தற்செயல்களின் சூதாட்டம் என் கதைகள்: சுரேஷ் குமார இந்திரஜித் நேர்காணல்

By ஷங்கர்ராமசுப்ரமணியன்

தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் சுரேஷ்குமார இந்திரஜித். 1980-களில் எழுதத் தொடங்கிய இவரின் கதைகள் அன்றாட வாழ்க்கை மற்றும் உறவுகளின் மர்மங்கள் மீது கவனம் குவிப்பவை. அலையும் சிறகுகள், மாபெரும் சூதாட்டம், நடன மங்கை உள்ளிட்ட ஏழு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். வருவாய் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் மதுரையில் வசித்துவருகிறார்.

உங்களைப் பாதித்த முதல் கதை எது, ஞாபகம் உள்ளதா?

அப்பா என் சின்ன வயதிலேயே தவறிவிட்டார். அண்ணாவுக்குக் கல்யாணம் ஆகியிருந்தது. அவர்கூடத்தான் நானும் அம்மாவும் இருந்தோம். அண்ணி வழியாகத்தான் கதைகள் எனக்கு அறிமுக மானது. அண்ணிதான் படித்த கதைகளை நாங்கள் சாப்பிடும் நேரத்தில் சொல்வார்கள். ஜெயகாந்தனுடைய ‘பொம்மை’ கதையை அப்படித்தான் கேட்டோம். இந்தக் கதையைக் கேட்டபோது எனக்கு எட்டு வயசு இருக்கலாம். அந்தக் கதைக்குப் பிறகு ஜெயகாந்தன் என் மனதில் பதிந்துபோனார்.

தினசரி சாயங்காலம், பொழுது இருட்டும் வேளையில் என் அண்ணி வீட்டின் நடுவில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து லைப்ரரியில் இருந்து கொண்டுவந்த நாவலைப் படிப்பார். நான், அண்ணன், அம்மா எல்லாரும் சுத்தி உட்கார்ந்து கேட்போம். இன்னும் அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியவில்லை.

80-களின் இறுதியில் எழுத வந்தவர் நீங்கள் அப்போது வந்த கதைகள் மற்றும் சமூகச் சூழல் பற்றிச் சொல்லுங்கள்.

ஒரு தனிமனிதன் அல்லது இளைஞன் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கிற நிலையைத்தான் அக்கால கட்டத்தில் வந்த சிறுகதைகள் பிரதிபலித்தன. கணையாழி, கசடதபற பத்திரிகைகளில் இப்படியாக எழுதப்பட்ட பல கதைகளைப் பார்க்கலாம். பிரெஞ்சிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட ஆல்பெர் காம்யூவின் அந்நியன் நாவல் இந்தப் போக்குக்குக் கூடுதல் வலுச் சேர்த்தது.

உங்களது இரண்டாவது தொகுப்பான ‘மறைந்து திரியும் கிழவன்’ தொகுப்பில் கதைகள் வேறு பாணியில் மாறிவிட்டன இல்லையா?

அப்போது இங்கே அறிமுகமான லத்தீன் அமெரிக்கக் கதைகள் தனிப்பட்ட அளவில் எனக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தன. கதை மையமற்று இருக்கலாம், மறைந்து இருக்கலாம், கதையற்ற வரலாற்று எழுத்து மாதிரி எழுதலாம். இந்த முரட்டுக் குதிரை மீது சவாரி செய்து பார்க்கலாம் என்ற உத்வேகம் வந்தது.

மறைந்து திரியும் கிழவன் கதையில் நேதாஜி காலகட்டத்தைச் சேர்ந்த தீவிரவாதி நிகழ்காலத்தில் வருவான். ஆனால் அவனோட நினைவுகள் சுதந்திரப் போராட்ட காலகட்டத்திலேயே உறைந்திருக்கின்றன. அவன் மூலமாக ஒரு காலகட்டத்தின் கதையைச் சொல்கிறேன். அவனது கதையை அப்படியே திரும்ப எழுத முடியாது. அதற்கு ஒரு மர்மப் பின்னணியைக் கொடுத்தேன்.

தமிழகத்தின் யதார்த்தம் உங்கள் கதைகளில் மூட்டமாக வருகிறது. பீகாரும் ஜாக்குலினும் கதையில் ஒரு கோவில் நகரில் உள்ள கடையில் காந்தியின் படமும் ஸ்டாலின் படமும் மாட்டப்பட்டுள்ளன…

அரசு, அதிகாரம், மதம், சாதி, நமது மக்களுக்கு இருக்கும் சினிமா மாயை, அதனுடன் தொடர்புடைய அரசியல், அன்றாட யதார்த்தத்தில் மனிதர்களின் பாவனைகள் இவற்றுக்கு இடையிலான உறவுகளை, அபத்தங்களை ஒரு கதையின் பாவனையில் கட்டவிழ்த்துப் பார்க்கும் விதமாக அப்போது என் கதைகளை எழுதினேன். கதையின் பாவனையில் ஒரு விமர்சனம் உள்ளே இருக்கும்.

2000-க்கு அப்பால் வேறு விதமான கதைகள் எழுதத் தொடங்குகிறீர்கள் இல்லையா? திராவிட அரசியல் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள்.. உங்கள் கதைகளில் கோட்டுச் சித்திரங்களாக வருகின்றன…

எனக்கு மதப் பிடிப்பு இல்லை. கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் பிறந்தது ராமேஸ்வரம் என்பதால் மதம் சார்ந்து நடக்கும் அத்தனை வியாபாரத்தையும் பார்த்திருப்பதால் இவையெல்லாம் போலியானவை என்ற எண்ணம் பால்ய வயதிலேயே ஏற்பட்டு விட்டது. பெரியார் எழுத்துகளும் அதற்குக் காரணம்.

ஆனால் மதம், சம்பிரதாயங்கள் ஒருவனின் நனவிலியில் ஆதிக்கம் செலுத்தத்தான் செய்கின்றன. எனது கதையில் ஒருத்தன் காபரே பார்க்கப் போகிறான். நடனமாடும் பெண் சிலுவை அணிந்திருக்கிறாள். அது அவனைத் தொந்தரவு செய்கிறது. ஆனால் அதே நேரத்தில் புராண சினிமாவில் சாமி முன்னால் கவர்ச்சி நடனம் நடப்பதை ஒரு இந்து மனம் அதிர்ச்சியாக எடுத்துக்கொள்வதில்லை. சிலுவை என்ற குறியீடு மேல் இந்து மனம் ஒன்றுக்கும் ஒரு மதிப்பீடு இருக்கிறது.

இன்றைய சிறுகதை எழுத்தாளனுக்கு உள்ளடக்கம் சார்ந்த சவால்கள் என்னவாக இருக்கின்றன?

சில சமூக மதிப்பீடுகள் நிலைபெற்று விட்டன. அதன் மறுபக்கம் இருக்கிற தல்லவா. அதை இன்று ஒரு எழுத்தாளன் எழுதுவதுதான் சவாலானது. அதை எழுதும்போது மனத்தடை இருக்கக் கூடாது. அரசியல், சமூக உறவுகள் சார்ந்த இன்னொரு தரப்பையும் ஒரு எழுத்தாளன் எழுத வேண்டும். ஒரே விஷயத்தையே அவன் திரும்பத் திரும்ப எழுதக் கூடாது. ஒரு குறிப்பிட்ட உலகம் சார்ந்துதான் அவன் இயங்க முடியும் என்கிற நிலைமை இருக்கக் கூடாது. காஃப்காவோ, நகுலனோ, டால்ஸ்டாய், ஹெமிங்வே கையாண்ட பிரம்மாண்டத்தை அடையவே முடியாது.

ஜெயமோகன் பன்முகத்தன்மையோடு, துணிச்சலாக எழுதுகிறார். சிறுகதை எழுத்தாளர்களில் அவர் முக்கியமானவர். தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த வரை இன்று முக்கியமான ஆளுமை ஜெயமோகன்தான். ஜெயமோகன் மற்ற எல்லா எழுத்தாளர்களையும் குள்ளமாக்கி விட்டார். ஆனால், ஜெயமோகனின் நாவல்கள் மீது எனக்கு ஈடுபாடு இல்லை.

தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் உங்கள் மனதுக்கு நெருக்கமானது எது?

என் மனது, மனத்தடை இல்லாமல் இயற்கையாகப் போய் அமரும் படைப்புகள் என்று மூன்று நாவல்களை என்னால் சொல்ல முடியும். ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே, சுந்தர ராமசாமி யின் ஜே.ஜே.: சில குறிப்புகள் இந்த மூன்று நாவல்களைத்தான் நான் சொல்வேன்.

உங்கள் கதைகளில் பெரிய நிகழ்வுகளுக்குப் பின்னால் சில அபத்தமான சந்தர்ப்பங்களும் முக்கியமான காரணியாக இயங்குகின்றன…

ஒரு தினசரி செய்தித்தாளில் வந்த செய்தி இது. அதை நான் கதையாக எழுதியிருக்கிறேன். ஒருத்தன் சைக்கிளில் போய்க்கொண்டிருப்பான். வானத்தில் பறந்துகொண்டிருக்கும் பருந்து தன் காலில் உள்ள பாம்பின் பிடியைத் தவறவிடுகிறது. அது அந்த சைக்கிள்காரனின் மேல் விழுந்து கொத்தி இறந்தும் போய்விடுகிறான். இந்த நிகழ்ச்சியின் சாத்தியத்தைப் பாருங்கள்.

இவனுடைய சாவைத் தற்செயல் என்று சொல்லலாம். ஆனால் அந்தத் தற்செயல் நிகழ்வில் பயங்கரமான ஒழுங்கும் திட்டமும் இருக்கிறது. ஒரு திட்டமில்லாத திட்டம் இருக்கிறது. இதைத்தான் விதி என்று சொல்கிறார்கள். எது நடந்ததோ அதை நடக்க விதிக்கப்பட்டதாக நாம் நினைக்கும்போது தற்செயல்களின் சூதாட்டம் வெற்றிகரமாகத் தொடங்கிவிடுகிறது.

உங்கள் கதைகளில் ஆண், பெண் இடையிலான உறவில் வன்முறை ஒரு அம்சமாகத் தொடர்ந்து வருகிறது. சமூக வாழ்க்கையில் வன்முறையைத் தவிர்க்க முடியாததாகப் பார்க்கிறீர்களா?

எந்த உறவிலும் இல்லாத வன்மம் கணவன்-மனைவி உறவில் இங்கு இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தியா போன்ற நாட்டில் திருமண உறவு என்பதில் பொருத்தமே இல்லை. எக்சுக்குப் பொருத்தமான கணவன் ஒய்யின் கணவனாக இருப்பான். ஒரு தேசமே பொருத்தமில்லாத மண வாழ்க்கையை ஒரு சகிப்புத்தன்மையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறது. காதல் திருமணத்துக்கும் இது பொருந்தும். ஏனெனில் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் காதலிக்கிறார்கள். மேல்நாட்டில் எப்போது பொருத்தம் இல்லையென்று தோன்றுகிறதோ விலகிவிடலாம். குடும்பத்துக்குள் இருக்கும் இந்த வன்மம்தான் சமூகம் வரை தொடர்கிறது. இதெல்லாம் எனது கவனத்துக்குரியதாக உள்ளது.

உங்களுடைய ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளராக இன்றும் இருப்பவர் யார்?

ஜெயகாந்தன் கதைகளில் நிறைய சொற்பொழிவு இருந்தாலும் அவர் கதைகள் எனக்குப் பிரியமானவையாக இன்னும் இருக்கின்றன. அவருடைய கதைகளில் உபதேசம் இருந்தாலும் அந்த உபதேசம் நமக்குத் தேவை. அவர் எழுதிய பாரிசுக்குப் போ நாவல் முக்கியமானதுதான்.

தீவிரமான கதைகளாக இருக்கட்டும், வெகுஜனக் கதைகளாக இருக்கட்டும் நீதி என்பது வாசகர்களுக்கு எப்போதும் தேவையாகத்தான் உள்ளதா?

இருந்துகொண்டேதான் இருக்கும். என்னுடைய முதல் ஆசான் ஜெய காந்தன்தான். என்னுடைய பார்வை மற்றும் மனதை வடிவமைச்சது அவர்தான். தனி மனித உறவுகள், சமூக உறவுகள், கணவன்-மனைவி உறவு, பிறன்மனை உறவுகள் எல்லாவற்றையும் அவர் அர்த்தபூர்வமாக விவாதித்திருக்கிறார்.

தற்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

ஒரு சிறிய நாவலை எழுத முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். திராவிட அரசியலின் காரணமாகச் சில சமூகங்கள் அடைந்த வீழ்ச்சி மற்றும் சில சமூகங்களின் ஏற்றத்தைப் பேசும் படைப்பாக அது இருக்கும். அந்த நாவலின் காலம் 1950-களில் தொடங்கி 70-களில் முடியும். 30, 40 பக்கம்தான் வந்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்