியதையும், அப்போது அம்பேத்கர் சமூக விடுதலைப் போராட்டத்தை முதன்மைப்படுத்தியதையும் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த இரு அணுகுமுறைகளுக்கிடையே ஏன் ஒரு ஒருங்கிணைப்பு நிகழவில்லை என்பதை விவாதித்திருக்கலாம். மார்க்ஸின் கோட்பாடு குறித்து வெளிப்படும் சுயவிமர்சனப் பார்வை கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்து ஆழமாக வெளிப்பட்டிருக்க வேண்டிய இடம் இது.
இந்தியா குறித்த மார்க்ஸின் துல்லியமான அவதானிப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன என்றாலும் மார்க்ஸோடு ஒப்பிடும்போது அம்பேத்கர் இந்திய சமூகத்தை மேலும் விரிவாகவும் சிறப்பாகவும் ஆராய்ந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.
மார்க்ஸ் இந்தியா பற்றி அறிந்திருந்ததைவிட அதிகமாக ஐரோப்பா பற்றி அம்பேத்கர் அறிந்திருந்தார் என்பது மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளின் ஜனநாயக அமைப்புகளை நன்கு பயின்று தனது கோட்பாட்டுப் பார்வையை வடிவமைக்கச் சாதகமான பல அம்சங்களை அவற்றிலிருந்து எடுத்துக்கொள்ளவும் செய்தார். அம்பேத்கர் கையாண்ட சொற்களில் இயங்கியல்தன்மை கொண்ட சொற்கள் இருந்ததை எடுத்துக்காட்டி, மார்க்ஸியத்தால் மேற்கட்டுமானத்தில் வைத்துப் பார்க்கப்பட்ட மதத்தையும் சமூக அமைப்பு என்னும் அடித்தளத்தையும் இலகுவாக இணைத்து ‘இந்து சமூக ஒழுங்கு’ என்ற சொற்சேர்க்கையை அம்பேத்கர் உருவாக்கிப் பயன்படுத்தியதை நூலாசிரியர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். ‘சமூகம் என்பதே இந்தியாவில் இல்லை, இங்கு இருப்பதெல்லாம் சாதிகளின் தொகுப்புதான்’ என அம்பேத்கர் கூறியதையும் இந்த இடத்தில் விவாதித்திருக்கலாம். ஏனெனில், மார்க்ஸியர்கள் இதுவரை விவாதிக்காத ஒரு கருத்து அது.
சமயம் குறித்த அம்பேத்கரின் பார்வை எமில் தர்கைமின் பார்வையோடு ஒத்திருப்பதாக நூலாசிரியர்கள் கூறுகின்றனர். அது உண்மைதான். எனினும், அம்பேத்கரின் ‘இந்தியாவில் சாதிகள்’ ஆய்வுரையில் வெளிப்படும் இந்து மதம், சாதி பற்றிய அவரது மானிடவியல் பார்வை இந்தியா பற்றி எழுதிய அத்தனை மானிடவியல் அறிஞர்களிலிருந்தும் வேறுபட்டது, தனித்தன்மை கொண்டது. மார்க்ஸின் மீது அம்பேத்கருக்கு அளவற்ற மதிப்பிருந்தது. அதனால்தான், புத்தருக்கு இணையாக மார்க்ஸைப் பார்த்தார். தான் முதன்முதலில் தொடங்கிய அரசியல் கட்சிக்கு ‘சுதந்திரத் தொழிலாளர் கட்சி’ எனப் பெயரிட்டார். களப் போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகளோடு இணைந்து நின்றார்.
வகுப்புவாதமும் வல்லரசியலும் இந்திய மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கும் இந்தச் சூழலை எதிர்கொள்ள மார்க்ஸையும் அம்பேத்கரையும் தனித்தனியே நிறுத்துவது பயன் தராது. சமூக சமத்துவத்துக்கான பார்வையை அம்பேத்கரிடமிருந்து பெறாவிட்டால் இடதுசாரிக் கட்சிகள் பிராமணியத்துக்குப் பலியாகும்; அதுபோலவே, பொருளாதார சமத்துவத்துக்கான பார்வையை மார்க்ஸிடமிருந்து கற்காவிட்டால் தலித் அமைப்புகள் வகுப்புவாதத்துக்கு இரையாகும். இந்த இரண்டுவிதமான துயர நிகழ்வுகளும் இந்தியாவில் நடந்தேறிக்கொண்டிருக்கும் சூழலில் இந்த நூல் வெளிவந்திருக்கிறது.
அம்பேத்கரியத்துக்கும் மார்க்ஸியத்துக்குமான உரையாடலை வலியுறுத்தி கெயில் ஓம்வெத், சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளார். பலரும் எழுதியுள்ளனர். சமீபகாலமாக ஆனந்த் டெல்டும்ப்டே எழுதிவருகிறார். அவர்கள் எல்லோரும் பெரும்பாலும் அரசியல் தளத்தில்தான் இந்தப் பிரச்சினையை ஆராய்ந்துள்ளனர். இந்த நூல் கோட்பாட்டு அடிப்படையில் அணுகியுள்ளது. மேற்குறிப்பிட்ட எந்த நூலும் இடதுசாரிக் கட்சிகளால் ஏனோ விரிவாக விவாதிக்கப்பட்டதில்லை. இந்த நூலின் ஆசிரியர்களில் ஒருவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் இருப்பதால் அத்தகைய புறக்கணிப்புக்கு இது உள்ளாகாது என நம்பலாம்.
- ரவிக்குமார், எழுத்தாளர்,
விசிக பொதுச் செயலாளர்.
தொடர்புக்கு: manarkeni@gmail.com
மார்க்ஸ் அண்ட் அம்பேத்கர் -
கண்டினியூயிங் தி டயலாக்
ந.முத்துமோகன்,
து.ராஜா
நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ்
அம்பத்தூர்
சென்னை - 98.
விலை: ரூ.275
044 26251968
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago