மரணம் ஒரு கலை 24: ஆயுதம் தாங்கிய அன்பின் பேருரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

By அ.வெண்ணிலா

இந்திய சுதந்திர தேவியின் சிலையை எத்தனையோ சிற்பிகள் வடித்தனர். அந்தச் சிலையின் கண்களைத் திறந்தவர் நேதாஜி.

இந்தியா எப்படி விடுதலைப் பெறவேண்டும் என்ற தீர்க் கமானப் பார்வையுடன் தன் ஐசிஎஸ் பதவியைத் துறந்து, விடுதலைப் போராட்டத்துக்குள் குதித்தார். “வாள் கொண்டு போரிடுபவனுக்கு வாள் மூலம்தான் பதிலளிக்க வேண்டும், ரத்தம் கொடுங்கள், சுதந்திரம் தருகிறேன்” என்ற முழக்கத்துடன் ஆயுதப் புரட்சியைத் தேர்ந்தெடுத்தார்.

அரண்மனைப் போன்ற வீடும், வீடு நிறைய வேலையாட் களும் பாரம்பரிய செல்வாக்கும் நிரம்பிய காங்கிரஸ் வழக்கறிஞர் ஜானகிநாத் - பிரபாவதி தம்பதியின் 14 குழந்தை களில் 9-வது குழந்தையாகப் பிறந்தவர் நேதாஜி. இந்திய விடுதலைப் போராட்டத்தின் எரியும் தீப்பிழம்பாக வங்கம் இருந்த நேரம். அறிவும் வேகமும் நிரம்பிய நேதாஜிக்கோ ஆன்மிகத்தில் ஈடுபாடு வந்தது. விவேகானந் தர், அரவிந்தர்மேல் உண்டான ஈர்ப்பினால் 18 வயதில் துறவி யாக வீட்டைவிட்டு வெளியேறினார். ஆன்மிக குருவைத் தேடியலைவதைவிட, நாட்டின் அடிமைத்தளையை விடுவிப்பதே சிறந்த ஆன்மிகம் என்ற புரிதலைத் தந்த தேசத்தின் சூழல், நேதாஜியைப் போராளியாக்கியது.

தந்திரங்களும் சாதுர்யமும் சுரண்டல்போக்கும் கொண்ட ஆங்கில ஏகாதிபத்தியத்தை வெளியேற்ற காங்கிரசும் காந்தியும் முன்னெடுத்தப் போராட்டங்கள் போதாது என்று நினைத்தார் நேதாஜி. காற்று சுமந்து செல்லும் தீயின் வேகத்தில் இருந்த நேதாஜி, தன் வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய சித்தரஞ்சன் தாஸை அரசியல் குருவாக ஏற்றார். சித்தரஞ்சன் தாஸ் கொல்கத்தா மாநகராட்சியின் தலைவராக இருந்தபோது, 27 வயதில் நேதாஜி கொல்கத்தா மாநகராட்சியின் கமிஷனரானார்.

நேதாஜியின் தீர்க்கமான செயல்பாடுகளும் செல்வாக்கும் அதிகரித்ததால் அச்சமுற்ற ஆங்கிலேயர் நேதாஜியை 12 முறை சிறையில் அடைத்தனர். பர்மாவின் மாண்டேலா சிறையில் இருந்துகொண்டே கொல்கத்தாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுமளவுக்கு மக்களிடம் நேதாஜியின் செல்வாக்கு அதிகரித்தது.

காந்தியின் எதிர்ப்பை மீறி 2 முறை காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியை ‘தேசத் தந்தை’ என முதன்முதலில் அழைத்து அன்பு செய்த நேதாஜியினால் காங்கிரசுக்குள் காந்தியின் ஒத்துழைப்பைப் பெற முடியவில்லை. பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய 3 போராளிகளும் தூக்கிலிடப்பட்ட பிறகு, நவ ஜவான் அமைப்பின் தலைவரானார். சித்தரஞ்சன் தாஸுடன் சேர்ந்து சுயராஜ்ஜிய கட்சி, காங்கிரஸ் ஜனநாயகக் கட்சி, தமிழகத்தின் முத்துராமலிங்கத் தேவர், சீனிவாச ஐயங்கார் போன்றவர்களுடன் ஃபார்வார்ட் பிளாக் என விடுதலைப் போராட்டங்களை வேகப்படுத்தப் பல அமைப்புகளை ஏற்படுத்தினார். சிறை வாழ்க்கை அவரின் உடலைப் பலவீனப்படுத்தி காச நோயைத் தந்தது. ஆனாலும் வீடு தீப்பற்றி எரியும்போது அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் குற்றவுணர்ச்சி நேதாஜியை விரட்டியது.

25 லட்சம் வீரர்கள் கொண்ட இந்திய ராணுவத்தில் 20 ஆயிரம் ஆங்கில அதிகாரிகளே உள்ளனர். 50 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்கள் கொண்ட சுதந்திரப் படை இந்தியாவின்மீது படையெடுத்துச் சென்றால், இந்திய ராணுவத்தில் உள்ள வீரர்களுடன் சேர்ந்து ஆங்கில ராணுவத்தை வீழ்த்த முடியும் என்ற முடிவுடன் இந்தியாவைவிட்டு வெளியேற முடிவு செய்தார் நேதாஜி.

இஸ்லாமிய மௌல்வியைப் போல்...

அப்போது நேதாஜி கொல்கத்தாவில் வீட்டுக் காவலில் இருந்தார். தாடியும் மீசையும் வளர்த்துக்கொண்டு இஸ்லாமிய மௌல்வியைப் போல் கொல்கத்தாவைவிட்டு வெளியேறினார். கார், ரயில், விமானம் மூலம் டன்பத், டெல்லி, காபூல், தாஷ்கன்ட், ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்றார். சர்வாதிகாரியான ஹிட்லரைப் பார்த்து ஐரோப்பாவே அச்சத்தில் உறைந்திருந்த நேரத்தில் நேதாஜி, ஹிட்லரிடம் இந்தியாவின் விடுதலைக்கான ராணுவ உதவியைக் கோரினார். இந்தியாவுக்கு அருகில் உள்ள ஜப்பானே அதிகம் உதவ இயலும் என ஜெர்மானிய அரசு நேதாஜியை ஜப்பானுக்கு அனுப்பியது. 3 மாத காலம் நீர் மூழ்கிக் கப்பலிலேயே பயணித்து ஜப்பான் வந்து சேர்ந்த நேதாஜியின் பயணங்கள் சே குவேராவின் பயணங்களைப் போல் சாகசம் நிரம்பியவை.

ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த சிங்கப்பூரையும் பர்மாவையும் கைப்பற்றிய ஜப்பான், 2 நாடுகளையும் நேதாஜியிடம் ஒப்படைத்தது. சிங்கப்பூரில் அமைந்த முதல் சுதந்திர இந்திய அரசுக்கு நேதாஜி பிரதமரானார். தனி ராணுவம், ஆஸாத் வங்கி, செய்திகளைப் பரப்ப பெர்லினில் இருந்தும் டோக்கியோவில் இருந்தும் இயங்கிய வானொலி நிலையங்கள் என நேதாஜி இந்தியாவின் விடுதலையை வேகப்படுத்த ஆயத்தமானார்.

ராணுவப் பிரிவின் கேப்டன்

அந்நிய தேசத்தில் சொந்த தேசத்தின் விடுதலைக்கான கனவுகளுடன் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். ஜான்சிராணி பெயரில் இருந்த பெண்களின் ராணுவப் பிரிவின் கேப்டனாக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி சுவாமிநாதன். 1944, மார்ச் 18-ம் நாள் ஆங்கிலேயரை விரட்ட ‘டெல்லி சலோ’, ‘ஜெய் ஹிந்த்’ போன்ற உணர்ச்சிமிக்க முழக்கங்களுடன் நேதாஜியின் ராணுவம் இந்திய மண்ணில் கால் பதித்தது.

தாய் மண்ணின்மீது போர்த் தொடுக்கும் பதற்றமும், தாய் மண்ணை விடுவிக்கவே இந்தப் போர் என்ற தெளிவும் நிரம்பிய படை 18 மாதங்கள் மணிப்பூரின் பல இடங்களைக் கைப்பற்றியபடி முன்னேறியது.

இரண்டாம் உலகப் போரின் திடீர் திருப்பமாக அமெரிக்கா, ஆங்கிலேயருக்கு ஆதரவாகப் போரில் குதித்த வுடன் காட்சிகள் மாறின. ஜப்பான்மீது அமெரிக்கா அணு குண்டு தாக்குதலை நடத்தி, பின்வாசல் போரைத் தொடங்கி யது. பேரழிவைச் சந்தித்த ஜப்பான் 1945, ஆகஸ்ட் 15-ம் தேதி சரணடைந்தது. இந்திய தேசிய ராணுவத்தின் நிலை என்ன என்று எல்லோரும் திகைத்தபோது,‘‘டெல்லி செல்ல எத்தனையோ வழிகள் இருக்கின்றன’’ என்றார் நம்பிக்கையுடன் நேதாஜி.

ஐரோப்பிய நாடுகளின் தலைவிதியைத் தன் கைக்குள் வைத்திருக்கும் ஒரே மனிதர் ஸ்டாலின் மட்டுமே என்றெண்ணிய நேதாஜி, ரஷ்யாவின் ஒத்துழைப்பைப் பெறுவதற்குப் புறப்பட்டார்.

பாங்காங்கில் கிளம்பிய விமானம் சைகோன் வழி யாக தைவானை அடைகிறது. தைவானில் விமானம் மாறுகிறார்கள். அங்கிருந்து கிளம்பிய போர் விமானத்தில் இருவருக்கு மட்டுமே இடம் இருக்கிறது. நேதாஜியும் அவரின் கர்னல் ஹபிபூர் ரஹ்மானும் மட்டும் செல்கிறார்கள். சுற்றிலும் மலை. கூடுதல் சுமையுடன் மஞ்சூரியா செல்ல மேலேறிய விமானம், நூறடி உயரத்துக்குள்ளேயே தீப்பிடித்து கீழே விழுந்து சிதறுகிறது.

தொட்டுவிடும் தூரத்தில்...

வரலாற்றின் போக்கு திசை மாறப்போகும் நேரத்தில் தலைவர்களின் வாழ்வில் குறுக்கிடும் மரணம் எவ்வளவு இரக்கமற்றது?

தொட்டுவிடும் தூரத்தில் வந்துவிட்ட சுதந்திரத்தை எட்டிப் பிடிக்க நினைத்த நேரத்தில் மரணமும் நம் விடுதலைப் போராட்டத்தின் எதிரியாகி நம்மை வீழ்த்த நினைத்தது. ஐரோப்பிய கண்டத்திலும், தென் கிழக்காசியாவிலும் ஆட்சியில் இருந்தவர்கள் வியந்து பார்த்த ஆளுமைமிக்க தலைவரான நேதாஜி, தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடினார். ஆறடி உயரமும், கவர்ச்சிகரமான வட்ட முகமும், எந்தக் கூட்டத்திலும் தனித்துத் தெரியும் வசீகரமும் நிரம்பிய நேதாஜியை தீ ருசித்துப் பார்த்திருந்தது.

பார்வை குறைபாட்டைக் காரணம் காட்டி வங்கத்தின் 49-வது ரெஜிமென்ட்டில் படைவீரனாகக் கூட சேர்த்துக்கொள்ளப்படாமல் வெளியேற்றப்பட்டவர்தான், ஒரு ராணுவத்தையே கட்டமைத்து அதன் ஜெனரல் ஆனார். அவரின் காக்கி நிற ராணுவ உடையும், முட்டி வரை நீண்ட பூட்ஸும், ராணுவத்தின் பெருமையானது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த எமிலி செனகலுடன் நடந்த திருமண வாழ்வில் அரிதாகவே சேர்ந்து வாழ்ந்தவர், மரணப்படுக்கையில் கிடந்தார்.

நேதாஜியின் தோள்ப் பையில் என்ன இருக்கிறது என்பதை அறிவதில் உடன் இருப்பவர்கள் ஆர்வமாவார்கள். இம் முறை அவரின் தோள்ப் பையில் மரணமே மறைந்திருந்தது. மரணப் படுக்கையில் அருகில் இருந்த கர்னல் ஹபீபிடம், “நான் இறந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். எனது கடைசி மூச்சுவரை போராடியிருக்கிறேன். நமது தேச மக்களிடம் சொல்லுங்கள். நம் நாடு விடுதலை பெறும். பல்லாண்டு காலம் விடுதலை இந்தியா வாழ வேண்டும்” என்று சொல்லும்போதே மயக்கமானார்.

மீண்டும் கண்விழித்த நேதாஜி, “நான் தூங்கப் போகிறேன்” என்றார். ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மட்டும் தூங்கும் வழக்கம்கொண்ட நேதாஜி நிரந்தர தூக்கத்தில் ஆழ்ந்தார்.

நேதாஜியின் விமானம் விபத்துக்குள்ளானதா? விபத்தாக மாற்றப்பட்டதா? நேதாஜி விபத்தில் இறந்தாரா? தப்பிச் சென்று தலைமறைவானாரா? அவரின் இறந்த உடல் என்னவானது போன்ற கேள்விகள் அவர் மறைந்து 73 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் உயிரோடு இருக்கின்றன. நேதாஜி என்ற புரட்சிப் பறவையை எந்தக் கூண்டும் சிறை வைத்துவிட முடியாது என்ற நம்பிக்கை அவரின் மரணத்தை நம்பச் சொன்னது.

மாவீரர்கள் மரணிப்பதில்லை என்ற நம்பிக்கை அவரின் மீளெழுச்சியை எதிர்நோக்கியிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்