இலக்கியம்

நிலாவின் அம்மா எங்கே? | அகத்தில் அசையும் நதி 12

சு.தமிழ்ச்செல்வி

வெளிப்பார்வைக்குத் தெரியாத இவ்வளவு பெரிய குறை தனக்கு இருப்பதை நிலாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதையும் யாரிடமும் சொல்லாமல் மறைத்து விளையாட்டுபோல் திருமணம் செய்து கொண்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து வருந்தினாள். கதிர்வேலுதான் இந்த நேரத்தில் அவளுக்கு வலுவான துணையாக நின்று அவளை ஆற்றுப்படுத்திக்கொண்டிருந்தான்.

“நிலா உனக்குத் தெரியாததில்ல. மருத்துவத்துல இன்னைக்கு முடியாத துன்னு எதுவுமே இல்ல. எத வேணுன் னாலும் நம்ம பண்ணிக்கலாம். நீ கவலப்படாத.” “கொழந்தைய தத்து எடுத்துக்க லாம்னு சொல்றீங்களா?” “அது மாதிரியும் செய்யலாம்தான். ஆனா, சொந்தக்காரங்க எல்லாரும் ஏன் எதுக்குன்னு ஆயிரம் கேள்வி கேப்பாங்க. எல்லாருக்கும் பதில் சொல்லிக்கிட்டிருக்க முடியாது. கொஞ்சம்கூட நிம்மதியில்லாம போயி டும். அதனால நாம யாருகிட்டயும் எந்த உண்மையையும் சொல்ல வேண்டாம். நாம கொழந்த பெத்துக்கலாம்.”

“அது சரியா வருமா?” “நீயே இப்புடி கேக்கலாமா? எல்லாம் சரியா வரும் கவலப்படாத.” “எப்படி?” “கருப்பை மாற்று முறையில” நிலாவால் எதுவும் பேச முடிய வில்லை. எதையோ தீவிரமாக யோசித்தபடி இருந்தாள். “நீ என்ன யோசிக்கிற நிலா?” “ஒரு கொழந்தைக் காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கணுமான்னு தோனுது.” “ஒரு சந்தோஷம் நமக் குக் கெடைக்குதுன்னா அதச் செய்யிறதுல என்ன தப்பு?” “கருப்பை கொடையாளி?” “ஒனக்குத் தெரியுந்தான நிலா.

கருப்பை கொடையை வேற யாருகிட் டேருந்தும் வாங்க முடியாதுன்னு” “என்ன செய்யிறதுங்க?” “ஒங்க அம்மா, அப்பாவ அழைச்சி பேசுவம் நிலா. நம்ம நல்ல நேரம் பாத்தியா ஒங்க அம்மாவோட வயசு ஐம்பத்தி ரெண்டுக்குள்ள இருக்கு. எந்தப் பெண்ணுக்கா இருந்தாலும் நாப்பத்தஞ்சுலேருந்து ஐம்பத்திரண்டு வயசுக்குள்ள இருக்குற தன் அம்மா வோட கருப்பையை மட்டும்தான் கொடையா தர முடியும்.”

“எனக்கு இப்புடி ஒரு கொற இருக்குன்னு தெரிஞ்சா எங்கம்மா தாங்க மாட்டாங்க. அதையும் நான் இவ்வள நாளும் மறைச்சிட்டேன்னு தெரியவந்தா என்ன மன்னிக்கவே மாட்டாங்க.” “அவங்ககிட்டயும் எல்லா உண்மை யையும் சொல்லிக்கிட்டு இருக்க வேண்டாம் நிலா.” “சொல்லாம பிறகு எப்புடி?” “ஒன்னோட கருப்பை குழந்தைய தாங்குற அளவுக்கு வலுவில்லாம இருக்குங்குற மாதிரி ஏதாவது சொல்ல வேண்டியதுதான். எல்லாத்தையும் நான் பேசிக்கிறேன். நீ எதுவும் சொல்ல வேண்டாம்.”

“எனக்கு மொதல்ல சொல்லுங்க. நாம என்ன செய்யப் போறம்?” “இப்ப சென்னையிலயே அந்த மருத்துவமனையில இந்த ஆபரேஷன் பண்றாங்க. அங்கயே ஒரு அஞ்சு வருஷம் இருக்க வேண்டியிருக்கும். அதுக்குத் தகுந்த மாதிரி நம்ம வேலைய மாத்திப்போம்.” “இந்த பிராசஸ் முடிய அஞ்சு வருஷம் ஆகுமா?” “மொதல்ல ஒனக்கும் ஒங்கம்மாவுக்கும் மருத்துவப் பரிசோதனை யெல்லாம் பண்ணுவாங்க. சமயத்துல ஒங்கம்மாவுக்கு மாதவிடாய் நிக்கிற மாதிரி இருந்தாலோ அதுல வேற ஏதாவது பிரச்சினை இருந்தாலோ அதைச் சரிபண்ணுவாங்க. நார்மலான இளம் வயது பெண்ணோட கருப்பை மாதிரி கொண்டுவருவாங்க. பிறகுதான் ஒனக்கு அதை மாத்தி வைப்பாங்க.”

“இதுனால எங்கம்மாவுக்கு எதுவும் பிரச்சினை வராதா?” “ஐம்பது வயசு பெண் ணோட உடம்புக்கு இந்த விஷயங்கள ஏத்துக் கிறது கொஞ்சம் சிரமம் தான்.” “அவங்க இதுக்கெல் லாம் சம்மதிச்சா மட்டும் தான் இதெல்லாம் நடக்கும்.” “அப்பறம்?” “கருப்பைய எடுத்த பெறகு அவங்க ளுக்கு ஒண்ணும் பெரிசா ஆகாது.” “கருப்பைய எடுத்துட்டா அது பெரிய இழப்பு மாதிரி தோணாதா?” “உடல்ரீதியா பெரிசா ஒண்ணும் தெரியாது. சில பேரு மனரீதியா பாதிக்கப்படுவாங்க. அதுக்கும் கவுன்சலிங் கொடுத்திடுவாங்க.”

“சரி, அதுக்கப்பறம் எனக்கு என்ன ஆகும்?” “ஒனக்கு மாதா மாதம் வீட்டுக்குத் தூரம் வரும்.” “ஓ அப்படின்னா எனக்கும் அந்த அடிவயத்து வலி, இடுப்பு வலி, கை கால் கொடைச்சல் எல்லாம் வருமா?” பூரிப்பு ஆர்வமும் பொங்கக் கேட்கும் நிலாவின் முகத்தைப் பார்த்தான் கதிர்வேல். “வலிய அனுபவிக்கிறதுல இப்புடி ஒரு ஆசையா?” “ஆசையெல்லாம் ஒண்ணுமில்ல சும்மாதான் கேட்டேன்.” “வலி எதுவும் இருக்காது.

வீட்டுக்கு தூரம்கிற உணர்வுகூட இருக்காது. ஆனா நாப்கின் நனைஞ்சி இருக்கும்.” “அது எதுக்கு?” என்றாள் உதட்டை பிதுக்கியபடி. “அது மாதிரி இருக்குறதுதான் நிலா பாதுகாப்பானது. அதுவுமே இரண்டு மாதம் மட்டும்தான் சோதனைக்காக பாப்பாங்க. உடம்பு நல்லாருக்கு. கருப்பை நல்லாருக்குண்ணு தெரிஞ்சா உடனே நம்ம உயிரணுக்களை உள்ள வச்சி கருவ வளரவிட்டுருவாங்க.” “ஏங்க நம்ம இயற்கை முறையில முயற்சி பண்ணக் கூடாதா?” அவனை

ஏக்கமாய் பார்த்தாள் நிலா. கதிர்வேலு வுக்கு ஒரு கணம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இப்படியான ஒரு விஷயத்தைப் பற்றி அவன் கொஞ்சம்கூட யோசித்துப் பார்க்கவில்லை. “அதுக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்க மாட்டாங்க நிலா.” “ஏன் வாய்ப்பு கொடுக்க மாட்டாங்க. நம்ம விருப்பம்தான.” “இதுல நம்ம விருப்பத்தவிடவும் அவங்க சக்சஸ்தான் ரொம்ப முக்கி யம். இயற்கை முறையில கருத்தரிக்க கால தாமதமானா அவங்க எப்புடி அதுக்கு ஒத்துப்பாங்க. எந்தப் பிரச்சினையும் இல்லாம இருந்தா அதிகபட்சம் அஞ்சு வருசம் மட்டும் தான் அந்தக் கருப்பைய ஒன்னோட உடம்புல வச்சிருப்பாங்க.”

“அஞ்சு வருசத்துல மூணு புள்ள கூடப் பெத்துக்கலாமே.” “எல்லாம் புரிஞ்சிதான் பேசுறியா நீ.” “இல்ல சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்.” “நீ இதையெல்லாம் நெனைச்சி கவலப்படுறியே, கொழந்த பெத்துக்க ஆசைப்படுறேங்குறதாலதான் நான் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கவே சம்மதிக்கிறேன்.” “ஏன் ஒங்களுக்கு ஒரு வாரிசு வேண் டாமா?” “பெத்தாதான் வாரிசா? எடுத்து வளத்தும் வாரிசாக்க முடியும்.” “உண்மையா சொல்றேங்க. எனக்கும் வாரிசு வேணுங்குற ஆசையெல்லாம் பெரிசா இல்லங்க.”

“அப்பறம் எதுக்கு இவ்வளவு கவலைபடுற?” “நான் ஒரு பொண்ணு. எல்லாப் பொண்ணுங்களுக்கும் நடக்குற மாதிரி எனக்கும் எல்லாம் நடக்கணும். எல்லா உணர்வுகளையும் நானும் அனுபவிக்கணும் அதான்” என்றாள். சட்டென்று அவளது கண்கள் கலங்கி நின்றன. “சரி சரி. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல. அழாத. எல்லாத்தையும் நீயும் சந்தோஷமா அனுபவிப்பே” அவளைச் சமாதானப் படுத்தினான். “ஒரு விஷயத்த மட்டும் நீங்க எனக்காக கேட்டுப் பாக்கணும்.” “என்னம்மா?” “இயற்கை முறையில கருத்தரிக்க கொஞ்சமாச்சிம் அவகாசம் கேக்க ணும்” என்றாள் கெஞ்சுவதுபோல.

“சரி நான் கேட்டுப் பார்க்குறேன்” என்றான் சிரித்துக்கொண்டே. இவ்வளவு உரையாடல்களுக்குப் பிறகு இருவருடைய மனதிலும் ஒரு தெளிவு ஏற்பட்டிருந்தது. அதிகம் தாமதிக்காமல் காரியத்தில் இறங்கி விட்டான் கதிர்வேல். முதல் வேலையாக நிலாவுடன் சென்று நிலாவின் அம்மா, அப்பாவிடம் எல்லாவற்றை யும் எடுத்துச்சொல்லி அவர்களைச் சம்மதிக்க வைத்தான். அடுத்ததாக இடமாற்றத்திற்கு வேண்டிய ஏற்பாடு களைச் செய்தான். முன்னதாக சென் னையில் மருத்துவமனைக்கு அருகில் வாடகைக்கு வீடு ஒன்று பார்த்து அங்கிருந்து சிகிச்சை பெறுவதற்கான வசதிகளைச் செய்தான்.

கதிர்வேல் திட்டமிட்டபடி எல்லாம் நடந்தது. அம்மாவின் வயிற்றில் இருந்தகருப்பை நிலாவின் வயிற்றுக்கு இடம்மாறி இருந்தது. நிலா தன்னை முழுமையாக உணரத்தொடங்கி இருந்தாள். அவளின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட மருத்துவக்குழு நிறைய நிபந்தனைகளுடன் இயற்கைக் கருத்தரிப்புக்காக நான்கு மாதங்கள் அவகாசம் கொடுத்தது. இதுவரை நரகத்தில் நலிவுற்று கிடந்தவளுக்கு யாரோ சொர்க்கத்தின் வாசலைத் திறந்துவிட்டதுபோல இருந்தது. அவள் வணங்கிய தெய் வங்கள் இம்முறை அவளைக் கைவிடவில்லை. இரண்டாவது மாதத்தி லேயே இயற்கை கருத்தரிப்பு அவளுக்குச் சாத்தியமாகி இருந்தது.

மருத்துவக் குழுவுக்கு இது கூடுதல் வெற்றி யாகவும் சாதனையாகவும் அமைந்தது. வாரங்கள் ஓடோட நிலாவின் வயிறு பெரிதாகிக்கொண்டே போனது. முழு நாளும் மருத்து வர்களின் கண்காணிப்பில் இருந்தாள் நிலா. கதிர்வேலுவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. உறவுகள் எல்லாருமே மகிழ்ந் திருந்தார்கள். ஆனால் நிலாவின் அம்மாவால் மட்டும் சந்தோஷப்பட முடியவில்லை. ஆரம்பம் முதலே அவளுக்கு இதில் சம்மதமில்லைதான்.

தன் கணவனும் மருமகனும் இவ்வளவு தூரம் சொல்கிறார்களே என்பதற்காகச் சம்மதித்தாள். அதுவும் தன் மகளுக்காக. தன்னை விட்டால் வேறு யாரும் இதைச் செய்ய முடியாது என்பதற்காகச் சம்மதித்தாள். அவளுக்குக் கருப்பை பற்றி அவர்கள் கூறியது எதுவும் புரியவில்லை. கருப்பை என்பதை ஓர் உறுப்பாகப் பார்க்காமல் மனதிற்குள் ஒழுக்கமாக உணரத் தொடங்கியிருந்தாள்.

நிலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது. சாடையில் அது அப்படியே கதிர்வேலுவைப் போலவே இருக்கிறது என்று பார்க்க வந்தவர்கள் அத்தனை பேரும் சொல்லிச் சென்றார்கள். எல்லோரும் பேசிக்கொண்டிருக் கும்போது, “நான் பத்து மாசம் கெடந்த அதே வயத்துக்குள்ள என்னோட புள்ளயும் பத்து மாசம் கெடந்துட்டு வந்துருக்கான். யாருக்குக் கெடைக் கும் இப்புடி ஒரு கொடுப்பினை” என்று மெய்சிலிர்க்கச் சொன்னாள் நிலா. “எல்லாம் ஒங்கம்மா மனசு வச்சதாலதாம்மா. அவ மட்டும் மாட்டேன்னு சொல்லியிருந்தா இன்னைக்கு இந்த உசுரு நம்ம கையில வந்திருக்குமா சொல்லு” என்றார் நிலாவின் அப்பா.

இதையெல்லாம் கேட்டுக்கொண் டிருந்த நிலாவின் அம்மாவிற்கு உடலுக்குள் கம்பளிப்பூச்சிகள் ஊர்வதுபோல இருந்தது. “யாம் புருசன் குடுத்த புள்ள கெடந்த அதே வயத்துக்குள்ள யாம் மருமவன் குடுத்த புள்ள கெடந்து வளந்துருக்கே. இதுக்கு நானும் எடங்குடுத்துட்டனே. சாதி, சனத்துக்கெல்லாம் இது தெரிய வந்தா காரித்துப்ப மாட்டாங்களா? கடவுளே இனிமே நான் எப்புடி இந்த உசுர வச்சிக்கிட்டு நடமாடுவன். எப்புடி எல்லாரு மொகத்துலயும் முழிப்பன்?” என்று ஏதேதோ யோசித்தவள் மனம் பேதலித்தவளைப் போல யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டுக் கிளம்பி விட்டாள். நிலாவின் குடும்பத்தினரும் உறவுகளும் அந்தப் பரிதாபத்திற்குரிய தாயை இன்றுவரை தேடி வருகிறார்கள்.

(நதி அசையும்)

- thamizhselvi1971@gmail.com

SCROLL FOR NEXT