சதை தின்னும் கழுகுகள்

By அ.வெண்ணிலா

மனித வாழ்வில் துயரங்களும் ஒரு அங்கமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சிலருக்கோ துயரங்களே வாழ்க்கையாகிப்போகிறது. பெண்களுக்குத் துயரங்கள் பெண்ணாக இருப்பதாலேயே வந்தடைகின்றன. பெண்ணின் உடல் ஆணின் வக்கிரத்தால் எந்தளவுக்குச் சீரழிக்கப்படும் என்பதை சராசரியான வாழ்விலுள்ளவர்களால் கற்பனை செய்யவே முடியாது. இந்த நேரத்தில் சின்னச் சின்ன சந்துகளிலும் மறைவிடங்களிலும் பூட்டிய அறைகளுக்குள்ளும் பாலியல் தொழிலிடங்களிலும், உறவினர்களாலும் நண்பர்களாலும் காமுகர்களாலும் எத்தனையெத்தனை உடல்கள் வன்முறைக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றனவோ.

பெண்களின் சமத்துவமின்மைக்கும், பாலியல் தொழிலுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்த இந்தியாவின் 21 மொழிகளின் 21 கதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுப்பாக்கியுள்ளார் ருச்சிரா குப்தா. நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் இவர். ஏறக்குறைய 20,000 பெண்கள் பாலியல் தொழிலிலிருந்து விடுபடுவதற்கு அவர் உதவியிருக்கிறார். பாலியல் தொழிலுக்காகப் பெண்கள் கடத்தப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்கான அமைப்பையும் வைத்துள்ளார். இந்தக் கதைகளை சத்தியப்பிரியனின் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளியிட்டுள்ளது கிழக்கு பதிப்பகம்.

புதுமைப்பித்தன், மன்ட்டோ, கமலா தாஸ், பிரேம்சந்த், இஸ்மத் சுக்தாய், அம்ரீதா ப்ரீதம், இந்திரா கோஸ்வாமி உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்களின் கதைகள் தொகுப்பில் உள்ளன. வெவ்வேறு மொழிகளின் கதைகளென்பது வாசிக்கும்போது மறந்துபோகிறது. எல்லா கதைகளுக்கும் ஒரே முகம்தான், பெண்களின் முகம். எல்லா கதைகளுக்குள்ளும் ஒரே வலிதான், பெண்களின் வலி. எல்லா கதைகளுக்கும் ஒரே உணர்வுதான், துரோகம்.

துரோகத்தின் வழியாகப் பெண்கள் சென்றடையும் இருட்டுலகத்தின் திரையை விலக்கிக் காட்டுகின்றன இத்தொகுப்பின் கதைகள். வயதுக்குவராத பெண் குழந்தைகளையே ஒவ்வொருமுறையும் கேட்கும் முரட்டுத்தனமான ஐம்பதைக் கடந்த இன்ஸ்பெக்டர், அன்பை எதிர்பார்த்து ஒரே ஒருமுறை புன்னகைத்ததற்காக காசிவரை அழைத்துவந்து மணக்க மணக்க ஐந்து மாதங்கள் குடும்பம் நடத்தி வயிற்றில் ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு அடுத்த பெண்ணை வேட்டையாடக் கிளம்பும் பல்ராம், காலராவுக்கு குடும்பமே பலியானதால் உறவினர் ஒருவரால் பாலியல் விடுதியில் சொற்ப ரூபாய்க்கு விற்கப்பட்டு விதைகளுள்ள ஒரு கொய்யாப்பழம் சாப்பிடும் கனவுகளுடனேயே செத்துப்போகும் சீதா, தூங்காத இரவுகளிலிருந்து மீளவே முடியாமல் இருப்பவளை இரண்டு மணி நேரம் தொழிலுக்குச் சென்றுவிடு என கட்டாயப்படுத்தும் புரோக்கரை அரைத் தூக்கத்திலேயே கொன்றுவிட்டு பிணத்தின் அருகிலேயே படுத்துறங்கும் இளம் பெண், ஊரில் உடம்பு சரியில்லாமல் (உண்மையில் இறந்துவிட்ட) இருக்கும் மகனைப் பார்க்கச் செல்ல பணமில்லாமல் வெடித்து அழக் காத்திருக்கும் தாய்மையை அடக்கிக்கொண்டு தன் துவளும் உடம்பை அலங்கரித்து பூங்காவின் இருட்டில் காத்திருப்பவளை இரவு முழுக்க அனுபவித்துவிட்டு வயிற்றில் ஓர் உதைவிட்டுக் கிளம்பிச்செல்லும் வக்கிர ஆண், ஒரு பிடி கடலைக்காக தன்மேல் இறங்கும் எல்லா வன்முறைகளையும் கேவலுடன் பொறுத்துக்கொள்ளும் ஊமைப் பெண்ணை ஏய்த்துவிட்டு அவளின் கடைசி சுவாசத்தையும் நிறுத்தி நிரந்தர விடுதலை கொடுத்துச்செல்கிறான் ஒருவன். ஒவ்வொரு கதையும் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கச்செய்யும்.

நகராட்சியிலிருந்து அனாதைப் பிணம் ஏற்றிச்செல்லும் வாகனம் வரும் முன் இறந்துகிடக்கும் பாலியல் தொழிலாளியின் உடலைக் குத்திக் கிழிக்கும் கழுகொன்று ஒரு கதையில் வருகிறது. இறந்த பெண்ணையும் விட்டுவைக்காத அந்தக் கழுகே இத்தொகுப்பின் மொத்தக் கதைகளுக்குமான குறியீடு. காதலின் பெயரால் கடத்திச்செல்லப்படும் பெண்களைக் குத்திக் கிழிப்பதற்குக் கண்ணுக்குத் தெரியாத இருட்டுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

பெண்களின் சதை ஆற்றில் தாகம் தணித்துக்கொண்டே இந்தச் சமூகம் யோக்கிய முகம் காட்டிக்கொண்டிருக்கிறது. இரட்டை முகங்களல்ல; இச்சமூகத்திற்கு ஆயிரம் இருள் முகங்கள் உள்ளன என்பதை இத்தொகுப்பு சொல்கிறது.

- அ.வெண்ணிலா, கவிஞர்.

தொடர்புக்கு: vandhainila@gmail.com

 

மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம்

தொகுப்பு: ருச்சிரா குப்தா

தமிழில்: சத்தியப்பிரியன்

கிழக்கு பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை – 14.

 044 - 42009603 விலை: ரூ.325

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

23 days ago

இலக்கியம்

23 days ago

மேலும்