டால்ஸ்டாய்க்கு ஓர் எதிர்வினை

By வாஸந்தி

உலகப் புகழ் பெற்ற கணவனின் நிழலாக இருந்த ஒரு பெண்ணின் உண்மைக் கதை இப்போது வெளிவந்திருக்கிறது. கணவரின் இலக்கிய வளர்ச்சியில் அவள் அளித்த அசாதாரணப் பங்களிப்பை வேண்டுமென்றே மறைத்து, அவளது பிம்பத்தையும் சிதைத்த கொடுமை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அவள் பெயர் ஸோஃபியா அண்ட் ரீவ்னா டால்ஸ்டாய். பதினெட்டு வயதில் முப்பத்தி நான்கு வயது லியோ டால்ஸ்டாயைக் காதலித்து மணந்தவள். டால்ஸ்டாயின் எழுத்தை வாசித்துப் பரவசமடைந்த ரசிகை அவள். ஆச்சாரமான லூதெரன் கிறித்துவ சர்ச் மரபு சார்ந்த எண்ணங்களுடன் வளர்க்கப் பட்ட அவளிடம் கணவனின் பணிக்கு உறுதுணையாக இருப்பதும் குழந்தை பெற்றுக் குடும்பத்தை நிர்வகிப் பதும் தனது கடமை என்ற எண்ணம் இயல்பாக இருந்தது. ஸோஃபியாவுக்குத் தினமும் டயரிக் குறிப்பு எழுதும் வழக்கம் இருந்தது. தனக்குத் தானே நினைவுபடுத்திக்கொள்வதுபோல, ‘மேதையைப் போற்றிக் காப் பது சுலபமல்ல’ என்று தனது குறிப்பில் எழுதியுள்ளாள்.

நகல் எடுக்கும் பணி

டால்ஸ்டாயின் பேனாவிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைக்காகவும் அறிஞர்களும் ஜார் மன்னரும் காத்திருந்தார்கள். ‘அன்னா கரினீனா’, ‘போரும் அமைதியும்’ எல்லாம் கொண்டாடப்பட்டன. கௌன்ட் லெவ் நிக்கோலோயேவிச் லியோ டால்ஸ்டாயின் பெருமையைத்தான் உலகம் அறிந்துகொண்டது. ஆனால் அவர் எழுதிக் குவித்த வற்றை நகலெடுத்துச் சரிசெய்தது, அவருடைய மனைவி என்பதை நினைவில் கொள்ளவில்லை. பதினாறு கர்ப்பத்துக்கு இடையில், (மூன்று கருச்சிதைவு) 13 குழந்தைகளின் வளர்ப்புக்கு இடையில் ஒரு குடும்பத் தலைவியான சோஃபியா இவற்றை எப்படிச் செய்தார் என்னும் பிரமிப்பு யாருக்கும் எழவே இல்லை.

டால்ஸ்டாயுடன் அவள் வாழ்ந்த கடைசி ஆண்டை வைத்து சோஃபியாவின் ஆளுமை எடை போடப்படுவது துயரமானது, அநியாயமானது என்கிறார் அவரது சரிதத்தை எழுதியிருக்கும் அலெக்ஸாண்ட்ரா பொப்போ. அதைச் செய்தவர்கள் அவளுடைய எதிரிகள்; டால்ஸ்டாயின் சிஷ்யர்கள். அதில் முக்கியமானவர் விளாடிமர் செர்ட்காவ் என்ற பாசாங்குக்காரன். டால்ஸ்டாய்க்கு நெருக்கமானவன் என்று காண்பித்துக்கொள்ள விழைந்தவன். அவனைக் கண்டால் சோஃபியாவுக்குப் பிடிக்காது. அதனாலேயே அவன் அவளுக்கு எதிரியானான். டால்ஸ்டாயின் கடைசிக் காலகட்டத்தில் மனநெருக்கடியில் ஆன்மிகத்தை நாடினார். அதனால் அவரது இயல்பே மாறியது. நிலச்சுவான்தாரரான டால்ஸ்டாய், சமத்துவம் பேசினார். எண்பது வயதிலும் உடலுறவில் ஈடுபட்டவர், பிரம்மச்சரியத்தின் பெருமைகளைப் பற்றிப் பேசினார். உன்னதப் படைப்புகளை உலகுக்குத் தந்தவர் கலைகளை நிராகரித்தார்.

செர்ட்காவின் தூண்டுதலின் பேரில் டால்ஸ்டாய் ரகசியமாகத் தனது சொத்துகளையெல்லாம் தர்மத்துக்குத் தாரைவார்க்க இருப்பதை அறிந்த 13 குழந்தைகளையும் சமாளிக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்த சோஃபியா, தன் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் செர்ட்காவ், டால்ஸ்டாய் என்ற மாமனிதரின் ஆன்மிகத் தேடலுக்குக் குறுக்கே நின்ற ‘தீமை’ என்று அவளைக் குறித்துச் செய்தி பரப்பினார்.

டால்ஸ்டாய் நவம்பர் மாத இரவில் 82-ம் வயதில் அவர் வாழ்ந்த யாஸ்னயா போல்யானா என்ற எஸ்டேட்டிலிருந்து ஸோஃபியாவிடம் சொல்லாமல் கிளம்பிச் சென்றார். அவர் கிளம்பியது அவரது சிஷ்யக் கும்பலைச் சந்தோஷப்படுத்தியது. டால்ஸ்டாய் மனைவியின் துன்புறுத்தல் பொறுக்காமல் வெளியேறிய தாக செர்ட்காவ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினான். டால்ஸ்டாயின் வெளியேறல் ஒரு இதிகாச புனிதம் பெற்றது. ஸோஃபியாவைப் பற்றிய வதந்திகளை மக்கள் நம்பினார்கள். வீட்டைவிட்டுக் கிளம்பிய அடுத்த பத்தாம் நாள் டால்ஸ்டாய் ஒரு ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் காலமானார். அவருடைய உடல்நிலை மோசமான செய்தியை ஒரு தினசரிப் பத்திரிகையில் படித்துக் கணவரைப் பார்க்க ஸோஃபியா ரயில் நிலையத்துக்கு விரைந்தாள். டால் ஸ்டாயின் சீடர்கள் அவரது அருகில் அவளை விட மறுத்தார்கள். டால்ஸ்டாயின் நினைவு தப்பிய பிறகே அனுமதிக்கப்பட்டாள்.

சர்ச்சைக்குரிய கருத்துகள்

ஆனால் இந்தக் கயவர்கள் அவளைத் துன்புறுத்தியதற்கு முன்பே டால்ஸ்டாயே அவளைத் தனது ‘க்ரூட்சர் ஸொனாட்டா’வில் தண்டித்திருந்தார். அவள் கணவனுக்குத் துரோகம் செய்தாள் என்று கொலை செய்கிறார். தன்னைத்தான் அவர் சாடுகிறார் என்று ஸோஃபியாவுக்குத் தெரியும். படித்தவர் எல்லோருக்கும் அவளைப் பற்றித்தான் டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார் என்று தெரிந்தது. அவளுக்கும் புரிந்தது. அதில் பாலியல் உறவைப் பற்றி டால்ஸ்டாய் எழுதிய கருத்துகள் சர்ச்சைக்குள்ளாயின. ஜார் மன்னர் புத்தகத்துக்குத் தடை விதித்தார். ஸோஃபியா மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். மாறாக மன்னரைச் சந்தித்து, “புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் நவயுகத்துக்கு ஏற்றதாக இருக்கும்” என்று வாதாடினாள். அதை ஏற்று தடை விலக்கப்பட்டது. இப்போது வெளிவந்திருக்கும் ‘The Kreutzer Sonata Variations’ என்ற புத்தகத்தில் டால்ஸ்டாயின் க்ரூட்சர் ஸொனாட்டாவுடன் ஸோஃபியா எழுதி யாரும் அறியப்படாமல் பரணில் கிடந்த “யாருடைய தவறு?” என்ற நாவலும் இடம்பெறுகிறது. க்ரூட்சர் ஸொனாட்டாவுக்கு அவள் தரும் எதிர்வினையாக அந்த நாவல் கருதப்படுகிறது.

- வாஸந்தி,மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் - vaasanthi.sundaram@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

மேலும்