ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் தவறாமல் பங்கேற்பவர் வெ.ஜீவானந்தம். இயற்கை, சுற்றுச்சூழல், வரலாறு, மருத்துவம், கலை, கலாச்சாரம், பழங்குடியினர் நலன் எனப் பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்களைத் தேடித் தேடி வாசிப்பவர். பொதுவுடமைச் சிந்தனையாளர். புத்தக வாசிப்பு சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையைத் தொடர்ந்து வெளிப்படுத்துபவர். நோபல் பரிசு பெற்ற பியர்ல் பக் எழுதிய ‘குட் எர்த்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருப்பவர் என்பதோடு ‘இடது’ பத்திரிகையையும் நடத்திவருகிறார். ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி அவரிடம் பேசியதிலிருந்து...
வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த கல்வி நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?
வாசிப்பு உணர்வை ஏற்படுத்த கல்வி நிறுவனங்கள் ஒரு வாகனம் மட்டுமே. அவை ஏற்கெனவே போடப்பட்ட சாலையில் வழிநடத்தும். போகாத தடங்களில் நடப்பதற்குக் கற்றுத்தருவது புத்தகங்கள்தான். வாசிக்கத் தொடங்குவது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம். அது எட்டுத்திக்கும் உங்களை இட்டுச்செல்லும். முதலில் ஆசிரியர்களிடம் வாசிப்புப் பழக்கம் பெருக வேண்டும். மாணவர்களோ ஆசிரியர்களைப் பின்பற்றுபவர்கள். ஆசிரியர்கள் வாசிப்பை வளர்த்துக்கொள்ளும்போது தானாக மாணவர்கள் செழித்து வளர்வார்கள். கல்வித் தகுதியைத் தாண்டி ஆசிரியர்கள் பயணிக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும். வாசிப்பு நல்ல சமூகத்தை உருவாக்கும் என்பதில் எனக்கு அபரிமிதமான நம்பிக்கை உள்ளது.
புத்தக வாசிப்பு எப்படியாக இருக்க வேண்டும்?
புத்தகம் வாசிப்பது எவ்வளவு முக்கியமானதோ அதைவிட முக்கியமானது வாசித்ததை நமக்குள் செலுத்துவது. இந்த உணர்வை பள்ளிகளும், கல்லூரிகளும் ஊட்ட வேண்டும். புத்தகங்களை ஒரு கௌரவத்துக்கான அடையாளமாக நாம் வைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நான் இந்த புத்தகத்துக்கு எவ்வளவு உண்மையாக இருக்கப்போகிறேன் என்று தோன்ற வேண்டும். இந்த வாசிப்பு உணர்வை உருவாக்குவதுதான் நூலகங்கள், புத்தகக்காட்சிகளின் வேலை. புத்தகக்காட்சிகள் பொழுதுபோக்கு அல்ல. புத்தகங்கள் பொழுதுபோக்காக இருக்கும்வரை சமூக மாற்றங்கள் உண்டாகாது. புத்தகங்கள் சமூக மாற்றத்துக்கான கருவிகள்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் புத்தக விற்பனை பாதிக்கப்படும் என்று நினைக்கிறீர்களா?
புதிதாக வரும் எந்த தொழில்நுட்ப வளர்ச்சியையும் நாம் மறுக்க முடியாது. தொழில்நுட்பங்களை வாசிப்பை மேம்படுத்துவதற்கானதாக மாற்ற வேண்டும். அதை எதிரிபோல பாவிக்கத் தேவையில்லை. தேடிக் கிடைக்காத அரிதான புத்தகங்கள் கிண்டிலில் ஒரு தட்டு தட்டினால் கிடைக்கின்றன. அதை நான் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்?
நீங்கள் வாசித்த புத்தகங்களில் உங்களை மாற்றிய புத்தகமாக எதைச் சொல்வீர்கள்?
நான் வாசித்த பல புத்தகங்கள் என்னைப் பாதித்திருக்கின்றன. சமீபத்தில் ‘ஸ்பீக்கிங் டு எலிபண்ட்ஸ்’ என்ற காடர்களின் கதைப் புத்தகம் வாசித்து முடித்தேன். இயற்கையை எப்படி நேசித்தார்கள் என்பதை மிகவும் அழகாகச் சொல்கிறது. இயற்கை எவ்வளவு முக்கியம், இயற்கையோடு இணைந்து வாழ்வது எப்படி எனப் படிப்பறிவில்லாத காடர் இனத்தைச் சேர்ந்தவர் அந்தப் புத்தகத்தில் சொல்கிறார். அவர் வாழ்க்கையை, இயற்கையை ஆத்மார்த்தமாக வாசிக்கிறார். அந்த வாசிப்புக்கு உண்மையாக இருக்கிறார். வாசிப்பு என்பது புத்தக வாசிப்பு மட்டும் இல்லையே?
ஈரோடு புத்தகத் திருவிழா குறித்து?
ஈரோடு புத்தகக்காட்சி என்பது ஒரு சமூக அர்ப்பணிப்பு. தமிழக அளவில் இந்தப் புத்தகக்காட்சி ஒரு பெரிய வாசிப்பு இயக்கத்தை உருவாக்கியுள்ளது. சமூக அக்கறை உள்ளவர்கள் இதனை நடத்துகிறார்கள். ஈரோட்டின் ஒன்றுபட்ட வாசிப்பு இயக்கம் இது. இதுபோன்ற இயக்கங்கள் ஒவ்வொரு ஊரிலும் உருவாக வேண்டும். இளைய தலைமுறையை வாசிக்க வைப்பதற்கான ஒரு அற்புதமான வழிகாட்டியாய் ஈரோடு புத்தகத் திருவிழா விளங்குகிறது. பெரிய விதைப்பு. அற்புதமான பணி இது.
தொடர்புக்கு: govindaraj.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
2 months ago