சே.ப.நரசிம்மலு நாயுடு: தமிழ்ப் பயண இலக்கியத்தின் தந்தை

By ந.முருகேசபாண்டியன்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழகத்துக்குள்ளும் வெளியிலும் பயணித்த சிலரின் அனுபவங்கள் கட்டுரைகளாகியுள்ளன. எனினும், 1880-களில் வட இந்தியப் பயணம் மேற்கொண்ட சே.ப.நரசிம்மலு நாயுடு, தனது பயண அனுபவங்களைத் தொகுத்து எழுதிய ‘ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம்’ எனும் நூலே தமிழில் பயண இலக்கியங்களைப் பொறுத்தவரை காலத்தே முந்தையது. அந்த வகையில் நரசிம்மலு நாயுடுவைத் தமிழ்ப் பயண இலக்கியத்தின் தந்தை என்று அழைப்பது பொருத்தமானது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த சே.ப. நரசிம்மலு, கோவையில் நூற்பாலை உள்ளிட்ட தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு முன்னோடியாக விளங்கியவர். சிறுவாணி குடிநீர்த் திட்டம், விக்டோரியா அரங்கம் போன்ற நலத்திட்டங்களுக்குப் பங்களித்திருக்கிறார். மூன்று பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்த அவர், 94 நூல்களையும் எழுதியிருக்கிறார்.

பிரம்ம சமாஜியாகவும் சீர்திருத்தவாதியாகவும் செயல்பட்டவர் அவர்.

1885 டிசம்பரில் மும்பையில் நடைபெற்ற முதலாவது காங்கிரஸ் சபைக் கூட்டத்தில் தமிழகத்தின் பிரநிதியாகக் கலந்துகொண்டவர். சென்னையிலிருந்து 1885 டிசம்பர் 24-ல் இரங்கய்ய நாயுடு, இரகுநாத ராயர், எஸ்.சுப்பிரமணிய அய்யர், ராவ் பகதூர் அனந்தாசார்லு உள்ளிட்ட 21 பிரதிநிதிகளுடன் மும்பை சென்றார். அங்கு காங்கிரஸ் அமைப்பை நிறுவிய ஏ.ஓ.ஹியூமைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். 1886-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்ட அவர், 1911 டிசம்பர் 11 டெல்லியில் நடைபெற்ற ஜார்ஜ் சக்கிரவர்த்தியின் முடிசூட்டு விழா நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

ரயிலிலும், எக்கா என்ற குதிரை வண்டியிலும் பயணித்ததுடன், கால்நடையாக நடந்தும் பல்வேறு இடங்களுக்குச் சென்ற நரசிம்மலு நாயுடு, தனது பயணத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். சைவ உணவுப் பழக்கம் காரணமாக வங்காளத்தில் மரக்கறி உணவு தேடியலைந்து பட்டினியுடன் தூங்கியுள்ளார். தங்குவதற்கு வசதியான சத்திரங்கள் இல்லாத சூழலிலும், கழிப்பிட வசதியற்ற சூழலிலும் டிசம்பர் மாதக் கடுங்குளிரிலும் அவதியுற்றிருக்கிறார். பயணம் செல்லும் வழித்தடங்கள், புகைவண்டி புறப்படும் நேரங்கள், ரயில் நிலையத்தின் வசதிகள், ரயில் கட்டணங்கள், சத்திரங்கள், உணவு வகைகள், கோயில்களின் கட்டிடச் சிறப்புகள், சுற்றுலா தளத்தின் சிறப்புகள் என நூல் முழுக்கத் தகவல்கள் ததும்பி வழிகின்றன. நகரங்களின் வரலாறு, பூர்வீகக் கதை, புராணச் செய்திகள், தொன்மக் கதைகள், தொழில்வளம், கைவினைப் பொருட்கள், வேளாண்மை, மக்களின் பொருளாதார நிலை போன்ற தகவல்கள் மூலம் நகரங்கள் பற்றிய முழுமையான பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நூலின் தொடக்கத்தில் ‘வடதேசத்தில் யாத்திரைசெய்ய விரும்புவோருக்குச் சில விசேஷக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் பதினாறு குறிப்புகளும், ‘புகைவண்டி முதலானவற்றில் ஏறுவோருக்குச் சில விசேஷக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் எட்டு குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. நரசிம்மலு நாயுடுவின் அனுபவம் சார்ந்த இத்தகைய குறிப்புகளில் சில இன்றளவும் பயனுள்ளவை. திவ்விய தேச யாத்திரை என்ற நோக்கில் பயணிகள் செல்ல வேண்டிய இடங்கள் என்று நரசிம்மலு நாயுடு கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாதம், மானசரோவரம், ராவல்பிண்டி, பெஷாவர், காஷ்மீர், டார்ஜிலிங், குருஷாங்கு, நேபாளம் போன்ற இடங்களின் சிறப்புகளையும் அறிமுகமாக விவரித்துள்ளார்.

புகைவண்டியில் பயணிக்கையில், தான் செல்லுமிடம் அல்லது புறப்படும் இடம் குறித்த தகவல்களைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் நரசிம்மலு நாயுடு. டெல்லி எங்கே இருக்கிறது எனத் தமிழர்களுக்கு அறிவிக்கிற வகையில் தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளார். வட இந்தியாவில் இருக்கிற கோயில்கள், கடவுள்களின் லீலைகள் குறித்துப் புனைந்துரைக்கப்பட்ட கதைகளை உண்மை என்று நம்புகிற நரசிம்மலு நாயுடு, அங்கே கடவுளின் பெயரால் நடைபெறுகிற சம்பவங்களை அப்படியே பதிவாக்கியுள்ளார்.

புனித ஸ்தலங்களில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள், சிரார்த்தம், பிதுர் கர்மச் செயல்கள் குறித்த பதிவுகள் முக்கியமானவை. பாவம், புண்ணியம், மோட்சம், புராணங்கள் போன்றவற்றை அப்படியே ஏற்றுக்கொள்பவராக இருந்தாலும், பிரம்ம சமாஜக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்ததனால், பெண் கல்வி, விதவை மறுமணம் குறித்துச் சீர்திருத்தக் கருத்துகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

காசியின் சிறப்புகளை விவரிக்கும்போது அவரது மனம் பக்தி வெள்ளத்தில் ததும்புகிறது. காசி நகரின் புராணக் கதை தொடங்கி, வரலாற்றுப் பின்புலம், தற்கால நிலை, கோயில்கள், புனிதமான இடங்கள் என விரிவாக எழுதியுள்ளார். ஒருவிதமான லஹரியான மனநிலையுடன் உணர்ச்சிபூர்வமாக அவற்றை எழுதிச்செல்கிறார்.

அயோத்தி பட்டணத்தில் வீடுகளும் சேத்திரங்களாக இருக்கின்றன என்கிறார். அதாவது அங்கே ராமர் பிறந்த இடம், வசித்த இடம், விளையாடிய இடம், குதித்த இடம், தாயைக் கண்ட இடம் எனப் பல்வேறு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒரு கோயிலில் சுமார் ஐந்து முழ நீளமும், நான்கு முழ அகலமும் பூமிக்கு மேல் ஐந்தாறு அங்குல உயரமுள்ள கல்லுக்குச் சுண்ணாம்பு அடித்து, அதை ராமர் பிறந்த இடமாகக் கொண்டு பூஜை செய்து வருகிறார்கள். ராமர் ஜன்ம பூமி இன்று நடத்தப்படுகிற மத அடிப்படைவாத அரசியலும் அன்றைய காலகட்டத்திலே ராமர் பிறந்த இடம் என்ற நம்பிக்கையும் வேறுபட்டவை.

கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற பயணத்தை இப்படித் தொடங்குகிறார்: “கி.பி.1886-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 5-ஆம் தேதியாகிய பானுவாரம் பகல் (மேட்டுப்பாளையத்திலிருந்து) கோயமுத்தூருக்கு வரும் பகல் இரண்டே முக்கால் மணி மெயில் புகைவண்டியில் சம்சார சமேதராக ஏறினோம்.” அந்த கணம் முதல், 1887 பிப்ரவரி 25-ல் கோவைக்குத் திரும்பும் வரையிலான அனுபவங்களைப் பதிவுசெய்திருக்கிறார். தினசரி எதிர்கொண்ட அனுபவங்களையும் சம்பவங்களையும் குறித்துவைக்கிற பழக்கமுடையவராதலால், எல்லா தகவல்களையும் நுட்பமாகவும் விரிவாகவும் எழுதியிருக்கிறார். அந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து ஜி.சுப்பிரமணிய அய்யர், அரங்கநாத முதலியார், ரங்கய்ய நாயுடு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏ.ஓ.ஹியூம், மே.நயிட்டு, காட்டன் போன்ற ஆங்கிலேயர்களும் காங்கிரஸ் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்த தகவலும் பதிவாகியுள்ளது. வெள்ளைக்காரத் துரைமார்களும், பங்களா பிரபுக்களும், ஜமீன்தார்களும் படிப்பாளிகளும், பட்டவர்த்தனர்களும் நிரம்பிய காங்கிரஸ் என்று அறிய முடிகிறது.

1911 டிசம்பர் 11-ல் டெல்லியில் ஜார்ஜ் சக்கரவர்த்தி மகுடாபிஷேகம் செய்து கொண்டபோது, இந்தியாவின் தலைநகரமானது கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற தர்பார் காட்சிகளை நேரில் கண்டுவியந்த நரசிம்மலு நாயுடு, ஒவ்வொரு நிகழ்வையும் முக்கியமானதாகக் கருதிப் பதிவு செய்துள்ளார். இந்தியாவைக் காலனியாக்கி, அரசாண்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள், தங்களுடைய

பொருளியல் நலனுக்காகக் கொண்டாடிய மகுடாபிஷேக விழாவை அவர் போற்றுவதுதான் விநோதம். இந்தியர்களை அடிமைகளாக்கி ஆள்கிற ஆங்கிலேயரின் அதிகாரத்தை அப்படியே ஏற்கிற நரசிம்மலு நாயுடுவுக்கு ஏன் சிறிய அளவில்கூட முரண் தோன்றவில்லை என்பது முக்கியமான கேள்வி. அன்றைய காலகட்டத்தில் சமஸ்தானங்களை

ஆண்ட மகாராஜாக்களும், ஜமீன்தார்களும், பெரிய நிலப் பிரபுக்களும், மிட்டா மிராசுதாரர்களும் ஆங்கிலேயருக்குத் துதி பாடிய வழியில் சென்றுள்ள நரசிம்மலு நாயுடுவை ராஜ விசுவாசி என்று குறிப்பிடுவது பொருத்தமானது.

தான் சென்ற இடங்களில் அங்கு வாழ்கிற மக்களின் நடை, உடை, பாவனைகள் போன்றவற்றைப் பதிவு செய்துள்ளார். பிரயாகை என்னும் அலகாபாத் நகரில் வசிக்கிற மக்களின் தோற்றம், ஆடைகள் பற்றிய அவரது வர்ணனை குறிப்பிடத்தக்கது. உரைநடை மொழியானது பல இடங்களில் கவித்துவமாக வெளிப்பட்டுள்ளது.

குறிப்பாக, புண்ணிய ஸ்தலமென்று கருதப்படுகிற இடங்களில் அவர் செய்துள்ள பிரார்த்தனைகள் உருக்கமாக அமைந்துள்ளன. 1889-ல் முதலில் வெளியான இந்நூல், மேலும் தகவல்களுடன் விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பாக 1913-ல் பிரசுரமானது. தற்போது டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடாக வெளிவருகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் அரசியல், சமூக, சமயச் சூழலையும் நிகழ்வுகளையும் அறிந்திட விரும்புபவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும்!

- ந.முருகேசபாண்டியன்,

கலை, இலக்கிய விமர்சகர்.

தொடர்புக்கு: mpandi2004@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

9 hours ago

இலக்கியம்

9 hours ago

இலக்கியம்

9 hours ago

இலக்கியம்

9 hours ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

மேலும்