பொம்மலாட்டம் முதல் சிறார் நாடகக் கலைஞர் | உலக நாடக நாள் சிறப்புப் பகிர்வு

By செய்திப்பிரிவு

திரை கட்டிப் பொம்மைகளை இயக்கும் கலை, நிகழ்த்துக் கலைகளில் ஒன்று. உலகம் முழுவதும் வழக்கத்தில் இருந்த இந்தக் கலை தமிழகத்தில் 'பொம்மலாட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. ’மரப்பாவை’ வைத்து நிகழ்த்தப்படுவதால் இது ’மரப்பாவைக் கூத்து’ என்றும் அழைக்கப்படுகிறது.

வள்ளித் திருமணம், அரிச்சந்திரன் கதை, பிரகலாதன் கதை என வழிவழியாக வழங்கிவரும் புராணக் கதைகளே பெரும்பாலும் பொம்மலாட்டத்தில் இடம்பெறும். தற்போது சமூகக் கதைகளும் விழிப்புணர்வுக் கதைகளும் நிகழ்த்தப்படுகின்றன. அருகிவரும் இந்தக் கலையைத் தமிழகத்தில் தற்போது ஐந்தாறு குடும்பங்களே (சேலம், மயிலாடுதுறை, மதுரை) நிகழ்த்திவருகின்றன.

திருக்குறள், தேவாரம், குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல் போன்றவற்றில் மரப்பாவைக் கூத்து குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பொம்மைகளை இயக்குபவரே பாடுவதோடு, வசனங்களைச் சொல்கிறவராகவும் இருந்தனர். பிற்காலத்தில் பொம்மைகளைச் சிலர் இயக்க, பாடல்களை மற்றவர் பாடும் முறையும் வந்தது. அதுபோல் தொடக்கத்தில் பாடலும் வசனமும் மட்டுமே இருந்தன.

காலப்போக்கில் ஆர்மோனியம், தபேலா, டோலக் எனப் பக்கவாத்தியங்களும் இணைந்துகொண்டன. பொம்மலாட்டத்தில் பாடுவதற்குத் திடமான குரல் வளம் வேண்டும் என்பதால், ஆண்களே பெண் கதாபாத்திரங்களுக்கும் குரல்கொடுத்து வந்தனர். பிறகு, பெண்களும் பங்குபெறத் தொடங்கினர்.

எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதால் பொம்மைகள் பெரும்பாலும் கல்யாணமுருங்கை மரத்தில் செய்யப்படும். சிலர் அத்தி மரத்திலும் செய்வதுண்டு. மரத்துண்டுகளைப் பதப்படுத்தி முகம், உடல், கைகள், கால்கள் எனத் தனித்தனியாகச் செய்யப்படும். அவற்றின் மீது ‘மக்கு’ பூசுவது என்று ஒரு நடைமுறை உண்டு. பிறகு, கதாபாத்திரத்துக்கு ஏற்ப அவற்றின் மீது மஞ்சள், இளஞ்சிவப்பு என வண்ணம் பூசப்படுகிறது.

சிறு கறுப்புக் கயிற்றின் மூலம் பொம்மைகளின் உடல் பாகங்கள் இணைக்கப்பட்டுக் கயிற்றின் மறுமுனை சிறு குச்சியுடன் இணைக்கப் படுகிறது. குச்சியை அசைத்தால் அதற்கேற்பப் பொம்மை அசையும். ஆடை, அணிகலன் அணிவித்தலுக்குப் பிறகு பொம்மைகள் மேடையேறத் தயாராகிவிடும். இந்தப் பொம்மைகள் ஒன்றரை அடி முதல் மூன்று அடி உயரம் வரைக்கும் செய்யப்படும். - க்ருஷ்ணி

முதல் பிரபல மேடை நாடகம்: பண்டைக் காலத்திலிருந்தே இயல், இசை, நாடகம் ஆகியவை தமிழர்களின் முக்கியப் பொழுதுபோக்கு ஊடகங்களாக இருந்தன. இதில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சிந்தனைகளைத் தூண்டவும் முக்கிய ஆயுதமாக இருந்தவை நாடகங்கள். தெருக்கூத்து, வீதி நாடகங்களில் பங்கேற்ற கலைஞர்கள் மக்களைத் தேடிச் சென்று நாடகங்களை நிகழ்த்தினர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடகக் குழுக்கள் ஒழுங்கமைக்கப்பட்டன. பின்னாளில் மேடை நாடகம் என்கிற வடிவத்துக்கும் அது பாதை அமைத்துக் கொடுத்தது.

தமிழ்நாட்டில் மேடை நாடகத்துக்கான முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் பம்மல் சம்பந்த முதலியார். இவர் ’தமிழ் நாடக மரபின் தந்தை’யாகக் கருதப்படுபவர். 1891இல் சென்னை ஜார்ஜ் டவுனில் சுகுண விலாச சபாவைத் தொடங்கினார் பம்மல் சம்பந்த முதலியார். இங்குதான் அவர் எழுதிய ‘மனோகரா’ நாடகம் 1897இல் மேடையேற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தின் மிகவும் பிரபலமான முதல் மேடை நாடகமாக இது அறியப்படுகிறது.

1910இல் நாடக ஆளுமை சங்கரதாஸ் சுவாமிகள் 'பாய்ஸ் கம்பெனி'யை உருவாக்கி ‘வள்ளி திருமணம்’, ‘கோவலன்’ போன்ற நாடகங்களை அரங்கேற்றினார். பின்னாளில் டி.கே.எஸ். பிரதர்ஸ் சொந்தமாக நாடகக் குழுவைத் தொடங்கி ‘குமாஸ்தாவின் பெண்’, ‘கள்வனின் காதலி’, ‘ஔவையார்’ போன்ற பிரபலமான நாடகங்களை அரங்கேற்றினர்.

1940களிலும் 1950களின் முற்பகுதியில்தான் கட்டண உறுப்பினர்களைக் கொண்ட சபா கலாச்சாரம் தமிழகத்தில் தோன்றியது. அந்தக் காலக்கட்டத்தில் சுமார் 150 நாடகக் குழுக்களும் 125 சபாக்களும் தமிழகத்தில் இருந்துள்ளன.- மிது கார்த்தி

பாலாமணி அம்மாள்: நாடக அரசி எனப் புகழப்படும் கும்பகோணம் பாலாமணி அம்மாள், முதன்முதலாகப் பெண்களை மட்டும் வைத்து ‘பாலாமணி அம்மாள் நாடகக் கம்பெனி’ என்கிற குழுவைத் தொடங்கினார். பெண்கள் 70 பேர் இதன் அங்கத்தினர். பிற்காலத்தில் நாடகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட பெட்ரோமாக்ஸ் விளக்கை அறிமுகம் செய்துவைத்தவர் இவரே.

மனோன்மணீயம்: பேராசிரியர் சுந்தரனார் இயற்றிய ‘மனோன் மணீயம்’ நாடகமே தமிழின் முதல் கவிதை வடிவ நாடக நூல். கவிஞர் லார்ட் லிட்டன் எழுதிய ‘இரகசிய வழி’ என்கிற கதையைத் தழுவி எழுதப்பட்ட நாடகம் இது. தமிழகத்தில் கதை நடப்பதுபோல் அதை மாற்றி மொழிபெயர்த்திருப்பார் சுந்தரனார். இதில் இடம்பெற்ற, ‘நீராருங் கடலுடுத்த’ பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தானது.

இயல் இசை நாடக மன்றம்: மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் செயல்பாடுகளை மாநில அளவில் நிறைவேற்று வதற்காகத் தமிழ்நாடு அரசால் 1955இல் தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கம் தொடங்கப்பட்டது. பாரம்பரியமிக்க தமிழகக் கலைகளைப் போற்றிப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம். 1973இல் இதன் பெயர் ‘தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்’ என மாற்றப்பட்டது.

மேடை - திரை உறவு: தமிழ்த் திரைப்படத்தின் தொடக்கக் காலக்கட்டத்தில் பெரும்பாலும் மேடை நாடகங்களே திரைப்படங்களாக உருவாக்கப்பட்டன. சில நாடகங்கள் திரைப்படமான பின் சாகாவரம் பெற்றன. உதாரணம்: ‘ரத்தக் கண்ணீர்’.

சிறார் நாடகக் கலைஞர்: வேலு சரவணன், சிறார் நாடக அரங்கு சார்ந்த தீவிர செயல்பாட்டாளர். கிராமம் சார்ந்த கதைகளில் தனக்கேயான நிகழ்த்து முறைகளை உருவாக்கியவர். புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைப் பள்ளியின் துறைத் தலைவராக உள்ளார். இவருடைய ‘கடல் பூதம்’, ‘குதூகல வேட்டை’ என்னும் இரண்டு சிறார் நாடகங்களும் இரண்டாயிரம் முறைக்கு மேல் மேடையேற்றப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

17 days ago

மேலும்