பூமி வசிக்க வந்த இடம் அல்ல... வாசிக்க வந்த இடம்!- ஆர்.பாலகிருஷ்ணன் பேட்டி

By செல்வ புவியரசன்

ஒடிஷா மாநில அரசின் தலைமை ஆலோசகரான ஆர்.பாலகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை, தேர்தல் பணிகள் என்று இந்திய ஆட்சிப் பணித் துறைகளில் மட்டுமின்றி எழுத்து, இசைப்பாடல்கள், சிந்துசமவெளியின் திராவிட அடிப்படைக்கு வலுசேர்க்கும் ஊர்ப்பெயர் ஆராய்ச்சி ஆகியவற்றிலும் தனது முத்திரைகளைப் பதித்திருப்பவர். சென்னை புத்தகக்காட்சியில் கலந்துகொள்வதற்காக புவனேஸ்வரத்திலிருந்து ஒரு வார காலப் பயணமாக சென்னை வந்திருக்கும் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...

பரபரப்பான நிர்வாகப் பணிகளுக்கு இடையேயும் சிந்துவெளி ஆய்வில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்திருக்கிறீர்கள். ஒரு பகுதிநேர ஆய்வாளர் என்ற வகையில் உங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்..

கல்விப்புலம் சார்ந்த ஆய்வுகளில் கற்பித்தலும் ஆராய்தலும் ஒரு தொழிலாக இருக்கிறது. ஆராய்ச்சி என்பது அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், கல்விப்புலத்துக்கு வெளியேயும் கல்வி இருக்கிறது, வாசிப்பும் இருக்கிறது. கல்விப்புலங்களுக்கு வெளியே ஆராய்ச்சி என்பது தொழிலாக இருப்பதில்லை. காதலாக, வெறியாக, இயக்குவிசையாக இருக்கிறது. பகுதிநேர ஆய்வாளராக இருப்பதில் ஒரு வசதியும் இருக்கிறது. இது எந்த நிர்பந்தத்தின்பேரிலும் நடப்பதல்ல. விரும்பிச் செய்கிற எதுவும் வீரியமுடையதாகவும் இருக்கும் எனது என்னுடைய அபிப்ராயம்.

தமிழியல், வரலாற்றியல் ஆராய்ச்சித் துறைகளில் ஈடுபட்டிருக்கும் பலர் கல்விப்புலத்துக்கு வெளியில் இருப்பவர்கள்தான். மிகச் சமீபத்தில், தமிழ் எழுத்துரு வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டேன். 2000-க்கும் எழுத்துருக்களை உருவாக்கியிருப்பது திருவாருர் மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களில் வேலைபார்க்கிற இரண்டு ஆசிரியர்கள். ஒரு அமைப்போ நிறுவனமோ செய்ய வேண்டிய வேலையை பள்ளி ஆசிரியர்கள் செய்திருக்கிறார்கள். இந்த ஆசிரியர்களை எது இயக்குகிறது? அவர்களுக்கும் அவர்கள் செய்திருக்கும் வேலைக்கும் ஏதாவது தொடர்புண்டா? நான் அந்த ஆசிரியர்களை ஒடிஷா அழைத்துச்செல்லத் திட்டமிட்டிருக்கிறேன். ஒரியப் பல்கலைக்கழகம்,

ஒரியக் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் மரபுக்கான தனி அமைச்சகத்தின் ஊதியம் பெறாத ஆலோசகராகப் பணியாற்றுகிறேன். அங்கேயும் இதுபோன்ற விஷயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஐராவதம் மகாதேவன் தொல்லெழுத்துகளின் அடிப்படையில் சிந்துவெளியின் திராவிட அடிப்படைக்கு வலுசேர்த்தார். நீங்கள் இடப்பெயர்வு ஆய்வுகளின் வாயிலாக அதைச் செய்திருக்கிறீர்கள்? வரவேற்பு எப்படி இருக்கிறது? இன்னும் எந்தெந்த கோணங்களிலிருந்து தொடர நினைக்கிறீர்கள்?

தன்னுடைய தொன்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதும்கூட ஒரு தனிமனிதனின் உரிமைதான். கல்வி என்பது எப்படி ஒரு உரிமையோ அப்படி வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்பதும் உரிமைதான். இப்போது அப்படியொரு விழிப்புணர்வு நம்மிடையே ஏற்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு ஆங்கிலத்தில் வெளிவந்த எனது இரண்டு ஆய்வுக்கட்டுரைகளை ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டேன். அந்தப் புத்தகம் எட்டு தடவை மறுஅச்சு செய்யப்பட்டிருக்கிறது. இது பொழுதுபோக்கு புத்தகம் அல்ல, ஒரு ஆய்வுக்கட்டுரைக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்றால் மக்கள் இந்த விஷயத்தில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நிகழ்காலத்தில் சிந்துவெளி ஆய்வுகள் என்பது தமிழ் வரலாற்றின் மீட்டுவருவாக்கத்துக்கு மட்டுமல்ல, இந்திய வரலாற்றின் மீட்டுருவாக்கத்துக்கும் தேவையானதாக இருக்கிறது.

எழுத்தில் இல்லாதது வரலாறு அல்ல என்றொரு கற்பிதம் நம்மிடையே இருக்கிறது. மன்னர்கள் ஆட்சியில் கல்வெட்டுகளில் எழுதப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறோம். அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. அதேநேரத்தில் எழுதாத விஷயங்களை எதைவைத்து நம்புவது என்ற கேள்வியும் எழுகிறது. சிந்துவெளி என்பது தேதியிடப்படாமல் இருக்கலாம். ஆனால், 4500 ஆண்டுகளுக்கு முன்னால் நகர அமைப்பில் கால்வாய்கள் வசதியோடு மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நம்மால் எளிதாகக் கடந்துபோய்விட முடியாது.

தொன்மங்களில் கடல்கோள் குறித்துப் பேசப்படுகிறது. தெற்கே இருந்த லெமூரியா கண்டத்தோடு தமிழகத்துக்கு இருந்த தொடர்புகள் பேசப்படுகிறது. சிந்து சமவெளி, கடல்கோள் குறித்த இரண்டு கருதுகோள்களுக்கும் முரண்பாடு எழவில்லையா?

நிச்சயமாக எந்த முரண்பாடுகளும் இல்லை. கடல்கோள் குறித்த தொன்மங்கள் பாண்டியர்களைக் குறிக்கின்றன. சோழர்களின் தொன்மங்களில் அவர்களது தலைநகரம் மண்மாரி பொழிந்ததாகச் சொல்லப்படுகிறது. பாண்டியர்களைத் தவிர, சேரர்களோ சோழர்களோ கடல்கோள் குறித்த எந்த நினைவுகளையும் குறிப்பிடவில்லை. சிந்துவெளிப் பகுதியிலும் கடல் இருக்கிறது என்பதையும் இவற்றோடு நாம் இணைத்துப்பார்க்கலாம். தெற்கு, வடக்கு என்பதெல்லாம் நீங்கள் எந்த இடத்தில் நின்று பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததுதான். மனிதர்கள் இடம்

பெயரும்போது தெற்கும் வடக்கும் நகர்ந்துதான் போகும். மனிதனின் நினைவுகள் மட்டுமே நிலையாக இருக்கும்.

நான் ஒரு தமிழ் மாணவன் என்றே அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள். உங்கள் காலத்தில் தமிழ் படிப்பது மதிப்பிற்குரிய ஒன்றாக இருந்திருக்கலாம். இன்றைக்கு அந்நிலை இருக்கிறதா?

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கக் கிடைத்த பல வாய்ப்புகளைத் தவிர்த்தவன் நான். அதன் மூலமாக நான் சொல்ல விரும்பிய செய்தி ஒன்றுண்டு. தமிழ் இலக்கியம் என்பது நான் விரும்பிப் படித்தது, அதுவே என் அடையாளம் என்பதுதான். நான் படித்தபோது தமிழ் படிப்பவர்களுக்குப் பெருமிதம் இருந்திருக்கலாம். மற்றவர்கள் எங்களைப் பரிதாபமாகத்தான் பார்த்தார்கள். ஆனால், அப்போது தமிழ் படிப்பவர்களுக்கு இருந்த வேலைவாய்ப்புகளைக் காட்டிலும் இப்போது வாய்ப்புகள் அதிகம். ஆனால், அவர்கள் விருப்பத்தோடு படிக்க வேண்டும். தீவிரமாகப் படிக்க வேண்டும்.

ஆய்வுப் பணிகளுக்காக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள்? வாசிப்புக்கு? எழுதுவதற்கு?

நான் விமானத்தில் பயணித்தாலும் காரில் பயணித்தாலும் படிக்க ஆரம்பித்துவிடுவேன். எழுதுவது என்பது எப்போதுமே இரவு நேரங்களில்தான். நான் ஏற்றிருந்த பொறுப்புகள் அவ்வளவு எளிதாக எனக்கு நேரம் ஒதுக்கிக்கொள்ள அனுமதித்ததில்லை. தேர்தல் பணிகள், பேரிடர் மேலாண்மைப் பணிகளின்போது இரவு நேரங்களில் அலுவலகத்திலேயே தங்கும் வழக்கத்தைக் கொண்டவன். ஆனால், எப்போதும் என்னோடு சங்க இலக்கியப் புத்தகங்கள் இருக்கும்.

தமிழகத்தில் தற்போதைய வாசிப்பு எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?

மிகவும் வரவேற்கத்தக்க அளவில் இருக்கிறது. மாநிலத் தலைநகரத்தைத் தாண்டி மாவட்டங்களின் தலைநகரங்கள் வரைக்கும் புத்தகக்காட்சிகள் நடத்தப்படுவது ஓர் உதாரணம். வாசிப்பு என்பது தமிழர்களோடு இரண்டறக் கலந்த ஒரு பழக்கம்.  பொது நூலகச் சட்டம் இந்தியாவிலேயே முதன்முதலில் இயற்றப்பட்டதே சென்னை மாகாணத்தில்தான். 1948-ல்

அந்தச் சட்டம் இயற்றப்பட்டது. ஒடிஷாவில் 2002-ல் தான் பொது நூலகச் சட்டத்தை இயற்றியிருக்கிறோம். நான் அத்துறையைச் சார்ந்திருக்கும்போது அப்படியொரு சட்டம் இயற்றப்பட்டது. ஆக, பொது நூலகங்களுக்குத் தனிச் சட்டம் தேவை என்பதை உணர்ந்த முதல் மாநிலம் தமிழகம். வாசிப்பு நமது சமூகப்பரப்பில் வரலாற்றுக்காலம் தொட்டு இருந்துவந்திருக்கிறது. சங்க இலக்கியக் காலக்கட்டத்தையும் வாசிப்பு நிறைந்த ஒரு சமூகமாக்கத்தான் பார்க்கிறேன். தொல்பொருள் ஆராய்ச்சியில் நமக்குக் கிடைத்திருக்கும் பானைகளில் உள்ள எழுத்துகள் நமது எழுத்தறிவின் உதாரணங்கள். சங்க காலத்தில் புலவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் பெண் புலவர்கள் 12-லிருந்து 13 விழுக்காடு வரையில் இருந்திருக்கிறார்கள். இன்றைக்கும்கூட அந்த எண்ணிக்கையில் பெண் கவிஞர்கள் இருக்கிறார்களா என்பது சந்தேகம்தான். ஆதி காலத்திலிருந்தே கல்வி பரவலாக இருந்த சமூகமாகத்தான் நமது தமிழ்ச் சமுகம் இருந்துவந்திருக்கிறது. நமக்கு பூமி வசிக்க வந்த இடம் அல்ல... வாசிக்க வந்த இடம்!

சமீபத்தில் நீங்கள் வாசித்த புத்தககங்களில் உங்களுக்குப் பிடித்தவை?

சமீபத்தில் நான் படித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்தது என்று சு.வெங்கடேசனின் ‘வேள்பாரி’யைச் சொல்வேன். தொல்வரலாறு என்பதைத் தாண்டி அந்நாவலில் ஒரு சமூக நுண்ணரசியல் இருக்கிறது. அடுத்து, தாஜ்நூரின் ‘தரணி ஆளும் கணினி இசை’. இசை மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பங்கள் சார்ந்து முக்கியமான வரவு. தியடோர் பாஸ்கரனின் ‘சினிமா கொட்டகை’ புத்தகமும் அரிதான தகவல்களை உள்ளடக்கிய அருமையான புத்தகம்.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

21 days ago

இலக்கியம்

21 days ago

மேலும்