தி.ஜானகிராமனின் படைப்புகள் பெரும்பான்மை வாசகர்களின் வசீகரிப்புக்கும் அதேசமயம், தீவிர இலக்கிய வாசகர்களின் ஈர்ப்புக்கும் இடமளித்தவை. நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஜானகிராமனுக்கும் ஜெயகாந்தனுக்கும் மட்டுமே இது சாத்தியமாகியிருக்கிறது. ஜெயகாந்தன் தன் காலத்துக்குரிய கருத்துரீதியான கதையாடல்கள் மூலம் இதை சாத்தியப்படுத்தினார். ஜானகிராமன் என்றென்றைக்குமான உணர்வுகளின் நெகிழ்ச்சியான கதையாடல்கள் மூலம் இத்தன்மையை வசப்படுத்தினார்.
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீன ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளில் தத்துவார்த்த ஒளி கூடிய புதிய வெளிச்சம் சுடர்விட்டது. அன்பு, காதல், ஆன்மா, வாழ்வின் அர்த்தம் என்றாக அமைந்த நவீன செவ்வியல் படைப்புகளை ஸ்வீடனின் ஸெல்மா லாகர்லாவ், பேர் லாகர்குவிஸ்ட், நார்வேயின் நட் ஹாம்சன் போன்ற படைப்பாளுமைகள் உருவாக்கினர். தமிழின் மொழிபெயர்ப்புத் தேர்விலும் இவர்களின் படைப்புகள் பிரதானமாக அமைந்தன. நம் கீழைத்தேயப் படைப்பு மனங்களுக்கு இந்தப் படைப்புகள் ஆதர்சமாக அமைந்ததில் வியப்பேதுமில்லை. இதேபோன்று, நவீனத் தமிழ் இலக்கியப் போக்கில் தஞ்சை எழுத்தாளர்களான மெளனி, கு.ப.ரா., எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன் ஆகியோர் நவீனத்துவ மையப் போக்கிலிருந்து விலகி புத்தெழுச்சிமிக்க படைப்பியக்கத்தை வடிவமைத்தனர். இத்தகைய ஒளியில் சுடர்வதுதான் தி.ஜானகிராமனின் படைப்புலகம். நவீனத்துவக் கலை ஆளுமைமிக்கப் படைப்பாளிகள் என் மூளைக்கு அணுக்கமாக இருந்த அதேசமயம், என் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தவர், செவ்வியல் மறுமலர்ச்சிப் படைப்பாளியான தி.ஜானகிராமன்.
தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த நுட்பங்கள் கூடிய மகத்தான படைப்பு சக்தி தி.ஜானகிராமன். மிகச் சிறந்த நாவலாசிரியராக அவர் பெற்ற அடையாள முத்திரை, அவரின் சிறுகதை வளங்கள் உரிய கவனம் பெறுவதற்குக் குந்தகமாக அமைந்துவிட்டது. அவருடைய ஆரம்ப காலச் சிறுகதைகள் மகத்தானவை. அவை ‘கொட்டுமேளம்’, ‘சிவப்பு ரிக்ஷா’ என்ற இரு தொகுப்புகளாக வெளிவந்தன. முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கொட்டுமேளம்’ 1954-லிலும், இரண்டாவது தொகுப்பான ‘சிவப்பு ரிக்ஷா’ 1956-லிலும் வெளியாகின. ஆனால், அவை பல ஆண்டுகள் பதிப்புரிமை பிரச்சினையால் மறுபதிப்பு காணவில்லை. பிரச்சினை என்னவென்றால், எம்.வி.வெங்கட்ராம் உடல்நலம் குன்றியிருந்தபோது அவருக்கு ஏதும் பணத் தேவை இருந்தால் உதவும்படியும் அதைத் தான் தந்துவிடுவதாகவும் புதுடெல்லியில் பணியிலிருந்த தி.ஜானகிராமன் தஞ்சை ப்ரகாஷுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். ப்ரகாஷும் அப்படியே செய்திருக்கிறார். ப்ரகாஷ் கொடுத்தது கணிசமான தொகை. ஜானகிராமன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஜானகிராமன் அந்தத் தொகைக்கு ஈடாக, ‘கொட்டுமேளம்’, ‘சிவப்பு ரிக்ஷா’ நூல்களின் வெளியீட்டு உரிமையை வைத்துக்கொள்ளும்படி ப்ரகாஷிடம் தெரிவித்திருக்கிறார். ப்ரகாஷ் பதிப்பகம் தொடங்கும் கனவோடு ஒருமுறை தி.ஜா.விடம் படைப்புகள் கேட்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் தி.ஜா. இந்த ஏற்பாட்டை முன்வைத்திருக்கிறார். ப்ரகாஷுக்கும் இதில் மகிழ்ச்சிதான். இதன் காரணமாக, ஜானகிராமனின் நூல்கள் எல்லாவற்றையும் வெளியிட்டுக்கொண்டிருந்த மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தாரால் இவற்றை வெளியிட முடியவில்லை. இரண்டும் முடங்கிப்போயின. அதன் உரிமையைத் தர தஞ்சை ப்ரகாஷ் கேட்ட தொகையில் அவர்களுக்கு சம்மதமில்லை. இது தஞ்சை ப்ரகாஷ் மூலம் நான் அறிந்திருந்த விசயம்.
1980-ல் பல்கலைக்கழக ஆய்வு நெறிமுறைகளோடு உடன்பட மனம் முரண்டியதால் அதிலிருந்து துண்டித்துக்கொண்ட நிலையில், சிறிய அளவில் பதிப்பகம் தொடங்க முடிவெடுத்தேன். அதன் முதல் வெளியீடுகளாக ‘கொட்டுமேளம்’, ‘சிவப்பு ரிக்ஷா’ இரண்டையும் கொண்டுவர விரும்பி தஞ்சை ப்ரகாஷிடம் பேசினேன். அவர் மிகவும் மகிழ்ந்து, உரிமையை எனக்குக் கைமாற்ற புத்தகத்துக்கு ஆயிரம் வீதம் இரண்டாயிரம் கேட்டார். நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன். அடுத்த சில நாட்களில் தஞ்சாவூர் சென்று ப்ரகாஷிடம் பணத்தைக் கொடுத்தேன். அவர் வாழ்த்தி உரிமையை எனக்களித்தார். அந்த நாள் அருமையான சாப்பாடும் உரையாடலுமாக அமைந்தது. இரவு மதுரைக்கு பஸ் ஏற்றிவிட்டார். பதிப்புக் கனவோடு நான் மிதந்திருந்தேன்.
மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்து ஜானகிராமனிடமிருந்து கடிதம் வந்தது. பரவசம் ஆட்கொண்டது. என் பதிப்பகக் கனவுக்கு உள்ளார்ந்த உத்வேகமாக இருந்தது ‘க்ரியா’தான். என் முடிவை ‘க்ரியா’ ராமகிருஷ்ணனுக்குக் கடிதம் மூலம் தெரிவித்தேன். அவர் மிகுந்த சந்தோசத்துடன் உற்சாகப்படுத்தினார். இரு புத்தகங்களின் உருவாக்கத்திலும் துணையாக இருந்தார். அன்று அச்சுக்கான தாள் உற்பத்தியில் சிறு முடக்கம் இருந்ததன் காரணமாக, இந்திய அரசாங்கம் பிரேசில் நாட்டிலிருந்து தாள் இறக்குமதி செய்திருந்தது. இந்தியத் தாளின் சந்தை விலைக்கே அது கிடைத்தது. அருமையான தாள். பணத்தோடு வந்தால் இரு புத்தகங்களுக்கும் தேவையான தாளை மொத்தமாக வாங்கிவிடலாம் என்று ராமிடமிருந்து தகவல் வந்தது. சென்றேன். பேப்பர் வாங்கிக் கொடுத்தார். அட்டை வடிவமைப்புக்கான ஓவியங்களையும் தேர்ந்தெடுத்து அவற்றின் அச்சாக்கப் பொறுப்பையும் ஏற்றார். வெகு அழகாக வடிவமைத்து அச்சாக்கி அனுப்பிவைத்தார். ஈழ எழுத்தாளர் சிவபாதசுந்தரம், நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் நடத்திய ‘சுபா ஸ்கிரீன்’ அச்சகத்தில் அவை மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தன. அதேசமயம், புத்தகப் பிரதிகளின் உள்பக்க அச்சாக்கத்தை மதுரையில் இரு வேறு அச்சகங்களில் ஆசை ஆசையாக உருவாக்கினேன்.
1980 மத்தியில் இவ்விரு புத்தகங்களும் அடுத்தடுத்து வெளியாகின. புத்தகங்கள் வெளிவந்தபோது மனம் களித்தது. புத்தகங்களின் பிரதிகள் கிடைத்ததும் ஜானகிராமன் எழுதிய கடிதம், ஏதோ ஓர் லட்சியத்தைக் கண்டடைந்துவிட்டதான எக்களிப்பைத் தந்தது. மிக அழகான தயாரிப்பில் வெளிவந்திருப்பதாகப் பரவசமான வார்த்தைகளில் தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தார். மேலும், மிகவும் குறைவான விலை வைத்திருப்பதாக வருத்தப்பட்டிருந்தார். (‘கொட்டுமேளம்’ ரூ.10; ‘சிவப்பு ரிக்ஷா’ ரூ.12; இரண்டுமே 200 பக்கங்களுக்கு மேற்பட்டவை.) வியாபாரத்திலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என மிகுந்த வாஞ்சையுடன், என் கண்களில் நீர் கோக்குமளவு எழுதியிருந்தார்.
எனினும், சந்தர்ப்பம் வாய்க்கும்போது அவரே ஒருநாள் என்னை வந்து பார்ப்பார் என்று நான் நினைத்துப்பார்த்திருக்கவில்லை. வாழ்வு எனக்களித்த பரிசாக அந்த நாள் வந்தது.
- சி.மோகன், எழுத்தாளர்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago