இலக்கியம்

தஞ்சாவூர் ஓவியக்கலையின் மேன்மை சொல்லும் ஆவணம்!

செய்திப்பிரிவு

அரூபத்திலிருந்து ரூபத்தைக் கொண்டு வருவது ஓவியக் கலை. ஓவியக் கலையில் எத்தனையோ வகைமைகள் இருந்தாலும் கற்பனை, படைப்பாற்றல், செய்நேர்த்தி, உருவாக்கம் போன்றவற்றில் தன்னிகரற்ற சிறப்பைக் கொண்டது தஞ்சாவூர் ஓவியக்கலை.

இதனையே தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்கான கருப்பொருளாக ஆய்வு செய்திருக்கிறார் ஜெ.அமுதன். ஓவியத் துறையில் நுண்மான் நுழைபுலம் மிக்க நூலாசிரியரின் திறமை, நூலின் பக்கத்துக்குப் பக்கம் பளிச்சிடுகிறது.தகவல்களை வெறுமனே சொல்லிவிட்டுச் செல்லாமல், வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், தொல்லியல் சார்ந்த தரவுகளுடன் `தஞ்சாவூர் ஓவியக்கலை' குறித்த முழுமையான ஓர் ஆவணத்தை இந்த நூலின்வழியாக வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் நூலாசிரியர்.

`இலக்கியம் போற்றும் தஞ்சாவூர் ஓவியக்கலை', `தஞ்சாவூர் ஓவியக் கலையின் வரலாறு', `தஞ்சாவூர் ஓவியக்கலை உருவாக்கம்', `தொன்மை கால ஓவிய அமைப்பு முறைகள்', `ஒப்பீட்டு நோக்கில் சோழர் காலம் முதல் தஞ்சாவூர் ஓவியக்கலை வரை'உள்ளிட்ட தலைப்புகளில் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை ஒழுங்குபடுத்தியுள்ளதிலேயே நேர்த்தி வெளிப்படுகிறது.

தில்லை கோயிலின் சாந்தார அறையின் சுவரில் இடம்பெற்றுள்ள திரிபுராந்தகர் ஓவியக்காட்சி, பதினேழாம் நூற்றாண்டில் வரையப்பட்டிருக்கும் `வாத்திய இசை மற்றும் வாய்ப்பாட்டு கலைஞர்கள்' என்னும் ஓவியங்களின் மூலம் இந்நூல், புராண காலத்தில் நடந்த சம்பவத்தையும், சில நூறாண்டுகளுக்கு முந்தைய சமூக நிலையையும் கடத்தும் கதை சொல்லியாகவும் பரிணமிக்கிறது. - யுகன்

தஞ்சாவூர் ஓவியக்கலை
முனைவர் ஜெ.அமுதன்
கேஜி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ. 550.
தொடர்புக்கு: 94423 98953.

செறிவான கட்டுரைகளின் தொகுப்பு | சிற்றிதழ் அறிமுகம்: ‘காக்​கைச்​சிறகினிலே’ மாத இதழின் தமிழர் திருநாளுக்கான பதிப்பு, தமிழர் வரலாற்றில் நெடுங்​கால​மாகக் கவனத்தை ஈர்த்து​வரும் பேசுபொருள்​களி​லிருந்து சமகாலச் சிக்​கல்கள் வரை பல படைப்பு​களின் நேர்த்தியான தொகுப்பாக வெளிவந்​துள்ளது.

வரலாற்​றாய்​வாளர் மே.து.ராசுகு​மார் எழுதி​யுள்ள ‘தமிழ்​நாட்டு வரலாற்றில் இருண்ட காலம் இருந்​த​தா?’ என்கிற கட்டுரை, சங்க இலக்​கியப் பாடல்களை முன்​வைத்து, ஆட்சி​யாளர்​களுக்கு இணையாக வளமான நில உரிமை​யாளர்கள் பொருளாதார வலிமை பெற்​றதை​யும் உற்பத்​தி​யில் முன்னேறிய சமூகம் போர்த்திறத்​தில் வல்லமையை இழந்​ததை​யும் கூறி, சங்க காலத்​துக்​கும் பல்லவர் காலத்​துக்​கும் இடைப்​பட்டதை பெரு உற்பத்​திக்கு முன்னோட்டக் காலமாகக் கூறுகிறது.

அதுவரையான காலனிமய​மாக்க அணுகு​முறையி​லிருந்து முற்றி​லும் விலகி நின்று, தென்னிந்தியா குறித்து முதல்​நிலைச் சான்​றுகளின் துணை​யோடு, ஆய்வை மேற்​கொண்ட நொபுரு கராஷிமா எழுதிய முன்னோடி நூல் 'தென்னிந்திய வரலாறும் சமூக​மும்: பொ.ஆ. 850-1800 வரையான சான்​றுகள் வழியிலான ஆய்வு​கள்.’

இதற்கு கி.இரா.சங்​கரன் எழுதி​யுள்ள அறிமுகக் கட்டுரை, முதலாம் ராஜராஜசோழன் நாட்​டின் முந்தைய நிலப்​பிரிவுகளை ஒருங்​கிணைத்து வளநாடு என்கிற அலகு​களாக மாற்றியதை​யும் இது மையப்​படுத்​தப்​பட்ட அரசு வலுப்பெற உதவியதை​யும் தொடக்​கத்​தில் இருந்த கூட்டு நிலவுடைமைகள் குறைந்து பிற்​காலத்​தில் தனியார் நிலவுடைமைகள் அதிகரித்​ததை​யும் விளக்கு​கிறது.

சிறுகதைகள், கவிதைகள், நூல்​களுக்கான மதிப்பு​ரைகள் போன்ற​வை​யும் இதழுக்​குச் செறிவைக் கூட்டு​கின்றன. பரிணாம உயிரிய​லாளர் ரிச்​சர்ட் டாக்​கின்ஸ் ‘மேஜிக் ஆஃப் ரியாலிட்டி’ நூலை எழுதி​யதையொட்டி ஆயிஷா இரா. நடராசன் எடுத்த நேர்​காணல், நம்​பிக்கைவாதத்​திலிருந்து வெளி​யேறி அறி​வியல்​வாதத்​துக்கு வருவது குறித்​துக் குழந்தை​களிடம் பேச ​விழைகிறது.- ஆனந்தன் செல்லையா

காக்கைச்சிறகினிலே
மாத இதழ்
ஆசிரியர்: வி.முத்தையா
விலை: ரூ.50
தொடர்புக்கு: 98414 57503

நறுமணம் கமழும் தந்தைமை: கவிதைத் தளத்தில் தொடர்ந்து காத்திரமாக இயங்கிவரும் ஜெயபாஸ்கரனின் புதிய கவிதை நூலிது. இந்நூலிலுள்ள கவிதைகள் தந்தை - மகள் உறவுகளுக்குள்ளான வாழ்வின் ஈரத்தைத் தொட்டு எழுதப்பட்டுள்ளன. தந்தைக்கும் மகளுக்குமான அன்பின் பகிர்தலை கவித்துவத்துடன் காட்சிப்பூர்வமாகவும் விவரிக்கும் இக்கவிதைகளை வாசிக்கையில், அவரவரின் தந்தையைப் பற்றியும் மகள்களைப் பற்றியும் எண்ணிப் பார்க்குமளவுக்கு வாசக நெருக்கத்தை உண்டாக்குகின்றன.

திருமணமாகிப் புகுந்தகம் சென்ற மகள், திரும்பவும் பிறந்தகத்திற்கு வந்திருக்கையில் இப்படிப் பேசுகிறாள்: ‘மாமியார் வீட்ல இருந்து/இப்ப எங்க அம்மா வீட்டுக்கு/வந்திருக்கேன்/என்று யாரிடமோ/சொல்லிக் கொண்டிருக்கிறாய்/ உனக்கென்று/ஒரு வீடற்றவளாக’ எனும் வரிகள் ஏதோவோர் மகளுக்கான கவிதையாக இல்லாமல், ஒட்டுமொத்த பெண்களின் உள்ளக்குமுறலாக ஒலிக்கிறது.

இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியானது பயணடத் தூரங்களை வெகுவாகக் குறைத்துவிட்ட போதிலும் உறவுகளின் வீடுகளுக்குச் செல்வதென்பது ஏனோ குறைந்திருக்கிறது. யாரையேனும் பார்க்க வேண்டுமென்கிற ஆசை வந்தால் இருக்கவே இருக்கிறது ‘வீடியோ கால்.’

‘நீ வந்திருப்பதாகச்/சிறுவர்கள் கூச்சலிட/வாசலுக்கு வந்திறங்கி/எதையெதையோ சொல்லியபடி/வீட்டிற்குள் நுழைகிற/உனது வருகையின் நறுமணம்/காணொலியில் கிடைக்குமா?’ என்று கேட்டு, தன் மகளை ‘வந்துபோ செல்லமே...’ என்றழைக்கும் ஒரு தந்தைமையின் நறுமணம் கமழும் அன்பினை உணர்த்துவதில் கவிஞரது கவிதைகள் கவனம் பெறுகின்றன.- மு.முருகேஷ்

மகள் இருந்த வீடு
ஜெயபாஸ்கரன்
வழுதி வெளியீட்டகம்
விலை: ரூ. 200
தொடர்புக்கு: 9444956924

SCROLL FOR NEXT