நிலாவுக்குத் தேர்வு முடிந்தது. நினைத்ததை விடவும் மிக நன்றாக எழுதியிருந்தாள். தேர்வுக்குப் பின்னான ஆசிரியர்களின் கணிப்பில் நிலா பள்ளியில் முதலிடம் வரலாம் என்பது போலப் பேசிக்கொண்டார்கள். ஒவ்வோர் ஆண்டும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவியருக்குப் பணமுடிப்பு கொடுப்பார்கள்.
இந்த ஆண்டு அது நிலாவுக்குக் கிடைக்கலாம் என்கிற பேச்சு பள்ளி முழுவதும் பரவியது. அதற்குப் பிறகு அங்கிருப்போர் பார்க்கும் பார்வையில் ஒருவித மரியாதை தெரிந்தது. இது அவளுடைய கௌரவத்தை சட்டென உயர்த்திவிட்டதைப் போல உணர்ந்தாள்.
இது எல்லாவற்றிற்கும் காரணம் தான் சொன்ன அந்தப் பொய்தான் என்று நம்பினாள். அந்தப் பொய்க்குப் பிறகுதான் என்னைச் சுற்றி ஒவ்வொரு நாளும் இவ்வளவு பூக்கள் மலர்கின்றன என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். இந்தப் பொய் அழகானதொரு கண்ணாடிப் பேழை.
இதைக் கொண்டு எவ்வளவு மகிழ்வை, எவ்வளவு வரங்களை நிரப்பிவைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவையும் நிரப்பிக்கொள்வேன். ஒருபோதும் இதை நான் கைதவற விட்டுவிடக் கூடாது என்று மனதிற்குள் உறுதியேற்றுக்கொண்டாள்.
விடுதியிலிருந்து அவளை வீட்டிற்குஅழைத்துச் செல்ல ஆள்கள் வந்திருந் தார்கள். இருபத்தியொண்ணாம் நாள் கணக்கிட்டு நிலாவிற்குச் சடங்கு செய்வதென்று முடிவுசெய்து அதற்கான வேலை களையும் செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.
வீட்டின் முன் தெருவடைத்து பந்தல் போட்டு, உறவையெல்லாம் கூட்டிச் சடங்கு செய்து, தடபுடலாக விருந்து வைத்தார்கள். நிலாவின் அம்மா இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டாள். நான் நம்பிய குடிசாமி என்னைக் கைவிடவில்லை என்று குடும்பத்தோடு சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றிவிட்டு வந்தார்கள்.
தேர்வு முடிவு வெளிவந்தது. எல்லா ரும் எதிர்பார்த்தது போலவே பள்ளியில் முதலிடத்தை அவள் பிடித்திருந்தாள். பாராட்டுகளும் பரிசும் கிடைத்தபோது அதற்குக் காரணமாயிருந்த ஆசிரியர் களையும் பெற்றோரையும் எல்லாரும் பாராட்டத் தவறவில்லை. ஆனால், இவ்வளவுக்கும் காரணம் இந்த ஒரு பொய் மட்டும்தான் என்பதை அவள் திடமாக நம்பினாள்.
இந்தப் பொய்க்கு நன்றி சொன் னாள். பொய்மை பாராட்டுவது நல்லதா என்று அவள் மனதில் உறுத்திய போதெல்லாம் ‘பொய்மையும் வாய்மையிடத்த’ என்று வள்ளுவர் அவளைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். அதே பள்ளியில் மேல்நிலை வகுப்புகளை முடித்தாள்.
இருபத்தெட்டு நாள் மாதவிடாய் சுழற்சி பற்றி மற்றவர்களுக்குச் சொல்லித் தரும் அளவுக்குத் தெரிந்து வைத்திருந்ததாலும் பெரும்பகுதி நாள்களை விடுதியில் கழித்ததாலும் எப்போதும் படிப்பு படிப்பு என்று புத்தகமும் கையுமாகத் தனியிடம் தேடிப்போய் உட்கார்ந்து கொள்வதாலும் யாருடைய சந்தேகப் பார்வைக்கும் கண்காணிப்புக்கும் ஆளாகாமல் அவளால் தொடர்ந்து தப்பிக்க முடிந்தது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அவளுக்குத் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது. ஐந்தாண்டு படிப்பு முடிவதற் குள்ளாகவே சொந்தங்கள் வழியாக நிறைய வரன்கள் வந்தன. இப்போது அவளது படிப்பே அவளுக்குக் கேடயமாக இருந்து அவளைக் காத்தது.
அவளது உறவுகளில் மருத்துவம் படித்த மாப்பிள்ளைகள் யாரும் இல்லை. இதனால் எல்லாரையும் தட்டிக்கழிப்பது சுலபமாக இருந்தது நிலாவுக்கு. இப்படியே நீண்ட நாள்கள் தப்பிக்க முடியாது என்று மட்டும் தெரிந்து இருந்தது அவளுக்கு.
அவளுடைய அப்பா தீவிரமாக மாப்பிள்ளை தேடும் யோசனையில் இருக்கிறார் என்று அவளுடைய அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். நடப்பது நடக்கட்டும். எது வந்தாலும் சமாளிப்போம் என்று இருந்துவிட்டாள். படிப்பு முடிந்த கையோடு அப்பா ஒரு மாப்பிள்ளையைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார் “பத்துப் பொருத்தமும் உத்தமமாகப் பொருந்தியுள்ளது” என்றார். நிலா மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.
இருந்தாலும் கதிர்வேலை அவளுக்குப் பிடித்திருந்ததால் எதுவும் மறுப்பு சொல்லாமல் ஏற்றுக் கொண்டாள். திருமணத்திற்குப் பிறகும் எத்தனையோ சடங்குகள். எல்லா இடங்களிலும் அவளு டைய பொய்யை எளிதாகச் சமாளிக்க நன்றாகப் பழகியிருந்தாள்.
நிலாவுக்கும் கதிர்வேலுக்கும் வெவ்வேறு ஊர்களில் பணி. மாதத்தில் இரண்டு மூன்று நாள்கள் மட்டுமே ஒன்றாயிருக்க முடிந்தது. கதிர்வேல் எப்போதும் எல்லா வகையிலும் அவளுக்குச் சாதகமான கணவனாகத்தான் நடந்துகொண்டான். அவனிடம் மட்டுமாவது உண்மையைச் சொல்லி விடலாமா என்று அவனுடன் இருக்கும் ஒவ்வொரு முறையும் முயற்சி செய்வாள். ஆனால், இதுவரை அவளால் சொல்ல முடியவில்லை.
மணமாகி இரண்டு வருடங்கள் முடிந்திருந்தது. விடுவார்களா உறவுகள். குழந்தையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கதிர்வேலுமேகூட குழந்தை விஷயத்தில் ஏமாற்றமடைந்து கொண்டிருந்தான். நமக்கு என்னதான் பிரச்சினை என்று எத்தனையோ முறை யோசித்திருக்கிறாள். ஆனால் இதுவரை அவள் உடலை அவள் சோதனைக்குக் கொண்டுபோனதில்லை. அதற்கான சந்தர்ப்பமும் துணிவும் அவளுக்கு இருந்ததில்லை. முதன் முறையாகத் தன் உடலைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.
தன் மருத்துவர் அடையாளத்தைக் காண்பிக்காமல் சோதித்துப் பார்த்தாள். ஏற்கெனவே அவள் அனுமானித்திருந்த முடிவுதான் என்றபோதும் அவளால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளலாமா என்பது போன்ற யோசனைகள் எல்லாம் மேலோங்கிக்கொண்டிருந்தன.
கண் இல்லாமல், கைகால்கள் இல்லாமல் பிறப்பது போலத்தானே கருப்பை இல்லாமல் போவதும். ‘கடவுளே நான் என்ன தப்பு செஞ்சேன்? எனக்கு எதுக்காக இப்படி ஒரு கொறைய வச்சிப் படைச்சே’ என்று அழுது புலம்பினாள். வாழ்க்கையே இருண்டு போனது போலிருந்தது.
இதற்கு மேலும் மறைக்க வேண்டாம். கதிர்வேலுவிடம் உண்மையைக் கூறிவிடு வோம் என்று துணிந்து பரிசோதனை முடிவுகளையெல்லாம் அவனிடம் கொடுத்தாள். அவனுக்கும் பேரதிர்ச்சிதான் என்றபோதும் எல்லா ஏமாற்றங்களையும் புறந்தள்ளிவிட்டு அவளைத் தேற்றினான். பல கதைகளையும் சொன்னான். அவள் மனம் சமாதானமடையாமல் தவித்தாள். “நிலா, இது ஒரு பெரிய விஷயமே இல்ல விடு. நம்ம ஊருல ஒரு பெரிய தலைவர். அவரே சொல்லிருக்காரு தெரியுமா? “ “என்னன்னு...”
“பெண்களுக்குக் கர்ப்பப்பை தேவையில்ல. அத அகற்றிட்டு பெண்கள் எல்லாம் நிம்மதியாக இருக்கலாம்னு.” “அவரோட கர்ப்பப்பைய எடுத்துட்டுதான் இருக்காராமா?” “அவரு ஆணும்மா? அவருக்கு எப்புடிக் கர்ப்பப்பை இருக்கும்?” “அதான பாத்தன்” என்றாள் நிலா. “நீ என்ன சொல்ற நிலா?” என்றான் கதிர்வேல். “என்னத்த சொல்ல. அத வுட்டுத்தள்ளுங்க. இந்த இருள்லேருந்து வெளிய வர எனக்கு ஏதாவுது வழியிருக்கான்னு சொல்லுங்க” என்றாள் நிலா.
(அடுத்த வாரமும் வருவாள்)
- thamizhselvi1971@gmail.com