ஜெ
ஃப்ரி ஆர்ச்சர்…! இன்று உலகில் அதிகம் விற்பனையாகிற எழுத்தாளர்களின் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் வருபவர். நாவல், கட்டுரை, சிறுகதை, நாடகம் என எழுத்தின் பல்வேறு தளங்களில் பயணிப்பவர். என்றாலும், சிறுகதையில்தான் அவரின் கச்சிதம் மிளிர்கிறது.
கடந்த சுமார் 10 ஆண்டுகளை ஹாரி கிளிஃப்டன் என்கிற ஐரிஷ் கவிஞரைப் பற்றி ‘க்ளிஃப்டன் கிரானிக்கிள்ஸ்’ என்ற தலைப்பில் 7 நாவல் வரிசையை வெளிக்கொண்டு வருவதில் செலவிட்டார். இதனால் அவரது சிறுகதைத் தொகுப்பு எதுவும் வரவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாகச் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது ‘டெல் டேல்’ எனும் சிறுகதைத் தொகுப்பு.
ஜெஃப்ரியின் கதைசொல்லல் முறை எப்போதும் எளிமையானதாக இருக்கும். எடுத்துக்கொண்ட விஷயத்திலிருந்து நேராகப் பயணிப்பவர். கதையின் இறுதியில் நாம் எதிர்பார்த்திராத ஒரு ‘ட்விஸ்ட்’ வைத்திருப்பார். அதைப் படித்தவுடன், நாம் ஆச்சரியத்தில் கொஞ்ச நேரம் மூழ்கிவிட்டு, மீண்டும் அந்தக் கதையை ஆரம்பத்திலிருந்து படிப்போம். அதுதான் அவரது எழுத்தின் தனித்தன்மை.
அவரது சிறுகதைகளின் இன்னொரு சிறப்பம்சம், பெரும்பாலும் தான் கடந்து வருகிற நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை, மனிதர்களைத் தன் கதைகளில் உலவவிடுவார். இந்தத் தொகுப்பில் மட்டும் அப்படி 8 கதைகள் உள்ளன. மொத்தம் 14 கதைகள். அதில் 2 கதைகள் மிகச் சரியாக நூறு வார்த்தைகளில் முடியும் கதைகள். அவை இரண்டும் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழ் அவருக்கு விட்ட சவாலின் விளைவாக எழுதப்பட்டவை.
நிஜ வாழ்க்கையிலிருந்து உருவப்பட்ட நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்ட ஒரு கதை இப்படிப் போகிறது. கல்லூரி மாணவி அவள். எழுத்தாளர் ஆக வேண்டும் என்பது அவள் கனவு. அதனால் நிறைய அனுபவங்களைச் சேகரிக்க நினைக்கிறாள். எனவே, ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து கல்லூரிக்கு, கார்களில் ‘லிஃப்ட்’ கேட்டுச் செல்கிறாள். அப்போது, காரில் இருப்பவர்களுடன் உரையாடுவாள்.
அவர்கள் சொல்லும் விஷயங்களை எல்லாம் கவனமாகத் தன் மனதுக்குள் பதிய வைத்துக்கொள்வாள். ஒருமுறை முதியவர் ஒருவர் அவளுக்கு ‘லிஃப்ட்’ கொடுக்கிறார். முன்னாள் ராணுவ வீரர், பத்திரிகையாளர் என்று பல முகம் அவருக்கு உண்டு. தன்னுடைய போர்க்கால அனுபவங்களை எல்லாம் பகிர்ந்துகொண்டு வருகிறார்.
அவளுக்குப் பிடித்த எழுத்தாளர் யார், பிடித்த புத்தகம் என்ன என்பதைப் பற்றிய அவரது கேள்விக்கு, அவள் ‘இதுவரைக்கும் ‘தி கிரேப்ஸ் ஆஃப் ராத்’ போன்ற ஒரு நாவல் படைக்கப்படவே இல்லை. என்னுடைய 12 வயதில் நான் அதைப் படித்தேன்’ என்கிறாள்.
பேச்சு சுவாரஸ்யத்தில் அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. கல்லூரி நிறுத்தம் வந்ததும் அவள் இறங்கிக்கொள்கிறாள். ‘உங்களது வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சி’ என்று சொல்லி அவள் விடைபெறும்போது, அந்த முதியவர் இப்படிச் சொல்வார்: ‘உனது முதல் நாவலை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உன்னுடைய 12 வயதில் என்னுடைய புத்தகத்தைப் படித்ததாகச் சொன்னதற்கு நன்றி. சந்தோஷமாக இருக்கிறது’. ஆம், அந்த முதியவர், பிரபல நாவலாசிரியர் ஜான் ஸ்டீன்பேக்.
இதில் என்ன ஒரு சுவாரஸ்சியம் என்றால், அந்தக் கதைக்கு ஜெஃப்ரி வைத்திருக்கும் தலைப்புதான். ‘எ வேஸ்டட் ஹவர்!’
இந்திய வாசகர்களுக்கு, ஜெஃப்ரி ஆர்ச்சர் என்ற பெயர், மயக்கம் தரும் சொல். சொல்லப் போனால், வேறு எந்த நாட்டை விடவும், இங்கு அவருக்கு ரசிகர்கள் அதிகம் என்று சொல்லலாம். அதற்குக் காரணம், தன்னுடைய கதைகளில் இந்தியா தொடர்பான சம்பவங்கள், கதாபாத்திரங்கள், இடங்கள் போன்றவற்றைக் கொண்டு வருவதால்கூட இருக்கலாம். இந்தத் தொகுப்பில் உள்ள கதை ஒன்றில்கூட, வெளிநாட்டில் உள்ள ‘வீராசாமி’ என்ற உணவகத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது.
ஒரு நெடும்பயணத்தின் பாதி வழியிலேயே முழுக்கப் படித்துவிடக் கூடிய தொகுப்பு இது. நிச்சயம் அது ஒரு ‘எ டேஸ்டட் ஹவர்!’ ஆக இருக்கும்.
- ந.வினோத் குமார்,
தொடர்புக்கு:
vinothkumar.n@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago