பிரபஞ்சன்: ஓர் உரையாடல் இயக்கம்

By தேவிபாரதி

பிரபஞ்சனை 1980-ல் சென்னை ராயப்பேட்டை ஜானி ஜான்கான் தெருவில் இருந்த மேன்ஷன் ஒன்றில்  சந்தித்தேன். அது ஒரு பழைய கட்டிடம். நூறு சதுர அடிக்கும் குறைவான பரப்பு கொண்ட அழுக்கேறிய அறை. இரண்டு சிறிய கட்டில்கள், ஒன்று பிரபஞ்சனுக்குரியது, மற்றொன்று முருகேச பாண்டியனுடையது. இரண்டுக்குமிடையேயான ஒன்றரை அடி அகலம் கொண்ட தரையில் கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டு இரண்டு நாள்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போது ‘தாமரை’, ‘விழிப்பு’ ஆகிய சிற்றிதழ்களில் வெளியாகியிருந்த எனது ஓரிரு சிறுகதைகளை அவருக்கு வாசிக்கக் கொடுத்தேன். ஈரோட்டில் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நான் நடத்திக்கொண்டிருந்த கையெழுத்து இதழொன்றுக்காக அவரிடம் ஒரு நேர்காணல் எடுப்பது எனது நோக்கமாக இருந்தது. ஆனால், அது குறித்துக் கேட்கத் தயக்கமாக இருந்தது. கொஞ்சம் பேசி உறவை வலுப்படுத்திக்கொண்டு கேட்கலாம் என நினைத்திருந்தேன். அறிமுகமான சில நிமிடங்களுக்குள்ளாகவே எனது தயக்கத்தைக் களைந்தார் பிரபஞ்சன். நேர்காணலுக்கு உடனடியாகச் சம்மதித்தார்.

தமிழ் நவீன இலக்கியத்தின் அப்போதைய எனது சிறிய கேள்வியொன்றுக்கு விரிவாகப் பதிலளித்தவர், எனது கேள்விகளைக் கூர்மைப்படுத்தினார். மணிக்கொடி காலம் தொடங்கி தமிழ்ச் சிற்றிதழ் இயக்கம் குறித்தும் தமிழ் நவீன இலக்கியத்தில் உருவான இரண்டு முக்கியமான போக்குகள் குறித்தும் பேசினார். குறைந்தபட்சம் மூன்றாயிரம் வார்த்தைகள் கொண்ட அந்த நேர்காணலை நாங்கள் எங்கள் கையெழுத்து இதழில் வெளியிட்டோம். ஈரோட்டு இலக்கிய நண்பர்கள் அவருடனான உரையாடலைத் தொடர விரும்பினார்கள்.

அப்போது தொடங்கி ஏறத்தாழ இருபதாண்டுகள் வரை ஈரோட்டிலும் பிறகு சிவகிரி, சென்னிமலை போன்ற சிற்றூர்களிலும் நாங்கள் ஏற்பாடு செய்த மிகச் சிறிய இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றார். ஒவ்வொருமுறையும் நீண்ட அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு இடமளித்தார். கலை, இலக்கியம் சார்ந்த தன் பார்வையை முழுமையாகப் பகிர்ந்துகொண்டார். இலக்கியம் மனிதனை மேம்படுத்துவதற்கான அறிவார்ந்த செயல்பாடு என நம்பிய பிரபஞ்சன், தான் சந்தித்த மிக எளிய மனிதர்களிடம் அதைக் குறித்த உரையாடல்களை நடத்துவதில் தீராத விருப்பமுடையவராயிருந்தார். தன்னுடன் உரையாடிக்கொண்டிருந்தவர்களின் இலக்கியத் தகுதிகளை ஒருபோதும் கணக்கிலெடுத்துக்கொண்டதில்லை.

ராயப்பேட்டை மேன்ஷன்களின் தத்தளிக்கும் வெளிச்சம் படர்ந்த அறைகளில், சிறிய தேநீர்க் கடைகளில், கடற்கரையில், புத்தகக் கடை வாசல்களில், இலக்கிய அரங்குகளில், தான் வசித்த ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனி அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது மாடியில் அல்லது அன்றாடம் அதிகாலையில் அவர் காபி அருந்தும் சரவணபவன் உணவகத்தில் அல்லது புதுச்சேரியில் என எங்கும் தன்னைச் சந்திக்க முற்பட்ட யாரிடமும் தயக்கமின்றி உரையாடினார்.

குறிப்பாக, இளம் தலைமுறைப் படைப்பாளிகளுடன் உரையாடுவதைத் தனது படைப்புச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே கருதினார். கடந்த ஐம்பதாண்டுகளில் அவரது இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளால் ஊக்கம் பெற்ற படைப்பாளிகள் ஏராளம். அவரைப் போல வாசகர்களுடன் உரையாடிய ஒரு தமிழ் எழுத்தாளரை அடையாளம் காண்பது அரிது என்பது மிகையான மதிப்பீடு அல்ல. கடந்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் தான் மேற்கொண்ட ஓய்வற்ற சுற்றுப் பயணங்களின் வழியே தன் வாசகர்களோடு முடிவற்ற உரையாடல்களை நடத்தியவர் அவர். அவர்களது படைப்புகளை வாசித்தவர், அவர்களை வளர்த்தெடுத்தவர் இவர் அளவுக்கு வேறு யாரும் இருக்க முடியாது என்றுகூடச் சொல்லலாம்.

வாசகர்களுடன் அவர் மேற்கொண்ட உரையாடல்கள் தமிழ் இலக்கியத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளின் வரலாற்றைப் பரிசீலிப்பவை, அவை சார்ந்து உருவாக்கப்பட்ட பெருமிதங்களைக் கேள்விக்குள்ளாக்குபவை, காலத்தின் புதர்களில் மறைந்திருக்கும் வரலாற்று உண்மைகளை மீட்டெடுப்பவை. வழக்கொழிந்துபோன மதிப்பீடுகளைத் தயக்கமின்றிப் புறந்தள்ளியவை. சமரசமற்ற விமர்சனங்களை முன்வைப்பவை. வரலாற்றைத் தன் சமகாலப் படைப்பாளிகளில் பலரையும்போலவே எளிய, புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வரலாறாகவே பார்த்தார். வரலாற்றால் புறக்கணிக்கப்பட்ட பெண் குரலை, தமிழில் பெண்ணியக் குரல்கள் வலுப்பெறுவதற்கு முன்பாகத் தன் படைப்புகளில் முன்வைத்தவர் பிரபஞ்சன்.

அவரது படைப்புச் செயல்பாடுகளுக்கும் அதுதான் ஆதாரம். அவரது 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளில் பெரும்பாலான கதைகள், தமிழ் வாழ்வை ஆழ்ந்த கரிசனத்தோடு அணுகியவைதான். தமிழின் முக்கியமான படைப்புகளாகக் கொண்டாடப்பட வேண்டிய ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ ஆகிய அவரது இருபெரும் நாவல்களின் வழியே ஒரு கலைஞனாக இருப்பதன் அர்த்தத்தை நிறுவியிருக்கிறார் பிரபஞ்சன். மானுடத்தின் மீதான தனது கரிசனத்தை, தமிழ்ச் சமுகத்தின் வாழ்வைச் சூழ்ந்திருக்கும் நெருக்கடிகள் சார்ந்த தனது கவலையை நூற்றுக்கும் மேற்பட்ட தனது கட்டுரைகளிலும் பத்தி எழுத்துகளிலும் மதிப்புரைகளிலும் திடமாகப் பதிவுசெய்திருப்பவர் பிரபஞ்சன்.

தமிழின் தற்போதைய இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் பலர் அவரது படைப்புச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அடிப்படைகளைத் தன் படைப்புகளின் வழியாகவும் இலக்கியம் சார்ந்த செயல் பாடுகளின் வழியாகவும் உருவாக்கிவிட்டுச் சென்றி ருக்கிறார் பிரபஞ்சன். அதன் வழியே என்றுமே அழிவற்றதாகத் தன் குரலை நிறுவிவிட்டுச் சென்றிருக்கிறார் தமிழின் மகத்தான அந்தப் படைப் பாளுமை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்