தி
ரேசர்ஸ் எட்ஜ்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தைச் சில தினங்களுக்கு முன்பு பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ரமணர் பற்றியும் ஆங்கில எழுத்தாளர் சாமர்செட் மாம் திருவண்ணாமலைக்கு வந்து போனதைப் பற்றியும் நினைவு கள் எழுந்தன.
புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் சாமர்செட் மாம் 1938 ஜனவரியில் திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமத்துக்கு வருகை புரிந்தார். ரமணரை சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பு அவருக்குள் ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கியது. அதன் விளைவாக அவரது ‘தி ரேசர்ஸ் எட்ஜ்’ நாவலில் ரமணரை குருவாகச் சித்தரித்து எழுதியிருக்கிறார்.
அதுபோலவே தனது ரமணாஸ்ரம அனுபவத்தைத் ‘தி செயிண்ட்’ என்ற பெயரில் கட்டுரையாகவும் எழுதியிருக்கிறார்.
இந்திய வருகை
1937 டிசம்பரில், சாமர்செட் மாம் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். ஒரு மாத காலம் வடஇந்தியாவில் பயணம் செய்து மகா ராஜாக்கள் தொடங்கி துறவிகள் வரை பலரையும் சந்தித்தார். பின்பு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
அங்கே ஓர் இரவு விருந்தில் கிறிஸ்டினா ஆஸ்டின் என்ற பிரிட்டீஷ்காரரின் மனைவியைச் சந்தித்தார். கிறிஸ்டினாதான் ரமணரைப் பற்றி எடுத்துச் சொல்லி அவரைச் சந்திக்கலாம் என ஏற்பாடு செய்தார். சாமர்செட் மாமோடு கிறிஸ்டினாவும் திருவண்ணாமலைக் குப் பயணம் செய்திருக்கிறார்.
சந்தித்தவேளையில்...
தான் ரமணரைச் சந்தித்த அனுபவத்தைப் பற்றிச் சாமர்செட் மாம் இவ் வாறு குறிப்பிடுகிறார்:
எனது இந்தியப் பயணத்தின் நோக்கம் இந்தியாவில் உள்ள ஞானிகளைச் சந்திக்க வேண்டும் என்பதே. அதற்காகப் பகவான் ரமண மகரிஷி யைத் தேடிச் சென்றேன். புழுதி படிந்த சாலையில் பயணித்துத் திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமத்துக்குச் சென்றது புதிய அனுபவமாக இருந்தது. கோடை வெப்பத் தின் காரணமாகத் திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள குடிலில் தங்க வைத்தார்கள்.
வழக்கமாக மகரிஷியை பார்வையாளர்கள் சந்திக்கும் இடத்துக்கு என் னால் எழுந்து போக முடியாது என்பதால், ரமணரே தனது இரண்டு சீடர்களுடன் என்னைத் தேடி வந்திருந்தார். அவரைச் சந்தித்தபோது பெரும் ஞானியைப் போலின்றி, எளிய விவ சாயி போலவே இருந்தார். வசீகரமான முகம். ஈர்க்கும் கண்கள். அருகில் வந்து நலம் விசாரித்துவிட்டு அருகில் தரையில் அமர்ந்து கொண்டார். எனக்காகத் தியானிப்பது போல மவுனமாக இருந்தார்.
பின்பு ஏதாவது கேட்க விரும்புகிறேனா எனக் கேட்டார். இல்லை எனத் தலையசைத்தவுடன், அவர் மவுனமும் ஓர் உரையாடலே என்றபடியே மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார். அவர் எனக்காகவே தியானிக்கிறார் என்றார்கள்.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவர் மவுனமாக விடைபெற்றுச் சென்றார். நான் மயக்கம் தெளிந்து அவரைக் காண்பதற்காகச் சென்றேன். அவரது அறை மூடியிருந்தது. ஜன்னல் வழியே அவரைக் கண்டேன். சமாதியில் ஆழ்ந்திருந்தார். நான் அங்கிருந்து விடைபெற்றுவந்துவிட்டேன். ஆனால், அதன்பிறகு இச்சம்பவம் பற்றி நிறையக் கட்டுக்கதைகள் பெருக ஆரம்பித்தன. நான் ஆன்மிக சக்தியாலே மயங்கி விழுந்துவிட்டேன் எனப் பலரும் பேசிக் கொண்டார்கள்.
இது நிஜமா என்பதை அறிந்துகொள் ளப் பலரும் என்னைத் தேடிவந்து கேட்டார்கள். நான் செல்லுமிடத்தில் எல்லாம் இதைப் பற்றி யாராவது கேட்பது வழக்கம். எனக்குப் பகவானின் சந்திப்பு ஆழ்ந்த மனப் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது நிஜமே. அவரைப் பற்றி நிறையத் தேடி வாசித்து அறிந்துகொண்டேன்.
நாவல் சொல்ல வரும் சேதி
‘தி ரேசர்ஸ் எட்ஜ்’ நாவலின் கதாநாயகன் லேரி டேரல் ஓர் அமெரிக்க இளைஞன். முதலாம் உலகப் போரில் விமானியாகப் பணியாற்றி வேதனை யான அனுபவங்களுடன் வீடு திரும்புகிறான். அவனுக்கு இஸபெல் பிராட்லியுடன் திருமணம் நிச்சயமாகிறது. ஆனால், வேலைக்குச் செல்ல முடியாது என்ற அவனது பிடிவாதம் காரணமாகத் திருமணம் தடைபடுகிறது. நண்பன் தனது தந்தையின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னபோதும் லேரி டேரல் மறுத்துவிடுகிறான்.
வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைத் தேடி ஆன்மிகப் பாதையில் பயணிக்கத் தொடங்குகிற லேரி டேரல், இந்தியாவுக்கு வந்து சேர்கிறான். அங்கே குரு ஸ்ரீகணேஷாவைப் பற்றி அறிந்துகொண்டு, அவரது ஆசிரமத் தில் மாணவனாகச் சேர்கிறான். அங்கிருந்தும் விடுபட்டு தனக்கான வழியை அவன் முடிவில் கண்டடைகிறான். நாவலில் வரும் குருவின் உபதேசங்களும் தோற்றமும் ரமணரைப் போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது.
சினிமாவுக்குப் போன நாவல்
‘தி ரேசர்ஸ் எட்ஜ்’ நாவல் ஒன்றரை மில்லியன் பிரதிகள் விற்று பெரிய சாதனை புரிந்தது. அத்துடன் இந்த நாவலுக்கான திரைப்பட உரிமையை ‘ட்வென்டீத் செஞ்சுரி பாக்ஸ்’ நிறுவ னம் இரண்டரை லட்சம் டாலர் கொடுத் துப் பெற்றது. இந்தத் திரைப்படத்துக்கான திரைக்கதையைச் சாமர்செட் மாமே எழுதினார். இதற்குப் பரிசாக அவருக்கு ஹென்றி மாட்டிஸியின் ஓவியம் பரிசாக அளிக்கப்பட்டது. படம் பெரிய வெற்றிப் பெற்றது. 4 ஆஸ்கர் விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஆகவே படத்தின் இரண்டாவதுபாகத்தை எடுக்க விரும்பிய திரைப்பட நிறுவனம் சாமர்செட் மாமை இதன் தொடர்ச்சியை எழுதச் சொன்னது. ஆனால், திரையுலகில் தனது கசப்பான அனுபவத்தின் காரணமாக அவர் எழுத மறுத்துவிட்டார்.
காலத்தின் குரல்
“கத்தியின் முனையைக் கடப்பது எவ்வளவு கடினமானதோ, அப்படித் தான் விமோசனத்துக்கான பாதையும் கடினமானது!” என்ற உபநிஷத வாக்கியத்தில் இருந்தே நாவலின் தலைப்பை சாமர்செட் மாம் உருவாக்கியிருக்கிறார். சாமர்செட் மாம் இங்கிலாந்தின் விட்ஸ்டேபில் நகரத்தில் பிறந்தவர். லண்டனில் மருத்துவம் படித்தவர். எழுபதுக்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கிறார். இந்தியாவில் அவருக்கெனத் தனி வாசக வட்டமே இருந்துவருகிறது. ‘தி ரேசர்ஸ் எட்ஜ்’ கடந்துபோன ஒரு காலத்தின் குரலாகவே இப்போதும் ஒலிக்கிறது.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
2 months ago