என்ன செய்யலாம் என்று நீண்ட நேரமாக யோசித்துக்கொண்டிருந்த ரேவதி டீச்சருக்கு எதுவும் பிடிபடவில்லை. சக பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஆலோசனை கேட்கலாம் அல்லது ஆசிரியர் இயக்க நிர்வாகிகளிடம் கேட்கலாம்.
ஆனால், அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பது நன்றாகத் தெரியும். ‘பள்ளிப் பதிவேட்டில் என்ன இருக்கோ அதக் கொடுங்க. ரிஸ்க் எடுக்காதீங்க’ என்பார்கள். அதற்கு மேல் அவர்கள் இந்த விஷயத்தில் எதுவும் செய்துதரப் போவதில்லை. எனவே அவர்களிடம் இது பற்றிச் சொல்லாதிருப்பதே நல்லது என நினைத்தார்.
ஏழு நாள்களுக்குள் பதில் தரவேண்டும் என்று கேட்டிருக்கி றார்கள். இன்றோடு சேர்த்தால் ஏழு நாட்களும் முழுதாக இருக்கின்றன. என்ன வழி கிடைக்கிறது என்று பார்ப்போம் என்று நினைத்தவர், அந்தக் கடிதத்தை ஒரு நகல் எடுத்துத் தன் பையினுள் வைத்துக்கொண்டார்.
ஏதோ யோசனை வந்ததைப் போல அலமாரியிலிருந்து பள்ளிக் கிராமத்திற்கான மக்கள்தொகைக் கணக்கு நோட்டையும் எடுத்து வைத்துக் கொண்டார். கடிதத்தைக் கோப்புக்குள் வைத்துப் பத்திரப்படுத்தினார். மின் விசிறி போன்றவற்றை நிறுத்தினார்.
தன் அறையைவிட்டு வெளியே வந்து பார்த்தபோது பள்ளி வளாகம் அமைதியாக இருந்தது. காக்கை குருவி சத்தம்கூடக் கேட்கவில்லை. பள்ளிக்கூடம் விட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் எப்போதோ போயிருந் தார்கள். எப்போதும்போலப் பள்ளி வளாகத்தை ஒருமுறை சுற்றி வந்தார்.
எல்லா வகுப்பறைகளும் பூட்டப்பட்டுக் கிடந்தன. வராண்டாக்களிலும் மரத்தடியிலும் ஆங்காங்கே பிள்ளைகள் தவறவிட்டுச் சென்ற சாப்பாட்டுப்பை, காலணிகள், தண்ணீர் பாட்டில், பேனா போன்றவை கிடந்தன. அவற்றைச் சேகரித்துத் தன் அறையில் வைத்தார். பூட்டிவிட்டு வெளியே வந்தபோது இரைதேடிச் சென்ற பறவைகள் அங்கொன்றும் இங்கொன்று மாக மரங்களில் வந்து அடையத் தொடங்கின.
மழைக்கால மாயிருந்தால் இந்த நேரத்திற்கு இருள் கவிய ஆரம்பித்திருக்கும். தன் இருசக்கர வாகனத்தில் பையை மாட்டிக்கொண்டு கிளம்பினார். ரேவதி டீச்சர் வசிக்கும் நகர்ப் பகுதிக்கும் இந்தப் பள்ளிக்கூட ஊருக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் ஐந்து கிலோ மீட்டர்தான். பத்து நிமிடங்களில் வீட்டிற்குச் சென்றுவிடலாம்.
ஆனால், ரேவதி டீச்சரின் வண்டி வழக்கமாகப் போகும் சாலையை ஒதுக்கி அதனையொட்டியிருந்த குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. குறுக்கும் நெடுக்குமாய்க் கிளையோடிக் கிடந்தது அந்தத் தெரு. அவற்றின் இருபுறமும் அடுக்கி வைத்ததுபோன்ற சின்னஞ்சிறு வீடுகள். அரசு பெரும்பான்மையான கூரைவீடுகளை மெத்தை வீடுகளாக்கிக் கொடுத்தி ருந்தது. ரேவதி டீச்சரின் வண்டியைப்பார்த்தவுடன் அங்கே விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளில் சிலர் “ஐ.. எச்சமம்மா வந்துருக்காங்க” என்று ஓடிவந்து வண்டியைச் சூழ்ந்து கொண்டார்கள்.
அவர்களின் குரல் கேட்டு வீடுகளுக்குள் இருந்த பெண்கள் சிலரும் வந்தார்கள். “என்ன டீச்சர் இந்த நேரத்துல வந்துருக்கீங்க? எதுவும் முக்கியமான வேலயா?” என்று விசாரித்தனர். “ஒண்ணும் முக்கியமான வேலையெல்லாம் இல்ல. சும்மாதான் மக்கள்தொகைக் கணக்கு எடுக்கணும்” என்றார் ரேவதி டீச்சர். “வருசா வருசம் கலா டீச்சர்தான எங்கத் தெருவுக்கு வருவாங்க. இப்ப நீங்க வந்துருக்கீங்கம்மா?” என்றாள் விவரமான பெண்ணொருத்தி. “இந்த வருசமும் அவங்கதான் வருவாங்க.
அதுக்கு முன்னால ஒண்ணாவது சேர்க்கவேண்டிய பிள்ளைங்க இருக் காங்களான்னு பாக்கணும் அதான்.” எதையாவது சொல்லி சமாளிக்கவேண்டுமே. ரேவதி டீச்சர் உட்கார ஒரு நாற்காலியை கொண்டு வந்து போட்டார்கள். “நான் ஒவ்வொரு வீட்டுக் குடும்பத் தலைவர், உறுப்பினர் பேரைப் படிக்கிறேன். வயசானவங்க யாராவது தவறி யிருந்தா சொல்லுங்க. பொண்ணுங்க கல்யாணம் ஆகி வந்திருந்தா, கல்யாணம் ஆகிப் போயிருந்தா, கொழந்தைங்க பொறந்திருந்தா, புதுகுடித் தனம் வந்திருந்தா, குடும்பத்தோட ஊரவிட்டுப் போயிருந்தா சொல்லுங்க.
மொத்தம் நூத்தி எழுபத் தெட்டு வீடுகள்தான். கடகடன்னு முடிச்சிடலாம். ரேவதி டீச்சர் பெயர்களைப் படிக்கப் படிக்கப் பெண்கள் ஆர்வமாகத் தரவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதற்குள் ஒரு பெண்மணி கையில் கலர்பாட்டிலுடன் வந்து “ரொம்ப கூலிங்கால்லாம் இல்ல. குடிங்கம்மா” என்று கொடுத்தாள்.
“எதுக்கும்மா இதெல்லாம்?” “பரவால்லம்மா. எப்பவுமா வர்றீங்க?” யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு தனக்குத் தேவையான விவரங்களைச் சேகரித்துக்கொண்டார் அவர். வீரனின் குடும்பத்தினர் பெயரைப் படிக்கும்போது “மணிவேல் வீட்டில் இல்லையா?” எனக் கேட்டார். மணிவேலின் அக்கா, கல்யாணம் செய்துகொடுத்துத் தலைபிரசவத் திற்காக வந்திருந்தாள்.
நைட்டியில் இருந்தவள் தன் பெரிய வயிற்றைத் துப்பட்டாவால் மூடியபடி வந்து வணக்கம் சொன்னாள். “மணிவேல் மாலைநேர வகுப்பு முடிந்து இன்னும் வீட்டிற்கு வரவில்லை. நாளை பள்ளிக்கூடத்தில் வந்து பார்க்கச் சொல்கி றேன்” என்றாள். “பரவாயில்லை சும்மாதான் விசாரித்தேன்” என்றவர் கிளம்புவதற்கு ஆயத்தமானார்.
நன்றாக இருட்டிப்போயிருந்தது. தெருக்களில், வீடுகளில் மின்விளக்குகளை ஒளிர விட்டிருந்தார்கள். ரேவதி டீச்சர் முதலில் தெரிந்துகொள்ள நினைத்தது இந்த ஆறு பேரும் இதே ஊர்க்காரர்கள்தானா என்பதைத் தான். எல்லாரும் இங்கேதான் இருக்கி றார்கள். இவர்கள் ஆறு பேரைத் தவிர படித்து அரசு வேலைக்குச் செல்வோர் எவருமில்லை இங்கே. இந்த ஆறு பேரின் குடும்பங்களுமேகூட ஆகா ஓகோ என்று வாழ்ந்துவிடவில்லை.
தெருவில் உள்ள மற்றவர்களின் வாழ்க்கைத் தரத்திலிருந்து அவர்கள் ஆறு பேரையும் வேறுபடுத்திக் காட்டியது அவர்களிடம் இருக்கும் டிவிஎஸ் 50, அதன் பெட்டியில் நிரந்தரமாய் வைக்கப்பட்டிருக்கும் மின்கம்பத்தில் ஏறப் பயன்படுத்தும் தடித்த கயிறு, கையுறைகள் மற்றும் அதற்குண்டான தொழில்முறைக் கருவிகள் மட்டுமே.
இந்த ஆறு பேரின் மனைவிமார்களும் ‘லைன்மேன் பெண்டாட்டி’ என்று காலாட்டிக் கொண்டு வீட்டில் உட்கார்ந்திருக்க வில்லை. தெருவில் வசிக்கும் மற்ற பெண்களோடு இவர்களும் கருப்பங்களை வெட்டவும் நாற்று நடவும் சென்றுகொண்டு தான் இருக்கிறார்கள். “பரவால்ல... வந்த வேல முடிஞ்சிடுச்சி.
நான் கிளம்புறேன்” என்ற ரேவதி டீச்சர் ஒருமுறை தெருக்களைப் பார்த்தார். எல்லாரும் ஒன்றுபோலவேதான் காலையில் எழுந்து அவரவர் போக்கில் ஓடி உழைக்கிறார்கள். இரவானால் உழைப்பை உவப்பாகவோ, வலியாகவோ, பாரமாகவோ கொண்டு வந்து சேர்கிறார்கள். பானையிலி ருப்பதைக் குடும்பத்தோடு உண்டு பின் உறங்கிப்போகிறார்கள். பார்க்கும் போது இவர்கள் அமைதியாய் நிம்மதி யான வாழ்க்கையை வாழ்வது போலத் தான் தெரிகிறது. இந்தத் தெருவின் அமைதியை, நிம்மதியைக் குலைக்க நான் யார்? இந்தத் தெருவில் உள்ள ஆறு வீடுகளின் விளக்கை மட்டும் அணைத்தால் என்ன ஆகும்? அவை இருளில் அல்லவா மூழ்கும்.
அந்த பாவத்தை என் கையால் நான் செய்ய வேண்டுமா? கடவுளே இத்தனை வருடம் உழைத்து வீட்டுக்குப் போகும் நேரத்தில் எனக்கு ஏன் இப்படியொரு சோதனை? இதுவரை இந்த ஆசிரியர் பணியில் பொய், புரட்டு, சூதுவாது எதையும் செய்ததில்லை. யாருக்கும் எந்தத் தீங்கையும் செய்ததில்லை.
ரேவதி டீச்சரின் வண்டி அந்தப் பரபரப்பான சாலையில் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. ஆனால், அவரின் மனது மட்டும் தான் பார்த்துவிட்டு வந்த தெருக்களையும் வீடுகளையும் தான் பார்த்துப் பேசிய சனங்களையும் மட்டுமே சுற்றிவந்து கொண்டிருந்தது. படுத்தும் நித்திரை வரவில்லை.
இறுதியில் என்ன செய்வது, இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி விடுபடுவது என்கிற கேள்விகளே மனதில் வந்து நின்றன. ‘முப்பது வருசத்துக்கு முன்ன யாரோ செஞ்ச தப்பால இன்னைக்கு அதுவும் வீட்டுக்குப் போற நேரத்துல நான் கெடந்து அல்லாட வேண்டியதா இருக்கு.
இது யாரு பண்ணுன தப்பு? ஆறு பேரோட சான்றிதழ்கள்லயும் தலைமையாசிரியர் ப.கிருஷ்ண மூர்த்தின்னு கையெழுத்து போட்டி ருக்கு. யார் அந்த கிருஷ்ணமூர்த்தி? அவராவது உண்மையான ஆளா இருந்திருப்பாரா? இல்ல அந்தக் கையெழுத்துமேகூடப் போலியானதா இருக்குமோ?’ மனதில் இப்படியான யோசனைகள் ஓடத்தொடங்கின.
நாளை பள்ளிக்குச் சென்றதும் முதல் வேலையாக இதைத்தான் கண்டு பிடிக்க வேண்டும். கண்டுபிடித்து, ‘நீங்கள் பணம் வாங்கிக் கொண்டுதானே ஆறு பேருக்கும் போலிச் சான்றிதழ் கொடுத்தீர்கள்? நீங்கள் செய்த தவறு இப்போது என் தலைக்கு மேலே கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.
இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?’ என்று கேட்கவேண்டும் என மனதிற்குள் திட்டம் வகுத்துக்கொண்டார். பிறகுதான் ரேவதி டீச்சரின் மனம் அமைதியடைந்தது. கண்களில் உறக்கம் வந்து அமர்ந்தது. அடுத்த வாரம் கிருஷ்ண மூர்த்தி சாரைத் தேடி ரேவதி டீச்சருடன் நாமும் செல்லலாம்.
(நதி அசையும்)
- thamizhselvi1971@gmail.com