வறுமையும் வர்க்கமும் அழகியல்தானே: யவனிகா ஸ்ரீராம் பேட்டி

By ஷங்கர்ராமசுப்ரமணியன்

தமிழ்க் கவிதைச் சூழலில் 90-களின் ஆரம்பத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுதி வாயிலாக ஒரு அரசியல் கவிஞராக வாசகர்களை ஈர்த்தவர் யவனிகா ஸ்ரீராம். உலகமயமாதல் காரணமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை அழகியல் உணர்வுடன் பதிவுசெய்த கவிதைகள் இவருடையவை. சொற்கள் உறங்கும் நூலகம், தலைமறைவுக் காலம் போன்றவை இவருடைய முக்கியமான கவிதைத் தொகுதிகள். நிறுவனங்களின் கடவுள் என்ற கட்டுரைத் தொகுதியும் வெளிவந்துள்ளது...

உங்களைப் பாதித்த கவிதைகளைச் சொல்லுங்கள்…

பாரதிதாசன் வழிவந்த வானம்பாடிக் கவிதைகள்தான் எனக்கு முதலில் அறிமுகமாயின. நா.காமரசான், அப்துல் ரகுமான், அபி ஆகியோரை வாசித்தேன். திராவிட இயக்கத்தின் கருத்துகளும், மார்க்சிய கோஷங்களும் சேர்ந்த உணர்வுபூர்வமான கவிதைகளாக அவை இருந்தன. ஆனால் அந்தக் கவிதைகளுக்கும் யதார்த்தத்துக்கும் தொடர்பில்லை. தமிழ்நாடு முழுக்க வானம்பாடிகள் பரவிக்கொண்டிருந்தனர்.

இப்படியான சூழலில் நூலகத்தில் ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமையையும் பசுவய்யாவின் நடுநிசி நாய்களையும் எடுத்துப் படித்தேன். நான் முன்பு படித்த கவிதைகளைவிட இவை யதார்த்தமாகத் தோன்றின. திராவிட இயக்கம், மார்க்சிய சார்புள்ளவனாக இருந்தாலும் அந்த இயக்கங்களைப் பகடி செய்து எழுதிய ஞானக்கூத்தனை எனக்குப் பிடித்திருந்தது. மேசை நடராசர், காலவழுவமைதி, அம்மாவின் பொய்கள்..., பாரதி, பாரதிதாசன், வானம்பாடிகளைத் தாண்டி வேறு ஒரு பரம்பரை கவிதைகளில் செயல்படுவதைத் தெரிந்துகொண்டேன்.

ஞானக்கூத்தனும், கலாப்ரியாவும்தான் எனது கவிதை உலகத்தைத் தூண்டியவர்கள். அத்துடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெக்டின் கவிதைகள் என்னை மிகவும் பாதித்தன. ‘அதிகம் ரொட்டி சுடத் தெரிந்தவன் என்பதனால் என் பெயர் ஏன் சொல்லப்பட வேண்டும்’. அதிக ரொட்டிகளைச் சுடும் திறன் மீது அவனுக்குப் பெருமை இல்லை. அத்தனை ரொட்டிகளுக்குத் தேவை இருக்கிறது என்பதே அவனது அக்கறை. கவிஞனுக்குக் கவிதையும் ரொட்டியும் ஒன்றாகவே இருக்கிறது.

உங்கள் கவிதைகளில் வரும், தமிழ் நவீன கவிதைக்கு மிகவும் புதுமையான நிலப்பரப்புகளை மொழிபெயர்ப்புகள் வழியாகத்தான் பெற்றீர்களா?

சிறு வயதிலிருந்து வீட்டிலிருந்தும் குடும்பத்திலிருந் தும் வெளியேற முயல்பவனாகவே இருந்திருக்கிறேன். பள்ளி இறுதி வகுப்பில் நான் தோல்வி அடைந்தவன். 15 வயதிலேயே நான் வணிகத்துக்குப் போகத் தொடங்கிவிட்டேன். காபிக்கொட்டை வியாபாரத்தில் ஈடுபட்டேன். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பன்றிமலையில் காபிக்கொட்டை மூட்டையைச் சுமந்து அலைந்திருக்கிறேன்.

பன்றி மலையின் இயற்கையோடு என்னை ஆழ்த்திக்கொண்டேன். மலையிலிருந்து மூட்டையை இறக்கி பேருந்து நிலையத்திற்கு குதிரைகளுடன் போக முடியும். அங்குள்ள மரங்கள், பூச்சிகள், இலைகள் என இயற்கையோடு எனது மனம் இயல்பாக இணையத் தொடங்கியது. அதனால் எனது கவிதைகளில் வரும் நிலப்பரப்புகள் உள்ளேயும் இருக்கவே செய்கின்றன. காபிக்கொட்டை வியாபாரம் பருவநிலை சார்ந்தது. ஆறுமாதம்தான் சீசன்.

மிச்ச நாட்களில் ஜவுளி வியாபாரம் பார்த்திருக்கிறேன். அரபிக் கடலோர கிராமங்கள் அத்தனையிலும் நான் சேலைகளை விற்றிருக்கிறேன். பாண்டிச்சேரி கடற்கரை முழுக்க எனது கால் தடங்கள் பதிந்திருக்கின்றன. வீட்டிலிருந்து வெளியேறும் ஆசையை நான் இப்படித்தான் தீர்த்துக்கொண்டேன்.

நெய்தல் நில வாழ்க்கை உங்கள் கவிதைகளில் இடம்பெற இந்த வாழ்க்கை துணைபுரிந்தது எனச் சொல்லலாமா?

சாயங்காலத்தில் நான் கடலைப் பார்த்துக்கொண்டு கரையில் நின்றுகொண்டிருப்பேன். கடலை நெருக்கமாக உணர்ந்தது அப்போதுதான். இரவில் நானும் கடலும் தனியாக இருக்கும் நிலைகளை அனுபவித்திருக்கிறேன். இருட்டில் கடல் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடும். காட்சியில் அறுபட்ட கடலின் சத்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டிருப்பேன். கடல் சார்ந்த மெல்லுடலிகள், மீனவர்களின் வாழ்க்கை எல்லாம் என் மனதில் அந்த வயதிலேயே தோய்ந்துவிட்டன. கைத்தொழிலிலிருந்து அந்நியப்படாத கடல்சார் வாழ்க்கை இன்னும் எனக்கு வசீகரமாகவே இருக்கிறது. ஒரு நாடோடியாக இருந்த எனக்கு இயல்பாகவே மார்க்சிய தத்துவ அறிமுகமும் ஏற்பட்டுவிட்டது. எல்லாவற்றையும் வர்க்கச் சார்புடனேயே பார்க்கக் கற்றுக்கொண்டேன்.

மார்க்சியம் ஒரு தர்க்கச் சட்டகத்தோடுதான் எல்லாவற்றையும் பார்க்கிறது. ஆனால் கவிதை தர்க்கத்தை மீற முனையும் அறிதல் முறை இல்லையா?

கவிதை வழியாக தீவிரமான அரசியலைப் பேசும்போது அழகியல் பிரச்சினைகளும் வரவே செய்கின்றன. ஆனால் வறுமையும், வர்க்கமும் அழகியல்தானே. அழகியலையும், பாலியலையும் ஏதோ ஒரு வகையில் எல்லா வகையான துன்பத்துக்கும் இடையிலும் மக்கள் விரும்புகிறார்கள். அவர்கள் பரவச நிலையில் இருப்பதை விரும்புகிறார்கள்.

இந்தியா முழுவீச்சுடன் தாராளமயத்திற்குத் தயாராவதற்கு முன்பே நீங்கள் வியாபாரத்துக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டீர்கள் அல்லவா?

80-களின் இறுதியில்தான் சிங்கப்பூர் போகத் தொடங்கினேன். சிங்கப்பூர் ஏற்கனவே திறந்த சந்தையாக மாறிவிட்டது. சீனா மற்றும் ஜப்பானியர்களின் மூலதனம், அங்குள்ள சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்திய நெருக்கடிகள் பெரும் வலியைக் கொடுப்பதாக இருந்தன. குடும்ப உறவுகளில் பெரும் திரிபுகள் தொடங்கிய காலம் அது. பாலியலே சந்தைமயமாகி விட்ட சூழல் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அநாதைகளாக, பைத்தியங்களாக நகரில் அலையும் சீனர்களைப் பார்த்தேன். அங்கு நான் பார்த்த வாழ்க்கைமுறை, பெரும் கட்டுமானங்கள், நகர்மய மாதல், கிராமங்களிலிருந்து பெருந்த எண்ணிக்கையில் புலம்பெயர்தல் காட்சிகள் சீக்கிரத்தில் இந்தியாவிலும் நடக்க இருக்கும் மாற்றத்தை எனக்குத் தெரிவித்தன.

20-ம் நூற்றாண்டின் மாற்றங்கள் சார்ந்த துயரத்தைப் பாடும் நாடோடிப் பாடல்கள் என்று உங்கள் கவிதையைச் சொல்லலாமா?

பொருள்வயமான தட்டுப்பாடு என்பது ஒருவகையான ஆன்மிகரீதியான வறுமையே. உண்மையில் கலாசார ரீதியாக சுதந்திரமாக இருக்கத்தான் மனிதன் விரும்புகிறான். ஆனால் கலாசார ரீதியாக அவனுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது. அவனது மனமோ கட்டற்ற சுதந்திரத்தை விரும்புகிறது. எல்லா இயல்பூக்கங்களையும் காயடிக்கும் அமைப்பைச் சமூகம் என்ற பெயரில் வைத்திருக்கிறோம். அடிப்படை உணர்வுகளை ஒடுக்கும் அமைப்பில் நாம் வாழ்கிறோம். சமூகம், அரசு போன்ற நிறுவனங்கள் உயிரற்ற தன் உட்கட்டமைப்பைக் காப்பாற்றுவதற்காக உயிருள்ள மனிதர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்துகிறது. அந்த துயரத்தைத்தான் என் கவிதைகளில் பேசுகிறேன்.

லட்சியவாதமே கேலியாகப் பார்க்கப்படும் காலகட்டத்தில் கவிஞனின் வேலை என்னவென்று பார்க்கிறீர்கள்?

ஒரு தேசத்திற்கான ஒருங்கிணைவுக்காக, எல்லா தேசிய அரசாங்கங்களுக்கும் தேசியக் கவிஞர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். பாரதி போன்றவர்கள் அதற்கு உதவியிருக்கிறார்கள். அவர்களை இன்றைய கவிஞர்கள் நிராகரிக்கவே வேண்டும். எந்த விதமான ஒருங்கிணைப்புக்கும் நான் எதிரியாகவே இருக்கிறேன். டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே எந்த ஒருங்கிணைப்பையும் என்னால் உணரமுடியவில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை என்று தேசியக் கவிகள் சொல்கிறார்கள். தமிழ் தேசியவாதிகள் வடவேங்கடம் முதல் தென்குமரி என்று நில அமைப்பு சார்ந்து ஒரு தேசியத்தை வரையறுக்கிறார்கள். இந்த வரையறைக்குள் வராத பழங்குடிகள், மொழிச் சிறுபான்மையினர், உதிரிகள், விலங்குகள் மற்றும் பூச்சிகள் என எத்தனையோ மற்றமைகள் தேசியத்துக்குள் வராமல் இருக்கின்றன.

உலகம் ஒற்றைக் கிராமமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கவிஞனாக அதை நான் பன்முகத்தன்மை கொண்ட கிராமமாக மாற்றுவேன்.

90-களுக்குப் பிறகு எழுதப்பட்ட தமிழ் புனைவுகள், கவிதைகளில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்லுங்கள்?

பன்னாட்டு மூலதனத்தின் கீழே இந்தியா வேகமாக வருகிறது. வாழ்க்கையின் சகல பிரிவுகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நவீனத்துவத்தின் கோளாறுகள் தெரியத் தொடங்குகின்றன. பொது மனசாட்சியை பாவனை செய்த நடுத்தர வர்க்கமும் அந்த பாவனையையும் தவறவிட நேர்கிறது. நடுநிலைமை என்றே எதுவும் கிடையாது என்றாகிறது.

மற்றவர்கள், மற்ற சமூகங்கள் மீது கரிசனம் மிக்க படைப்புகள் வரத் தொடங்குகின்றன. பன்மைத்துவம் கொண்ட வாழ்க்கை மற்றும் சமூகப் பின்னணி களிலிருந்து வந்த எழுத்துகள் பெரும் உடைப்பை ஏற்படுத்தின. பெண் கவிஞர்கள் எழுத வந்தார்கள். தலித்தியம், பெண்ணியம், சூழலியம் ஆகிய கோட்பாடுகள் பரவலாவதற்கு இந்தப் படைப்புகள் உதவி புரிந்திருக்கின்றன. லக்ஷ்மி மணிவண்ணன், ஸ்ரீநேசன், பாலை நிலவன், பிரான்சிஸ் கிருபா, கரிகாலன் உள்ளிட்ட பத்துப் படைப்பாளிகளைப் பிரதானமாகச் சொல்வேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

மேலும்