குறுந்தொகை மூலமும் உரையும்
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
வெளியீடு:
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை-90
விலை: ரூ.500
தொடர்புக்கு: 044-2491 1697
உ.வே.சாமிநாதையர் 1937-ல் பதிப்பித்த குறுந்தொகை உரையை 80 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏழாவது பதிப்பாக சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம். குறுந்தொகை பாடல்களுக்கான பதவுரையாக மட்டுமின்றி, ஆராய்ச்சியுரையாகவும் சிறப்பினைப் பெற்றது உ.வே.சா.வின் இந்த உரை.
சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது சிந்தாமணி உரையில் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்ட சங்கப் பாடல்களைத் தேடும் முயற்சியில் தொடங்கியது உ.வே.சா.வின் குறுந்தொகை ஆர்வம். திருவாவடுதுறை மடத்தில் இருந்த ஏட்டுப் பிரதிகளோடு மற்ற மடங்களிலும் தனிநபர்களிடமும் இருந்த வேறு ஒன்பது பிரதிகளையும் ஒப்புநோக்கியே குறுந்தொகையைப் பதிப்பித்திருக்கிறார் உ.வே.சா.
பெயரிலி மரபு
சங்க இலக்கியங்களில் முதலில் தொகுக்கப்பட்டது குறுந்தொகையாகவே இருக்க வேண்டும் என்பது
உ.வே.சா.வின் முடிவு. அதற்கு உதாரணமாக, குறுந்தொகைப் பாடல் புனைந்த புலவர்களின் பெயர்களைக் காரணம்காட்டுகிறார். காலம்காலமாக நினைவில் வழங்கிவந்த பாடல்கள் முதன்முதலாகத் தொகுக்கப்பட்டபோது, அப்பாடலில் இடம்பெற்ற உவமைகளே, புலவர்களின் பெயர் குறிப்பவையாகவும் மாறின. செம்புலப் பெயனீராரும் அணிலாடு முன்றிலாரும் ஓரேருழவனாரும் இப்படி உவமைகளால் பெயர்பெற்றவர்களே. சில புலவர்கள் இயற்பெயர் அறியப்பட்டிருந்தபோதும் உவமைகளாலேயே அவர்கள் அழைக்கப்பட்டிருக்கும் பெயரிலி மரபு ஆச்சரியமளிக்கிறது. குறுந்தொகைப் பாடலின் உவமையால் பெயர்பெற்ற புலவர்கள் அவ்வாறே மற்ற தொகை நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். ஏனைய தொகைநூல்களின் உவமையால் பெயர்பெற்ற புலவர்கள் யாரும் குறுந்தொகையில் குறிப்பிடப்படவில்லை. அதுவே, உ.வே.சா.வின் துணிபுக்குக் காரணம்.
நூறு பக்கங்களுக்கும் மேலாக நீளும் உ.வே.சா.வின் நூலாராய்ச்சி என்ற தலைப்பிலான முன்னுரை, குறுந்தொகை மட்டுமின்றி சங்க காலத்தையும் இயற்கையுடன் இயைந்த அந்த வாழ்க்கையையும் புரிந்துகொள்ள ஒரு திறவுகோல். குறுந்தொகைப் பாடல்களில் இடம்பெற்ற அருஞ்சொற்கள், சொற்றொடர்களுக்குத் தனி அகராதியும் புலவர்களின் பெயர்களுக்குத் தனி அகராதியும் தொகுத்து இணைத்திருக்கிறார். பாடல்களில் கருப்பொருள்களாக இடம்பெற்ற பறவைகள், விலங்குகள் மற்றும் தாவரங்களையும் அகரவரிசையில் தொகுத்தளித்திருக்கிறார் உ.வே.சா. பாடவேறுபாடுகளும் ஒப்புமைகளும் மேற்கோள்களுமாய் அமைந்த அவரது ஆராய்ச்சியுரை, பதிப்புப் பணியில் அவர் காட்டிய உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் உதாரணமாய் விளங்குகிறது. குறுந்தொகைக்கு பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் எழுதிய உரைகளைத் தேடிய உ.வே.சா.வின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில், அம்முயற்சியைக் கைவிட்டதை வருத்தத்தோடு அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தொல்காப்பியம் வகுத்த இலக்கணங்களில் சிலவற்றைக் கடைச்சங்க நூல்களில் காண இயலவில்லை என்பதையும் அதுபோலவே சங்க இலக்கியச் செய்திகள் பலவும் தொல்காப்பியத்தில் காணப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் உ.வே.சா. தொல்காப்பியம் மட்டுமின்றி வேறு சில இலக்கண நூல்களும் இடைப்பட்ட காலத்தில் தோன்றி புதிய மரபுகளை உருவாக்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார் உ.வே.சா. இப்படி குறுந்தொகையைக் குறித்தும் சங்க இலக்கியங்கள் குறித்தும் உ.வே.சா. முன்வைத்திருக்கும் அவதானிப்புகள் சங்க இலக்கிய வாசிப்புக்கும் ஆய்வுக்கும் வழிகாட்டுகின்றன.
தலைவி கூற்று
உ.வே.சா.வின் அவதானங்களில் சுவாரசியங்களுக்கும் குறைவில்லை. குறுந்தொகை பாடல்கள் தலைவன், தலைவி கூற்றாக மட்டுமின்றி தோழி, செவிலி உட்பட ஒன்பது பேர் கூற்றாக இடம்பெற்றிருக்கின்றன என்று பட்டியலிட்டிருக்கிறார். தலைவனின் கூற்றாக அமைந்துள்ள பாடல்கள் 62, தலைவியின் கூற்றாக அமைந்திருப்பவையோ 180, தோழியின் கூற்றாக அமைந்தவையோ 140. குறுந்தொகை பாடிய 205 புலவர்களில் 12 பேர் பெண்பாற்புலவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள் என்றாலும் தலைவியின் கூற்றாகவே பெரும்பாலான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பெண்கள் தங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்திக்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தும் நாணமும் அச்சமும் இடைக்காலத்தில்தான் வலுப்பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நேரடியாய்ச் சொல்லாவிட்டாலும் தலைவிகள் குறிப்பால் காதலையும் பிரிவையும் சொல்லத்தான் செய்திருக்கிறார்கள். குறுந்தொகைப் பாடல்களில் பரத்தையின் கூற்றும்கூட இடம்பெற்றிருக்கிறது. ஆனால், தாயின் கூற்றாக ஒன்றுமில்லை. பெற்றோர்கள் எல்லாக் காலங்களிலுமே காதலுக்கு எதிரிகள்தான் போல.
ஒவ்வொரு பாடலும் யாருடைய கூற்று என்ற குறிப்போடு பாடலும், பாடலையடுத்து அதனுடன் தொடர்புடைய தொல்காப்பிய இலக்கண விளக்கமும் இயற்றிய புலவர் பெயர், பதவுரை, முடிபு என்ற பெயரில் பாடலின் சாரம் ஒற்றைவரிச் செய்தியாகவும், அதையடுத்து அதன் கருத்தும் விளக்கவுரையும் இடம்பெற்றுள்ளன. அதன் தொடர்ச்சியாய், மேற்கோளாட்சி என்ற பகுதியில் அப்பாடல், எந்தெந்த இலக்கிய இலக்கணங்களில்லெலாம் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒப்புமைப் பகுதியில் பாடலின் சொற்றொடர்களும் உட்பொருளும் மற்ற இலக்கியங்களில் அமைந்துள்ள விதம் ஒப்புநோக்கப்பட்டிருக்கிறது. சொல்லிலும் பொருளிலும் நடந்துள்ள ஒப்பீட்டு இலக்கிய ஆய்வு இது.
செம்புலப்பெயல் நீர்
உதாரணத்துக்கு, எல்லோரும் நன்கறிந்த ‘கொங்குதேர் வாழ்க்கை’ பாடலையே எடுத்துக்கொள்வோம். வண்டோடு பேசி, சந்தேகம் தெளிவதுதான் தலைவனின் நோக்கமா என்ன? தலைமகளின் நாணம் நீங்கி, அவளோடு உறவாடுவதற்கான முன்னேற்பாடுதான் அந்த உரையாடல் என்று தொல்காப்பிய இலக்கணத்தைச் சுட்டி விளக்கம் அளிக்கிறார் உ.வே.சா. காதல்மொழியில், ஒவ்வொரு வார்த்தையும் உட்பொருள் நிறைந்தது.
‘யாயும் ஞாயும் யாரா கியரோ’ பாடலில் செம்மண்ணில் பெய்த மழையாய் ஒன்றுகலந்துவிட்டோம் என்று சொல்கிறான் தலைவன். ஒன்றாய்க் கலந்த பிறகு எதற்காக அவன் நினைவுகூர வேண்டும்? எங்கே இவன் நம்மை விட்டுப் பிரிந்துவிடுவானோ என்று அச்சமுறுகிறாள் தலைவி. அவள் மாறுதல் கண்டு மனதைத் தேற்றி நம்பிக்கையூட்டவே செம்புலப்பெயல் நீரை உதாரணம் சொல்கிறான் தலைவன். சங்கப் பாடல்களில் உள்ளுறைந்து நிற்பதெல்லாம் குறிப்பு உணரும் கலையே. அதனாலேயே ஐம்புலன்களால் உணரும் காட்சி அளவைகளோடு, மனதால் உணரும் கருதல் அளவையையும் கொண்டவையாக குறுந்தொகைப் பாடல்கள் இருக்கின்றன என்கிறார் உ.வே.சா. காட்சியும் கருதலும் மெய்யியலுக்கு மட்டுமில்லை, மெய்யோடு உறவாடும் அகத்துக்கும் பொருந்திநிற்கிறது.
குறுந்தொகைக்கு உ.வே.சா. உரை எழுதிய காலகட்டத்தில் வெளியான மற்ற தமிழ்ப் புலவர்களின் உரைகளையும் பதிப்புகளையும் கவனத்தோடு இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். தன்னை மட்டுமே முன்னிறுத்தாமல், தான் செய்யும் தமிழ்ப் பணியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவே அவரது இந்த அணுகுமுறை அமைந்திருக்கிறது.
குறுந்தொகையின் முதல் பதிப்பு சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளுதவியோடுதான் சாத்தியப்பட்டி ருக்கிறது. பல்கலைக்கழகம் ரூ.1,500 நிதியுதவி செய்யாவிடில் இப்பதிப்பே வந்திருக்காது என்று குறிப்பிட்டிருக்கிறார் உ.வே.சா. தனது முந்தைய பதிப்புகளோடு ஒப்பிடுகையில் இத்தொகையைப் பேருதவி என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இன்றுபோலன்றி அந்தக் காலத்தில் பல்கலைக்கழகங்கள் தங்களது பொறுப்புணர்ந்து செயல்பட்டிருக்கின்றன.
சென்னை பல்கலைக்கழகத்தின் நல்கையால் வெளிவந்த குறுந்தொகையின் மறுபதிப்பு, மறைந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனின் நிதியுதவியால் தற்போது வெளிவந்திருக்கிறது. ராயல் அளவில் 1,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்தப் பதிப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் ரூ.500-க்குக் கிடைக்கிறது. சங்க இலக்கிய வாசிப்புக்கான நல்லதொரு தொடக்கம் இந்தப் பதிப்பு.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
2 months ago