கொச்சியில் சாத்தியம் என்றால் சென்னையிலும் சாத்தியம்தானே?

By கண்ணன்

மா

ர்ச் 10 தேதியிட்ட இதழில் கொச்சி புத்தகச் சந்தை பற்றி பதிப்பாளர் அனுஷ் எழுதிய குறிப்பைப் பார்த்தேன். இந்தியாவின் பிற பெரிய, சிறிய புத்தகச் சந்தைகளைக் கண்டு நாம் கற்க வேண்டியவை பல உள்ளன. உதாரணத்துக்கு, வெளியே தனி அரங்குகளில் பல நிகழ்வுகளை நடத்தி, உள்ளே புத்தகம் வாங்கிக்கொண்டிருக்கும் வாசகர்களைத் தொடர் அறிவிப்புகள்மூலம் வெளியே இழுத்து, பிரமுகர்களின் உரை வீச்சுகளை இரவு வரை கேட்க வைத்து வீட்டுக்கு அனுப்பும் விநோதம் தமிழகப் புத்தகச் சந்தைகளுக்கே உரியது. அதிலும், எழுத்தாளர்களைவிட பிரமுகர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், ஆன்மிகப் பரப்புரையாளர்கள், அதிகாரிகள் அதிகம் மதிக்கப்படுவது தமிழகத்தில்தான்.

ஆனால், பிராங்பர்ட்டிலிருந்து கொச்சி வரை தமிழகத்துக்கு வெளியே நடக்கும் புத்தகக் காட்சிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் புத்தகச் சந்தையின் உள்ளேயே நடக்கும். வாசகர்களை அவை சந்தையின் உள்ளே இழுக்கும். எழுத்தாளர்கள் மிதமான குரலில் உரையாடுவார்கள். பிற புத்தகச் சந்தைகளில் பதிப்பாளர்களைக் கூடுதல் இடத்தை வாடகைக்கு எடுக்க வற்புறுத்துவார்கள். பதிப்பாளர்களின் எல்லாத் தலைப்புகளும் கிடைத்தால்தானே புத்தகச் சந்தை செழிக்கும்; அமைப்பாளர்களுக்கும் வாடகை வருமானம் பெருகும். அதேபோல வாடகைக்கு இடம் கேட்போருக்கு இடம் மறுக்கப்படுவதும் எனக்குத் தெரிந்து எங்கும் இல்லை. மாறாக, புதியவர்களை உள்ளே இழுக்க எல்லா முயற்சிகளும் நடக்கும்.

கொல்கத்தா புத்தகச் சந்தைக் குழு பிராங்பர்ட் வந்து உலகப் பதிப்பாளர்களை அழைப்பதைக் கண்டிருக்கிறேன். புதியன ஒவ்வோர் ஆண்டும் புக வேண்டும் என்பதே அனைவரது முனைப்பாகவும் இருக்கும். இந்தியாவில் அரசு லைசன்ஸ் கொடுக்கும் ராஜ்ஜியம் நீங்கிச் சில பத்தாண்டுகள் ஆனாலும், பபாசியில் இன்றும் தொடர்கிறது. கொச்சி புத்தகச் சந்தை சிறிய தாக இருக்க ஒரே காரணம், முதல் முயற்சியாக அது இருந்ததால் பலரும் பங்கேற்கவில்லை என்பதுதான். மாறாக, புத்தகச் சந்தை பரந்து விரிந்தால் விற்பனை பிரிந்துவிடும் எனும் எந்த ஆதாரமும் இல்லாத நம்பிக்கை, தமிழகப் புத்தகச் சந்தைகளுக்கே உரியது. பதிப்பாளர்கள் பெருகப்பெருக வாசகர் வருகையும் பெருகும். வாசகர்களிடம் வீண் அலைச்சலைத் தவிர்க்க புத்தகச் சந்தையை ஆங்கிலம், தமிழ், குழந்தைகள், மல்டிமீடியா, கல்விசார் பதிப்பகங்கள் எனப் பல பகுதிகளாகப் பிரிக்கலாம். வாசகரை வழி மறிக்காமல் புத்தகச் சந்தையினுள் சுதந்திரமாக வளையவர அனுமதிக்க வேண்டும்.

யோசனைகளுக்கு இடமில்லை

சென்னை புத்தகச் சந்தை முன்னேற இந்திய உலக நிலைமைகளை அறிந்த பலரும் பல யோசனைகளை முன்வைக்க முடியும். 2002-லிருந்து தொடர்ந்து டெல்லி உலக புத்தகச் சந்தைக்கும் 2007-லிருந்து தொடர்ச்சி யாக பிராங்பர்ட்டுக்கும் இன்னும் பல நாட்டுப் புத்தகச் சந்தைகளுக்கும் சென்றுவருகிறேன். இத்தகைய அனுபவமுடைய தமிழ்ப் பதிப்பாளர்கள் இன்னும் சிலரும் உண்டு. ஆனால், இன்றுவரை எந்த பபாசி குழுவும் எங்களை அழைத்து ஆலோசனை கேட்டதில்லை. நாமாகப் புதுமைகளை நமது அரங்குக்கு உட்பட்ட அளவில் புகுத்த முயன்றாலும் பல சமயங்களில் அதற்குத் தடையாகவே பபாசி இருந்துள்ளது.

ஒரு பதிப்பாளராக இத்தொழிலில் முன்னேற பபாசி உறுதுணையாக இருப்பதாக நினைக்க எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வெளிப்படையாகச் சொன்னால் அவர்கள் எமது வளர்ச்சிக்கு எதிராகச் சிந்திப்பதாகவும் செயல்படுவதாகவும் சில சந்தர்ப்பங்களில் உணர்கிறேன். ஒருவருடைய குறிப்பிட்ட அளவு வளர்ச்சி அடுத்தவரின் அதே அளவு வீழ்ச்சியாலேயே சாத்தியம் எனும் அபார நம்பிக்கை (இதை ஆங்கிலத் தில் ‘சீரோ சம் கேம்’ என்பார்கள்) பபாசியைக் காலங் காலமாக ஆக்கிரமித்துவருகிறது.

டெல்லி, கொல்கத்தா சந்தைகள்

இருப்பினும் சென்னை புத்தகச் சந்தைக்கு இருக்கும் தனித்துவமான இடத்தையும் அதற்குப் பின்னிருக்கும் பபாசியின் உழைப்பையும் அங்கீகரிப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. தமிழ் பதிப்புலகின் வளர்ச்சியில் இந்த அரிய நிகழ்வுக்கு முக்கிய இடம்உண்டு. சென்னை புத்தகச் சந்தையில் வாசகர் வருகை ஒரு பொக்கிஷம். அது நமக்குக் கைகூடியுள்ளது. இந்த முறை புத்தகச் சந்தை வந்திருந்த ஆஸ்திரேலியப் பதிப்பாளர் குழுவினர், வாசகர்கள் திருவிழாக்கோலமாக குடும்பம் குடும்பமாக வந்ததைக் கண்டு அசந்துவிட்டார்கள்.

இதற்கு நிகராக ஒப்பிடக்கூடிய புத்தகக் காட்சிகள் இந்தியாவில் இரண்டு. ஒன்று டெல்லியில் நடக்கும் உலகப் புத்தகக் காட்சி; மற்றது கொல்கத்தா புத்தகக் காட்சி. டெல்லி புத்தகச் சந்தை மத்திய அரசு நிறுவன மான ‘நேஷனல் புக் டிரஸ்’டால் நடத்தப்படுகிறது. புத்தகச் சந்தைக்கான மொத்தச் செலவான கிட்டத்தட்ட ரூ.25 கோடியில் மூன்றில் இரண்டு பங்கு மத்திய அரசின் நன்கொடை; மீதிமட்டுமே வருமானம்.

கொல்கத்தா புத்தகச் சந்தை சென்னையைப் போல பதிப்பாளர், விற்பனையாளர் கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. இருப்பினும் மிக முக்கியச் செலவான இட வாடகை அரசால் சலுகை விலையில் வழங்கப்படு கிறது. ஒரு பரந்த மைதானத்தை அரசிடமிருந்து முட்டிமோதிச் சலுகை கட்டணத்தில் பெற பபாசியும் ஆர்வலர்களும் முயல வேண்டும். அதற்கு புத்தகச் சந்தை மேன்மேலும் வளர வேண்டும் என்ற தொலைநோக்கு அவசியம்.

விரிந்த பார்வை தேவை

முக்கியமான செய்தி, சென்னை புத்தகச் சந்தை யைப் போல எந்த அரசு உதவியும் இன்றி லாபகரமாக நடத்தப்படும் புத்தகச் சந்தை இந்தியாவில் இல்லை. உலகின் எந்த மூலையிலும் இத்தகைய ஒரு நிகழ்வு அரசின் ஆதரவு இன்றி நடக்காது. இங்கு அரசியல் வாதிகள் இதை எப்படி வளர்ப்பது என்று எண்ணாமல் எப்படிச் சுரண்டுவது என்று கணக்கிடுவார்கள் என்பதற்குக் கடந்தகால அனுபவங்கள் உண்டு. சென்னை புத்தகச் சந்தை எனும் கிடைத்தற்கரிய ஒரு பேறு தமிழகப் பதிப்பாளர்கள் கையில் இன்று உள்ளது. உலக பாதிப்புச் சூழலின் போக்கறிந்து அதைப் பேணி வளர்ப்பது நம் கடமை.

சென்னை மக்கள்தொகையில் எத்தனை மொழி பேசும் மக்கள் உள்ளனரோ அத்தனை மொழி பேசும் பதிப்பகங்களையும் புத்தகச் சந்தைக்குக் கொணர வேண்டும். அருமையான உணவுக்கூடங்கள் நியாய விலையில் அமைய வேண்டும். எழுத்தாளர் அரங்கு கள் சில அமைக்க வேண்டும். தூய்மையான கழிப் பறைகள் அமைக்க வேண்டும். இவை கொச்சி புத்தகச் சந்தையில் சாத்தியம் என்றால் சென்னையிலும் சாத்தியம்தான். பரந்த மனதோடும் விரிந்த பார்வையோடும் இவற்றை மேற்கொள்ள பபாசி முன்வர வேண்டும் என்பதே நமது விருப்பம்!

- கண்ணன், பதிப்பாளர்,

‘காலச்சுவடு’ ஆசிரியர்,

தொடர்புக்கு: kannan31@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

மேலும்