நாடக உலா: துக்ளக் தர்பார்

By வியெஸ்வீ

சோவின் பாசறையில் வளர்ந்த துக்ளக் சத்யா எழுதி, டி.வி.வரதராஜனின் குழு மேடையேற்றி வரும் இந்த ‘தேர்தல் கால’ நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் சோ!

துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாக்களின் ஆரம்பத்தில் தனது அலு வலக சகாக்களை ஆசிரியர் சோ அறிமுகப்படுத்திய அதே ஸ்டைலில், இப்போது நாடக சோவும் கலைஞர்களை அறிமுகம் செய்து வைப்பது சோவின் தீவிர ரசிகர்களுக்கு அதிகம் பிடிக்கிறது. கைத்தட்டி ஆரவாரம் செய்கிறார்கள்!

யுனைடெட் விஷுவல்ஸ் குழுவுக்கு புது வரவான பி.டி.ரமேஷ், நாடகத்தில் சோவாக வேடமேற்று பார்வையாளர் களின் அதிக வாக்குகளை அறுவடை செய்கிறார். சோ அணியும் அதே ராணுவப் பச்சைக் கலர் டிரெஸ், அதே மொட்டைத் தலை, நெற்றியில் அதே விபூதிக் கீற்று, நடுவில் குங்குமப் பொட்டு, வலது காது மடலை அவர் மாதிரியே அவ்வப்போது நீவி விட்டுக் கொள்வது, பேசும்போது நடுநடுவே தொண்டையைக் கணைத்துக்கொள் வது… என்று அச்சு அசலான சோவை கண்முன் நிறுத்திவிடுகிறார் பி.டி.ரமேஷ். குரல் கூட 79 சதவீதம் அப்ப டியே பொருந்துவது கூடுதல் பிளஸ்!

மேலுலகில் சோவும் நாரதரும் (ஸ்ரீதர்) பேசிக் கொண்டிருக்கும்போது, இந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட் டில் இருந்து 40 பேரை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்ற தனது விருப்ப மனுவை நாரதரிடம் தாக்கல் செய்கிறார் சோ. (39 + 1 புதுச்சேரி என்பது எல்லோருக்கும் புரிந்துவிடும் என்ற நம்பிக்கை சத்யாவுக்கு!)

முகமது பின் துக்ளக் (டி.வி.வரத ராஜன்), பதூதா (சங்கர் குமார்) இரு வரும் பூலோகம் அனுப்பப்படுகிறார்கள். இவர்களிடம் நாளை நடக்கவிருப்பதை இன்றே அறிவித்துவிடும் வெற்றிலைப் பெட்டி மாதிரியான ஒன்றும், நினைத்த நேரத்தில் உள்ளே கைவிட்டால் தேவையான அளவு பணம் கிடைக்கும் ஜோல்னா பை ஒன்றும் பூலோக பயன்பாட்டுக்குத் தரப்படுகிறது. வாக்கி டாக்கி போன்ற வஸ்து ஒன்றும் உண்டு.

ம்... நிஜத்தில் இப்படி ஒரு ஜோல்னா பை நமது வேட்பாளர்களுக்குக் கிடைத் தால் வாகனங்களில் பணம் எடுத்துச் சென்று பறக்கும் படையிடம் சிக்கிக் கொள்ளாமல் தவிர்க்கலாம்!

துக்ளக் பதூதா இரட்டை நாய னம் போன்று சேர்ந்தே சென்று சமாதியில் தியானம் செய்கிறார்கள். முதலமைச்சரை சந்தித்து நல்லவர்கள் 40 பேரை தேர்தலில் நிற்க வைக்க வற்புறுத்துகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவியிடமும், அதே கோரிக்கையை முன் வைக்கிறார்கள். இந்தக் கட்டங் களில் நாடக ஆசிரியர் சத்யா கூவத்தூருக்கு பஸ் ஏறிச் சென்று, முன்பு நடந்த சம்பவங்களை நீண்ட நேரம் கலாய்க்கிறார். சிறையில் இருப்பதால் பரிதாபப்பட்டு ‘சின்னம்மா’ எபிசோடை விட்டுவிட்டாரோ?

அரசியல் பிரவேசம் செய்துள்ள மய்யமான நடிகரை நக்கலடிக்க வேண்டும் என்பதற்காகவே டாப் ஸ்டார் சங்கரை அறிமுகப்படுத்துகிறார்கள். இவருக்கு பக்கம் பக்கமாக வசனங்கள். ஆனால், எதுவுமே புரியக் கூடாது என்று தெளிவாக(?) எழுதப்பட்ட வசனங்கள். இந்த வேடம் ஏற்கும் கிரீஷ் இவற்றை ஏற்ற இறக்கங்களுடன் பேசி, பக்கத்து பில்டிங் ஆட்டம் காணும் அளவு கைத்தட்டல்களை அள்ளிச் செல்கிறார். முக்கியமாக டாப் ஸ்டார் பேசும் மொழி புரியாமல் பேட்டி காணும் டி.வி. நிருபர் ராமானுஜம் கேட்கும் கேள்விகளும், கொடுக்கும் ரியாக்‌ஷன்களுமாக இந்தக் காட்சி, ரஸ்ஸல் சிக்ஸர் அடிப்பது மாதிரி ரகளையின் உச்சம்! அதே நேரம், அரசியலுக்கு வந்துவிடப் போவதாக கண்ணாமூச்சி விளையாடிவரும் இன்னொரு ஸ்டாரை சத்யா தவிர்ப்பது பாரபட்சம்.

தர்பாரில் இரண்டு நாயகிகள். எதிர்கட்சித் தலைவியாக வரும் லட்சுமியை அவரின் நடிப்பாற்றலுக்குத் தீனி போடாமல் விணடித்துவிட்டார்கள். சொர்ணக்கா லெவலுக்கு இந்தப் பாத் திரத்தை வளர்த்திருக்க வேண்டாமோ! தலைமைச் செயலாளராக வரும் நதியா, வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போடுவது போல் வந்து செல்வதோடு சரி. இவருக்கு அந்த நாள் நடிகை ‘அரங்கேற்றம்’ பிரமிளாவின் சாயல்!

துக்ளக் ரோலில் டி.வி. வரதராஜ னுக்கு ஸ்கோப் கம்மி. நாடகமாக்கம், இயக்கத்தில் பிஸி போலும்! ஜோல்னா பையில் அள்ள அள்ள பணம் வருவது நின்று போனதும் குலை நடுங்கிப் போகும் காட்சியில் கவனம் ஈர்க்கிறார் பதூதா சங்கர்குமார்.

40 நல்லவர்களைக் கண்டெடுக்க முடியாமல் தானே முதல்வராகி துக்ளக் தர்பார் நடத்துவது அறிந்து சினம் கொண்டு சோவும் நாரதரும் துக்ளக் இரட்டையரை திரும்ப அழைத் துக்கொள்வதும், அங்கே தன் தரப்பு நியாயங்களை துக்ளக் எடுத்துரைத்ததும் அவர்கள் திருப்தி அடைந்து துக்ளக் - பதூதாவை திருப்பி அனுப்ப முடிவெடுப்பதும், துக்ளக் மறுத்ததும்...மைக் பிடித்து, ஆடியன்ஸைப் பார்த்து சோவின் நீளமான பரப்புரை. அதில் நல்லவர்கள் நாடாள வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்துவது சாலச்சிறந்ததுதான். ஆனால், சர்ஜிக்கல் ஸ்டிரைக் மாதிரி வாக்குகளைப் பயன் படுத்த சொல்வதிலும், மோடி ஃபைடு - மாடிஃபைடு என்றெல்லாம் வார்த்தை ஜாலம் செய்வதிலும் நிறையவே பிரச்சார வாடை! ‘தாமரையைப் பார்த்து போடுங்கம்மா ஓட்டு’ என்று கோஷம் எழுப்பாதது மட்டுமே பாக்கி!வீயெஸ்வி

நல்லவர்கள் நாடாள வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்துவது சாலச்சிறந்ததுதான்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

1 month ago

மேலும்