ஐஏஎஸ் வரலாறு: அன்று முதல் இன்று வரை

By வீ.பா.கணேசன்

ஆட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் இந்திய ஆட்சிப் பணி உருவான வரலாறு, அது இன்று எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவற்றைத் தனது அனுபவ அடிப்படையில்  ‘தி ஸ்டீல் ஃப்ரேம்: எ ஹிஸ்டரி ஆஃப் தி ஐஏஎஸ்’ நூலில் முன்வைக்கிறார், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் யுபிஎஸ்சி அமைப்பின் முன்னாள் தலைவருமான தீபக் குப்தா.

இன்றைய நவீன உலகத்தில் அரசு நிர்வாகத்துக்கென அதிகாரிகளை நியமிக்கும் முறையை அறிமுகப்படுத்திய முதல் நாடு பிரிட்டன். கிழக்கிந்திய கம்பெனி இங்குள்ள மக்களிடமிருந்து நில வரியை வசூலிக்க நியமித்த அதிகாரிகளே பின்னர் பிரிட்டனின் நேரடி ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஆட்சியாளர்களாக உருவெடுத்து, காலனிய ஆதிக்கத்தை நீடிக்கச் செய்யும் அதிகார வர்க்கமாக உருவெடுத்தனர்.

இந்தப் பணிப்பிரிவில் ஐரோப்பியர்களே முற்று முழுதாக இருந்த நிலை மாறி, கடுமையான போராட்டத்துக்குப் பிறகு இந்தியர்களும் பங்கேற்கும் நிலை உருவானது. வங்கத்தைச் சேர்ந்த சத்யேந்திரநாத் தாகூர்தான் (ரவீந்திரநாத் தாகூரின் அண்ணன்) 1864-ல் நடைபெற்ற ஐசிஎஸ் தேர்வில் வென்ற முதல் இந்தியர். மாவட்ட ஆட்சியர் என்ற பதவியிலிருந்து ஒட்டுமொத்த இந்தியாவை ஆளும் கவர்னர் ஜெனரல் பதவி வரையில் இந்த ஐசிஎஸ் அதிகாரிகள் எட்டிப்பிடிக்க முடிந்தது.

பிரிட்டனுக்குத் தேவையான மூலதனத்தை இந்தியாவிலிருந்து நிலவரியாகவும் கச்சாப் பொருட்களாகவும் சேகரித்து அனுப்பிய ஐசிஎஸ் அதிகாரிகள், காலப்போக்கில் தங்களது மாவட்டவாசிகளின் மேம்பாட்டுக்காகவும், அவர்களது கல்வி, கலாச்சார மேம்பாட்டுக்காகவும் பாடுபடும் பிரிவினராக உருவெடுத்தனர். இந்தியாவின் வரலாறு, மானுடவியல், மொழியியல், அகழ்வாராய்ச்சி, தாவரவியல், விலங்கியல், இயற்கை வளங்கள் எனப் பல்வேறு துறைகளிலும் அவர்களது பங்களிப்பு இருந்தது.

நாட்டு விடுதலைக்குப் பிறகும் பணியில் தொடர்ந்த ஐசிஎஸ் அதிகாரிகளோடு, ஐஏஎஸ் என்ற பெயர்மாற்றம் பெற்ற அதிகார வர்க்கமும் கிரியா ஊக்கிகளாக உருப்பெற்றதையும் இந்நூல் எடுத்துக்கூறுகிறது. காலப்போக்கில் மாவட்ட ஆட்சியாளர்களின் அதிகார எல்லைகள் குறுகிக்கொண்டே போனதையும், அரசியல்வாதிகளின் நேரடித் தலையீடு எவ்வாறு இதன் வலிமையைக் குறைத்தது என்பதையும் பேசுகிறது.

சுதந்திர இந்தியாவில் ஆட்சிப் பணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த ஆய்வுக் குழுக்களின் அறிக்கைகள், முன்னாள் அதிகாரிகளின் நினைவலைகள், அதன் அடிப்படையில் இந்திய ஆட்சிப் பணியில் நிகழ்ந்த, நிகழ்த்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பேசும் வேளையில், இன்றைய பஞ்சாயத்து அமைப்புகளில் தொடங்கி நாடாளுமன்றம் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு உதவும் வகையில் இந்த ஆட்சிப் பணி எத்தகைய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பரிந்துரைக்கிறது.

முன்னாள் ஐசிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆட்சி நிர்வாகம் குறித்தும் தங்களது அனுபவங்கள் குறித்தும் எழுதியுள்ள எண்ணற்ற நூல்களை இதில் மேற்கோள் காட்டியிருக்கிறார் தீபக் குப்தா. ஒட்டுமொத்தத்தில், கிழக்கிந்திய கம்பெனி காலத்திலிருந்து தொடங்கி இன்று வரை ஆட்சிப் பணியில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை நுட்பமாக எடுத்துக்கூறும் இப்புத்தகம், இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வர்களுக்கு  இன்றியமையாத ஒரு கையேடாக விளங்கும்.

தி ஸ்டீல் ஃப்ரேம்: எ ஹிஸ்டரி ஆஃப் தி ஐஏஎஸ்

தீபக் குப்தா

ரோலி புக்ஸ் பிரைவேட் லிமிடெட்

புது டெல்லி – 110 048.

விலை: ரூ.695

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

மேலும்