இதய நோய் அறுவைச் சிகிச்சைக்குள்ளானது குறித்த தனது அனுபவங்களை ஒருவித சுயஎள்ளலுடன் எழுதியிருக்கிறார் கவிஞரும் சிறுகதையாளருமான அகிலா.
இதய நோய் என்றவுடன் அய்யோ என்று பயந்துவிடாமல், அதை எப்படி சாதுர்யமாக எதிர்கொண்டார் என்பதை ‘நின்று துடித்த இதயம்’ நூலில் பதிவுசெய்துள்ளார். பெண்ணுக்கே உரித்தான மனத்துணிவுடன் தனது உடல், மனப் பிரச்சினைகளை எதிர்கொண்டது குறித்து இயல்பான மொழியில் எழுதியுள்ளார்.
பைபாஸ் சர்ஜரியின்போது, அறுவைச் சிகிச்சை நடக்கும் ஐந்து மணி நேரமும் இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட இதயம், பின்னர் மீண்டும் துடிக்க ஆரம்பித்து இயல்புநிலைக்குத் திரும்புவது என்பது ஒருவகையில் மருத்துவ அதிசயம்தான்.
அலோபதி மருத்துவச் சிகிச்சையால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய அகிலா, சோர்ந்துபோய்விடாமல் உடல் பற்றிய பிரேமைகளிலிருந்து விலகி, தன் இருப்பை மறுவாசிப்புச் செய்துள்ளார். தனக்கேற்பட்ட இதய நோய், அறுவைச் சிகிச்சை, சிகிச்சைக்குப் பின்னர் வாழ்க்கை என விரிவாக எழுதியிருக்கும் பதிவுகள், நோயை எப்படி எதிர்கொண்டு வாழ்வது என விரிந்துள்ளன.
இயற்கை தந்த உடல் மீது எவ்வித அக்கறையும் இல்லாத போக்கு இன்று பெருகியுள்ளது. செயற்கையான வேதியியல் உரம், கொடிய நச்சுக்கொல்லிகள், மரபணு மாற்றப்பட்ட விதைகள், ஹார்மோன் மருந்தால் வளர்க்கப்படும் கோழி இறைச்சி என அன்றாட உணவு நஞ்சாகிப்போன சூழல் உருவாகியிருக்கிறது.
தமிழகத்தில் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, குடற்புண் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவது இன்று சாதாரணமாகிவிட்டது. அதிலும் இதயம் தொடர்பான நோயால் ஒருவர் திடீரென இறந்துபோவது சராசரி நிகழ்வாகிவிட்டது. இந்தியாவில் ஆண்டுதோறும் மாரடைப்பால் சுமார் 90 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.
இத்தகைய சூழலில் அகிலா எழுதியுள்ள இந்நூல், ஒருவகையில் எச்சரிக்கையாகவும் இன்னொரு வகையில் நோயை எண்ணி நொடிந்துபோய்விடாமல் எப்படி எதிர்கொள்வது என தைரியமூட்டும் விதமாகவும் உள்ளது. ஐம்பது வயது குடும்பத்தலைவியான அகிலா தனது உடலில் ஏற்பட்ட தொந்தரவுகள் காரணமாக மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றபோது, அவரின் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏழு அடைப்புகள் இருக்கின்றன என்றும் உடனடியாக இதயத்தைத் திறந்து அடைப்புகளை சரிசெய்ய வால்வுகள் பொருத்த வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
இதய நோய் என்றவுடன் உடனடி மரணம் என்று பயப்படுகிற சூழலில், எனக்கு இதய நோய் வந்துவிட்டதே என்று பலரும் கழிவிரக்கத்துடன் தன்னையே வதைக்குள்ளாக்குற நிலையில், அகிலா எழுதியுள்ள அனுபவப் பதிவுகள், பொதுப்புத்தியில் பலருக்கும் தெளிவை உண்டாக்கும்.
பெண்களின் உடல்வாகு, இயற்கையுடன் நெருங்கிய தொடர்புடைய நிலையில் மாதவிலக்கு, மகப்பேறு, மெனோபாஸ் போன்றவை பெண்ணுடலில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதிலும் நாற்பது வயதைக் கடந்த பின் உடலைப் பொருட்படுத்தாமல் அன்றாட வீட்டு வேலைகளில் வதங்கிட நேரிடுகிறது. இத்தகைய பெண்கள் தங்கள் உடலைக் கவனிக்க வேண்டியதன் அடிப்படைக் காரணங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. மோசமான நோய் என்று அறிந்தால் பீதியடையாமல், கலவரப்படாமல் நோயை எப்படி அணுகுவது என்பதற்கு வழிகாட்டியாக அகிலாவின் மருத்துவமனை அனுபவங்கள் அடங்கிய இந்தப் புத்தகம் உதவிடும்.
மருத்துவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் தனக்குச் செய்த சிகிச்சையின் மகத்துவத்தை உணர்ச்சிபூர்வமாகப் பதிவாக்கியுள்ளார். குறிப்பாக, அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் வலி, மயக்க மருந்தின் பின்விளைவாகக் குழம்பிய மனநிலை, உடலில் பொருத்தப்பட்டிருக்கும் குழாய்களைப் உரையாடிக்கொண்டே நீக்கும் மருத்துவரின் சாதுர்யமான செயல், பெண் என்ற நிலையில் மார்பில் ஏற்பட்டுள்ள தழும்பு குறித்த பதற்றம், குடும்ப வாழ்க்கை போன்றவை மிகையின்றித் தரப்பட்டுள்ளன.
இதயம் என்றால் அன்பு, காதல், மனக்கசிவு எனக் காலங்காலமாகப் புனையப்பட்டுள்ள புனைவுகள் காற்றில் மிதக்கின்றன. இதயம் பாதிப்புக்குள்ளானால் என்ன நிகழுமென்ற அகிலாவின் பதிவுகள் அறிவியல் பின்புலமுடையவை. ஆஞ்சியோகிராம், பைபாஸ் அறுவைச் சிகிச்சை என்றால் எப்படி இருக்கும் என்று அறிவியல்ரீதியில் தந்துள்ள தகவல்கள், இதய நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பயன்படக்கூடியவை. இதயத்தில் திடீரெனக் கோளாறு வந்தால் அதை மருத்துவத்தின் உதவியுடன் எவ்வாறு வெல்வது என்ற அகிலாவின் அனுபவங்கள் முக்கியமானவை; சமகாலத் தேவையும்கூட.
- ந.முருகேசபாண்டியன், எழுத்தாளர்
தொடர்புக்கு: mpandi2004@yahoo.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
23 days ago
இலக்கியம்
23 days ago