நாம் நடந்து செல்கிற தெருவோ, ஒரு சாலையோ, பாழடைந்து கிடக்கும் கட்டிடங்களோ, காற்றில் எழுந்து வருகிற புழுதிகளோ, நம் முந்தைய வரலாற்றை, வாழ்க்கையை, வென்ற/வெல்லாத கனவுகளைப் புதைத்தே வைத்திருக்கின்றன. அதைத் தோண்ட, தோண்ட வருகிற சுவாரசியங்கள், ஆச்சரியங்களாகவோ, அதியசங்களாகவோ இருக்கலாம். கவிஞர் கலாப்ரியாவின் நான்காவது நாவலான ‘மாக்காளை’ அப்படியான, நினைவுகளைக் கிளறும் உணர்வை, தாமிரபரணியின் குளிர்ச்சியோடு தருகிறது.
திருநெல்வேலி திரையரங்கம் ஒன்றின் பின்னணியைக் கொண்ட இந்த நாவல், 1960களில் நடக்கிறது. இன்றைக்குள்ள தலைமுறை கண்டிராத, வாழ்ந்திடாத வாழ்க்கையை அங்கதமாகவும் அழுத்தமாகவும் பேசுகிறது. அந்தக் காலகட்டத்து மக்களின் பழக்க வழக்கங்கள், திரையரங்க நடைமுறைகள், படம் பார்க்க முண்டும் கூட்டம், பெண்கள் டிக்கெட் கவுன்டருக்கான மவுசு, சினிமா விளம்பரங்கள், திரையரங்க கேண்டின் வியாபாரம், எம்.ஜி.ஆரின் ‘படகோட்டி’, ‘எங்க வீட்டு பிள்ளை’ பட ரிலீஸ்களின் போது நடந்த கொண்டாட்டம் முதல் அப்போது வெளியான படங்களுக்கான வரவேற்பு எனச் செல்லும் தகவல்களின் வழி, வாழ்ந்து கெட்ட அல்லது வாழ்வைத் தொலைத்த விஸ்வநாத அண்ணாச்சியின் கதையை, எந்தப் பாசாங்கின்றியும் விவரிக்கிறது, நாவல்.
அந்த ஐம்பது வயது அண்ணாச்சியின் மனவோட்டங்களின் வழியே நகரும் கதை, அவர் மகள் வள்ளி, உடம்புக்குச் சரியில்லாமல் சிகிச்சை பெறும் அவர் மனைவி வேம்பு, எல்லாம் இருந்தும் எதையோ தொலைத்த மனதுடன் அலையும் பேரழகி சுந்தரம்மா, சுந்தரம்மாளின் மகள் வடிவு, சூழல் அறிந்து உதவுகிற பணக்கார நண்பன் ராமநாதன், அவர் மனதுக்குள் உறங்கும் காதல் ஏக்கம், சுந்தரம்மாவுக்கும், விஸ்வநாத அண்ணாச்சிக்குமான உணர்வுபூர்வ தருணங்கள், சுந்தரம்மாவின் பங்களா போன்ற வீட்டை விலைபேசும் வடநாட்டு சேட்டு, கிணற்றில் விழுந்தவளைத் தூக்கப்போய், படக் கூடாத இடத்தில் காயம்பட்டு, காதலைத் தியாகம் செய்கிற வாசகம் என்கிற இளைஞன் என இதில் வரும் கீழ் நடுத்தரவர்க்க கதாபாத்திரங்கள், நமக்கு நெருங்கியவர்களாக ஆகிவிடுவது இந்நாவல் தரும் மாயம்.
பாதி பக்கங்களைத் தாண்டியதும் நாமும் ஒரு கதாபாத்திரமாக இந்நாவலுக்குள் புகுந்து சுந்தரம்மாவின் அருகிலோ, சுரண்டப்படும் பெண்களுக்கு ஆதரவாகவோ, ராமநாதனுக்கு என்னாச்சோ? என்று தவிக்கிற விஸ்வநாத அண்ணாச்சிக்கு ஆறுதல் சொல்லவோ, மாக்காளை முன் நின்று, அது கேட்கும் விதமாக எதையும் சொல்லவோ வைக்கிறது, நாவல். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான மன உணர்வுகளைப் பேசும் இடங்களில் வியக்க வைக்கிறது உரைநடை.
அந்த காலகட்டத்துப் பொருட்களுக்கான விலைகள், மாதம் ஐந்து ரூபாய்க்குத் திரையரங்கங்களில் காண்பிக்கப்படும் சிலைடு, அது தொடர்பான விவரங்கள், சில்லரைக் காசுகளில் புழங்கும் சினிமா டிக்கெட் விலை, விஸ்வநாதனின் பேச்சையெல்லாம் ஆடாமல் அசையாமல் கேட்டுக்கொண்டிருக்கும் நெல்லையப்பர் கோயிலின் மாக்காளை சிலை என கதைக்குள் விரவிக் கிடக்கும் விஷயங்கள் நிறைய.
மொரார்ஜி தேசாய் தங்கக் கட்டுப்பாடை கொண்டு வந்தது, தனுஷ்கோடி அழிவு, தேவதாசிமுறை ஒழிப்பு என அந்தக் காலக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகள் சிலவும் இதில் பதிவாகியுள்ளன. எப்போதோ புழங்கி மறந்துவிட்ட சொலவடைகளும் நெல்லையின் பிரத்யேகப் பேச்சு வழக்கும் இநநாவலின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. வாசித்து முடித்த பின்னும் இதன் கதாபாத்திரங்கள் நம் மனதுக்குள் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருப்பதும், ‘அண்ணாச்சோ...’ என்கிற அழைப்பின் வழி மனதுக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கத் துடிப்பதும் கலாப்ரியா எழுத்தின் பலம்.
மாக்காளை (நாவல்)
கலாப்ரியா
சந்தியா பதிப்பகம்
விலை ரூ.300
தொடர்புக்கு: 044-24896979
- தொடர்புக்கு: egnathraj.c@hindutamil.co.in