அஞ்சலி | சு.கிருஷ்ணமூர்த்தி
வங்கமொழியில் இருந்து தமிழுக்கு அருமையான நாவல்களை மொழியாக்கம் செய்த மூத்த மொழி பெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி கடந்த செப்டம்பர் 2-ம் தேதி காலமானார். அவரது பங்களிப்புகள் குறித்த கட்டுரை இது.
வங்க நாவலான ‘நீலகண்டப் பறவையைத் தேடி’, இந்தியாவின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாக இன்றும் மதிக்கப்படுகிறது. இதன் ஆசிரியர் அதீன் பந்தோபாத்யாய. இதை மொழிபெயர்த்தவர் சு.கிருஷ்ணமூர்த்தி. இந்த நாவல் வழியாகத்தான் எனக்கு சு.கிருஷ்ணமூர்த்தி அறிமுகமானார்.
‘நஜ்ருல் என்னும் மானுடன்’ என்னும் நூல் மூலம் வங்கக் கவிஞன் நஜ்ருல் இஸ்லாமை அறிமுகம் செய்து வைத்த ஆசிரியரும் சு. கிருஷ்ணமூர்த்திதான். இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகப் பண்பாடுகளைப் பாடிய நவீன கபீர் தாசரான நஜ்ருல் இஸ்லாம் என் இதயத்தைக் கவர்ந்தது இவர் மூலம்தான்! அதேபோல வங்க ஆளுமைகள் சரத் சந்திரர், பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர் மற்றும் இந்தி எழுத்தாளர் பிரேம்சந்த் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளையும் இவர் படைத்துள்ளார்.
வாசிப்பை சுகானுபவமாக மாற்றியவர்
மைத்ரேயி தேவியின் நாவலான ‘நா ஹன்யதே’ தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி மொழியாக்கத்தில் ‘கொல்லப்படுவதில்லை’ என்ற தலைப்பில் 2000-ல் வெளியானது. வங்கத்து எழுத்தாளர் மகாஸ்வேதா தேவியின் முன்னோடி மைத்ரேயி தேவி. தாகூரின் மாணவி. இந்தியாவின் தத்துவ வரலாற்றாசிரியர் தாஸ் குப்தாவின் மகள். விடுதலைக்கு முன்னர் ருமேனியாவிலிருந்து மிர்சா யூக்லிட் என்ற மாணவர் இந்தியவியல் கற்க கொல்கத்தா வந்தார். அவரைத் தன் வீட்டில் தங்க வைத்தார் தாஸ் குப்தா. அங்கு மிர்சாவுக்கும் குப்தாவின் மூத்த மகள் மைத்ரேயிக்கும் காதல் உருவாகிறது. ஆனால் இதை குப்தா ஏற்கவில்லை. மைத்ரேயிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்துவிட்டார். மிர்சா, ருமேனியா செல்கிறார். அங்கு இக் காதல் விவகாரங்களைக் கொச்சைப்படுத்தி மிர்சா எழுதும் நாவல் பெரும் வெற்றி பெற்று அவரைப் பிரபலமாக்கியது.
ஒரு முக்கியக் கவிதாயினியாகத் தன் வாழ்வை அமைதியாகக் கழித்துக்கொண்டிருந்த 59 வயது மைத்ரேயி தேவி, மிர்சாவின் நாவலில் தாம் காம மோகினியாகக் கொச்சைப்படுத்தப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த அதிர்ச்சி அலைகள் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கின. ஏராளமான நீதிமன்ற நடவடிக்கைகள். இந்த அவமானத்துக்குத் தக்க பதில் எழுத்துதான் என முடிவு செய்து தன் சுயசரிதையை நாவலாக எழுதினார். அதுதான் ‘நா ஹன்யதே’. இப் புதினம் அவரை வங்கத்தின் சாகாவரம் பெற்ற நாவலாசிரியாக உயர்த்தியது!
அடுத்து, மகாஸ்வேதா தேவியின் ‘கவி வந்தயக்கட்டி காயியின் வாழ்வும் சாவும்’ நாவல். வங்கத்தின் ராட் வனப் பகுதியில் மத்திய காலத்தில் வாழ்ந்த சுயாட் தொல்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு வாலிபன் தன்னை ஒரு கவியாகப் புகழ் பெறச் செய்யும் முயற்சிகளை நாவலாக்கியதாக மகாஸ்வேதாதேவி கூறுகிறார். இப்புதினத்தின் தமிழ்ப் பதிப்பின் வாசிப்பை சுகமான அனுபவமாக்கியவர் சு. கிருஷ்ணமூர்த்தி.
வங்கத்தில் தமிழ் வாழ்க்கை
இவரது மொழிபெயர்ப்பில் மிகவும் என்னை வியப்பில் ஆழ்த்திய நாவல் ‘சிப்பியின் வயிற்றில் முத்து’. இதன் ஆசிரியர் போதி சத்வ மைத்ரேய. இது வங்க நாவல் என்பதைவிட வங்க மொழியில் எழுதப்பட்ட தமிழ் நாவல் என்று சொல்வதுதான் பொருத்தம். சிப்பியினம் கடல்நீரை உறிஞ்சும்போது சிறு மணல்துகள்கள் உள்ளே சென்று வயிற்றின் உட்பகுதிகளைப் புண்ணாக்குகிறது. அப்புண்களை ஆற்ற ஒரு விதத் திரவம் அப்புண் மீது படிகிறது. மிகப் பெரிய புண்கள் ஏற்படும்போது வலியால் துடிதுடித்து இறக்கிறது. இதுவே முத்து ஆகிறது. அது போலத்தான் மீனவனின் வாழ்வும் என்பதை இந்நாவல் குறிக்கிறது.
இந்நாவலை மிகப் பல ஆண்டுகளுக்கு முன் எனக்கு அறிமுகம் செய்த எழுத்தாளர் ஒருவர், “சமீபத்தில் பிரபலமடைந்த மீனவ சமுதாயம் குறித்த நாவலுக்கு இதுதான் முன்னோடின்னு சொல்கிறார்கள்” என்றார். போதிசத்வ மைத்ரேயவின் நாவலை வாசித்தேன். இந்திய நாவல் என ஒன்றுண்டா என்ற நீண்டகாலக் கேள்விக்கான பதிலாக அந்த நாவல் அமைந்தது.
போதி சத்வ மைத்ரேய இந்திய அரசின் மீன்வளத்துறை அதிகாரியாகச் சில ஆண்டுகள் தூத்துக்குடியில் பணியாற்றியவர். அந்த மக்களோடு உறவாடிய அனுபவத்தைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் நாவலாக எழுத முயற்சி செய்தார். முதல் முறை தோல்வி. மீண்டும் மீண்டும் முயன்று அதை நிறைவு செய்தார். 1979-ல் வெளியாகி வாசக வரவேற்பையும் பெற்றது. இன்றும் வங்க மக்கள் கொண்டாடும் படைப்பாக விளங்குகிறது.
தமிழின் தொன்மையான கடலோரப் பகுதியான கொற்கை முதல் தூத்துக்குடி வரையான கடலோரப் பகுதி பரதவர்களின் வாழ்வும், காவிரிக்கரையின் நில உடைமைத்துவ வாழ்வும் நாவலில் அருமையாகச் சங்கமம் கொள்கின்றன. ஒருபுறம் இடைத்தரகர்கள் மீனவர்களின் வாழ்க்கை சுரண்டப்படுவதற்கு எதிரான போராட்டத்தால் பீட்டர் வாழ்க்கை சிதறடிக்கப்படுகிறது; மறுபக்கம் நில உடைமைவாதப் பிற்போக்குக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் கோதண்டராமனின் கலை உள்ளம் சிதைகிறது. இரு அடுத்தடுத்த தலைமுறைகளைச் சேர்ந்த இந்த இரு பாத்திரங்களின் ஊடாக வாசக அனுபவமும் விகசித்து அதன் சலனங்கள் அடங்க மறுக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் தமிழக வாழ்வின் முக்கிய கட்டத்தில் நிகழ்ந்த அரசியல், சமூக, பண்பாட்டு நிகழ்வுகளால் முன்னிலைக்கு வந்த விழுமியங்கள் இத்தனை துல்லியமாக விவாதிக்கப்பட்ட படைப்பு தமிழில் இதுவரை இல்லை. தமிழக மீனவர்களின் தொன்மைப் பெருமிதத்தைக் கூறுவதாகட்டும்; கொடிய தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டிய அதே நேரத்தில் தமிழரின் பாரம்பரியமான இசை மற்றும் நடனக் கலைகளைக் காக்கவும் ஒரு ஏற்பாடு உருவாக வேண்டும் என்பதை முன்வைக்கும் பாங்காகட்டும் (தேவதாசி முறையில் பயிற்றுவிக்கப்பட்ட இசையும் நடனமும் குருகுல முறைக்கு மாறுவதும் பாகவதமேளா போன்ற கூத்துக்கலைகளுடன் சங்கமமாவதும் இந் நாவலில் கலை நுட்பங்களுடன் இடம் பெறுகிறது.) தென்னிந்தியாவின் தொன்மையும் வரலாறும் ஒரு வட நாட்டவரால் இந்தளவுக்கு உயர்வாகக் கூறப்பட்டதில்லை. குறிப்பாக, இந்திய நாகரிகத்தின் வரலாற்றுத் தொன்மையை கங்கை ஆற்றின் கரைகளில் ஆய்வு செய்வதற்குப் பதில் தமிழ்நாட்டின் தாமிரபரணி, வைகை ஆற்றங்கரைகளில் ஆராய வேண்டும் என்ற வாக்கியங்களை வாசிக்கையில் மெய்சிலிர்க்கும். போதிசத்வாவின் வங்க மொழி மேதைமை சு.கிருஷ்ணமூர்த்தியின் தமிழில் எதிரொலிக்கிறது.
கடைசி அத்தியாயம்
பாரதி, வ.வே.சுப்பிரமணிய அய்யர், கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, அ.கி. கோபாலன், அ.கி. ஜெயராமன், ஆர். ஷண்முகசுந்தரம், த.நா. குமாரசாமி, த.நா. சேனாபதி போன்ற முக்கிய ஆளுமைகள் வங்கத்தின் கலை, இலக்கியங்களைத் தமிழுக்கு வழங்கினர். இத் தலைமுறையின் கடைசிக்கொழுந்து சு. கிருஷ்ணமூர்த்தி. அவரும் மறைந்தார்! அவரோடு ஒரு வங்கச் சரித்திரமும் மறைந்தது.
- அப்பணசாமி,பத்திரிகையாளர், எழுத்தாளர் - தொடர்புக்கு: jeon08@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago