த
மிழர்களுக்கென்று, தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஓர் இசை முறை இருக்கவும் செய்கிறது. அது இன்றுவரை நீடிக்கவும் செய்கிறது. எனினும், குறைந்தது 3 ஆயிரம் ஆண்டுகாலத் தொடர் வாழ்க்கையும் வரலாறும் இசை வளர்ச்சியும் கொண்ட தமிழ்மொழி, இசைக் கலை குறைபாடுடையது என்பதுபோல நிந்தை அடிக்கடி எழுவதும் அமிழ்வதுமாகவே இருக்கிறது. இதை முன்னிட்டுத் தமிழ் இசை ஆய்வாளர் மற்றும் அறிஞர் நா.மம்மது, தம் வாழ்க்கையையே தமிழ் இசை ஆய்வுக்குத் தந்து, அடர்த்தி பொருந்திய 8 நூல்களின் ஆசிரியராக விளங்குகிறார்.
தமிழிசைப் பேரகராதி, தமிழ் இசை வரலாறு முதலான சீரிய நூல்கள் அவருடையதே. அவரது ‘என்றும் தமிழிசை’ எனும் நூல், தமிழ் இசை வரலாற்றில் மிக முக்கியமான புத்தகம். இதனை நாதன் பதிப்பகம் (72 - கேப்டன் காம்ப்ளக்ஸ், காவேரி தெரு, சாலிகிராமம்,சென்னை-93) அழகுறப் பதிப்பித்துள்ளது.
‘என்றும் தமிழிசை’ நூலின் முதல் அத்தியாயத்திலேயே நா.மம்மது சில அடிப்படைக் கேள்விகள் கேட்கிறார். ‘‘கூத்து என்ற சொல், தொல்காப்பியத்திலும் (கலித்தொகையைத் தவிர) மற்ற சங்க இலக்கியத்திலும் இடம்பெறவில்லை. சங்க காலத்து நாடக நூல் ஒன்று கூடக் கிடைக்கவில்லை. ஆயினும், நாடகம் என்பதைக் குறிக்க 22 சொற்கள் தமிழில் உண்டு. என்னே ஒரு மரபு முரண் இது!’’
“இசையில் (சுருதி, ஸ்ருதி) சுதி என்று கூறும் சொல்லுக்குத் தூய தமிழ்ச் சொற்கள் 22 உண்டு. ஆனால் அத்தனைச் சொற்களையும் வீழ்த்தி ‘ஸ்ருதி’ என்பது வழக்குக்கு வந்துள்ளதே !’’
இது போன்ற பல அடிப்படைக் கேள்விகளை முன் வைத்து, நா.மம்மது தன் ஆய்வுகளைத் தொடங்குகிறார்.
ஆதி மனிதனும் இயற்கையும்
ஆதி மனிதர்கள் கண்டடைந்த முதல் அறிவு, தன்னைச் சுற்றியுள்ள மரம் முதலான இயற்கையின் மூலமே, மலர்களும் நிறங்களும் மணமும் மகரந்த சேர்க்கையும் என அறிந்துகொள்கிறார்கள். தன்னைச் சுற்றிய அனைத்துக்கும் ‘பூ’ பெயரே இடுகிறார்கள். முல்லை பூக்கும் காடு முல்லை நிலம். இந்நிலத்தின் பெரும்பண் ‘முல்லை பாடல்’ என்கிறது ஐங்குறுநூறு. பின்னர் இது ‘செம்பாலை’ ஆயிற்று. இதுவே இன்றைய ‘அரிகாம்போதி’ என்று ஆராய்ந்து சொன்னார் விபுலானந்த அடிகள். ஆய்ச்சியர் குரவையில் குறிப்பிடப்படும் ‘முல்லைப் பாணி’ இன்றைய ‘மோகனம்’ என்கிறார் அறிஞர் எஸ்.ராமநாதன்.
குறிஞ்சிப் பூக்களால் சிறப்புற்ற வாழிடம் மலைப் பகுதி. அதன் பெரும்பண் முதலில் ‘குறிஞ்சி’. இதற்கு மாதவி மலரால் வந்த பெயர் ‘மதுமாதவி’. மதுமாதவிதான் இன்றைய ‘மத்யமாவதி’. இது திரிந்து வழங்கும் பெயர் என்று விபுலானந்த அடிகள் கருதுகிறார்.
கடற்கரை நிலம் நெய்தல். இதுவும் ஒரு மலரே. முதலில் இந்தப் பண்ணின் பெயர் ‘நெய்தல் பாணி’. பிறகு ‘குடில்’. இந்தனம் என்ற மரத்தின் பெயரால் இப்பண் ‘இந்தளம்’ ஆகி, இப்போது ‘இந்தோளம்’ ஆனது.
பாலை ஒரு மரம். இதன் இலைகள் நீண்டவை. 7 பிரிவுகள் கொண்டவை. 7 சுரப் பண்களுக்கு முன்னோர்கள் ‘பாலை’ என்றே பெயரிட்டார்கள். இன்று அதைத் தாய்ப் பண், மேளகர்த்தா, சம்பூரணம் என்றழைக்கிறோம். பாலையின் சிறப்பால் ‘பாலைப் பண்’ இன்று ‘சங்கராபரணம்’ ஆகியிருக்கிறது. சிறுபண், சங்கராபரணத்தில் பிறந்த ‘சுத்த சாவேரி’ ராகம் ஆகும்.
வயல் நிலம் சார்ந்த பூமி மருதம். இதன் பூ-மருதம். மருத மரம் சார்ந்த நிலம். மருதம், மருதயாழ் என்றெல்லாம் பெயர் கொண்ட அந்தப் பண், இன்று ‘கரகரப்பிரியா’. சிறுபண், ஆம்பல். இளங்கோ, இதை ஆம்பல் குழல் என்கிறார். இப்போது இது ‘சுத்த தன்யாசி’.
பெரும் பண், சிறுபண்ணைத் தோற்றுவிக்கும் காரண காரியங்களை அறிஞர்களின், ஆசான்களின் துணைகொண்டு நிறுவுகிறார் மம்மது.
இசைக் கலப்பு
நம் வாத்தியங்கள் அல்லாத வட இந்திய ஷெனாய், சிதார், சாக்ஸபோன், கிளாரிநெட், ஏன் வயலினும் நம் சங்கீதத்துக்குள் எத்தனை அழகாக இணைகின்றன. இக்கலப்பு, தொன்றுதொட்டே நிகழ்வதுதான். வணிகம் மொழியை வளர்த்ததுபோல இது. காசியில் தங்கியிருந்த முத்துஸ்வாமி தீட்சிதர் கிருதிகளில் இந்துஸ்தாணி இசை மரபும், ராகங்களும் கூட ஒலிக்கிறதே.
அரேபிய இசையில் பெரும்பான்மைக் கூறுகள், நம் ‘வகுளாபரணம்’ ராகத்தில் அடக்கம் என்கிறார் விபுலானந்த அடிகள்.
சீன இசையின் தலையாயப் பண் ‘மோகனம்’. சீன நாட்டுப் பண், மோகனத்தில் அமைந்தது. இசுலாமிய சூபி இசையானது நம் கீரவாணி, வகுளாபரணம் ராகங்களில் ஒளிர்கிறது.
நாட்டார் பாடலும் செவ்வியல் இசைமுறையும் ‘மாயாமாளவ கெளளை’ ஆகப் பரிணமித்து திரையிசையாக (மதுர மரிக்கொழுந்து வாசம்) ஒலிக்கிறதே. நாட்டிய இசையும் உலாப் பாடலும் (சிவகங்கைச் சீமை - சாந்துபொட்டு) அழகுதானே..?
சுமார் 3 ஆயிரம் ஆண்டு திட்டவட்டமான இசையும், இசை வரலாறும், சிலம்பு போன்ற இசை ஆவணமும் கொண்ட தமிழில், இசை இல்லை என்பது எத்தனை பெரிய மயக்கம், மடமை?
பாரதியும் தமிழர்களும்
நம் பாரதிக்கும் தமிழர் செய்யும் அலங்கோலத்தைச் சொல்லாமல் விடவில்லை, மம்மது. இசை தெரிந்த கவி, தன் பாட்டுக்கு என்ன ராகம் பொருந்தும் என்று நினைத்து, அந்த ராகத்தில் பாடல் எழுதினால் அதை மாற்ற யாருக்கு உரிமை இருக்கிறது? உலகளவில் நிலைபெற்ற பதிப்பு ஒழுக்கம் தெரியாதவர்கள் நம் புத்தக வியாபாரிகள். தமிழர்கள் யார் எழுத்தையும் மாற்றுவார்கள்.
ஒரு ரயில் பிச்சைக்காரப் பெண் பாடிய ‘மெட்டு’ என்று ஒன்றை பாரதி சொல்லி, அதன் மெட்டில் ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ பாடலை அமைக்கிறார். அத்தகையதொரு வடநாட்டு பாடல் ‘பீலு’ என்ற பண்ணில் இருக்க வேண்டும். ஆனால், சென்னைப் பல்கலையில் ‘இந்துஸ்தாணி தோடி’ என்ற ‘சிந்துபைரவி’யில் இசைப்படுத்தி இருக்கிறார்கள். மம்மது இதைக் கேட்டு 2 ஆண்டுகளாகிவிட்டன.
‘ஆசை முகம் மறந்து போச்சே’ பாடலைப் பாரதி ‘பிலகரி’ பண்ணில் போட்டிருக்கிறார். நாம் (நாமல்லர் வேறு மக்கள்) ‘ஜோன்புரி’ ராகத்தில் அதை இசையமைக்கிறோம்.
‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலை பாரதி ‘பைரவி’ ராகத்தில் அமைத்திருப்பார். 1951-ல் வந்த ‘மணமகள்’ திரைப்படத்தில் இந்தப் பாடலை ‘காப்பி, மாண்டு, வசந்தா, திலங், நீலமணி’ என்று 5 ராகங்களில் இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் சுப்பராமன்.
தமிழர்க்கு தொடர்ச்சி இசை
தமிழிசைக்குத் தொடர்ந்த மரபு உண்டா? தொடர்ந்து பாடப்படுகிறதா? - இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் மம்மது கொடுத்த பதில்கள்தான் இந்தப் புத்தகமே.
தமிழ்ச் சமூகம் மலைகளில், உறங்காத வேட்டைச் சமூகம். குறத்தியும் குறவனும் (மலை மக்கள்) குறிஞ்சிப் பண் பாடுகிறார்கள்.
அதை ‘அகநானூறு’ பதிவு செய்திருக்கிறது. சடங்குச் சமூகம் (கட்டுவிச்சிகள், தேவராட்டிகள், வேலன்) இந்த ராகத்தைப் பாடிய சான்று உண்டு. இந்தப் பண்ணைப் அவர்கள் பாடியதை ‘திருமுருகாற்றுப்படை’யும் ‘சிலப்பதிகார’மும் பதிவு செய்கின்றன.
தேவாரக் காலத்தில் இது ‘படுமலைப் பாலை’. இதுதான் இன்று ‘நடபைரவி’. அறிஞர்கள் எழுதி நிரூபித்து இருக்கிறார்கள்.
நேற்று, திரைப்படத்துக்குப் போன தமிழன், ‘ஓராயிரம் பார்வையிலே’, ‘நாணமோ இன்னும் நாணுமோ’ ,‘மயிலிறகே மயிலிறகே…’ என்று பாடியபடி வீடு திரும்புகிறான். அவன் பாடுவது ‘குறிஞ்சி’தான். அதே ராகம்தான் ‘நடபைரவி’. தமிழ் இசைக்கு தொடர்ச்சி இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
தமிழிசை பல வகையாக வளர்ந்தது. நாட்டார் இசை, நாட்டிய இசை, நாடக இசை, மெல்லிசை என்று பல வகை. இதன் ஒரு வகை வேத்திசை. அதாவது வேந்து இசை. அரசவை இசை. அதன் இன்றைய பெயர் ‘அரங்கிசை’. அதன் இன்னொரு பெயர் ‘கர்னாடக இசை’.
கர்னாடக இசை, தமிழிசையின் ஒரு கூறுதான். நிறைய நிறைய ஆதாரங்களுடன் நா.மம்மது இதை நிரூபிக்கிறார்.
- சுடரும்...
எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 hours ago
இலக்கியம்
5 hours ago
இலக்கியம்
5 hours ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago