அது ஒரு பாரம்பரியமான பள்ளி. நம் தமிழ்நாட்டின் பண்பாட்டையும் கலாச்சார விழுமியங்களையும் கற்றுத்தரும் முன்மாதிரியான பள்ளி. அங்கு நான் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டுப்பாடான விடுதியில் தங்கி படித்தேன். அந்த இரண்டுங்கெட்டான் வயதில் என்னையொத்த பெண்பிள்ளைகளுடன் தங்கியிருந்தபோது எனக்குக் கிட்டிய அனுபவங்கள் ஏராளம். அந்த நினைவடுக்குகளில் இருந்து ஒன்றை உருவுகிறேன். என்
ஆருயிர்த் தோழி நிலா வருகிறாள். இது உண்மைக் கதைதான். நிலாவின் கதை. நிலாவுக்குப் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு இன்னும் இரண்டு நாள்களில் ஆரம்பிக்கப் போகிறது. தோழிகள் எல்லாரும் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நிலாவுக்கு மட்டும் படிப்பில் மனம் பதியவில்லை.
அவள் மனதில் இந்த ஒரு விஷயம் மட்டும்தான் சதா ஓடிக் கொண்டிருக்கிறது. நமக்கு மட்டும் ஏன் இன்னும் அது நடக்கவில்லை. இவளுடன் விடுதியில் தங்கிப்படிக்கும் அத்தனை தோழிகளும் மாதா மாதம் வயிற்றுவலி என்றும் அடிக்கடி கழிவறைக்குப் போக வேண்டியிருக்கிறது என்றும் ஒரு நாளைக்கு ஆறு முறைக்கு மேல் நாப்கின் மாற்ற வேண்டியாகிறது என்றும் தத்தமது மாத விடாய் அனுபவங்களைச் சொல்கிறார்கள்.
அது குறித்துச் சலித்துக்கொள்வது போலப் பகிர்ந்துகொண்டாலும் உள்ளுக்குள் ஒருவிதமான பெருமை பொங்கச் சொல்வதைப் போலத்தான் தோன்றியது நிலாவுக்கு. அவர்களைப் பார்க்க இவளுக்குச் சற்றுப் பொறாமையாகக்கூட இருக்கும். காலாண்டு விடுமுறைக்கு வீட்டுக்குப் போனபோது உறவினர்கள், “நிலா இன்னுமா ஒக்காரல? எங்களுக்கெல்லாம் எப்ப புட்டு, களி போடப்போறீங்க?” என்று பலரும் பலவிதமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நிலாவின் அம்மாவுக்கு அப்போதெல்லாம் முகம் செத்துப்போகும். “நல்லா சாப்புட வேண்டிய வயசுல ஹாஸ்டல்ல போயி கெடக்குது. வீடுன்னா மீனோ கறியோ ஆக்குவம்.
அங்க எல்லா நாளும் காய்கறி சாப்பாடுதான். என்னத்த சாப்புட்ற போவுது. அதான் ரெத்தம் செத்த மாதிரி வந்து நிக்கிது” என்பாள் வருத்தத்துடன். நிலாவின் அம்மாவை மட்டும் தனியாகக் கூப்பிட்டு காதுக்குள் குசுகுசுவென்று ‘மறுபடியும் ஓம்பொண்ணு ஹாஸ்டலுக்குப் போறத்துக்குள்ள காக்காய அடிச்சி கொழம்புவச்சி போடு.
சோவ தெளியும்’ என்பார்கள். கிண்டலுக்குச் சொல்கிறார்களா அல்லது உண்மையாகவே காக்கா கறி தின்றால் ரத்தம் ஊறுமா என்பதையெல்லாம் பற்றி அவளால் யோசிக்க முடியாது. எல்லாரும் ஏளனமாகப் பார்க்கும்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்படுவாள். ஓராண்டுக்கு முன்பே குலதெய்வத்திற்கு வேண்டிக்கொண்டு துணியில் காசு முடிந்துபோட்டிருந்தாள்.
நிலாவுக்குத் தன் அம்மாவின் முகம் கண்முன் வந்துகொண்டேயிருந்தது. அவளை நினைக்க நினைக்க நிலாவுக்குப் பாவமாக இருந்தது. அம்மாவின் கவலையைப் போக்க நமக்கு எப்போதுதான் விடியப்போகிறதோ என்கிற ஆற்றாமையே அவளைப் படிப்பு பற்றியெல்லாம் சிந்திக்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது. இதோ இன்னும் இரண்டு நாள்களில் ஆரம்ப மாகும் தேர்வு பத்து நாள்களில் மொத்தமாக முடிந்துபோய்விடும்.
அதன் பிறகு இவளும் வீட்டிற்குத்தான் போயாக வேண்டும். அங்கு சொந்தங்கள், அக்கம்பக்கத்தினர் என்று கடித்துக் குதற காத்திருக்கும் எல்லாரையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்கிற கவலை வேறு. அவளால் எப்படித்தான் படிப்பில் கவனம் செலுத்த முடியும்? இந்தத் தொல்லையிலிருந்து விடுபட ஏதாவது வழி இருக்கிறதா என்று நம் தோழிகள் யாரிடமாவது கேட்கலாமா என்று பலவாறும் எண்ணிக் கொண்டி ருந்தவளின் மனதில் சட்டென்று அந்த யோசனை தோன்றியது.
இன்று நமக்கு அது நிகழ்ந்துவிட்டதாக நம் வீட்டிற்குக் கடிதம் போட்டுவிட்டால் என்ன என்று நினைத்தாள். இப்படி நினைத்த மாத்திரத்திலேயே அவளின் முகத்தில் புன்னகை அரும்பியது. விடுதியில் படிக்கும் தோழிகள் வயதுக்கு வந்து விட்டால் உடனிருக்கும் தோழிகள்தான் அதை அவர்களது வீடுகளுக்குக் கடிதமெழுதி தெரியப் படுத்துவார்கள். நிலாவே கூட இதுபோல் இரண்டு, மூன்று கடிதங்களை எழுதியிருக்கிறாள். அதனால் மாலதியோ கோமதியோ எழுதுவது போல தானே தனது வீட்டிற்குக் கடிதம் எழுதி விடுவதென முடிவு செய்தாள்.
விடுதியிலிருந்து கடிதம் எழுத அஞ்சல் அட்டையைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், இதுபோன்ற தகவல்களை எழுத மட்டும் பிள்ளைகள் நீலநிற உள்நாட்டு அஞ்சல் உறைகளைப் பதுக்கி வைத்திருப் பார்கள். அதுபோல் ஒன்று நிலாவிடமும் இருந்தது. இதுவுமேகூட அவளுடைய அம்மாதான் எதையோ எதிர் பார்த்து, ‘எதற்காவது ஆகும், பெட்டிக்குள் வைத்துக்கொள்’ என்று வாங்கிக் கொடுத்தனுப்பியிருந்தாள்.
தனியிடமாகப் பார்த்து எழுத உட்கார்ந்தவளுக்கு அப்போதுதான் புத்தியில் உறைத்தது. நம்முடைய கையெழுத்தைப் பார்த்து நாமே எழுதியிருப்பதைக் கண்டுபிடுத்து விடுவார்களே என நினைத்தவள் தோழி மாலதியின் உதவியை வேண்டினாள். மாலதி உள்ளம் பூரிக்க முக மலர்ச்சியுடன் நான் எழுதித் தருகிறேன் என்று ஓடிவந்தாள். அதற்கு முன்னதாக நெருங்கிய தோழிகள் ஐந்தாறு பேரைக் கூக்குரலிட்டு அழைத்தாள். “நிலா சடங்காயிட்டாடி” எனச் சொல்ல, அவ்வளவு தான்.
“சடங்காயிட்டான்னு சொல்லாத, கொழந்த பெத்துட்டான்னு சொல்லு.”
“என்ன கொழந்தடி? ஆணா, பொண்ணா?”
“இப்படியெல்லாம் கேக்காதடி. மேல் பேபியா ஃபீமேல் பேபியான்னு கேளுடி. அப்பத்தான் அவ கரெக்டா பதில் சொல்லுவா.”
“எனக்கென்னவோ இவ்ளோ நாள் கழிச்சி ஆனதால நிலாவுக்கு ரெட்ட கொழந்தையா இருக்குமோன்னு தோணுதுடி.”
இப்படி தோழிகள் மகிழ்ச்சியாகக் கிண்டலும் கேலியும் செய்தபோது உண்மையாகவே நிலா வெட்கப்பட்டு முகத்தை மூடிக்கொண்டாள். மகிழ்ச்சியால் நெஞ்சம் பூரித்து விம்மியது. அதோடு நில்லாமல், ‘உனக்கு நாப்கின் வேணுமா? அதைப் பயன்படுத்தத் தெரியுமா? நான் சொல்லிக் கொடுக்கட்டுமா?’ என்று ஆளாளுக்கு அக்கறையோடு விசாரிக்கவும் செய்தார்கள்.
‘இதெல்லாம் உண்மையாக இருக்கக் கூடாதா தெய்வமே’ என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டாள் நிலா. ஒரு கட்டத்தில் இதில் எதுவும் பொய்யில்லை. எல்லாமே உண்மைதான் என்று நிலாவே தன் மனதுக்குள் பிடிவாதமாக நம்பவும் தொடங்கிவிட்டாள்.
‘அன்புள்ள அம்மா, அப்பாவிற்கு நிலாவின் தோழி மாலதி எழுதும் மடல். நிலா இன்று புதன்கிழமை அதிகாலை 4.05க்குப் பூப்பெய்தியிருக்கிறாள் என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது நாங்கள் பொதுத்தேர்வு எழுதும் நாள்கள் என்பதால் எந்தவிதமான நடைமுறை வழக்கங்களையும் இப்போது பின்பற்ற வேண்டாம் என்று நிலா கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறாள். அவளுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் தோழிகள் நாங்கள் செய்து கொடுக்கிறோம். கண்டிப்பாகத் தேர்வு நேரத்தில் பார்க்க வரவேண்டாம்..’
சுற்றி நின்று தோழிகள் சொல்லச் சொல்ல மாலதி எழுதி முடித்தாள். வெளியிலிருந்து வந்து படித்துச் செல்லும் தோழி ஒருத்தி அதை அஞ்சலில் சேர்த்தாள். நிலா என்றுமில்லாத அனுபவத்தை இன்று பெற்றிருந்தாள். உடலின் ஒவ்வொரு செல்லிலும் பூரிப்பு பரவிக்கொண்டிருப்பதை அவளால் உணர முடிந்தது. இப்போதும் புத்தகத்தைத் திறந்து ஒருவரி கூடப் படிக்க முடியவில்லை அவளால். மனம் திக்கற்று வானத்தில் பறந்துகொண்
டிருந்தது. படிக்காமலேகூடத் தேர்வெழுதி நூத்துக்கு நூறு வாங்கிவிடலாம் என்பது போன்றதொரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.
(நிலா அடுத்த வாரமும் வருவாள்)
- thamizhselvi1971@gmail.com