வின்சென்ட் வான் கா
தன் அண்ணனின் இறுதி ஊர்வலத்தில் அதிகபட்ச ஓவியர்களையும் நண்பர்களையும் பங்கெடுக்கச் செய்யவேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்தார் தியோ. மனம் வான் காவையே நினைத்துக் கொண்டிருந்தது. "தற்கொலை செய்துகொள்வதைவிட வாழ்க்கையை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது எவ்வளவு மகத்தானது" என்று எழுதிய வான் கா, தற்கொலையின்மூலமே மரணத்தைத் தேடிக்கொண்டார்.
வான் காவின் சவப்பெட்டியைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த ஓவியங்களில் வண்ணத்தின் ஈரம்கூட காயவில்லை. வான் காவுக்கு விருப்பமான சூரிய காந்திப் பூக்களால் சவப்பெட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரை அமைதிப்படுத்தும் கான்வாஸும், மடிப்பு ஸ்டூலும், திறந்திருந்த வண்ணக்குழம்புகளும் அருகில் இருப்பதை உறுதி செய்துகொண்ட தியோவுக்குக் கொஞ்சம் ஆறுதல். வான் கா இல்லாத வாழ்க்கையை நினைக்கும்போதே வேதனை இதயத்தை அறுத்தது. காய்ந்த ரத்தத்தின் கறைகள் ஆங்காங்கு இருக்க, சவப்பெட்டிக்குள் இருக்கும் வான் காவுக்கு மரணம் விடுதலைதான் என்ற ஆசுவாசமும் தியோவுக்குள் எழுந்தது.
கோதுமை வயல்களுக்கு நடுவில் காக்கையை விரட்டும் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார் என்ற செய்தி வந்தவுடன் தியோவுக்கு மூச்சடைத்தது. வான் கா விஷயத்தில் எதற்கும் தயாராக இருக்கப் பழகி இருந்தார் தியோ.
பணம் கேட்டும், ஓவியம் வரைய இங்க்ரெஸ் தாள்கள் கேட்டும், வாட்டர் கலர் வாங்கி அனுப்பச் சொல்லியும் வரும் கடிதங்களுக்கு இடையில், வா காவின் விபரீதமான நடவடிக்கைகள் பற்றிய செய்தி களும் வரும்.
வான் கா மஞ்சள் வண்ணத்துக் குள் தன்னைக் கரைத்துக்கொள்ள விரும்பினார். குறைந்த வாடகை வீடொன்றை, இனிமையான சூழலுடன் ஸ்டுடியோவாக்கினார். சூரியனின் சிறு கதிராக அந்த அறை இருக்கவேண்டும் என மஞ்சள் வண்ணமடித்திருந்தார். நண்பர்கள் மஞ்சள் வீட்டில் தங்கியிருந்து, ஓவியம் வரையவும் உரையாடவும் வேண்டும் என்பது வான் காவின் விருப்பம். அறையைத் தயார் செய்தவுடன் அவர் மிகவும் விரும்பிய ஓவியர் காகுயினை அழைத்தார். காகுயினுக்கு வான் காவின் ஓவியம் பிடிக்கவில்லை. தனது ஓவிய முறையை மட்டுமே ஏற்புடையதாகக் கொண்ட காகு யின், வான் காவிடம் கடுமையாக நடந்து கொண்டார்.
வான் காவுக்கு தாங்க முடியாத கோபம். கண்ணாடி டம்பளரைத் தூக்கி அவர்மீது வீசினார். காகுயினின் புறக்கணிப்பைத் தாங்க முடியாத வான் கா, நள்ளிரவில் ரேசரால் தன்னுடைய வலது காதை அறுத்துக்கொண்டார். அறுந்த காதை ஒரு தாளில் மடித்து எடுத்துக்கொண்டு, காகுயினுடன் செல்லும் விலைமாதின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் காதைக் கொடுத்தார். அப்பெண் கூச்சலிட்டு மயங்கினார்.
தன் வீட்டுக்குத் திரும்பி கதவைச் சாத்திக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த வான் காவை காவலர்கள் மருத்துவமனையில் சேர்த்தார்கள். மருத்துவமனையில் இருந்தபோது டாக்டர் பெலிக்ஸ் ரே, வான் காவை நன்றாகப் பார்த்துக் கொண்டார். பரிசாக டாக்டரின் உருவத்தை வரைந்து கொடுத்தார் வான் கா. ஓவியம் பிடிக்காத ரே, ஓவியத்தை கோழிக் கூண்டுக்குப் பக்கப் பலகையாகப் பயன்படுத்தினார். போர்ட்ரெயிட் ஆஃப் டாக்டர் பெலிக்ஸ் ரே என்ற அவ்வோவியம், இப்போது மாஸ்கோவின் புஷ்கின் அருங்காட்சியகத்தில் உள்ளது. மதிப்பு 50 மில்லியன் டாலர். இச்சம்பவத்துக்குப் பின் வான் காவை மனநோயாளி எனக் குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் அந்த மஞ்சள் இல்லத்தைப் பூட்டினார்கள்.
உடலும் மனமும் சோர்ந்திருந்த நிலையில் யாரையும் சிரமப்படுத்த விரும்பாமல் வான் காவே மனநலக் காப்பகத்தில் சேர்ந்தார். 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஓவியங்கள் வரைந்ந்த வான் காவினால் தன் வாழ்நாளில் ஒரே ஒரு ஓவியத்தை மட்டுமே விற்க முடிந்திருக்கிறது.
வண்ணக்காரனின் வரலாறு ஹாலந்தில், கட்டுப்பாடான கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வான் கா, பாதிரியாராகி மக்களை நல்வழிப்படுத்த விரும் பினார். விநாடிக்கு ஒருமுறை மாறும் சூரியனின் கதிர்கள்போல் இயல்புகொண்ட வான் காவினால் வரைவதைத் தவிர வேறெதிலும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இருக்க முடியவில்லை. தனது தம்பி தியோ அனுப்பும் பணத்தை மாடல்களுக்கும், வண்ணங்களுக்கும் செலவு செய்து விடுவார்.
கடிதங்களில் வாழ்ந்தவன்
தியோவுக்கு எழுதிய ஒரு கடி தத்தில், ஆறு மாதத்தில் ஆறு வேளை மட்டுமே முழுமையாகச் சாப்பிட்டதாக எழுதியுள்ளார் வான் கா. புகையிலையும், காபியும், ரொட்டியும்தான் ஜீவனம். தன்னைப் புரிந்துகொண்டு பராமரித்த தம்பி தியோவுக்கு 17 ஆண்டுகள் இடை விடாமல் கடிதங்கள் எழுதியுள்ளார். மனம் திறந்து எழுதப்பட்ட ஆயிரக் கணக்கான கடிதங்கள், வான் காவின் வாழ்க்கையையும் மன உலகையும் புரிந்துகொள்ளும் சாளரங்கள்.
குருவே இல்லாத சுயமி. ஓவிய அகாடமிகளில் எந்த ஆசிரியரிடமும் முழுமையான பயிற்சியை முடிக்காத வான் கா, உணர்வுகளை வண்ணங்களாக மாற்றுவதில் அதிக கவனம் கொண்டார்.
இயற்கைக்கு எதிராக ஓர் ஓவியம்கூட தன்னால் வரைய முடியாது என்ற வான் கா, அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்களை ஏற்றதில்லை. நெசவாளி கள், வயல்களில் வேலை செய்யும் பெண்கள், சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என்று யதார்த்தவகை ஓவியங்களை வரைவதிலேயே ஆர்வம் கொண்டிருந் தார். மனநிலை சீர்குலைவுக்கு உள்ளாகும் நேரங்களில் எல்லாம் அவரின் படைப்பு மனநிலை உச்சத்தை அடைந்திருக்கிறது. இறப்பதற்கு முந்தைய ஒரு மாதத்தில் மட்டும் 70 ஓவியங்கள் தீட்டியுள்ளார்.
நடப்பதில் பெருவிருப்பம் கொண்டவர் வான் கா. தந்தையுடனும் சகோதர சகோதரிகளுடனும் இளவயதில் நிறைய நடைபயணங்கள் சென்றிருக்கிறார். எத்தனை தூரமென்றாலும் எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்வார். வழிமுழுக்க இருக்கும் நிலக் காட்சிகளும் அசலான மனிதர்களும், இயற்கையிலேயே மேலோங்கி இருக்கும் வண்ணங்களும் வான் காவை கவர்பவை.
நிறமிழந்த காதல்
காதல் இல்லாத வாழ்க்கையை வான் காவினால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. காதலில் தோற்ற ஒவ்வொரு முறையும் தன் கட்டுப்பாட்டை இழந்தார். அன்பால் அரவணைத்துக்கொள்ள ஒரே ஒரு பெண் இருந்தால் போதும், தன்னால் தாழ்வு மனப்பான்மையின்றி மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்று நம்பினார். வண்ணங்களைக் கையாளத் தெரிந்த கலைஞனுக்கு, வாழ்க்கையை வண்ணமயமாக்க ஒரு காதலியும் கிடைக்கவில்லை.
காதலியாக ஒரு தேவதையைத் தேடவில்லை அவர். தன் சிந்தனையின் சிறுபொறியைத் தூண்டிவிடக்கூடிய அன்பான ஒரு பெண்ணுக்காகவே காத்திருந்தார். காலத்தின் கருணையற்ற அரக்கன், வான் காவுக்கு வழங்கியவை எல்லாமே தற்காலிகமான காதல் உறவுகளே. வயிற்றில் கருவுடனும், கையில் ஒரு பிள்ளையுடனும் தன் ஓவியத்துக்கு மாதிரியாக (மாடல்) வந்த விலைமாதுவிடமும் வான் கா அன்பைக்காட்டி அவரைப் பராமரித்திருக்கிறார்.
வான் காவின் தந்தைக்கு இவ்விஷயத்தில்தான் கோபம் வந்தது. வான் காவை முற்றிலும் வெறுத்த அவர், அடுத்த சில நாட்களிலேயே மாரடைப்பால் காலமானார்.
வான் கா நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் வாழ்க்கை சறுக்கலையே கொடுத்தது. தன் ஓவியங்கள் சிறப்பானவை என்று பிற ஓவியர்களும் மக்களும் கொண்டாட வேண்டும் என்று ஏங்கினார். வான் காவின் தனிமையும் ஓவிய தாகமும் பாரீஸுக்கும் லண்டனின் பல்வேறு இடங்களுக்கும் விரட்டிக்கொண்டே இருந்தன.
நினைவில் நிற்கும் தூரிகை
சமகாலத்தின் அறிவுநிலையைக் கடந்து, தீட்சண்யத்துடன் பெரும் சுடரென வாழ்ந்த வான் காவை, 37 வயது வரை கலையே காப்பாற்றி வந்தது. வாழ்நாள் முழுக்க தோல்விகளுடன் உழன்ற வான் காவுக்கு, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டவுடன் மரணம்கூட உடனடியாக நிகழவில்லை. விலா எலும்பொன்றில் பாய்ந்திருந்த தோட்டாவை எடுக்கப் போதுமான மருத்துவ வசதி இல்லாததால் இரண்டு நாட்கள் வலியுடன் போராட வேண்டியிருந்தது.
"என்னுடைய துயரம் எப்போதுமே நீடிக்கும்" என்று, கடைசித் துயரத்தையும் அனுபவித்தபடியே தான் வான் காவின் வாழ்க்கை நிறைவடைந்தது.
சகோதரனின் பிரிவையும் தன்னுடைய உடலின் நோயையும் தாங்க இயலாமல் தியோவும் அடுத்த ஆறு மாதங்களில் இறந்து போனார். தியோவின் மனைவியும் மகனும் வான் காவின் ஓவியங்களைக் காப்பாற்றிப் பிரபலப்படுத்தினர்.
இன்று நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள வான் காவின் அருங்காட்சியகத்துக்கு ஆண்டுக்கு இரண்டு மில்லியன் மக்கள் பார்வையாளர்களாக வந்து செல்கிறார்கள்.
(ஜூலை 29, வான் காவின் நினைவு நாள்)
- வருவார்கள்...
எண்ணங்களைப் பகிர:
vandhainila@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
23 days ago
இலக்கியம்
23 days ago