‘தமிழின் எதிர்காலம் அதன் கடந்த காலத்தில் இல்லை’ என்று வழக்கமான சொல்லாடலின் அனுமானத்தை மறுத்து இ.அண்ணாமலையின் ‘தமிழ் இன்று: கேள்வியும் பதிலும்’ நூல் தொடங்குகிறது. பழமையை ஆராதிக்கும் அணுகுமுறை, மொழித் தூய்மை, மொழிச் செம்மை பற்றிய சனாதனக் கருத்தாக்கங்கள் - இவற்றிலிருந்து விலகிய இந்நூல், தமிழ்ச் சிந்தனைக்கு மாற்றுத் தடம்.
தமிழ் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தமிழின் தொன்மை அல்லது செம்மொழித் தன்மைக்கான ஆதாரங்கள் பற்றியவை அல்ல. பழைய இலக்கணத்தை எப்படி நிலைநிறுத்துவது என்பதும் அல்ல. தமிழ்ச் சமுதாயம் பேச வேண்டியது, ‘மாறிவரும் உலகத்துக்கேற்ப மாறும் சுதந்திரம் தமிழுக்கு வேண்டும்’ என்பதே. தமிழ் பற்றிய சில கருத்தாக்கங்கள் சுதந்திரத்தை மறுக்கின்றன என்பது நூலின் மையக் கருத்து.
தமிழுக்கு இன்றைய தேவை புதிய மரபுக்கான புதிய இலக்கணம். எப்படி புதிய இலக்கணம் பிறக்கிறது என்பதற்கு நூல் எடுத்துக்காட்டு தருகிறது. ‘ரஸம்’ என்று எழுதினால் அது தமிழின் மரபை முறிக்க எழுதுவது. ‘இரசம்’ என்பது மரபைக் காக்க வேண்டும் என்பதற்காகவே எழுதுவது. இரண்டுமே சமூகத்தின் மொழித்தேவைக்காக வருபவை அல்ல. ‘இரசம்’ என்பதில் மரபு ஒன்றைத் தவிர சொல்லுக்கு முன் வரும் இகரத்துக்கு வேறு தேவை இல்லை. ‘ரசம்’ என்பதே போதும். இந்தப் பெரும்பான்மை வழக்கு புது இலக்கணமாகிறது.
இலக்கண விதிகளைக் காட்டி சிலவற்றை ‘தரமானவை’ என்றும் மற்றவை ‘பிழை வழக்குகள்’ என்றும் பிரிப்பதன் விளைவைச் சொல்கிறது நூல். அந்த ‘தரமானவை’ முதன்மை பெற்று மொழியை சாதாரண மக்களிடமிருந்து விலக்கிவைக்கும். மொழியில் அதிகாரம் வரித்துக்கொள்பவர்கள்தான் இப்படித் தரம் பிரிப்பார்கள்.
பள்ளிக்கூடமும், பாடப் புத்தகமும் மொழி பற்றிய கருத்தியல்கள் இல்லாத அப்பாவிகள் அல்ல. தங்கள் கருத்தியல்களுக்கு ஒப்ப ஒரு தமிழை உருவாக்க அவை முனையும். எழுத்துத் தமிழ் உயர்ந்ததல்ல. பேச்சுத் தமிழும் தாழ்ந்ததல்ல. உயர்வு, தாழ்வு பற்றிய நினைப்பு இந்த மொழி வடிவங்களைப் பயன்படுத்துவோரின் அந்தஸ்து பற்றி நம் சமூக அமைப்பு செய்யும் மதிப்பீடுதான்!
தமிழுக்குத் தேவையான நெகிழ்ச்சியை இலக்கணவாதிகளோ மொழியியலாளர்களோ ஆர்வலர்களோ தீர்மானிப்பதில்லை, தமிழில் எழுதும் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் தமிழ் எங்கே நெகிழ வேண்டும் என்று காட்டுகிறார்கள். நெகிழ்ச்சியின் அடையாளம் உச்சரிப்பு, எழுத்துக்கூட்டு, இலக்கணம் ஆகியவற்றில் காணப்படும் மாற்று வடிவங்கள். மாற்று வடிவங்கள் பிழைகள் அல்ல. ஒரு புது வழக்கு பெருகினால் அதுவே ஒரு இலக்கண விதி. புது விதி மொழியைக் கெடுப்பதில்லை. கெடுக்கிறது என்போமானால் தமிழில் இலக்கண வளர்ச்சி திரங்கிவிட்டது என்பது நம் முடிவு என்று அந்த வாதத்தின் குறையைக் காட்டுகிறார் அண்ணாமலை.
தமிழால் முடியுமா என்ற கேள்விக்கு மொழியியல் அடிப்படையில் நூல் பதில் தருகிறது. மொழிக்கு உள்ளார்ந்த திறன் என்பது கிடையாது. மொழி பேசும் சமூகத்துக்கு முனைப்பு இருந்தால் எந்த மொழியும் எதையும் செய்ய முடியும். அறிவுத் துறைகளில் இருப்பவர்களின் சிந்தனை தமிழில் கட்டமைந்த அறிவுத் தமிழை உருவாக்கலாம். அறிவுத் தமிழ் அறிவியல் தமிழ் மட்டுமல்ல. அவரவர்களும் தங்கள் அறிவுப் புலம் பற்றி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தமிழில் எழுத வேண்டும். இந்த எழுத்தியக்கம் அரசின் தயவுக்குக் காத்திருக்கத் தேவையில்லை. தமிழ்த் துறை சார்ந்தவர்களே எழுத வேண்டும், கலப்பில்லாத தமிழில் எழுத வேண்டும் என்பதும் இல்லை. ‘அறிவுத் தமிழ் எழுத்தியக்கம் தமிழ் அறிவுஜீவிகளின் கடமை’ என்று முடிகிறது நூல். இந்த நூலில் மொழியியலும் தமிழ் ஆர்வமும் ஒன்றிவிடும் புது இசைவின் மனக் கிளர்ச்சியை அனுபவிக்கலாம்.
- தங்க.ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: profjayaraman@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
2 months ago