எஸ்.சம்பத்: வெல்ல முடியா சாவு

By சி.மோகன்

நாவலின் கடைசியில் சாவுக்கு முன் தினகரன் மண்டியிடுவதைப் போல ஒவ்வொரு வாசிப்பின்போதும் நான் இந்நாவலுக்கு முன் மண்டியிடுகிறேன்!

சி.மோகன்உலக நாவல் பரப்புக்கு நம் பங்களிப்பாக ஒரு நாவல் முன்வைக்கப்பட்டு அது பெருமிதத்தோடு உலகளவில் ஏற்கப்படுமெனில் நிச்சயமாக அது ‘இடைவெளி’யாகவே இருக்க முடியும். இது, சாவு என்பது என்ன? அது ஏன் ஒருபோதும் வெல்ல முடியாததாக இருக்கிறது? அதன் எந்த அடிப்படை அம்சம் இப்படியான ஒரு தன்மையை அதற்கு உரியதாக்குகிறது? இத்தகைய கேள்விகளால் அலைக்கழிக்கப்படும் தினகரன், அவற்றுக்கான விடை தேடிச்செல்லும் நாவல். சம்பத்தின் சுயசரிதை அம்சங்கள் இப்படைப்பில் விரவிக்கிடக்கின்றன.

ஏழு அத்தியாயங்கள் கொண்ட சிறிய நாவல் ‘இடைவெளி’. மையப் பாத்திரமான தினகரன் பற்றி நாவலிலிருந்து நாம் அறிவது: கலவியில் அதீத நாட்டமுடையவர். சாவுப் பிரச்சினையில் உழலத் தொடங்கிய பிறகு, மனைவியே கேட்டுக்கொண்டும் மறுக்குமளவு பிரச்சினையில் அமிழ்ந்துபோனவர். அதற்கு முன்னர் டெல்லியில் பணிபுரிந்தபோது கல்பனா என்ற பெண்ணுடன் உறவு. மனதில், நினைவுகளில் அவளின் தீவிர இருப்பு. பத்தாண்டுகள் முன்னோக்கிப் பார்க்க விரும்பாத இச்சமூக ஓட்டத்திற்கிடையே அடிப்படைப் பிரச்சினைகளில் உழன்று தகிப்பவர். அவரை ஆட்கொண்டிருப்பது சாவு பற்றிய ஒரு கேள்வி. பிறப்பால் பிராமணன். அவருக்கு தஸ்தாயேவ்ஸ்கியை ரொம்பப் பிடிக்கும். காரணம், அவர் யேசு கிறிஸ்துவை அசைக்க முடியாத அளவுக்கு ஒரு கண்டன விமர்சனம் செய்துபோயிருக்கிறார். இது தினகரனுக்கு ரொம்ப முக்கியம். யேசுவை தினகரனுக்குப் பிடிக்கும். எண்ண ரூபமான எதையுமே எதிர்கொள்ளத்தானே வேண்டும் என்பது தினகரனின் நிலைப்பாடு. இப்படிப் பார்க்கும்போது வேதங்களும் உபநிஷத்துகளும் இந்த மாதிரியான பரிசீலனைக்கு இன்னமும் உட்படவில்லை என்பது அவரது ஆதங்கம்.

சாவுப் பிரச்சினை தினகரனை ஆட்கொள்ளத் தொடங்கும் ஆரம்பக்கட்டத்தில் ஒரு தோல் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் தினகரன் முக்கியப் பதவியில் இருக்கிறார். பிரச்சினை தீவிர முகங்கொள்ளும்போது  மதிப்பில்லாத பேக்கிங் பிரிவுக்குத் தானே விரும்பிக்கேட்டு மாற்றிக்கொள்கிறார். முன்னர் டெல்லியிலும் தற்சமயம் சென்னையிலுமாக ஒருபோதும் ஒரு அலுவலகத்தில் அதிக நாட்கள்  நீடித்திருந்ததில்லை. சாவு பிரச்சினையில் சிக்கிக்கொண்டு உழன்று தவிக்கும்போது வீட்டிலும் வெளியிலும் அலுவலகத்திலும் அவருடைய நடவடிக்கைகள் பரிகசிக்கப்படுகின்றன. இப்பிரச்சினையில் உழன்றபடியே எண்ண ஓட்டங்களில் திளைக்கும் தினகரன், அன்றாட நடைமுறை வாழ்வில் பரிகசிப்புக்கு ஆளாகிக்கொண்டு இருப்பதற்குக் காரணம், அவருடைய இருப்பில் ‘மடத்தனம்’ ஒரு முக்கிய பரிமாணமாக இருப்பதுதான். இது ஒரு விசித்திர முரண். சிந்தனை நிலையில் மகத்தான எண்ண ஓட்டங்கள்; அன்றாட வாழ்நிலையில் மடத்தனத்தின் சாயைகள். இம்முரண்நிலை இந்நாவலின் முக்கியப் பரிமாணம்.

மடத்தனம் நம் இருப்பின் முக்கியமான ஒரு பரிமாணம் என்பது குறித்து இன்றைய சூழலில் நாம் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். அதனால்தான், “அறிவியல் சிந்தனைகளுக்காகப் பெருமைப்பட்டுக்கொள்ளும் 19-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பே, மனித இருப்பின் விலக்க முடியாத ஒரு பரிமாணமாக மடத்தனம் இருப்பதை ஃப்ளாபெர்ட் தம் நாவல்கள் மூலம் கண்டடைந்ததுதான்” என்று மிலன் குந்தேரா கருதுகிறார். மேலும், “ஃப்ளாபெர்ட்டின் இந்தக் கண்டுபிடிப்பு மார்க்ஸ், ஃப்ராய்டு ஆகியோரின் திடுக்குறவைக்கும் கருத்துகளைவிடவும் எதிர்கால உலகுக்கு முக்கியமானது” என்கிறார். பொதுப்புத்திக்கும் வெற்றியை முன்னிறுத்தும் சமூக மதிப்புகளுக்கும் எதிரான ஒரு தேர்வாக மடத்தனம் இருக்கிறது. பைத்திய நிலை பற்றி இன்று அதிகமாகப் பேசப்படுகிறது. சிலாகிக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக அதை நாமாகத் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், மடத்தனம் என்பதைத் தேர்வாகக் கொள்ள முடியும். தினகரனிடம் அது ஒரு இயல்பான பரிமாணமாக இருப்பதிலிருந்து இந்நாவல் புது வெளிச்சம் பெறுகிறது.

சாவின் அடிப்படைத் தன்மையைச் சொல்லிவிடுவோம் என்ற எண்ணம் தினகரனிடம் உருவாவதிலிருந்து நாவல் ஆரம்பமாகிறது. சாவு பல விதங்களில் சம்பவித்தாலும் அதன் அடிபடைக்கூறு ஒன்றுதான் என்ற யூகத்துடன் முதல் அத்தியாயம் முடிகிறது. இரண்டாவது அத்தியாயத்தில் தினகரன் தான் காணும் விந்தைக் கனவில் ‘இடைவெளி’ என்று தன்னையறியாது சொல்கிறார். எதிரில் அமர்ந்திருக்கும் சாவு உருவம் தலையாட்டுகிறது. சாவுப் பிரச்சினையில் உழன்று தவிக்கும் மனதுக்கு உள்ளுணர்வு தரும் ஒரு வெளிச்சமிது. இந்த அத்தியாயத்தில் தினகரன் காணும் கனவில் சாவு வெளிப்படுவது சர்ரியலிஸத் தன்மையில் திகைப்பூட்டுவது. எனில், அதே அத்தியாயத்தில் மூர் மார்க்கெட் அருகில் ‘தாட்’ என்னும் மூன்று மயில், மூன்று புலி சூதாட்டத்தைத் தினகரன் ஆடும் பகுதி தஸ்தாயேவ்ஸ்கி தன்மையில் அதிர்வூட்டுவது. அந்தச் சூதாட்டத்தில் கவர்கள் பிரிக்கும் முறையில் தெரியவரும் ஒரு சித்தாந்தத்தை முழுமையாகக் கண்டடைந்துவிட்டால் சாவு பற்றி எண்ணுவதில் ஒரு தொடர்ச்சியும், அந்தத் தொடர்பில் உருவாகும் இணைப்புச் சக்தியும் மனக்கண்களுக்குப் புலப்படும் என்ற நம்பிக்கையில் அந்தச் சூதாட்டத்தைப் பல நாட்கள் தொடர்ந்து ஆடி சூட்சமத்தை அறிந்துகொள்கிறார். இது அவருக்கு அவ்வப்போது சமிக்ஞைகளாகவும் யூகங்களாகவும் தோன்றும் சாவு பற்றிய முக்கியமான எண்ணங்களைப் பிரித்துக் கையாள உதவுகிறது. மிகவும் அற்புதமாக அமைந்துவிட்டிருக்கும் பகுதி இது.

அடுத்து வரும் அத்தியாயங்களில், சாவு குறித்து சதா உழன்றுகொண்டிருக்கும் தினகரனை அவருடைய யூக  உலகம் தொடர்ந்து நகர்த்தியபடி இருக்கிறது. இந்த மன இயக்கத்தின் தொடர்ச்சியாகக் கடைசியில் வாழ்வு என்பது அனுசரணையான இடைவெளி என்றும் சாவு என்பது முரண்பாடுடைய இடைவெளி என்றும் கண்டடைவது, ‘பெரிய எண்ண ஓட்டங்களுக்கே உரித்தான வீரியத்தோடும், பூ மணப்பின் குணத்தோடும்’ இந்த நாவலில் மலர்ந்து விரிந்திருக்கிறது. தகிக்கும் மனதின், அதன் எண்ணவோட்டங்களின் வெதுவெதுப்பை இந்நாவலின் பக்கங்களில் நாம் உணர முடியும். கண்டடைவதன் பரவசத்தையும்தான். இந்த வெதுவெதுப்பும் பரவசமும் நம் வாழ்வுக்கு அவசியமானவை. அதனால்தான், நாவலின் கடைசியில் சாவுக்கு முன் தினகரன் மண்டியிடுவதைப் போல ஒவ்வொரு வாசிப்பின்போதும் நான் இந்நாவலுக்கு முன் மண்டியிடுகிறேன்.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்