அந்தத் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் ரேவதி டீச்சர் ஓய்வுபெறும் நாள் மார்ச் இருபத்தெட்டு. இன்னும் முப்பத்தொன்பது நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இந்தக் கடைசி நாள்களில் எந்தப் பிரச்சினையிலும் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் முப்பத்தைந்து ஆண்டு உழைப்புக்கான ஓய்வூதியப் பலன்களைச் சிரமமில்லாமல் பெற முடியும். அக்கறை கொண்ட சக தலைமையாசிரியர்களின் அறிவுரை இது.
அப்படி என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது என்று நினைக்கலாம். பள்ளிக் கூடங்களில் தலைமையாசிரியர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்குப் பஞ்சமே இல்லை. சத்துணவு சமைக்கும் ஆயா பூச்சியோடு கத்திரிக்காயை வெட்டிப்போட்டு விட்டாலும்கூடத் தலைமையாசிரியர் தலை தான் உருளும்.
இடைநீக்கம், பதினேழு அ, பதினேழு ஆ இவற்றில் எதை வாங்கினாலும் அதிலிருந்து போராடி மீண்டுவர ஆறேழு மாதங்களாவது ஆகிவிடும். கணிசமான தொகையையும் இழக்க வேண்டியிருக்கும். அதனால்தான் தலைமையாசிரியர்கள் ஓய்வு பெறும் காலம் வந்தால் ஓராண்டுக்கு முன்பிருந்தே கவனமாயிருக்க எச்சரிக்கப்படு கிறார்கள்.
இப்படியான சூழலில்தான் ரேவதி டீச்சருக்குத் தன்னுடைய மேலதிகாரியிட மிருந்து அந்தக் கடிதம் வந்தது. மின்சார வாரியம் தன் ஊழியர்கள் ஆறு பேரின் கல்விச்சான்று நகல்களை அப்பகுதியின் கல்வி அலுவலருக்கு அனுப்பி அவற்றின் உண்மைத்தன்மைக்குச் சான்று கேட்டுள்ளது.
அதை அப்படியே அனுப்பி இன்னும் ஒருவார காலத்துக்குள் உரிய ஆவணங்களைச் சரிபார்த்து உண்மைத்தன்மைக்கான சான்று கடிதத்தை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருந்தார் இவர் களின் மேலதிகாரி. இதுதான் ரேவதி டீச்சருக்கு இப்போது ஏற்பட்டிருக்கக்கூடிய பெரும் பிரச்சினை.
ஆறு பேரின் கல்விச்சான்று களையும் எடுத்துப் பார்த்தார் ரேவதி டீச்சர். முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன் இதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துத் தேர்ச்சி பெற்றதாக இருந்தது. அப்போது இந்தப் பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்தது. பிறகு உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அது தொடக்கப்பள்ளியாகவும் உயர்நிலைப்பள்ளியாகவும் இரண்டாகப் பிரிந்து இரண்டும் தனித்தனி நிர்வாகத்தின்கீழ் இயங்கிவருகிறது.
பள்ளியைப் பிரித்தபோது மேசை, நாற்காலி போன்ற தளவாடப் பொருள்களைப் பிரித்துக்கொண்டதுபோலப் பள்ளியின் பதிவேடுகள், முக்கிய ஆவணங்கள் இவற்றைப் பிரித்துக்கொள்ளவில்லை. அவை அனைத்தும் மேலதிகாரிகளின் உத்தரவின்பேரில் தொடக்கப்பள்ளியின் பராமரிப்பிலேயே இருந்துவருகின்றன.
பீரோவில் பழைய பதிவேடுகள் கட்டுக்குள் இருந்த அந்த ஆண்டுக்குரிய சேர்க்கைப் பதிவேட்டைத் தேடி எடுத்தார். பதினான்கு ஆண்டுகளுக்கான பதிவுகள் அதில் இருப்ப தாக அட்டையின் மேல் எழுதப் பட்டிருந்த ஆண்டுக் குறிப்பு காட்டியது. மிகக் கவனமாகத் திறக்க வேண்டும் என்பது போலிருந்தது பதிவேடு. தாள்கள் பழுப்பேறிப் போயிருந்தன. விரல் பட்டாலே காய்ந்த சருகுபோல நொறுங்கும் தன்மையுடன் இருந்தன. ஆங்காங்கே நொறுங் கியவை சில அதே பக்கங்களில் அடையாளம் காணக்கூடியவையாகக் கிடந்தன.
மின்வாரியத் துறை அனுப்பியிருந்த மாற்றுச்சான்றின் நகல்களை ஒவ்வொன்றாக எடுத்து அதன் சேர்க்கை எண்ணைத் தேடி ஒப்பிட்டுப் பார்த்தார். ஆறு பேரின் சான்றிதழ் எண்களும் ஒத்ததாய் இல்லை. சரி வேறு எண்களில் இவர்களது விவரங்கள் பதியப் பட்டுள்ளனவா என்று ஒவ்வொரு பக்கமாகக் கவனமாகத் தேடிப் பார்த்துக்கொண்டு வந்தார். ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக இவர்களின் பெயர்கள் இருந்தன. பெற்றோர் பெயர், முகவரி ஒத்திருந்தது.
ஆனால், பிறந்த தேதி மற்றும் படித்து முடித்த வகுப்பு போன்றவை வேறு மாதிரியாக இருந்தன. ஐந்தாம் வகுப்பு, நான்காம் வகுப்புகளிலேயே பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தார்கள். ‘நீண்ட நாள்கள் பள்ளிக்கு வராததால்’ என்று காரணமும் குறிப்பிடப்பட்டிருந்தது. ரேவதி டீச்சருக்கு மனதில் மிகப்பெரியதொரு சோர்வு ஏற்பட்டது. பக்கங்களுக்கு அடையாள தாள்களை வைத்துப் பதிவேட்டை மூடிவைத்தார்.
மின் வாரியம் அனுப்பிக்கேட்டிருந்த சான்றிதழ்களைச் சரிபார்த்ததில் ஆறில் ஒன்றுகூட உண்மையில்லை. இதற்கு மிக எளிதாக எந்தவொரு தலைமையாசிரியராலும் பதில் கடிதம் அனுப்பிவிட முடியும். ‘இந்த மாணவர்கள் இந்தச் சேர்க்கை எண்படி இந்த ஆண்டுகளில் எமது பள்ளியில் படித்துத் தேர்ச்சி பெற்றதற்கான பதிவுகளோ, இத்தேதியில் சான்றிதழ் வழங்கியதற்கான பதிவுகளோ எதுவும் எமது பள்ளிப் பதிவேடுகளில் இல்லை’ என்று கொடுத்துவிடலாம். ஆனால், ரேவதி டீச்சரால் அப்படிக் கொடுக்க முடியவில்லை.
இந்த ஆறு பேரில் வீரன் என்பரைப் பற்றி ரேவதி டீச்சருக்கு நன்றாகத் தெரியும். வீரனின் மகன் மணிவேல் இவரிடம் படித்த மாணவன். மிகவும் நன்றாகப் படிக்கக்கூடியவன். நல்ல ஒழுக்கமான மாணவன். இப்போது பன்னிரண்டாம் வகுப்பில் படித்துக்கொண்டி ருக்கிறான். இந்தப் பள்ளியில் படிக்கும்போதே தன்னார்வமாக பாராசூட், விமானம் போன்றவற்றைச் செய்து பாலிதீன் தாள் கொண்டு பறக்கவிடுவான்.
வான்வெளி, சூரியக் குடும்பம் பற்றியெல்லாம் நிறைய கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பான். ‘பன்னிரண் டாம் வகுப்புக்குப் பிறகு வானியல் சம்பந்த மான பாடத்தை எடுத்துப் படிடா’ என்று ரேவதி டீச்சரே அவனிடம் பலமுறை கூறியிருக்கிறார். அவனும் அந்தத் துறை படிப்பின் மீது ஆர்வம் கொண்டு நிறைய கனவுகளோடு இருக்கிறான். அவனுடைய கனவுகள் கருகிவிடக் கூடாது என நினைத்தார் ரேவதி டீச்சர்.
மணிவேலின் அப்பா வீரன் மின் வாரியத்தில் லைன்மேனாக வேலை பார்த்துவருகிறார் என்பதை ரேவதி டீச்சர் அறிந்திருந்தார். இந்தச் சான்றிதழ்கள் போலியானவை என்று நிரூபனமானால் ஆறு பேருக்கும் வேலை போய்விடும். கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பார்த்துவரும் வேலை. இதுவரை பெற்ற ஊதியத்தை எல்லாம் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கலாம்.
இதுவரை சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமல்ல; மானம், மரியாதை எல்லாம் ஒரே நாளில் காணாமல் போய்விடும். பிள்ளைகளின் எதிர்காலம் சூனியமாகிவிடும். உறவினர் களும், அக்கம் பக்கத்தினரும் எப்போது என்று காத்திருந்ததுபோல இழித்தும் பழித்தும் பேசுவர்.
அரசாங்கத்தை ஏமாற்றிய குற்றத்திற் காகச் சமயங்களில் சிறைக்குச் செல்லவும் நேரிடலாம். இந்த அவமானங்களை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியாமல் லைன்மேன் வீரன் - மாணவன் மணிவேலின் அப்பா தூக்கிலும் தொங்கலாம். தலைமையாசிரியர் ரேவதி டீச்சரின் கடிதம் இதை உறுதிசெய்யும். என்ன செய்யப்போகிறார் அவர்? அடுத்த வாரம் பார்ப்போம்.
(நதி அசையும்)
- thamizhselvi1971@gmail.com