மார்ச் 27: உலக நாடக நாள் பின்புலமும், தமிழ் நாடகக் கலை முன்னோடிகளும்!

By செய்திப்பிரிவு

நாடக ஆசிரியரும் ஐநாவின் துணை அமைப்பான யுனெஸ்கோவின் முதல் தலைமை இயக்குநருமான ஜே.பி.பிரீஸ்ட்லீயின் முன்னெடுப்பில் சர்வதேச நாடக அரங்கப் பயிலகம் (International Theatre Institute) 1948-இல் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிவுற்றுப் பனிப்போர் தொடங்கியிருந்த காலக்கட்டத்தில் பண்பாடு, கல்வி, கலைகள் சார்ந்த யுனெஸ்கோவின் இலக்குகளை அடைவதற்குத் துணைபுரியும் வகையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

சர்வதேச நாடக அரங்கப் பயிலகமும் நாடகத் துறையினரும் இணைந்து ‘தியேட்டர் ஆஃப் நேஷன்ஸ்’ என்னும் முதல் நாடகத் திருவிழாவை 1957 மார்ச் 27 அன்று பாரிஸில் நடத்தின. 1961இல் ஜூன் மாதத்தில் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற இவ்வமைப்பின் ஒன்பதாம் மாநாட்டில் நாடகங்களுக்கென்று ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்மொழியப்பட்டது.

சர்வதேச நாடக அரங்கப் பயிலகத்தின் பின்லாந்து மையத்தைச் சேர்ந்தோர்தான் இதற்கான முன்முயற்சியை எடுத்தவர்கள். இதன்படி 1962 ‘தியேட்டர் ஆஃப் நேஷன்ஸ்’ திருவிழா தொடங்கப்பட்ட நாளான மார்ச் 27 அன்று உலக நாடக நாள் (World Theatre Day) முதல் முறையாகக் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் உலக நாடக நாள் பல்வேறு வழிகளில் கொண்டாடப்பட்டுவருகிறது.

உலகின் அனைத்து வகையான நாடக வடிவங்களின் முன்னேற்றத்துக்கு உதவுவது, அனைத்து வகை அரங்க நாடகங்களின் மதிப்பை மக்களுக்கு உணர்த்துவது, நாடகக் குழுக்கள் தமது படைப்புகளை அனைவருக்கும் கொண்டுசெல்ல உதவுவது ஆகியவை உலக நாடக நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம்.

ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச நாடக அரங்கப் பயிலகத்தின் அழைப்பின் பேரில் உலக அளவில் புகழ்பெற்ற மூத்த நாடக ஆளுமை ஒருவர் ‘நாடக நாள் செய்தி’யை வெளியிடுவார். அது 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அன்றைய நாடக நிகழ்வுகளின்போது பார்வையாளர்கள் முன்னிலையில் வாசிக்கப்படும். 2025ஆம் ஆண்டுக்கான உலக நாடக நாள் செய்தியை அளிக்கவிருப்பவர் எகிப்திய நாடக இயக்குநர், எழுத்தாளர் தியடோரஸ் டொர்ஸோபோலஸ் (Theodoros Terzopouls).

தமிழ் நாடகக் கலை முன்னோடிகள்:

சங்கரதாஸ் சுவாமிகள்: ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ எனப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நாடக உலகில் கோலோச்சியவர். 40க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார்.

பம்மல் சம்பந்த முதலியார்: ‘தமிழ் நாடகத்தின் தந்தை’ எனப் புகழப்படுபவர் பம்மல் சம்பந்த முதலியார். இவர் பல்வேறு நாடக நூல்களை ஆராய்ந்து ‘நாடகத் தமிழ்’ என்னும் நூலை எழுதியிருக்கிறார். தமிழ் நாடகங்களை முதன் முதலில் உரைநடையில் எழுதியவர் இவர். 1891இல் சென்னையில் ‘சுகுண விலாச சபா’ என்கிற அமெச்சூர் நாடக சபையைத் தோற்றுவித்தவர்.

கோவிந்தசாமி ராவ்: தெருக்கூத்து என்னும் நாடக வடிவம் தோன்றி வளர வித்திட்டவர் கோவிந்தசாமி ராவ். நாடகத்தின் நேர அமைப்பை அந்தக் காலத்துக்கு ஏற்ப மாற்றியவரும் இவரே.

சி.கண்ணையா: தமிழ் நாடகங்களின் காட்சியமைப்புகளின் வழிகாட்டி எனப் புகழப்படுபவர் சி.கண்ணையா. ‘கிருஷ்ண வினோத சபா’ என்கிற நாடகக்குழுவைத் தோற்றுவித்தவர். மின்விளக்குகளோடு பல வண்ணங்களில் மேடையை அலங்கரித்தவர். பசு, மான், யானை போன்ற விலங்குகளை நடிக்க வைத்துப் புதுமை படைத்தவர்.

டி.எஸ்.இராசமாணிக்கம்: நவாப் ராஜமாணிக்கம் என அழைக்கப்பட்ட டி.எஸ்.இராசமாணிக்கம், நாடகக் கலையை மக்கள் இலக்கியமாகக் கருதியவர். இவரது நாடகங்கள் அனைத்தும் கிட்டட்தட்ட எட்டாயிரம் முறை மேடையேறிய பெருமை கொண்டவை.

அவ்வை.டி.கே.சண்முகம்: டி.கே.எஸ். என அழைக்கப்படும் டி.கே.சண்முகம் 1918இல் தன் ஆறாவது வயதில் நாடகத் துறைக்கு வந்தார். நடிகர், நாடக ஆசிரியர், நாடகத் தயாரிப்பாளர் எனப் பலவற்றிலும் சிறந்து விளங்கியவர். 1935இல் திரைத்துறையில் நுழைந்தார். - ப்ரதிமா

பழமையான அரங்கம்: கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் அமைந்துள்ள டயோனிசஸ் அரங்கத்துக்குள் சென்றால் பண்டைய நாடக வரலாற்றை நம்மால் புரிந்துகொள்ள முடியும். உலகின் பழமையான நாடக அரங்கமாக அறியப்படும் டயோனிசஸ், பொ.ஆ.மு. (கி.மு.) 6ஆம் நூற்றாண்டில் பிசிஸ்ட்ராடஸால் (Pisistratus) திறக்கப்பட்டது.

டயோனிசஸ் அரங்கின் கட்டுமானமே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மலைப் பகுதிகள் சூழ்ந்திருக்க, சுண்ணாம்புக்கல்லில் அரை வட்ட வடிவில் காணப்படும் இந்த அரங்கில் சுமார் 17,000 பேர் வரை அமர்ந்து நாடகங்களைக் காணலாம். டயோனிசஸ் அரங்கில் அமைந்துள்ள கல் இருக்கைகள்

அங்கு நடத்தப்படும் நாடகங்களுக்குக் கூடுதல் ஒலி அழகைச் சேர்த்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அரங்கில் ஏராளமான நாடகங்களும் இசை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

ஏதென்ஸை ரோமானியர்கள் ஆக்கிரமித்தபோது டயோனிசஸ் அரங்கம் கணிசமாகச் சேதமடைந்திருக்கிறது. டயோனிசஸ் நாடக அரங்கம் கிரேக்கத்தின் வரலாற்றை மட்டுமல்ல, பழமையான நாடக வரலாற்றுக்கும் சான்றாக இருக்கிறது.- எல்னாரா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

14 hours ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

10 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

17 days ago

மேலும்