திருவாரூர் மாவட்டம் பெருங்கலைஞர்களின் சொந்த மாவட்டம். அதன் முதல் வரிசையில் இருப்பவர் மு.கருணாநிதி. அவரது ‘அணில் குஞ்சு’ என்கிற கதை இதில் தொகுக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் இருக்கும் மதவேறுபாட்டைச் சிறார்கள் பார்வையில் இயல்பாக இந்தக் கதை பதிவுசெய்கிறது. ‘செந்நெல்’ நாவல் எழுதிய சோலை சுந்தரபெருமாளின் கதையான ‘மீட்சி’ என்கிற கதையும் இதில் தொகுக்கப்பட்டுள்ளது.
விவசாயம் பொய்த்து மகனுடன் சிங்கப்பூருக்கு இடம்பெயரும் சங்கரலிங்கம் என்கிற முதியவரின் கதையைச் சொல்கிறது. ஊரில் விவசாயம் பார்ப்பதற்கான ஆட்கள் பற்றாக்குறை, விளைச்சலை விஞ்சும் இடுபொருள் செலவு எனப் பல விஷயங்களுடன் இந்தக் கதை திருவாரூர் வட்டார வழக்கையும் பதிவுசெய்கிறது. இரா.காமராசுவின் ‘தாத்தா தொலைந்துபோனார்’ கதையும் இதே பாணியிலானது. விவசாயத்தை நம்பி இருக்கும் சொக்கன் என்கிற முதியவரிடம் அவரது நிலத்தை ஒரு கல்லூரிக்காக வாங்க முயல்கிறார்கள்.
எல்லாரும் நிலத்தைக் கொடுத்துவிட இவர் மட்டும் கொஞ்சம் பிடிவாதம் பிடிக்கிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. மரன் என்கிற பெயரில் கவனம் பெற்ற எழுத்தாளர் ம.இராசேந்திரனின் கதையான ‘தீபம்’ இந்தத் தொகுப்பின் விசேஷமான கதைகளுள் ஒன்று. இந்தத் தலைப்பான ‘தீபம்’ என்பது ஒரு கொக்கைக் குறிக்கிறது. கொக்கைப் பிடித்து அதன் இமையைத் தைத்து அதை ஒரு கண்ணியாக்கி, அதன் அருகில் ஒரு தவளையைக் கட்டி வைத்துள்ளான் ஒருவன்.
இமைகள் தைக்கப்பட்டு நிற்கும் கொக்கை ‘தீபம்’ என்கிறார் இராசேந்திரன். இந்தக் கதையின் திருத்தமான சித்தரிப்பு, வாசகர்களை வசீகரிக்கக்கூடியதாக இருக்கிறது. மானா பாஸ்கரனின் கதை, ராக்கிங் தரும் மன உளைச்சல் பற்றிய விழிப்புணர்வை அளிக்கிறது. பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் மனம் உடைந்து தற்கொலை முடிவை எடுக்கிறார். ஆனால், இதெல்லாம் கடக்க வேண்டிய விஷயம் என்பதைக் கதை இயல்பான ஓட்டத்தில் சொல்கிறது.
சமீபத்தில் கவனம்பெற்ற எழுத்தாளர் ஐ.கிருத்திகாவின் ‘கற்றாழை’ சிறுகதை நவீன காலப் பெண் ஒருத்தியின் வினோதமான சிக்கலைப் பேசுகிறது. ஆனால், தீர்வு என்கிற தேய்வழக்கை இந்தக் கதை தவிர்த்திருக்கிறது. இது விசேஷமான அம்சம். அருணா சிற்றரசின் ‘உடற்றும் பிணி’ நோயில் மடிந்த தந்தையை, விபத்தில் பிரிந்த கணவனை, பிணியில் கிடக்கும் மகனை ஒரு புள்ளியில் இணைத்துப் பார்க்கிறது.
இந்தக் கதையைச் சொல்வதற்கான அவரது மொழியும் உட்பொருளும் அவரது கதை உலகம் பற்றிய அபிப்ராயத்தை நமக்குக் காட்டுகின்றன. விஷ்ணுபுரம் சரவணன், நக்கீரன், சு.தமிழ்ச்செல்வி, ஆர்.காளிப்ரஸாத் உள்ளிட்ட எழுத்தாளர்கள் 34பேரின் கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. திருவாரூர் வட்டார வழக்கு, மாறிவரும் அதன் வாழ்க்கைப் பாதை எனப் பல விஷயங்களை இந்தத் தொகுப்பு பிரதிபலிக்கிறது. -ஜெய்
ஏரோட்டம்
(திருவாரூர் மாவட்டச் சிறுகதைகள்)
தொகுப்பு: மு.சிவகுருநாதன்
நன்னூல் பதிப்பகம்
விலை:ரூ.500
தொடர்புக்கு: 9943624956
அன்பெனும் மொழி…. கவிஞர் தென்னரசனின் கவிதை நூல் இது. தென்னரசினின் கவிதைத் தொகுப்பில் கடவுள், காற்று, சூரியன், நிலா, இலை , மரம், திருடன், பாட்டியின் பழக்கடை, காகம், மழைநீர், மலர்க்காரன், கர்த்தர், மெழுகுவர்த்தி, வெண்ணிலா ஐஸ்கிரீம், தேனீர், ஊஞ்சல், மலை, சூரியன், சீத்தா மரம், சீத்தாப் பழம், எலுமிச்சைகள், மென்புன்னகை, ஷவர்மா ஒரு சிக்கன் தேவதை முதலியவை பாடுபொளாக அமைந்துள்ளன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மையான கவிதைகளில் இயற்கையைக் குறித்தே எழுதியிருக்கின்றார்.
தேநீர் இல்லாத வாழ்வே இல்லை எனலாம். தேநீர் எத்தகைய சூழல்களில் அருந்தப்படுகிறது என்று கவிதையில் பதிவுசெய்திருகிறார் கவிஞர். சமகாலச் சிற்றுண்டி ஷவர்மாவும் நவீன கவிதையில் இடம்பெற்றுள்ளன. ‘அம்மா மிகவும் கருணை உள்ளவள் /ஊரிலிருந்து /மகனைப் பார்க்கப் போகும் வரையில்/ தன்னுடைய சாயலை/ மகனுக்காக அனுப்பிக் கொண்டிருக்கிறாள்’ என்கிற வரிகள் தனிமையில் தங்கியிருக்கும் பிள்ளைகளை ஆற்றுப்படுத்துவதாக உள்ளது. கவிதைத்தொகுப்பு முழுவதும் மெல்லிய அன்பிற்காக காத்திருக்கும் பிள்ளையின் மனநிலையிலேயே புனையப்பட்டுள்ளது. - ம.பரிமளா தேவி
பலூன் தரிசனம்
தென்னரசன்
போதிவனம் பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 9841450437
கனடா வழிகாட்டி: கனடா, இந்தியர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் ஒன்று. இலங்கைப் போருக்குப் பிறகு தமிழர்களும் அதிகம் வாழ்கிறார்கள். கனடா பிரதமர் பொங்கல் கொண்டாடும் அளவுக்கு அங்குத் தமிழ் செல்வாக்கு மிக்க இனமாக இருக்கிறது. இந்நிலையில் கனடா நாட்டை எளிய தமிழில் இந்த நூல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. கனடாவின் மாகாணங்கள், ஆட்சி முறை எனப் பல விஷயங்கள் நூலில் சொல்லப்பட்டுள்ளன. அந்த ஊரில் பிரபலமான வணிக வளாகங்கள், பழக்க வழக்கங்கள், சுற்றுலாத் தளங்கள் எனப் பல அம்சங்களை நூலாசிரியர் பகிர்ந்துள்ளார். நூலைப் படித்தே அங்கு வாழ்ந்த வாழ்க்கை அனுபவத்தைப் பெறலாம் என்கிற ரீதியில் நூலை எழுதியுள்ளார் நூலாசிரியர். - விபின்
ஓ... கனடா
தேவி நாச்சியப்பன்
புஸ்தகா பதிப்பகம்
விலை:ரூ.200
தொடர்புக்கு: 7418555884