பேயோன்! தமிழ் எழுத்தாளர்களின் மறைத்துவைக்கப்பட்ட அல்லது புதைத்துவைக்கப்பட்ட மனசாட்சி என்று அவர் நம்புகிறார் என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், தான் யாருடைய பேயோனும் (Ghost-writer) இல்லை; என்னுடைய பேயோன்தான் என்று சொல்லக் கூடியவர்.
‘பேயோன் 1000’ என்ற இவரது நூல்தான் அநேகமாக ட்விட்டர் பதிவுகளின் தொகுப்பாக வெளிவந்த முதல் நூலாக இருக்கக் கூடும். இவரது எதிர்கவிதைகள்(!) ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ என்ற பெயரில் முழுத் தொகுப்பாக வந்திருக்கின்றன. பேயோன் கணிசமான மின்னூல்களும் வெளியிட்டிருக்கிறார். பேயோனின் வலைப்பூ முகவரி: www.writerpayon.com
யாருடைய பேயோன் (ghost-writer) நீங்கள்?
யாருக்கும் இல்லை. நான் எனக்காக மட்டுமே எழுதுகிறேன்.
நவீனத் தமிழிலும் உலக இலக்கியங்களிலும் உங்களுக்கு முன்னோடி யார் யார்?
வூடி ஆலன், டேவ் பேரி, ஆம்ப்ரோஸ் பியர்ஸ் போன்ற தாக்கங்கள் இருக்கின்றன. ஆனால், யாருடைய நேரடி பாதிப்பும் இல்லை. ஒரு சீரியஸ் கதை, கவிதை படித்தால் அதன் பாதிப்பில் ஒரு நகைச்சுவைக் கதை, நகைச்சுவைக் கவிதைதான் எழுதுவேன். எனவே, நான் எழுதும் பாணிக்கு முன்னோடிகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ட்விட்டரிலும் வலைப்பூவிலும் வாசகர்களை வசீகரித்த நீங்கள் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுத வந்தபோது எப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றீர்கள்?
வாசகர்கள் உங்கள் எழுத்தை உள்வாங்கிக்கொண்டார்களா?
சிலர் வரவேற்றார்கள். ஆனால், பெரிய அளவில் வரவேற்பு இருந்ததுபோலத் தெரியவில்லை. நானும் ரொம்ப நன்றாகவெல்லாம் எழுதவில்லை. எனவே, வாசகர்கள் உள்வாங்கிக்கொள்ள அதிகம் இருந்திருக்காது.
எல்லோருக்கும் அஞ்சலிகளை முன்கூட்டியே நீங்கள் எழுதிவைத்திருப்பதாக உங்கள் அஞ்சலி ஃபேக்டரி கட்டுரையில் அறிய முடிகிறது. உங்களுக்கு நீங்களே அஞ்சலி எழுதிக்கொள்ளும் வழக்கம் உண்டா?
இல்லை. நோபல் பரிசு ஏற்புரை எழுதும் அளவுக்கு அஞ்சலி எளிதாக இல்லை. ஆனால், தனது மரணத்தைப் பற்றிச் சிந்திக்காத எழுத்தாளர்கள் யார்? ‘சாவு கிராக்கி’ என்ற துப்பறியும் கதையில் நான் கொல்லப்படுகிறேன். கதையில் ‘என்னை’ப் பற்றி இருக்கும் வரிகள் அஞ்சலி ரகம். #எனது கல்லறைவாசகம் என்று சில ட்வீட்கள் எழுதியிருக்கிறேன். விடைபெறல், நானும், ஆறுதல் போன்ற கவிதைகளும் உண்டு. இவை அஞ்சலிக்கு அருகில் வருபவை.
பேயோனின் கோஸ்ட் ரைட்டர் யார்?
பேயோன் என்பது இரண்டு பேர். அந்தப் பெயரில் எழுதுபவர், அந்தப் பெயரில் எழுதப்படுபவர். இருவரின் கலவைதான் பேயோன் என்ற ஆள். இந்தப் பெயரில் வெளியாகும் படைப்புகளில் கொஞ்சம் கொஞ்சம் உண்மையான நானும் இருக்கிறேன்.
உங்கள் கவிதைகளிலேயே உங்களுக்குப் பிடித்தது எது?
‘பவர்ஃபுல்’ என்ற கவிதை. இன்னொன்று சொல்லலாம் என்றால் ‘நானும் சாத்தானும்’.
பேயோனுக்குத் தமிழ் எழுத்தாளர்களையே பிடிக்காதா? உங்களைத் தவிர உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் என்று சொல்ல முடியுமா?
பிடித்த எழுத்தாளர் என்று சொல்லுமளவுக்கு நான் எந்தத் தமிழ் எழுத்தாளரையும் படித்ததில்லை என்பதுதான் சோகம். வெகுஜன எழுத்தாளர்களையே அதிகம் படித்தேன். என் வாசிப்பின் நோக்கம் எஸ்கேபிசம் என்பதால் வேறு நாடுகளையும் காலங்களையும் களனாகக் கொண்ட புனைவுகளைத்தான் படித்திருக்கிறேன். எல்லாம் ரஷ்யர்களும் பிரெஞ்சு, ஜெர்மன்காரர்களும்தான்.
உங்களை இதுவரை எந்த எழுத்தாளராவது அடையாளம் கண்டுகொண்டு உங்களைப் பாராட்டவோ வசைபாடவோ செய்திருக்கிறாரா?
ஒரு பிரபல எழுத்தாளர் நான் எழுதுவது பிடிக்கும் என்று தன் வலைத்தளத்தில் எழுதினார். பிறகு, என் நிஜ அடையாளத்தைச் சில நண்பர்கள் அவரிடம் போட்டுடைக்க, நான் கழிப்பறையில் கிறுக்குபவன் என்று ஒரு பேட்டியில் பொங்கினார்.
பேயோனின் தேவை முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? ஒருவித ஓய்வூதிய மனப்பான்மை உங்களுக்கு வந்துவிட்டதாக உணர முடிகிறதே?
முதலில் பேயோனின் தேவை இருந்ததாக நான் நினைக்கவில்லை. ஆனால், தமிழில் நகைச்சுவை எழுத்துக்கு நிச்சயம் தேவை இருக்கிறது. தொடர்ந்து வெறும் நகைச்சுவை மட்டுமே எழுதிக்கொண்டிருப்பது வேறு யார்? சொல்லுங்கள். எனக்கென்று சில கருப்பொருட்கள் - டீக்கடை, வீட்டுத் தகராறுகள், பேச்சுக் கோளாறுகள், கொடுமையான எழுத்து போன்றவை - இருந்தாலும் ஒவ்வொன்றிலும் புதிய கற்பனைகள்தான் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து எழுதுவேன். ஆனால், அன்றாட வாழ்க்கை ஆளை விழுங்குகிறது. எழுதுவதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அப்படியும் நிலுவையில் இருக்கும் கதைகளை எழுத நினைத்திருக்கிறேன். நான் எழுதுவது இலக்கியத்தில் சேராது என்றாலும் நான் வெகுஜன எழுத்தாளனும் அல்ல. வணிக எழுத்தில் இறங்கிப்பார்க்கலாம் என்று திட்டம்.
அறம், தரிசனம், அக எழுச்சி போன்ற சொற்களெல்லாம் உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமோ? உங்களைப் பொறுத்தவரை இந்தச் சொற்களுக்கு என்ன விளக்கம் தருவீர்கள்?
பிடிக்காது, ஏனென்றால் இவை எந்த சுவாரசியமும் இல்லாத எளிய சொற்கள். துண்டிலக்கியம், சராசரிவு, ஏகாதிபத்தினியவாதி, பழக்கதோஷிணி, ஹிந்துமுந்துதல் என்று நானாக உருவாக்குபவைதான் பிடிக்கும்.
பேயோன் தன் எழுத்துகளைத் திரும்பப் படிக்கும்போது என்ன தோன்றும்?
பெரும்பாலும் நன்றாக எழுதியிருக்கிறேன் என்றுதான்.
சொற்பேதி (verbal diarrhea), சிந்தனை மலச்சிக்கல் (thought constipation) இரண்டும் ஒரே நோயின் வெவ்வேறு வடிவங்கள்தானா?
முதலாவது, கட்டுப்பாடின்மை. இரண்டாவது, வறட்சி. இரண்டும் வெவ்வேறு.
யாரைப் போல் எழுதப் பொறாமை உங்களுக்கு?
நான் எழுதும் விதம் எனக்குப் பிடிக்கும். அது என் படைப்பூக்கமும் கண்ணோட்டமும் இணைந்ததில் உருவானது. எனவே, நான் யாரைப் பார்த்தும் பொறாமைப்படுவதில்லை.
வடிவேல் பிடிக்குமா, கவுண்டமணி பிடிக்குமா?
இரண்டு பேரையும்.
சுயசரிதை எழுதும் யோசனை இருக்கிறதா? அப்படியென்றால் யாருடைய சுயசரிதையை எழுதுவதாகத் திட்டம்?
என்னுடைய சுயசரிதையைத்தான் கட்டுரைகளாகவும் துண்டு துண்டாகவும் நீண்டகாலமாக எழுதிக்கொண்டிருக்கிறேனே.
நீங்கள்தான் பேயோன் என்று உங்கள் மனைவி பிள்ளைகளுக்குத் தெரியுமா?
தெரியும். அவர்களுடன் பேசும்போது எனக்கு நிறைய யோசனைகள் கிடைத்திருக்கின்றன. அவர்களுடன் பகிர்ந்துகொண்டு வெறுப்பேற்றுவேன்.
பேயோன் யார் என்ற ரகசியத்தை அறிந்தவர்கள் இதுவரை எப்படி உங்களை எதிர்கொண்டார்கள்? அந்த ரகசியத்தை நீங்கள் எப்போது உடைக்கப்போகிறீர்கள்?
யாரும் என்னிடம் நேரடியாக அது பற்றிப் பேசியதில்லை. சிலருக்கு ஏமாற்றம், சிலருக்கு அதில் பிரச்சினை இல்லை. பேயோன் ஒரு நடுத்தர வயதான, மோசமாக எழுதுகிற, பெண்களை வெறுக்கிற, நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்களைக் கையாளத் தெரியாத ஓர் அபத்தக் கற்பனைப் பாத்திரம். எழுதுவதற்கு இந்த அடையாளம் எனக்குத் தேவை. எனவே, நான் எதையும் உடைக்கப்போவதில்லை.
உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?
எழுத்தில் புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு கடந்த காலத்தில் எழுதியதைத் தொகுத்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன். ஒரு கவிதைத் தொகுப்பு அச்சிலும் அமேசான் மின்னூலாகவும் கிடைக்கிறது. ஒரு கட்டுரைத் தொகுப்பு மின்னூலாகத் தயாராகிவருகிறது.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
18 days ago