பொலிவியாவின் ஜனாதிபதி ரெனே பாரியண்டோஸின் ஹெலிகாப்டர் ரியோ கிராண்ட் ஆற்றின் கரையோரத்தில் இருந்து வாலே கிராண்ட் விமான நிலையம் செல்ல மேலெழும்பியது. இளமையும் பேரழகும் இசையும் நடனமும் இலக்கியமும் ஓவியமும் அரசியல் அறிவும் அசாத்திய துணிவும் நிரம்பிய, தானியா என்கிற ஹெய்தீ தமரா பங்க்கேவின் உடல், ஒரு வாரத்துக்கு மேலாக ஆற்று நீரில் ஊதிப் பெருத்து சிதைந்திருந்த நிலையில் ஹெலிகாப்டரோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. 30 வயதுகூட நிரம்பாத சிறு பெண், பொலிவிய அரசாங்கத்தையே ஏமாற்றிவிட்டாளே என்ற வஞ்சனையும், சே குவேராவை வீழ்த்துவதற்கான நேரம் நெருங்கிவிட்டது என்ற கொண்டாட்டமும் பாரியண்டோஸின் நடவடிக்கையில் இருந்தது.
எவ்வளவு அழகான மரணம்!
நெப்போலியன் போர்க்களத்தில் விழுந்துகிடந்த தன் தளபதி ஆன்ட்ரேயின் அசைவற்ற உடலைப் பார்க்கிறார். உயிர் மட்டுமே மிஞ்சியிருந்த உடலைப் பார்த்து “எவ்வளவு அழகான மரணம்” என்று வியக்கிறார். ஹெலிகாப்டரின்கீழ் கட்டப்பட்ட தானியாவின் மரணமும் அழகானதே.
1935-ம் ஆண்டு ஜெர்மனியில் நாஜிக்களின் கொடுமை தாங்கமுடியாமல் நாட்டைவிட்டு வெளியேறி அர்ஜெண் டினாவில் குடியேறிய எரிக் - நாடியா தம்பதியினருக்குப் பிறந்தவர்தான் தமரா. தந்தை கம்யூனிஸ்ட். தாய் ருஷ்ய யூதர். அர்ஜெண்டினாவில் பிறந்ததால் பிறப்பால் தன்னை அர்ஜெண்டினராகவே எண்ணியவர். பிறந்ததில் இருந்து புரட்சி, போராட்டம், தலைமறைவு வாழ்க்கை என்றிருந்த வீட்டின் சூழலால் புரட்சியில் ஈடுபட வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தவர். லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலைக்கானப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பதே அவர் லட்சியம்.
நல்ல மொழிபெயர்ப்பாளர்
தானியா ஹம்போல்டிட் பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்தவர். ஜெர்மனியின் பல்வேறு அரசியல், பண்பாட்டு நிறுவனங்களில் பணியாற்றியவர். ஜெர்மனி வரும் லத்தீன் அமெரிக்கத் தலைவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். சே தலைமையிலான வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவுக்கும் மொழிபெயர்ப்பாளராக இருந்த தமரா, பின்னாட்களில் சேவின் தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளராகவே மாறினார். கருத்தியல் தளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பல குழுக்களிலும் இணைந்து பணியாற்றிய தமரா, தன் வயதினை மீறிய வேகத்துடனும் அனுபவத்துடனும் இருந்தார்.
ஹவானா பர்கலைக்கழகத்தில் இதழியல் படிக்க கியூபா வந்தவுடன் நேரடியாக புரட்சியில் ஈடுபட வேண்டும் என்ற தீவிரம் வந்தது. பொலிவியாவுக்கு உளவாளியாகச் செல்ல சே குவேராவால் தேர்வு செய்யப்பட்ட கணம், தன் வாழ்நாளிலேயே கிளர்ச்சியான தருணம் என்கிறார்.
பொலிவியாவின் அரசு, ராணுவ வட்டாரங்களோடும், உயரதிகாரிகளோடும் பழகி தகவல்களை கியூபாவுக்கு அனுப்ப வேண்டிய ஆபத்தும் துணிவும் நிரம்பிய பணி தமராவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொலிவியா செல்லும்முன் தமராவுக்கு மூன்று பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. செய்முறையும், கருத்தியலும் இணைந்த அப்பயிற்சியில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல், பொருளாதார, ராணுவச் சூழல்கள் குறித்து வகுப்புகள் எடுக்கப்பட்டன. ரேடியோ சிக்னல் களைப் புரிந்து கொள்ளுதல், சுருக்கமான குறியீடு களில் செய்திகளை அனுப்புதல், எதிரி முகாமில் கொஞ்சமும் சந்தேகம் வராதபடி நடந்துகொள்ளுதல், புதிய இடங்களில் அறிமுகமாகி ஒன்றுதல் என்று இரவு பகல் பாராத ஓராண்டுகாலப் பயிற்சிகள். கெரில்லா யுத்தத்துக்குத் தேவையான ஆயுதப் பயிற்சிகளுக்கும் பிறகு பொலிவியா வுக்கு அனுப்பப்பட் டார். தமரா பங்கே என்ற பெண், தானியா என்ற கெரில்லா போராளியானார்.
மானுட ஆராய்ச்சியாளராக...
புதிய பெயர், புதிய அடையாளங்களுடன் போலி பாஸ்போர்ட்டில் மானுட ஆராய்ச்சியாளராக பொலிவியாவுக்குச் சென்ற தானியா, அங்கு பத்திரிகையிலும், கல்வி அமைச்சகத்திலும் வேலை செய்தார். பொலிவியாவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த ஜெர்மானியர்களிடம் மேலோங்கியிருந்த இனவாதம், ஜெர்மானியரான தானியாவுக்கு எல்லா ரகசிய கோட்டையையும் திறக்கும் சாவியைக் கொடுத்தது. வெகு சீக்கிரத்திலேயே ஜனாதிபதி பாரியண்டோஸ் கலந்துகொள்ளும் கூட்டங்களில் பங்கேற்கும் அளவுக்கு தானியா முக்கியமான நபராகிவிட்டார். பொலிவியாவின் குடியுரிமைப் பெற்றால் அரசாங்கத்தின் சந்தேகப் பார்வையில் இருந்து முழுமையாக விலகியிருக்க முடியும் என்பதால், பொலிவியாவின் மாணவர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார்.
பொலிவியாவின் அரசு வட்டாரச் செய்திகளை கியூபப் போராளிகளிடம் தெரிவிப்பதற்காகவே அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட தானியா, சே குவேராவும் அவருடன் சேர்ந்த 13 கியூப கெரில்லா போராளிகளும் போலி பாஸ்போர்ட்டில் பொலிவியா வர ஏற்பாடு செய்து கொடுத்தார்.
எல்லாம் சரியாகப் போவதுபோல் நம்பிக்கைத் தந்து கொண்டிருந்த புரட்சி நடவடிக்கைகள், உண்மையில் அவ்வாறு இருக்கவில்லை.‘‘கெரில்லாக்களுடன் சேர்ந்து போராட விரும்பவில்லை. புரட்சிக்கான சூழல் இல்லை” என பொலிவிய மத்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது பெரும் துயரம். கெரில்லாக்களைப் பாதுகாக்கும் மக்கள் இருக்கும் பகுதியையும், கெரில்லாக்களைப் பாதுகாக்கும் நில அமைப்புக் கொண்ட பகுதியையும் போராளிக் குழுக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. புரட்சியின் தொட்டிலாக பொலிவியா இருக்கும் என்று கணக்கிட்ட போராளிகளின் மதிப்பீட்டுக்கு மாறாக, சே உள்ளிட்ட மானுட விடுதலையைக் கனவு கண்ட புரட்சியாளர்களைக் காவு வாங்கிய நிலமானது.
‘‘தங்களிடம் இருந்து நேரடியாக உளவாளிகள் மூலம் தகவல் வரும் வரை தன்னை வெளிப்படுத்திக்கொள்ளக் கூடாது” என்ற சேவின் உத்தரவை ஆர்வமிகுதியால் மறந்தார் தானியா. கெரில்லா குழு பொலிவியா வந்தடைந்தது என்று தெரிந்தவுடன் சே-வை சந்திக்கச் சென்றார். நேரடியாகப் புரட்சியில் ஈடுபட வேண்டும் என்ற தானியாவின் கனவு, அவரை கெரில்லா குழுக்களிடம் இழுத்துச் சென்றது. பொலிவிய புலனாய்வுத் துறை, தானியாவைப் பற்றி சந்தேகம் வந்த பிறகும், அவர் ஜனாதிபதி உள்ளிட்டவர்களுடன் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து அவரை சந்தேகிக்கக்கூட அஞ்சியது. போராளிக் குழுக்களுடன் தானியா இருக்கும் புகைப்படங்கள் வெளியான பிறகு, கியூபாவின் ஒற்றர்தான் தானியா என்பதை உறுதி செய்தார்கள் புலனாய்வு அதிகாரிகள்.
கடலை நீந்திய வீரர்கள்
1967, ஆகஸ்ட் 31-ம் தேதி அந்தி நேரத்தில் சே-வின் பின்னணிப் பாதுகாவற்படையின் வீரர்கள் தளபதி ஜோக்குயின் தலைமையில், மார்பளவு நீரில் கையில் உயர்த்திப் பிடித்த துப்பாக்கியுடன் ரியோ கிராண்ட் நதியினை நீந்திக் கடந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ் வொரு அடியும் மரணத்தின் பாதையிலேயே சென்று கொண்டிருந்தது. நீந்திக் கடக்கக்கூடிய பாதுகாப்பான இடத்தைப் போராளிகளுக்கு அடையாளம் காட்டிய விவசாயியே, ராணுவத்திடமும் காட்டிக் கொடுத்தான். காத்திருந்த ராணுவம் போராளிகளைச் சுட்டு வீழ்த்தி யது. ஆற்று வெள்ளத்தில் உடல்கள் ஆங்காங்கு கரையொதுங்கின.
அசாதகமான சூழல்கள் சேவை நெருங்கியிருந்தாலும் தானியா தன் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், முடங்கிப் போயிருந்த போராளிக் குழுக்களுக்கு நிச்சயம் உதவி இருக்க முடியும். புரட்சி வெற்றி பெறவில்லையென்றாலும், போராளிகள் உயிருடன் பொலிவியாவை விட்டு வெளியேற தானியா உதவியிருப்பார். சே குவேரா மீண்டெழுந்து லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலைக்கானப் போராட்டங்களை நடத்தியிருப்பார். விதியை மரணம் இயக்குகிறதோ, மரணத்தை விதி இயக்குகிறதோ, காலத்தின் ரகசியம் நம் கண்களுக்குப் புலப்படுவதே இல்லை.
தனக்குப் பயிற்சியாளராக இருந்த யுலிசஸ் எஸ்ட்ராவினைக் காதலித்தார் தானியா. ‘‘நான் நாடு திரும்பி வந்து என்னுடைய அன்புக்குரிய கருப்பரைத் திருமணம் செய்துகொள்ளும் வரை அவரை என்னிடம் இருந்து பறித்துக்கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என தன் அம்மாவுக்கு பொலிவியாவில் இருந்து கடிதம் எழுதினார்.
தானியாவின் கனவுகள், கனவுகளாகவே கலைந்து போயின. விதவிதமான பொம்மைகளுக்குத் தாயாகத் தன்னைக் கருதி பொம்மைகளை அணைத்து, அன்பு செலுத்தி, தூங்கச் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்த சின்னஞ்சிறு பெண்ணான தானியா, மானுட விடுதலைக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த புரட்சி தேவதையானார்.
(ஆகஸ்ட் 31, தானியாவுடன் 10 கெரில்லா போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நாள்)
- வருவார்கள்...
எண்ணங்களைப் பகிர: vandhainila@gmail.com25
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago