நவீனத் தமிழ்ப் படைப்பிலக்கியச் சூழலில் ஆடு மேய்த்தலைதல், மீன் பிடித்துக் கரைதல், விவசாயம் செய்து ஓய்ந்துபோதல், கட்டட வேலை செய்து நசிந்து போதல் பற்றியெல்லாம் நாவல்கள் பல வந்திருக்கின்றன. ஆனால், பேப்பர் போடுபவர்களின் வாழ்நிலை பற்றிப் பதிவுசெய்வதில் முதன்மை இடம் வகிப்பது எழுத்தாளர் அறிவுமணியின் ‘சார்… பேப்பர்’ என்னும் இந்த நாவல்.
ஒவ்வொரு நாளின் அதிகாலை நேரத்தில் ‘பேப்பர்’ என்ற சத்தம் கேட்டு விழித்தெழக் கூடியவர் நம்மில் பலர் இருப்பர். ஆனால், வாசலில் விழும் பேப்பரை எடுக்கும் ஒருவர் தம் வாசல்வரை வந்துபோகும் பேப்பர்க்காரரை, அவர் யார், பெயர் என்ன, எதுவரை படித்துள்ளார், என்ன சம்பளம், எத்தனை வருடமாக இந்த வேலை, என என்றேனும் கேட்டறிந்ததுண்டா?. அன்றைய செய்திகளை மட்டும் சுடச்சுட அறிய, நம்மில் பலரும் ஆர்வம் கொள்ளும் நிலையில், பேப்பர்போடும் எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது இந்நாவல்.
பேப்பர் முகவர்களுக்கும், பேப்பர் போடுபவர்களுக்கான உறவு இந்த நாவலில் சொல்லப்பட்டுள்ளது. வளரிளம் பருவத்தினரான சொக்கன், செவப்பன் ஆகியோரின் எளிய வாழ்வைக் கூறுவதாக அமைந்திருப்பதுதான் இந்நாவலின் கதை.
ஒருங்கிணைந்த மதுரையில், மாபெரும் மாட்டுச் சந்தைக்குப் பெயர் பெற்றிருந்த வாடிப்பட்டி கிராமம் ஒரு நவீனச் சிறுநகரமாக உருமாறும்போது நிகழக்கூடிய மாற்றங்களை தம் உட்கிடக்கைகளாக்கித் தொடங்குகிறது இந்நாவல். நான்குவழிச் சாலையின் உருவாக்கம், நவீனத் தொலைத் தொடர்புச் சாதனங்களின் வருகை, சிறு, பெரு கல்வி நிறுவனங்களின் பரவல், வகை வகையான வாகனங்களின் வரத்து முதலியன நடுத்தர வர்க்கத்தார் இங்குவந்து நிலைகொள்ளப் பின்புலங்களாக அமைய, இவர்களுக்கு ஊழியம் செய்யவெனத் தன்னியல்பாகவே உதிரி மனிதர்கள் உருவாகலாகின்றனர். இத்தரப்பினரில் ஒரு வகையினர்தான் சொக்கன், செவப்பன் என்கிற பேப்பர் போடும் பையன்கள்.
பணபலமற்று, எளிய சாதியப் பின்புலங் கொண்டு, நலிவுற்ற குடும்பப் பின்னணியிலிருந்து புறப்பட்டு வந்திடும் வளரிளம் பருவத்தினரான சொக்கன், செவப்பன் என்போர் தம் பணிச் சூழலின்போது அன்றாடம் சந்திக்கிற நெருக்கடிகள், இழப்புகள், அவமதிப்புகள், ஏக்கங்கள், இருத்தல் சார்ந்த துயரங்கள் ஆகியவைதான் இந்த நாவலின் மையப்பொருள்கள். இவ்வித உணர்வுப்பாடுகள், படிப்பறிவற்ற பெற்றோர், பற்றுதலற்ற உறவுக்காரர்கள், பேப்பர் வாங்கும் பயனாளிகள், உடன் பயின்ற பெண் பிள்ளைகள், மனதிற்குகந்த சிநேகிதியர், உடன் பிறவாச் சகோதரியர், பணி வாய்ப்பை நல்கிய முகவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் வெகு எளிதாக இவர்களுக்குக் கையளிக்கப்படுகின்றன.
அதிகாலை நேரத்தில், அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, தமது தூக்கத்தைக் காவு கொடுத்து, ‘சார் பேப்பர்’ எனச் சத்தமிட்டு நகர்கிற நாவலின் மைய மாந்தரான சொக்கன் ஓர் அற்புதமான வார்ப்பு. ஒரு ரூபாய்க்குப் பேப்பர் என்கிற விளம்பரத்தால் அல்லல்படும் அபலையாகவும், பேப்பரை வாங்குபவர் மட்டுமின்றி, பேப்பரைப் படிக்கிற அனைவராலும் எளிதில் அதிகாரம் செய்யத்தக்க ஓர் எளிய மனிதனாகவும், “அடி ஆத்தி, எம்புட்டுச் செவப்புப் பாருங்கடி” என்கிற விதமாக, எளிதில் பிறரால் உருவக் கேலிக்கு உள்ளாகிற உடலமைப்புக் கொண்டவனாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கிற சொக்கனின் பாத்திர வார்ப்பில், இந்நாவலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். நாவலின் பல அத்தியாயங்களில் சுயசரிதைப் பதிவின் நெடி சற்றுத் தூக்கலாகத் தெரிகிறது. என்றாலும், பேப்பர்த் தொழில் சார்ந்த விடயங்கள், நிரலாகக் கோக்கப்பட்டிருப்பதில்தான் இந்நாவலின் தனித்துவம் அடங்கியிருக்கிறது.
சொக்கன், செவப்பன், மாணிக்கம், சுந்தரம் என வளரிளம் பருவ அவல மாந்தர்கள் பற்றிய விவரணைகள், கனி ராசா, செல்வம் எனப் பேப்பர் தொழிலை உயிராகக் கொண்டு வாழ்பவர்கள். பற்றிய விவரங்கள்; பேப்பர் எடுக்கும் இடமான வாடிப்பட்டி தொடங்கி சாணாம்பட்டி, பாண்டியராசபுரம், சந்தோஷபுரம், ஐ.ஓ.சி, கல்லடிப்பட்டி, கிருஷ்ணாபுரம், மீனாட்சிபுரம், தாதன்குளம், மட்டப்பாறை, ராமராஜபுரம், கரட்டுப்பட்டி, மேல்நாச்சிகுளம், பொம்மன்பட்டி, அம்மச்சியாபுரம் எனப் பேப்பர் போட்டு மீளும் ஊர்கள் பற்றிய பயண வெளிக் குறிப்புகள், நான்கு வழிச் சாலைகளின் வரவால் நவீனமாகும் காலச் சூழல் பற்றிய பதிவுகள் என இவற்றையெல்லாம் இந்நாவல், பற்பல பகடி சார்ந்த மொழி ஆளுகையினாலும், பிரச்சாரமற்ற தொனியினாலும், கழிவிரக்கத்தைக் கோராத தன்மையினாலும், ஒரு கவித்துவ பிரதியாக ஆக்கியுள்ளது. அந்தவிதத்தில் இந்நாவல் ஆழ்ந்த வாசிப்பிற்கும், அதி கவனிப்பிற்கும் உகந்ததாக ஆகியுள்ளது.
சார்... பேப்பர் (நாவல்)
அறிவுமணி
ஆதி பதிப்பகம்
விலை:ரூ.290
தொடர்புக்கு: 9994880005
- ஆ.பூமிச்செல்வம் , இணைப் பேராசிரியர்; தொடர்புக்கு: boomiselvam@gmail.com