எழுத்தாளர் தில்லை எழுதிய ‘தாயைத்தின்னி' என்னும் நாவல் தன்னியக்கப் புனைகதையாக வந்துள்ளது. காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்வதாகப் போக்கு காட்டி வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் கதையாகத் தொடங்கி, ஒரு சிறுமி எழுதிய நாட்குறிப்பை இளம்பெண் வாசிப்பதாக நாவல் விரிவடைகிறது.
யுத்தத்தை இரண்டு இடங்களில் மட்டுமே நாவல் தொட்டுச் செல்கிறது. இன்றளவும் ஒரு குழந்தை பிறந்தவுடன் ஏதேனும் துர் சம்பவம் அல்லது மரணம் ஏற்படுமானால், கெடுவாய்ப்பாக அந்த குழந்தையின் மீது பழி சுமத்தும் அறியாமை உள்ள மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாவலில் வரும் சிறுமி, கைக்குழந்தையாக இருக்கும் சமயத்தில் அவள் அம்மை தற்கொலை செய்து கொள்கிறார். எக்காரணமும் அறியாத அந்தக் குழந்தை மீது சுமத்தப்பட்ட பெயர்தான் இந்தத் தாயைத்தின்னி.
தாயை விழுங்கியவள் என்கிற பொருள் சுட்டும் பெயர். அந்தச் சிறுமி பல காலமாகவே இது தன்னுடைய பெயர் என்று நம்புகிறாள். பின் விஷயம் தெரிய வந்தபோது அதை மறுக்கவோ உண்மையான பெயரை கண்டறியவோ அவளுக்குத் திராணி இல்லை. நாவலில் ஓரிருவர் தவிர இப்படியான பட்டப்பெயருடனேயே அனைவரும் உலாவுகிறார்கள். நாவலின் பின் பகுதியில் நவீன இலக்கியவாதிக்கு ‘புலம்பலரசன்’ என்று பெயரிட்டு இருக்கிறார் நாவலாசிரியர்.
இறந்த அம்மாவின் தங்கையின் வளர்ப்பில் வளரும் சிறுமிக்கு, வீடு கடுமையான வதை முகாமாக இருக்கிறது. அன்றாடமும் அடி, உதை, சூடு வைத்தல் எனச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறாள். நிர்க்கதியாக நிற்பவர்களுக்கு இயற்கை ஒரு பெரும் துணையாக என்றென்றும் இருக்கிறது. தாங்க இயலாத மன, உடல் வலியை யாரிடமும் சொல்ல முடியாத அவஸ்தையை மூன்று கிளைகள் கொண்ட ஒரு மரத்திடம் முறையிடுகிறாள். அவளுக்கு அது பெரும் ஆறுதல் தருகிறது.
அந்த மரம் வெட்டி சாய்க்கப்படுகிறது. அதன் பிறகு அந்த மரத்தின் நினைவுகளே அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது. இதே போல் தன் தாய் தற்கொலை செய்து கொண்ட கோயில் கிணறும், அதைச் சுற்றி ஓலமிட்டப்படியே ஓடிக் கொண்டிருக்கும் நாயும் நாவல் முழுக்கச்சிறுமியின் நினைவில் பயணிக்கின்றன. நாயின் ஓலம் கேட்க நேரும் தருணத்தில் தனக்கு நேரப்போகும் கெட்ட சகுனத்தின் முன்னெச்சரிக்கையாக இருந்தது என்பதைப் பின்னாட்களில் அறிந்துகொள்கிறாள் அவள்.
வளர்ப்பு அன்னையின் வீடு என்கிற வதை முகாமை விட்டு வெளியேறி விடுதிக்குச் சென்று படிப்பதை விடுதலையாகக் கருதுகிறாள். அங்கே இன்னும் பல்வேறு அறியாமைக்கு உள்ளாகுகிறாள். உதாரணமாக முகப் பவுடர், உள்ளாடை குறித்த புரிதல், அதன் அவசியம் தெரிந்த பிறகும் வாங்கி அணிய வழியற்ற நிலை போன்றவை சில உதாரணங்கள். மேலும் மாதவிடாய்க் காலத்தில் ரத்தப் போக்கு குறித்தும் தெரிந்திருக்கவில்லை.
விடுதி நாட்களில் பார்த்த ஓவியக் கண்காட்சி சிறுமியை வெகுவாகப் பாதிக்கிறது. அதன் வழி அவளின் பார்வையும் பயணமும் வேறு திசை நோக்கி செல்வதாகவும் தனக்குள் உழன்ற கிணறும் ஐரோப்பிய கொலைக் கிணறும் ஒப்பிட்டுப் பேசும் சாத்தியக்கூறுகளை இந்தத் தொடக்கமே உருவாக்கியதாகத் தோன்றுகிறது. தில்லை, ஒரே உடலில் உள்ள மூன்று பெண் ஆளுமைகளை உரையாட வைத்திருக்கிறார். இது படைப்பின் மாயம் எனலாம். இதை நாவலின் மிக முக்கிய அம்சமாகக் கருதுகிறேன்.
தில்லையின் முதல் நாவல் இது. நாவலில் சில பகுதிகள் சொல்லாமல் விடப்பட்டதாகவே தெரிகிறது. ஒரு வேளை சிறுமியின் நாட்குறிப்பில் சொன்னது போல, ‘‘என் சோகக் கதையை கேட்டு ஒரு மரமே செத்துப்போச்சு; படிக்கிற மனுஷங்க தாங்க மாட்டாங்க" என்பதாக இருக்கலாம். ஆனாலும் விடுபட்டவற்றை இட்டு நிரப்ப மனம் பதைபதைக்க வைக்கிறது.
தாயைத்தின்னி
தில்லை
தாயாதி வெளியீடு:
விலை: ரூ.280
தொடர்புக்கு: 044 2433 2924
- தொடர்புக்கு: velkannanr@gmail.com