இந்தக் கவிதை நூல், போர் சார்ந்த அக உணர்வினைச் சொல்வதன் மூலம் புதிய சொல்முறையில் எழுதப்பட்டுள்ளது. இதுபோல போர், அதுசார்ந்த இழப்புகளையும், மனச்சிக்கல்களையும் நூல் முழுக்கச் சொல்லப்பட்டுள்ளது. தமிழில் முரண்தொடை என்று ஓர் இலக்கணம் இருக்கிறது. முரண்பட்ட இரண்டு விஷயங்களைக் அருகருகே உவமையாக வைப்பது. இவ்வாறு எதிர் எதிரான விஷயங்களை அருகருகே வைக்கிற உத்தியை ஜோசப் ராஜா கவிதையில் செய்கிறார்.
காலைப் பொழுதில் நம் அன்றாடச் செயல்களை வரிசையாக அடுக்கிவைத்து அதை அடுத்து காஸாவின் அகதிகள் முகாமின் காலைப் பொழுதை அடுக்குகிறார். அவர் செய்வது இரண்டு காட்சிகளையும் அருகருகே வைப்பது மட்டும்தான். வெடிகுண்டுகள் நம் மனதில் வெடிக்கின்றன.
‘சாலை என் வீடு. காற்று என் முகவரி’ என்று எழுதினார் தர்வீஷ். ‘நாங்கள் விழிப்பது உயிரோடு இருக்கிறோம் என்று இந்த உலகத்துக்குச் சொல்வதற்கு’ என்று அலரீர் எழுதுகிறார். அவர் எழுதுவதில் ஆச்சர்யம் இல்லை. அவரது வீடு குண்டு வெடிப்பில் தகர்ந்துவிட்டது. அவரது உறவினர்கள் இறந்துவிட்டார்கள். அவரது வீடு குண்டுவெடிப்பில் தகர்ந்துவிட்டது.
அவரது உறவினர்கள் இறந்துவிட்டார்கள். உடலில் எங்குக் காயம்பட்டாலும் கண்கள்தான் அழுகிறது, அதுபோல உலகில் யார் காயம்பட்டாலும் அழுகிறவன்தான் கவிஞன். 5000 கிலோமீட்டர் தொலைவில் காஸாவில் நடப்பதற்கு சென்னையில் ஒருவர் அழுகிறார். அதுதான் வியப்பு. அதுதான் அறவுணர்ச்சி. அதுதான் கோபம்.
முதல்முறை வாசிக்கையில் இது கவிதையாக இருக்கிறது. இரண்டாவது முறை வாசிக்கையில் உள்ளிருக்கும் கதை வெளி வருகிறது. மூன்றாவது வாசிப்பில் இதில் இருக்கும் கதாபாத்திரங்கள் தெரிகின்றன. நான்காவது முறை வாசிக்கையில் இதற்குள் இருக்கும் திரைக்கதைகள் தெரிகின்றன. இந்த நூலில் ஐந்துக்கும் மேற்பட்ட திரைக்கதைகள் இருக்கின்றன. ஒருமுறை ஈரான் இயக்குனர் மக்மல்பஃபை சந்தித்தேன்.
அவர் சொன்னார், சினிமா என்பது இந்தியாவில் பார்ப்பவருக்குப் பொழுதுபோக்கு. எடுப்பவருக்குத் தொழில். ஆனால், சினிமா என்பது எங்களுக்குப் போர்முறை. அவர் கையில் இந்த நூல் கிடைத்தால் ஐந்து திரைப்படங்கள் எடுத்துவிடுவார். யுத்தகளத்தின் செய்தியாளன் என்றொரு கவிதை இருக்கிறது. ஜோசப் ராஜா யுத்த களத்தின் கவிஞன். - செழியன், இயக்குநர், ஒளிப்பதிவாளர்
காத்திருக்கும் சாவிகள்
ஜோசப் ராஜா
தமிழ் அலை பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 7708597419
உத்வேகம் தரும் வாழ்க்கை: மருத்துவர் சி.பழனிவேலு, அறுவைச் சிகிச்சையில் புகழ்பெற்ற மருத்துவர். உலகின் பல முன்னணி மருத்துவ ஆய்விதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அறுவைச் சிகிச்சையில் இவர் பின்பற்றும் முறைக்காக இவர் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களால் பாராட்டப்பெற்று வருகிறார்.
மேலை நாட்டில் தோன்றிய மருத்துவ முறையை நன்கு கற்று அதைக் குறித்து இவர் நூல்கள் பல எழுதியுள்ளார். அந்நூல்கள் மேலைநாட்டவர்களுக்குப் படிப்பினையாக உள்ளன என்பதை அங்குள்ள மருத்துவர் ஒருவரே இந்த நூலின் அணிந்துரையில் பாராட்டுகிறார். பழனிவேலு என்கிற மருத்துவரின் பின்னணி என்ன என்பதை அவரது இந்த வாழ்க்கை வரலாற்று நூல் விவரிக்கிறது. திருச்செங்கோட்டுக்கு அருகில் கிராமத்தில் விவசாயக் கூலிக்கு மகனாகப் பிறந்தவர் இவர்.
பிறகு பஞ்சம் பிழைக்க மலேசியாவுக்குச் சென்றது இவரது குடும்பம். இந்தியா திரும்பி மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவுடன் படித்த கதையைச் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார். மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை என்பது அந்தக் காலத்திலும் காசில்லாதவர்களுக்குக் குதிரைக் கொம்பாகத்தான் இருந்திருக்கிறது என்பதை அவரது இந்த நூல் சொல்கிறது.
ஒரு நல்லுள்ளம் கொண்ட அரசியல்வாதி சல்லிப்பைசாகூட வாங்காமல் அவருக்குச் சிபாரிசு செய்து மருத்துவப் படிப்பில் சேர்த்துவிட்டுள்ளார். அந்தப் பகுதியை ஒரு சிறுகதைபோல் விவரித்துள்ளார் நூலாசிரியர். பிறகு சென்னை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரி அனுபவமும் அதுபோல் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. வறிய நிலையில் இருந்து இன்று புகழின் கொடுமுடியில் இருக்கும் வரையிலான வாழ்க்கையைத் திருத்தமாக பழனிவேலு எழுதியுள்ளார். அந்த வகையில் இந்த நூல் மாணவர்களுக்கும் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கும் உத்தேவகம் அளிக்கக்கூடியதாக இருக்கும். - குமரன்
எதுவும் இன்றி
டாக்டர் சி.பழனிவேலு
ஜெம் பவுண்டேசன்
தொடர்புக்கு: palanivelu@mac.com
மனதைத் திருடும் பயணம்! | நம் வெளியீடு: நிலவு காட்டிச் சோறூட்டும் தாயன்பு நம்முடையது. மமதி சாரியோ நமக்கு நிலவைக் காட்டி நற்கனவை ஊட்டுகிறார். கனிவான கானகம் வழியே நிலா இறங்கி வரும்படி அவிரா என்கிற சிறுமி தன்னுடைய லட்சியத்தை மனதில் ஏந்தி நடக்கும் இக்கதை, வரிக்கு வரி மயில் தோகைபோல் நம் மனதை வருடுகிறது. தமிழராகிய நம் மரபார்ந்த வாழ்வும், அதனுடன் பின்னிப் பிணைந்திருக்கும் இயற்கையும் ஃபாண்டசியும் அவிராவுடன் கைகோத்துக்கொண்டு நடக்கின்றன.
இனிக்கும் கானகக் காற்று தனது மாசற்ற நிலையை நம் முகம் தொட்டுச் செல்கிறது. பொன்னிற நெல் வயல்களைக் கண்டிராத நகரத்துச் சிறார்களைக் கிராமம் நோக்கிப் போய் அவற்றைக் காணும் ஆவலைத் தூண்டுகிறாள் அவிரா. அங்கே ஜெர்ரி எலியை அல்ல; வயல் எலியை நமக்கு அறிமுகப்படுத்துகிறாள்! நாம் இழந்து கொண்டிருக்கும் மலையாடுகளைக் காக்கும் பொறுப்பு நமக்கிருப்பதை மறைமுகமாகச் சொல்கிறாள்.
சமவெளியில் வாழும் சிறு விலங்குகளுடனான அவிராவின் பகிர்வும் உரையாடலும் நமது நேசம் பேசுகின்றன. அவிராவின் உலகத்தில் அவள் எதிர்கொள்ளும் உணர்வுத் தருணங்களை தன் தூரிகை எனும் கேமராவால் அசல் சித்திரங்களாக படம் பிடித்திருக்கிறார் இந்த ஓவிய எழுத்தாளர். திருமதி முள்ளம்பன்றி ‘சுருக்கென இருப்பார்’ என்று அஃறிணை உயர்திணையாக உயர்வு பெறுவதுபோலவே நம் மனதைச் சுருக்கெனத் தைத்து உயர்ந்து நிற்கிறது கலப்படம் ஏதுமற்ற இச்சிறார் படக் கதை.
விண்மீன் திருடும் அவிரா
எழுத்து, ஓவியம்:
மமதி சாரி
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.160
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு : 7401296562