எழுத்தாளர் லட்சுமிஹரின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு, ‘கூத்தொன்று கூடிற்று’. இதில் பன்னிரண்டு சிறுகதைகள் உள்ளன. லட்சுமிஹர் தனக்கென்று தனித்துவமான கதைசொல்லும் பாணியை அமைத்துக்கொண்டவர். ஒவ்வொரு சிறுகதையும் குறைந்தபட்சம் இரண்டு வாசிப்புகளைக் கோருகின்றன. ஆனாலும் இரு வாசிப்பிலும் வெவ்வேறு அர்த்தங்களைப் புனைவு உருவாக்குகிறது.
‘மெழுகு’ என்ற சிறுகதை அப்படிப்பட்டது. மெழுகுக்கு ஒரு குறியீட்டுப் பொருள் உண்டு. அந்தப் பொருளை இந்தக் கதையுடன் அர்த்தப்படுத்தி இக்கதையின் முக்கியக் கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ள முடியும். அவள் இறப்பிற்குப் பின்னுள்ள காரணங்களைப் பிரதி மறைத்தே வைத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் வேறு வேறு காரணங்களைப் பிரதி உற்பத்தியும் செய்கிறது. சாத்தான், தேவதை என்ற இரு சொற்களின் வழியாகவும் இக்கதை பயணப்படுகிறது.
மதுரை, சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இன்றளவும் ஐயனார் சாமிக்குப் பயந்து மச்சுவீடு கட்டத் தயங்குகின்றனர். அவ்வாறு நிகழ்ந்தால் உயிருக்கு ஆபத்து என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இந்தத் தொன்மத்தை மையமாகக் கொண்டு ‘கூடாரக் கரிசனம்’ என்கிற கதை எழுதப்பட்டுள்ளது. இக்கதையில் இடம்பெற்றுள்ள ஆலமரத்துக்காரி என்ற தெய்வம் அந்தக் கிராமத்துக்கான காவல் தெய்வமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையின் தொடர்ச்சியாக ‘வேடிக்கையும் இன்னபிறவும்’ என்ற சிறுகதையை வாசிக்கலாம்.
வலியவர்கள் எளியவர்கள் மீது எப்போதும் அதிகாரம் செலுத்தத் தயங்க மாட்டார்கள் என்ற பொருண்மையில் எழுதப்பட்டுள்ள ‘அந்த சொல்லில் மட்டும் மதுவின் வாசனை’ என்ற சிறுகதையும் முக்கியமானது. சந்திரன் என்ற கதாபாத்திரத்தின் மூலமாக லட்சுமிஹர் இந்தப் புனைவை நகர்த்தியிருக்கிறார்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் சந்திரனைப் போன்றிருப்பார். அவரைப் போன்றவர்களால்தான் குடும்ப அமைப்புகள் இன்னும் உடைந்துபோகாமல் இருக்கின்றன. லட்சுமிஹர் தம் கதைகளில் சொல்வதைவிடச் சொல்லாமல் தவிர்ப்பதுதான் அதிகம். அந்தத் தவிர்த்தலில்தான் புனைவின் தீவிரத் தன்மை மறைந்திருக்கிறது. அப்படியொரு வாசிப்பு அனுபவத்தை இத்தொகுப்பின் கதைகள் அளிக்கின்றன. - கோ.கிருத்திகா
கூத்தொன்று கூடிற்று
லட்சுமிஹர்
யாவரும் பப்ளிஷர்ஸ், சென்னை - 42
விலை: ரூ.170, தொடர்புக்கு - 90242 61472
குரூரமான யதார்த்தங்கள்: தமிழ் இலக்கியப் பரப்பில் தனித்துவமான இலக்கியக் கர்த்தாக்களில் ஒருவர் த.அரவிந்தன். புனைவின் அசாத்தியமான கற்பனைகளைத் தன் கதைகள், கவிதைகள் மூலம் தொட்டுப் பார்ப்பவர். அவரது கதைகளுக்கு குழந்தைமையின் துறுதுறுப்பும் நீர்நிலையின் மேற்பரப்பு போன்ற ஒரு அமைதியும் உண்டு. அவரது சமீபத்திய குறுங்கதைகளில் இதற்கான அம்சத்தைப் பார்க்க முடிகிறது. இரட்டைக்குழல் துப்பாக்கியின் குழலுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு புலியைப் பற்றிய முதல் கதை, கவிதைக்குரிய விநோதத்தைக் கொண்டது.
மகாபலிபுரத்தில் உள்ள குரங்குகள் பேன் பார்க்கும் சிலையை, அரவிந்தன் கதைக்குள் கூட்டி வந்துள்ளார். ரமேஷ் பிரேதனின் கதையில் வரும் குரங்குகள் நினைவுக்கு வருகின்றன. அந்தக் குரங்கு ஏழாம் நூற்றாண்டிலிருந்து அங்கே பேன் பார்த்துக்கொண்டிருக்கிறது. கிட்டதட்ட 14 நூற்றாண்டுகளாக அந்தக் குரங்கு எத்தனை பேன்களைப் பார்த்திருக்கின்றன என்கிற கேள்வி கதைக்குள் ஒலிக்கிறது; நமது கால்களுக்கு இறக்கை முளைக்கிறது; காலத்தைக் கடந்து பறக்கிறது.
அந்தக் குரங்குகள் பேன்களைப் பார்க்கவில்லை; காலத்தைத்தான் பார்க்கின்றன என அரவிந்தன் கவிதைக்குரிய மாயத்தைப் போல் திறந்து காண்பிப்பதன் வழி வாசிப்பின்பத்தை உணர முடிகிறது. இதேபோல காலத்தைக் கடக்க முயலும் ஒரு தன்மை இந்தக் கதைகள் சிலவற்றில் வெளிப்படுகிறது. மாமரத்தில் தவறவிட்ட தனது பிஞ்சுப் பாதத்தைத் தேடிச் செல்கிறார் எழுத்தாளர்.
அவை அங்கேயே இருக்கின்றன. தீயில் எரிபடும் பனம்பழம் கூடிநிற்பவர்களுக்கு ஒரேபோல அது மனிதத் தலையாகத் தோன்றினாலும், ஒரேபோல எல்லோரும் அதைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளாமல் மனிதத் தலை போன்ற பனம்பழங்களைத் தின்று முடிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அரவிந்தன் ஒரு பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார். இந்தக் கதைக்குள் ஒரு க்ரைம் ரிப்போர்ட்டரும் வருகிறார். அதிகாரமட்டம் செயல்படும் அமைப்பியலை அந்தக் கதைக்குள் அரவிந்தன் சொல்லியிருக்கிறார். பல பொருள்களில் இந்தக் கதைகள் எழுதப்பட்டிருந்தாலும் மனித மனத்தின் குரூரமான யதார்த்தங்களைச் சொல்வது இந்தக் கதைகளின் ஒரு பிரதானத் தொழில் என மதிப்பிடலாம். - மண்குதிரை
ஆப்பிள் துப்பாக்கி பெட்ரோல் நிலையம்
குறுங்கதைகள்
த.அரவிந்தன்
குலுங்கா நடையன்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 9500040516
கனவில் தொலைந்த சிறுவர்கள்: சிகப்பு யானை நாடகம் சிறார்கள் நாடகத்துக்கு உரிய சுவாரசியத்துடன் எழுதப்பட்டுள்ளது. புகழ்பெற்ற நாடக ஆசிரியரான திரிபுராரி ஷர்மாவின் பிரபல நாடகமான ‘சிவப்பு யானை’ உந்துதலால் எழுதப்பட்டுள்ள நாடகம் இது எனலாம். ஒரு பள்ளியில் அதன் ஆசிரியர் மாணவர்களுக்கான ஒரு விளையாட்டை ஒருங்கிணைக்கிறார். அது கனவு காணும் விளையாட்டு. மாணவர்கள் ஒரு சிகப்புத் துணிக்குள் மூடிக் கனவு காண வேண்டும். பிறகு அந்தக் கனவை எல்லோருக்கும் விவரிக்க வேண்டும். ஒரு சிறுவன் கிணற்றுக்குள் விழுந்துவிடுகிறான்.
அந்தக் கிணற்றுக்குள் ஒரு காடு இருந்ததாம். அங்கு விலங்குகளும் இருந்தனவாம். இன்னொரு சிறுவன் ஒரு அரக்கனின் நாக்குக்குள் அகப்பட்டுக்கொள்கிறான். இப்படி விதவிதமான கற்பனைக் கனவுகள். ஆர்வத்துடன் சிவப்புத் துணிக்குள் கனவு காணச் செல்லும் ஒரு சிறுவன் திரும்ப வரவே இல்லை.
விளக்குகள் மின்னி மின்னி எரிகிறது. சிகப்புத் துணியை விலக்கிப் பார்த்தால் சிறுவனைக் காணவில்லை. ஆசிரியரும் சிகப்புத் துணிக்குள் போய் பார்க்கிறார். அவரும் காணால் போகிறார். பிறகு ஒரு நினைவு உலகத்துக்குள் தன் மாணவர்களைத் தேடி அலைகிறார். அங்கு ஒரு நினைவு மனுஷனையும் சிகப்பு யானையையும் பார்க்கிறார். இப்படிச் சுவாரசியமாகச் செல்கிறது இந்தக் கதை.
‘பட்டணத்தில் பூதம் 2.0’ நாடகத்தில் சிறுவர்களிடம் ஒரு பாய் வந்து பேசுகிறது. சிறுவர்கள் பயமும் ஆர்வமும் கொள்கின்றனர். அது மனிதர்களிடம் மாட்டிக் கொண்ட பூதங்களை மீட்க உதவும்படி கேட்கிறது. அந்தப் பாயின் மீதேறி சிறுவர்கள் பறக்கிறார்கள். அது அவர்களை முதலில் மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் ஹன்சாவேளிப் பள்ளத்தாக்குக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு ஹன்சாவேளி மக்களுடன் சிறுவர்கள் உரையாடுகிறார்கள். அவர்களின் அரசர் அங்கு வருகிறார்.அரசரின் பாதாள அறைக்குள் பூதம் இருக்கிறது.
அரசர் பூதத்துடன் தனது உதவியாளர் வழி பேசுகிறார். பூதமும் தனது உதவியாளரை அனுப்பி வைக்கிறது. அரசரின் உதவியாளர் “உனக்கே வேலையில்லை; இதில் உதவியாளர் வேறயா?” எனக் கேட்கிறார். இப்படிச் சுவாரசியமாகச் செல்லும் கதையில் சிறுவர்கள் காலத்திடம் மாட்டிக்கொள்கிறார்கள். இந்த இரு நாடகமும் சிறார்களை மனத்தில் வைத்து விசேஷமாக உருவாக்கப்பட்டுள்ளன. - ஜெய்
பட்டணத்தில் பூதம் 2.0,
சிகப்பு யானை
சந்திரமோகன்
வம்சி பதிப்பகம்
விலை: தலா ரூ.70 (மொத்தம் ரூ.140)
தொடர்புக்கு: 9445870995