பள்ளிக்கு வந்ததும் முதல் வேலை யாகப் பழைய பதிவேடுகளை எடுத்துப்போட்டுத் தேடத்தொடங்கினார் ரேவதி டீச்சர். இந்தப் பள்ளிக்கு வந்தது முதல் ஆசிரியர்களுக்கான இந்தப் பழைய வருகைப் பதிவேடுகளை இதுவரை எடுத்துப் பார்த்ததில்லை. அதற்கான அவசியமும் ஏற்பட்டதில்லை. இந்தப் பதிவேடுகளில் இருந்து இதற்குமுன் பணியாற்றிய ஆசிரியர்களின் விவரங்களை எடுப்பது அப்படி ஒன்றும் சிரமமான வேலையுமில்லை. இந்த கிருஷ்ணமூர்த்தி உண்மையான ஆள்தானா என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்து விடும்.
பதிவேடுகள் வருடக்கணக்கில் கட்டப்பட்டுக் கிடந்த அழுத்தத்தினால் தாள்கள்பழுப்பேறித் தடித்து மொறமொறத்துப் போயிருந்தன. கை பட்டாலே உடைந்துபோவது போலிருந்ததால் ஒவ்வொரு ஏடாக மெல்லப் புரட்டிக்கொண்டு வந்தார். ஒரு பதிவேட்டில் பாதிக்குமேல் ஏடுகளைப் புரட்டிய பிறகு ஆகஸ்ட் மாதத்திற்கான பக்கத்தில் ‘ப.கிருஷ்ணமூர்த்தி, தலைமையாசிரியர்’ என்று எழுதப்பட்டுக் கையொப்பமிடப்பட்டு இருந்தது. அதிலிருந்து தொடர்ச்சியாக அடுத்தடுத்த மாதங்களில் அடுத்தடுத்த பதிவேடுகளில் அவர் இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார் என்பது தெரிந்தது. ஆனால், இந்த ஆறுபேருக்குமான சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியில் அவர் அப்பள்ளியிலும் இல்லை; பணியிலும் இல்லை. முன்ன தாகவே பணி ஓய்வு பெற்றிருந்தார். பேரையும் முத்திரையையும் மட்டும் வைத்துக்கொண்டு ஓய்வுபெற்று பத்தாண்டுகளுக்குப் பிறகும் இவர் இந்த வேலையை எப்படிச் செய்யலாம்? மனதிற்குள் சிறியதொரு சீற்றம் ஏற்பட்டது ரேவதி டீச்சருக்கு. கிருஷ்ணமூர்த்தி வாத்தியாரை நேரில் பார்த்து நாலு வார்த்தை கேட்டால்தான் மனம் ஆறும் என்று நினைத்தார்.
அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டார். ஊருக்குள் கொஞ்சம் வயதான சிலருக்கு கிருஷ்ணமூர்த்தி வாத்தியாரைப் பற்றித் தெரிந்திருந்தது. கிருஷ்ணமூர்த்தி வாத்தியாரின் ஊர் ஆத்துக்கு அந்தப் பக்கம் இருந்தது. மழைக்கால மென்றால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். பல ஊர்களைச் சுற்றிக்கொண்டுதான் கிருஷ்ணமூர்த்தி வாத்தியார் வசிக்கும் ஊருக்குச் செல்ல வேண்டும். இப்போது ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆற்றைக் கடப்பதற்கு வண்டிப்பாதையும் இருந்தது. அதன் பிறகு பத்து நிமிடப் பயணம்தான் ஊர் வந்துவிட்டது. எதிர்ப்பட்ட ஒருவர், ‘அதோ தெரியுது பாருங்க’ எனக் கைகாட்ட அந்த வீட்டின் முன் வந்து நின்றார் ரேவதி டீச்சர். திண்ணை வைத்துக் கட்டிய பழைய ஓட்டு வீடு.
கூரையில் பெய்யும் மழைநீர் இறங்குவதைப் போல ஓடுகள் இறங்கி வீட்டைச் சுற்றிலும் உடைந்து கிடந்தன. சுவற்றில் பூசியிருந்த சிமென்ட் காரை உதிர்ந்து செங்கற்கள் கரைந்து கொண்டிருப்பதைப் போலக் காட்சியளித்தது. கிருஷ்ணமூர்த்தி வாத்தியாரின் அப்பா காலத்தில் கட்டிய வீடாக இருக்குமோ என நினைக்கத் தோன்றியது. புழக்கத்திற்காக வீட்டின் நான்குபுறமும் நிறைய இடம்விட்டு உயிர்வேலி வைக்கப்பட்டிருந்தது. தெருவை ஒட்டிப் போடப்பட்டிருந்த கொட்டகைக்கு முன் ‘இங்கு சைக்கிள், இரண்டு சக்கர வாகனங்கள் பஞ்சர் ஒட்டித் தரப்படும்’ என்கிற பலகை வைக்கப்பட்டிருந்தது. அங்கு வேலை செய்துகொண்டிருந்த நடுத்தரவயதைத் தாண்டிய ஒருவர் ரேவதி டீச்சர்நிற்பதைப் பார்த்துவிட்டு வந்தார்.
“வாங்க.”
“கிருஷ்ணமூர்த்தி சார் வீடுதான?”
“ஆமா. எங்கப்பாதான் அவரு.”
“அப்புடியா. சாரப் பாக்கணும்.”
“அப்பா தவறி நாலு வருசமாயிட்டுதே. ஒங்களுக்குச் சேதி தெரியாதா?”
ரேவதி டீச்சருக்குச் சற்று அதிர்ச்சியான செய்திதான் இது.
“ஊருக்குள்ள விசாரிச்சப்ப சாரப் பத்தி எல்லாமும் சொன்னவங்கள்ல ஒருத்தர்கூட இதச் சொல்லலயே”
“யாருக்கும் சொல்லலதான். கொரனா காலத்துலதான அப்பா தவறுனாங்க. அதான் சொந்தகாரங்களோட முடிச்சிக்கிட்டம். வேலபாத்த எடம், கூட வேலபாத்தவங்க, கூட்டாளிங்க யாருக்கும் சேதி சொல்ல முடியாம போயிட்டுது” என்றவர், “வீட்டுக்குள்ள வாங்கம்மா. வாசல்லயே நிக்கவச்சி பேசுற மாதிரி இருக்கு.”
“பரவால்ல.”
“அப்பா ரிட்டேயராயி எம்மாங்காலமோ ஆயிட்டு. இப்ப தேடிக்கிட்டு வந்துருக்கீங்கம்மா. ஏதாவது முக்கியமான விஷயமா?”
“ஆமாம் முக்கியமான விஷயந்தான்.”
“என்ன விஷயம்மா?”
ரேவதி டீச்சரால் சட்டென்று எதுவும் பதில் சொல்லமுடியவில்லை. சற்று யோசித்து “பள்ளிக்கூட எடம் சம்பந்தப்பட்டது. அந்த ஊரு பெரிய மனுசர் ஒருத்தர் பள்ளிக்கூடம் கட்ட எடம் எழுதிக் கொடுத்துருக்காரு. அப்ப சாருதான் எச்.எம்மா இருந்துக்காரு. டாக்குமென்ட்ல சாரு கையெழுத்தெல்லாம் இருக்கு. அளந்து பொழிகல்லு பொதச்சிகொடுத்துருக்காங்க. வேலி வைக்காம கெடந்ததால இப்பப் பக்கத்து எடத்துக்கார ஆளு பொழிகல்ல நோண்டி போட்டுட்டு, ‘என்னோட எடத்துக்குள்ள பள்ளிக்கூடம் வருது. நான் விட்டுத்தர மாட்டேன்’னு புள்ளைங்க விளையாடுற எடத்துல வந்து வேலி போடுறான். அதான் சார் இருந்தா என்ன ஏதுன்னு கேட்டுப் பாக்கலாமேன்னு வந்தன்.”
“இப்புடியெல்லாம் கூடவாம்மா ஏமாத்தி வாழப் பாப்பாங்க?”
‘பொய் சர்டிபிகேட் கொடுத்து அரசாங்கத்தயே ஏமாத்துற ஆளுங்களேகூட இருக்காங்க’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.
“அம்மா, எங்கப்பாகூட வேலபாத்த ஆதிமூலம் வாத்தியாரு இங்கதான் இருக்காரு. அப்பாவும் அவரும் ஒண்ணாத்தான் பள்ளிக்கூடம் போவாங்க. லீவு வுட்டாலும் எங்கப்பா அவர அழச்சிக்கிட்டுதான் எல்லா எடத்துக்கும் போவாரு. எங்கப்பாவுக்குத் தெரியிற எல்லாமும் அவருக்கும் தெரிஞ்சிருக்கும். அவருகிட்ட கேட்டீங்கன்னா நல்லது கெட்டது சொல்லுவாரு.”
“அப்புடியா, அவரு வீடு எங்க இருக்கு?”
“நீங்க திண்ணையில வந்து ஒக்காருங்கம்மா. நான் அவரைக் கூட்டியாறேன்” என்று தன் சைக்கிளில் கிளம்பிப் போனான் கிருஷணமூர்த்தி வாத்தியாரின் மகன். ரேவதி டீச்சருக்கு மேற்கொண்டு யாரிடமும் இதுபற்றிப் பேசுவதற்கு விருப்பமில்லை. வேறு வழியில்லாமல் திண்ணையில் போய் உட்கார்ந்தார். பூவேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட பெரிய நிலைக்கதவுகள். திண்ணைச் சுவரில் கிருஷ்ணமூர்த்தி வாத்தியாரின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. எப்போதோ போடப்பட்ட பூச்சரம் காய்ந்துபாதி உதிர்ந்து போயிருந்தது. புகைப்படத்தில் கனிவாய் பார்த்துப் புன்னகைப்பது போலிருந்தது. ஒரு நல்ல அரசு ஊழியர் அரசாங்கத்த ஏமாத்தலாமா? அதுவும் ஆசிரியரா இருந்து காசுக்காக இதுபோலச் செய்தது அரச துரோகமில்லையா? அவரது கண்களைப் பார்த்து மனதிற்குள் கேட்டுக்கொண்டிருந்தார்.
“வாங்கம்மா” தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து முகத்தைத் துடைத்தபடி தன் எதிரே வந்து நின்றவனை ஏறிட்டுப் பார்த்தார். அதே சாயல். “அண்ணன் சொன்னாரு நீங்க வந்துருக்கீங்கன்னு. ஆதிமூலம் சாரு வூட்டுலதான் இருக்காரு. அண் ணன் கூட்டுட்டு வந்துரு வாப்புள. நீங்க இருங்கம்மா வண்டிய அவுத்து மாட்டுக்கு தண்ணிகாட்டி கட்டிட்டு வந்தர்றன்”.
ரேவதி டீச்சர் கிருஷ்ணமூர்த்தி வாத்தியாரின் புகைப்படத்தை பார்த்து மௌனமாய்ப் பேச ஆரம்பித்தார். ‘பெத்தவங்க செய்யிற பாவம் புள்ளைங்களத் தாக்கும்பாங்க. நீங்க செய்தத வீணாக்காம ஒங்க புள்ளைங்க அனுபவிக்கிறாங்க போல. ஒரு புள்ள சைக்கிள் டயர தேச்சிக்கிட்டு ஒக்காந்திருக்காப்புள. இன்னொரு புள்ளமாட்டுவண்டி ஓட்டிப் பொழைக்கிறாப்புள. இன்னம் மத்த மத்த புள்ளைங்களப் பத்தி எதுவும் தெரியல. நீங்க செய்த காரியங்களுக்கு அவங்க மட்டும் என்னத்த பெரிசா கரையேறி இருக்கப்போறாங்க. இதுக்குத்தான் ஆண்டவன் நம்மள எவ்வளவு ஒயரத்துல கொண்டுபோயி ஒக்கார வச்சாலும் ஞாயம் தர்மத்தோட நடந்துக்கணும்ங்குறது. எனக்குப் பதவி இருக்கு, எனக்கு அதிகாரம் இருக்கு. நான் இல்லாத ஒண்ண இருக்குன்னு ஆக்குவேன், இருக்குற ஒண்ண இல்லாமப் பண்ணுவேன்னு ஆடக் கூடாதுங்கிறது. நீங்க பண்ணிட்டுப் போயிட்டீங்க.
இப்ப நான்தான உண்மையையும் சொல்லமுடியாம பொய்யாவும் கடிதம் கொடுக்க முடியாம கெடந்து பரிதவிக்கிறேன். இது வரைக்கும் வாங்குன சம்பளத்துக்கு உண்மையா இருந்த நான்இதுக்கு மேலயும் யாருக்காகவும் தப்பு பண்ணப் போறதில்ல. எது உண்மையோ அதையே நான் கொடுத்தர்றேன். அதனால எப்படியாப்பட்ட பாதகம் நடந்தாலும் அது உங்களத்தான் சேரும். எதுக்கும் நான் பொறுப்பில்ல. உங்க நண்பருகிட்ட பேசவும் எனக்கு எதுவும் விஷயமில்ல. அவரு வர்றதுக்குள்ள நான் இங்கேருந்து கிளம்புறேன்’ அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார். கிருஷ்ண மூர்த்தி வாத்தியாரோ அதே கனிவான பார்வையுடன் ரேவதி டீச்சரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தார்.
அதே நேரம் வாசலில் ஆதிமூலம் வாத்தியாரை சைக்கிளில் இருந்து இறக்கிவிட்டான் கிருஷ்ணமூர்த்தி வாத்தியாரின் மூத்த மகன். நிமிர்ந்து நடக்க முடியாமல் கைத்தடியை ஊன்றியபடி தடுமாறித் தடுமாறி வாசல்படி ஏறி வந்தார் ஆதிமூலம் வாத்தியார். சரி, வயதானவர் வந்துவிட்டார்; இன்னும் கொஞ்ச நேரம் இருந்து நாலு வார்த்தை பேசிவிட்டுப் போவோமென்று உட்கார்ந்தார் ரேவதி டீச்சர். சிக்கலுக்குத் தீர்வுகாணும் விதமாக ஆதிமூலம் வாத்தியார் ஏதாவது கதை சொல்லுவாரோ? அடுத்த வாரம் பார்ப்போம்.
(நதி அசையும்)