அமித் ஷா அண்ட்
தி மார்ச் ஆஃப் பிஜேபி
அனிர்வன் கங்குலி, ஷிவானந்த் திவ்வேதி
ப்ளூம்ஸ்பரி வெளியீடு
விலை: ரூ.399
நரேந்திர மோடி – அமித் ஷா போன்ற அரசியல் இரட்டையர்களை இதுவரை இந்தியா கண்டதில்லை. தொடர் வெற்றிகளைக் குவித்து, பாஜகவை உலகிலேயே பெரிய கட்சி என்ற நிலை நோக்கி நகர்த்தியிருக்கும் இந்த இருவரைப் பற்றியும் உலகமே இன்று பேசுகிறது. இருவரில் மோடியைப் பற்றி எல்லோருக்குமே தெரியும்; அமித் ஷாவைப் பற்றி அவருடைய சொந்தக் கட்சியினருக்கே குறைவாகத்தான் தெரியும். இது அமித் ஷாவின் காலம். அவரைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் குவிந்துவரும் நிலையில், சமீபத்திய குறிப்பிடத்தக்க ஆங்கிலப் புத்தகங்களில் ஒன்றாக வெளிவந்திருக்கிறது ‘அமித் ஷா அண்டு தி மார்ச் ஆஃப் பிஜேபி’.
அமித் ஷா வளர்ந்துவந்த பின்னணி என்ன, மோடிக்கும் அமித் ஷாவுக்கும் இடையிலான உறவு எப்படி மலர்ந்தது, அமித் ஷா மீதான மோடியின் அபார நம்பிக்கைக்கான காரணம் என்ன, கட்சிக்குள் எப்படிப் படிப்படியாக அமித் ஷா வளர்ந்துவந்தார், கட்சித் தலைவர் ஆனதும் கட்சியின் வடிவத்தை எப்படி மாற்றியமைத்தார் என்று விலாவாரியாகப் பேசுகிறது இந்தப் புத்தகம்.
அமித் ஷாவின் புகழ் பாடும் வகை புத்தகம்தான் என்றாலும், அது சொல்லும் பல தகவல்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. வசதியான வணிகக் குடும்பத்தில் பம்பாயில் பிறந்த அமித் ஷாவின் வாழ்க்கை அவருடைய மூதாதையர் ஊரான மான்சாவுக்கு மாறிய பிறகு எப்படி மேலும் மேம்படுகிறது, பெருநகர – சிறுநகர இருவேறு கலாச்சாரங்கள் அவருக்குள் எப்படி இறங்குகின்றன, சிறு வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்புக்குள் வந்து பயின்றவர், வளர்ந்ததும் வணிகத்தை எப்படி இயல்பாக்கிக்கொண்டார், அரசியலையும் வணிகத்தையும் ஒருசேர எப்படிக் கையாளப் பழகினார் என்று விரிவாகவே பேசுகிறது புத்தகம்.
மோடியைப் போலவே ஒரு நாளைக்கு 18 மணி நேரம் சளைக்காமல் வேலைசெய்பவர் அமித் ஷா என்று சொல்லும் புத்தக ஆசிரியர்கள், “மோடிக்கேனும் குடும்பம் இல்லை; முழு நேரப் பிரச்சாரகராக வளர்ந்தவர். அமித் ஷாவோ குடும்பஸ்தர். குடும்பத்துடன் நெருக்கமான உறவைப் பராமரிப்பவர். எனினும், கடும் உழைப்பைக் கட்சிக்குக் கொடுக்கும் வகையில் வாழ்வை அமைத்துக்கொண்டவர்” என்கிறார்கள்.
1984-ல் ஜனதா கட்சியிலிருந்து வெளியேறிய ஜனசங்கத்தினர் ‘பாரதிய ஜனதா கட்சி’ என்று புதிய கட்சியைத் தொடங்கி, மக்களவைத் தேர்தலில் மிக மோசமாகத் தோற்ற தருணத்தில்தான் அமித் ஷா கட்சிக்குள் காலடி எடுத்துவைக்கிறார். தொடக்கத்திலிருந்தே கீழே இறங்கிப் பணியாற்றுவதையே பிரதான உத்தியாக அமித் ஷா கொள்கிறார்; அதேபோல, சொந்தக் கட்சியில் மட்டுமல்லாது வெவ்வேறு கட்சிகளுக்குள் இருக்கும் அதிருப்தியாளர்களை உள்ளே கொண்டுவருவது, சொந்த செல்வாக்குள்ளவர்களைக் கட்சிக்குக் கொண்டுவருவது; அவர்களைக் கொண்டு கட்சியைப் பலப்படுத்திய பிறகு, கட்சியின் பலத்தைக் காட்டி புதிய கூட்டத்தை உள்ளிழுப்பது எனும் உத்தியைத் தொடர்ந்து கையாள்கிறார். குறிப்பிடத்தக்க விஷயம் பொதுவாக எல்லா அரசியல்வாதிகளும் கவனம்செலுத்தும் ஊடகங்களுடனான உறவு, அடையாள நிமித்த கூட்டங்கள் – போராட்டங்கள் இவற்றைப் புறந்தள்ளுகிறார் அமித் ஷா. கட்சிக் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
வாக்குச்சாவடிக் குழுக்களை அமைப்பதில் கையாளும் உத்தி, சமகால இந்தியாவுக்கு மோடி – ஷா இரட்டையரின் பெரிய பங்களிப்பு. அதில் அமித் ஷா கொண்டுவந்திருக்கும் மாற்றங்களைப் புத்தகாசிரியர்கள் பட்டியலிடுகின்றனர். ‘வாக்குச்சாவடிக் குழுவை வேட்பாளர் அமைக்கக் கூடாது; அது ஒரே பகுதி அல்லது ஒரே சாதியினரால் நிரம்பிவிடும். தொகுதியின் அனைத்துத் தரப்பினரையும் பிரதிபலிப்பதாகக் குழுக்கள் இருக்க வேண்டும்’ என்பதில் காட்டப்படும் உறுதி, ஒரு தொகுதியில் அடிக்கடி வென்ற சாதியைத் தவிர்த்து, வேறு சாதியினரில் நேர்மையும் படிப்பும் செல்வாக்கும் உள்ள புதியவர்களை வேட்பாளர்களாக்குவதில் உள்ள முக்கியத்துவம், வயதானவர்களையும் தொகுதிக்கே வராதவர்களையும் ஊழல்களில் பெயரைக் கெடுத்துக்கொண்டவர்களையும் ஓரங்கட்டுவதன் சூட்சமம், இவையெல்லாம் எப்படியான வெற்றிகளாக மாறுகின்றன எனும் உதாரணம் என்று விரிகிறது புத்தகம்.
பாஜகவையும், மோடி - ஷா ஜோடியையும் பிடிக்காதவர்களும்கூட இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்; வெவ்வேறு கட்சியினர் பாஜக குவிக்கும் தொடர் வெற்றிக்கான காரணத்தை இதிலிருந்தும் புரிந்துகொள்ள முற்படலாம்.
- வ.ரங்காசாரி, தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
16 hours ago
இலக்கியம்
16 hours ago
இலக்கியம்
16 hours ago
இலக்கியம்
16 hours ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago