சென்னை: குழந்தைகளின் கற்பனை வளத்தையும், படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் வகையில் எழுதப்பட்ட ‘விண்மீன் திருடும் அவிரா’ சிறார் நூல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.
இன்றைய குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கம் குறைந்து வரும் நிலையில், அவர்களின் கற்பனை வளத்தையும் படைப்பாற்றலையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் எழுத்தாளரும், ஓவியருமான மமதி சாரி ‘விண்மீன் திருடும் அவிரா’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலை ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் நூலை வெளியிட, முதல் பிரதியை நூலாசிரியர் மமதி சாரி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து குழந்தைகள் மாயா, ஓவியா, ஆரவ் ஆகியோர் நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
ஆசிரியர் கே.அசோகன் தலைமையுரை ஆற்றி பேசும்போது, ‘‘பொதுவாக, குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதுவது சற்று கடினமானது. குழந்தையுள்ளம் இருந்தால்தான் அவர்களுக்கான புத்தகங்களை எழுத முடியும். அந்த வகையில் குழந்தை உள்ளம் கொண்ட எழுத்தாளர் மமதி சாரி இந்நூலை எழுதியுள்ளார். முன்பெல்லாம் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் புத்தகங்கள் வாங்கிக்கொடுத்து படிக்கச் செய்வார்கள். தொலைக்காட்சி கிடையாது. இப்போது ஏராளமான புத்தகங்கள் உள்ளன. ஆனால், குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கிக்கொடுத்து படிக்கச் செய்யும் பழக்கம் அருகி வருகிறது.
இத்தகைய சூழலில் குழந்தைகளை படிக்க வைக்க இந்நூல் பெரிதும் உதவும், தமிழில் எத்தனை அழகான வார்த்தைகள் இருக்கின்றன என்பதை இந்நூலைப் படிக்கும்போது தெரிய வரும். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
நூலாசிரியர் மமதி சாரி ஏற்புரையாற்றி பேசும்போது, "குழந்தைகளுக்கான புத்தகங்கள் தமிழில் நிறைய வெளிவருகின்றன. ஆனால், காட்சிப்படங்கள் அவ்வளவாக இருப்பது கிடையாது. அந்த வகையில், தேவையான காட்சிப்படங்களுடன் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தை நூல்களுக்கென தனி இலக்கணம் உள்ளது. அந்த இலக்கணம் மாறாமல் இந்நூல் வந்திருக்கிறது. என்னைப் பொருத்தவரை இந்த நூல் சிவசக்தி மாதிரி. பாதி வார்த்தை, பாதி ஓவியம். நூலை படியுங்கள், உணருங்கள்" என்றார்.
முன்னதாக, ‘இந்து தமிழ் திசை’ உதவி செய்தி ஆசிரியர் ஜெயந்தன், பதிப்பக கிரியேட்டிவ் ஹெட் எம்.ராம்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ரத்னா ஆப்செட் பங்குதாரர் ஆதித்யா, பேராசிரியர் அப்துல்காதர், ‘இந்து தமிழ் திசை’ பதிப்பக மேலாளர் எஸ்.இன்பராஜ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை முதன்மை உதவி ஆசிரியர் ம.சுசித்ரா தொகுத்து வழங்கினார்.
எங்கு வாங்கலாம்? - ‘விண்மீன் திருடும் அவிரா’ நூல் 36 பக்கங்களைக் கொண்டது. குழந்தைகளைக் கவரும் வகையில் வண்ணப்படங்களுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நூலின் விலை ரூ.160. இதை www.store.hindutamil.in/publications என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வாங்கலாம். மேலும் விவரங்களுக்கு 7401296562 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
18 days ago