திராவிடச் சித்தாந்தத்தைக் கடுமையாக விமர்சிக்கும் ‘திராவிட மாயை’ புத்தகத்தின் மூன்று பகுதிகளை எழுதி, அவற்றின் வெற்றியால் ‘திராவிட மாயை சுப்பு’ என்றே அறியப்படும் சுப்புவின் தன் வரலாற்று நூல் ‘சில பயணங்கள்; சில பதிவுகள்’. இந்து மதத்தையும் இந்திய தேசியத்தையும் சமரசமின்றி ஆதரிக்கும் வலதுசாரிச் சிந்தனையாளரான சுப்பு, தனது இந்த வரலாற்று நூலில் தனது குடும்பம், அரியலூர் மாவட்டத்தில் தான் பிறந்து வளர்ந்த வாரியங்காவல் கிராமம், தனது பள்ளி வாழ்க்கை, சிறு வயதிலேயே சென்னை அடையாறில் தனது பெரியப்பா வீட்டுக்கு இடம் பெயர்ந்தது, தனது நண்பர்கள், பார்த்த வேலைகள், செய்த தொழில்கள், தேடல்கள், கண்டடைந்த விஷயங்கள் எனப் பலவற்றைப் பகிர்ந்திருக்கிறார்.
ஆர்எஸ்எஸ் உடனான தொடர்பு, அரசியல் ஈடுபாடு, பத்திரிகைப் பணி, கட்டுப்பாடு இன்றித் திரிந்து பட்ட கஷ்டங்கள், நண்பர்களால் கிடைத்த சுக துக்கங்கள், ஆன்மிக அனுபவங்கள், மகான்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் போன்றவை குறித்த ஆசிரியரின் அனுபவங்கள் சுவாரசியமானவை. ஆழமான தேடலும் இயல்பான துடுக்குத்தனமும் நிறைந்த தனது வாழ்க்கையை ஆசிரியர் சுப்பு எவ்வாறு திரும்பிப் பார்க்கிறார் என்பதை இதில் தெரிந்துகொள்ள முடிகிறது.
- மோகன்தாஸ் பாலா
சில பயணங்கள், சில பதிவுகள் (முதல் பகுதி)
சுப்பு
ஆதாரம் வெளியீடு
விலை: ரூ.540
தொடர்புக்கு: 9884271376
சொல்லித் தீராத துயரம்
சொந்த மண்ணில் வாழ முடியாமல் புலம்பெயர்ந்து, வேறொரு நிலத்தில் ஏதிலிகளாக வாழ நேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் சொல்லில் வடிக்க முடியாதவை; சொல்லியும் தீராதவை. ‘நிலங்கடந்தவள் என்பது நிலங்கடந்தவள் மட்டுமல்ல, அனைத்தையும் கடந்தவள். காலிலுள்ள செருப்பைக்கூட, கவிதையைப் போன்றே கழற்றிப் பழக்கப்பட்டவளின் மனம், மொழியில் உரையாடித் துய்த்த தனிமையின் துய்த்தல்’ என்று தனது கவிதைகளைப் பற்றிச் சொல்லும் தில்லை எழுதிய 70 கவிதைகள் இந்நூலில் உள்ளன. ‘நான் தொலைந்து கொண்டேயிருந்தேன் / என்னில் பூக்காத பூக்களை / ஆயவே / இச்சை கொண்ட மனம் / புழுதியில் புரண்டழுது / அலைக்கழிந்தது’ என்று குழந்தைமை மனதோடு இளகும் சில வரிகளுக்கிடையிலும், ‘உதிர்ந்துபோன / சலங்கைகள் / கடலைப் போலவே / இரைகின்றன / என் கரங்கள் அந்தரத்தில் / கழுகாகப் பறக்கின்றன’ என வேறுரு கொண்டு விண்ணேறும் வரிகளுக்கிடையிலும் வாசக மனம் சிக்கிக்கொள்கிறது. வறண்ட நிலத்தில் முளைத்தெழும் ஒற்றைச் செடியெனத் தனிமையின் வாதை மிகுந்த பொழுதுகளை நுட்பமான மொழியில் கவிதைகளாக்கியுள்ளார் தில்லை.
- மு.முருகேஷ்
நிலங்கடந்தவள்
தில்லை
தாயதி வெளியீடு
விலை: ரூ.210
தொடர்புக்கு: 044-24332924
படைப்பு தொனிக்கும் கட்டுரைகள்
கவிஞர் ந.பெரியசாமியின் ‘கணப் பிறை’ கட்டுரை நூல், வாசிப்பு அனுபவங்களைப் பகிர்தல் எனும் நோக்கில் அமைந்துள்ளது. இது இவரது இரண்டாவது கட்டுரைத் தொகுப்பு. இந்நூல் 17 கவிதைத் தொகுப்புகள், 6 புதினங்கள், 1 சிறுகதைத் தொகுப்பு என மொத்தம் 24 படைப்பிலக்கியங்கள் குறித்த இவரது பார்வையை மதிப்புரையாகப் பகிர்ந்துள்ளார். படைப்பாளியின் தனித்துவம், குறிப்பிட்ட அந்த நூலின் தனித்தன்மை, மையக்கருவின் இன்றியமையாமையை உணர்த்துதல், படைப்புவெளி மனிதர்களின் (மாந்தர்கள்) தனித்துவம், மேலும் அவர்கள் தனித்துவம் பெறும் உரையாடல்களை மேற்கோளாக்குதல், புனைவில் உள்ள யதார்த்தத்தின் நெருக்கத்தினைச் சுட்டுதல் என ஒழுங்குமுறை கொண்ட வடிவ நேர்த்தியில் கட்டுரையை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவரின் எழுத்துகள் சித்தரிப்புகளைக் கண்முன்னே நிகழ்த்தவல்லது. இடையே க.கைலாசபதி, க.பூரணச்சந்திரன், ச.தமிழ்ச்செல்வன் போன்றோரின் கருத்துகளைத் தகுந்த இடங்களில் மேற்கோளாக்கி இருப்பது கட்டுரைகளின் பலம். பாரதி தொடங்கித் தற்காலப் படைப்பாளிகள் வரை ஆழ்ந்த வாசிப்பு நல்ல படைப்பிற்கான ஊன்றுகோலாக அமைவதைக் கவிஞர் பெரியசாமியின் படைப்பிலும் தொனிப்பதை இந்நூல் வெளிப்படுத்துகின்றது.
- ரா.வி.ஜீவநாத்
கணப் பிறை
ந.பெரியசாமி
தேநீர் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9080909600
புலம்பெயர் வாழ்க்கையில் ஒரு காதல்
வாழ்க்கையில் நாம் சந்திக்க நேரிடும் இன்னல்களைச் சிக்கு முடியென அகற்றிடத் தோன்றும் விடுதலை உணர்வு உன்னதமானது. அதை குணா கந்தசாமியின் ‘டாங்கோ’ நாவல் உணர்த்துகிறது. வாழ்வின் யதார்த்தம் அப்படி நம்மை லேசில் விட்டுவிடுவதில்லை. நம்முன் இருக்கும் வஸ்துகள் யாவும், அப்போதைக்கான வலி நிவாரணிகளே. அனுபவமும் பக்குவமுமே நிரந்தரத் தீர்வைச் சொல்லும் என்பதையும் நாவல் உணர்த்தத் தவறவில்லை. வேற்று நிலத்தில் தன் வாழ்வைத் தொடங்கும் அநாதை உணர்வோடு இருக்கும் ஆனந்த் என்பவரின் காதல் கதையே இது. அந்நகர் குறித்த விவரிப்புகள் வாசிப்பவர்களையும் அங்கு வாழச் செய்யும் தன்மையில் இருந்திடச் செய்கிறது, குணாவின் மொழிநடை. நாவலில் வரும் சில கதாபாத்திரங்கள், எழுத்தாளர்கள், வாசிப்பு உடையோர், அரசியல் சித்தாந்தங்களில் தேர்ந்தோர், ஓவியங்களை ரசிக்கக் கூடியவர்கள் என இருப்பதால், அவ்வப்போது நல்ல உரையாடல்களை வாசிக்க முடிகிறது. ஆனந்த்-காந்தி உடனான உரையாடல்களும் சிறப்பு. நாவலில் சந்தியாவின் வருகைக்குப் பின் வாசிப்பில் வெப்பம் கூடுகிறது. எதுவொன்றையும் உணர்ச்சிகரமாக அணுகாமல், யதார்த்தமாகப் பார்ப்பதில் இருக்கும் தெளிவு வசீகரிக்கிறது. ஆனந்த்-சந்தியா காதல் என்னவாயிற்று என்பதே நாவலின் முடிச்சு. அம்முடிச்சு நாவலில் முடிவடையாமல் நமக்குள் நீண்ட உரையாடலை உருவாக்குவதாக உள்ளது.
- ந.பெரியசாமி
டாங்கோ
குணா கந்தசாமி
எதிர் வெளியீடு
விலை: ரூ.250
தொடர்புக்கு: 04259-226010