இலக்கியம்

“இலங்கைத் தமிழர்களிடம் சுயவிமர்சனப் பண்பு என்பது அறவேயில்லை” - எழுத்தாளர் நவமகன் நேர்​காணல்

இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்களுக்கு இலங்கை அரசும் ராணுவமும் மட்டுமின்றி, தமிழ்ப் போராளிக் குழுக்களிடம் நிலவிய ஜனநாயகமற்ற பாசிசப் போக்கும் பிரதான காரணம் என்கிற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

தமிழர்கள் பேரினவாதத்தால் கொல்லப்பட்டது மட்டுமின்றி, தமிழர்களாலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட ஏராளமான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இலங்கையில் மட்டுமின்றி, புலம்பெயர்ந்து சென்ற நாடுகளிலும் தமிழர்கள் சந்தித்த துயரங்களுக்கான காரணங்களைத் தனது எழுத்தின் மூலம் விசாரணை செய்கிறார், தற்போது நார்வேயில் வசித்துவரும் எழுத்தாளர் நவமகன்.

கவிஞராக அறிமுகமான அவர், ‘போக்காளி’ நாவல், ‘ஆகிதம்’ சிறுகதைத் தொகுப்பு மூலம் கவனம் பெற்றுள்ளார். நார்வேயில் வசித்துவரும் புலம்பெயர் தமிழர்கள் பற்றிய முக்கியமான இலக்கியப் பிரதிகளாக இவருடைய படைப்புகள் கருதப்படுகின்றன.

முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு முந்தைய 20 ஆண்டுகள், பிந்தைய 10 ஆண்டுகள் என இலங்கைத் தமிழர்கள் போராட்டத்தின் 30 ஆண்டுக் கால வரலாற்றை உங்களுடைய ‘போக்காளி’ நாவல் பேசுகிறது. நாவலின் கதையோட்டத்தைக் காலவரிசைப்படி வகைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

எதிர்பார்த்ததை விடவும் நாவலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்தக் காலவரிசை திட்டமிட்டதல்ல. நான் புலம்பெயர்ந்த காலத்திலிருந்தே கதையை எழுத ஆரம்பித்தேன். கதையோட்டத்தில் இயல்பாகவே காலவரிசை வந்துவிட, அந்தந்த ஆண்டுகளையே அத்தியாயங்களாகவும் ஆக்கிவிட்டேன்.

ஆயுதப் போராட்டக் காலத்தில் தமிழ்ப் போராளிக் குழுக்களின் நிலைப்பாடுகள், நாடு கடந்த தமிழீழம் போன்றவை பற்றி விமர்சனம் செய்கிறீர்கள்...

இந்த விமர்சனங்களுக்கு எதிர்ப்பைவிடவும் ஆதரவுதான் பலமாக இருந்தது. ஏனெனில், யதார்த்தத்தை மீறி எதையும் புனைந்துவிடவில்லை. அதனை வாசகர்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். எதிர்ப்பு என்று பார்த்தால் அது வெளிப்படையாக இல்லாவிட்டாலும், புறக்கணிப்புகள் மூலமாக அதனை விளங்கிக்கொள்ள முடிந்தது. இலங்கைத் தமிழர்களிடம் சுயவிமர்சனப் பண்பு என்பது அறவேயில்லை.

போராட்ட வரலாற்றில் இதுவரையிலும் எமது பக்கத் தவறுகளை ஏற்றுக்கொண்டதே இல்லை. இனத் தூய்மைவாதம் பேசியே காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு எனது எழுத்துகள் கசக்கத்தான் செய்யும். அதற்காக நான் உண்மைகளை மறைத்துப் பொய்களை எழுத முடியாதல்லவா?

போர்க்களத்தில் உயிர்நீத்த தங்கள் இயக்கத்தினருக்கு மரியாதை செலுத்தும் வகையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மாவீரர்கள் தினத்தை அனுசரித்தது. எல்லா இயக்கங்களின் போராளிகளுக்கும் அந்த அங்கீகாரம் தரப்பட வேண்டும் என்று நீங்கள் கூறுவது சரியா?

இந்தக் கேள்வியே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இன்று ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கின்ற எந்தவொரு இயக்கமும் இல்லை. ஆரம்பக் காலங்களில் ஈழ விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட பெரும்பாலான இளைஞர்கள், இயக்கங்களின் கொள்கைகளைப் பார்த்தோ அல்லது அரசியல் சித்தாந்தங்களை அறிந்துகொண்டோ, புரிந்துகொண்டோ இயக்கங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை.

அப்போதிருந்த சூழ்நிலையில் இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உணர்வுபூர்வமான உந்துதல் மட்டுமே அவர்களிடத்தில் இருந்தது. அச்சந்தர்ப்பத்தில் எந்த இயக்கத்தின் தொடர்பு அவர்களுக்கு எளிதாகக் கிடைத்ததோ அதில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

அப்படி இணைந்தவர்களில் பலர் ராணுவத்தினருடனான மோதல்களிலும் கொல்லப்பட்டார்கள். இயக்கங்களுக்கு இடையிலான மோதல்களிலும் கொல்லப்பட்டார்கள். ஒரே இயக்கத்திற்குள் நடந்த கருத்து முரண்பாட்டு மோதல்களிலும் கொல்லப்பட்டார்கள். ஆனால், இவர்கள் அனைவருமே தமிழீழத்திற்காகப் போராட முன்வந்த தமிழ்த் தாயின் பிள்ளைகளாகவே இருந்தார்கள்.

தமிழ்த் தாயின் வயிற்றில் பிறந்த எந்தவொரு போராளியும் ஓர் இயக்கத்தை ஆரம்பிக்கும்போது அதனைத் தமிழீழ விடுதலைக்கு எதிரான இயக்கமாக ஆரம்பிக்கவில்லை என்பதுவே வரலாற்று உண்மை. அப்படியிருக்க, ஈழத்துக்காகப் போராடச் சென்று, இன்று ஏகப் பிரதிநிதித்துவக் கொள்கையின் அடிப்படையில் கொல்லப்பட்டிருக்கும் போராளிகளை எப்படிப் புறக்கணிக்க முடியும்? தமிழ் இனமாக எல்லா இயக்கப் போராளிகளையும் ஒன்றிணைத்து அகவணக்கம் செலுத்துவதுதானே நியாயமானது.

உயிரோடு இருந்தபோதுதான், சிதறிக் கிடந்த எமது போராளிகளை எங்களால் ஒன்றுசேர்க்க முடியாமல் போய்விட்டது. மரணத்தின் பின்னாவது, அவர்களை ஒன்றுசேர்த்து அகவணக்கம் செலுத்த முடியாத அளவுக்கு இழிவான இனமா நாங்கள்?

வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் அரசியல் உரையாடல்களை ‘போக்காளி’ நாவல் நெடுகிலும் காண முடிகிறது. இந்த உரையாடல்களை வைத்ததற்கான நோக்கம் என்ன?

புகலிட தேசங்களில் நான் சந்தித்த பல நபர்கள்தான் ‘போக்காளி’ நாவலிலும், ‘ஆகிதம்’ சிறுகதைத் தொகுப்பிலும் கதைமாந்தர்களாக வருகிறார்கள். நாவலில் கட்டமைத்திருக்கின்ற தர்க்கரீதியிலான உரையாடல்கள் மூலமாக அவர்களுக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்தலாம் என்று எண்ணினேன். நாவலை வாசித்த பலருடன் உரையாடியதில் எனது எண்ணம் தோற்கவில்லை என்றே தோன்றியது.

பன்மைக் கலாச்சாரம் நிலவும் மேற்கத்திய நாடுகளில் ஒற்றைக் கலாச்சார ஏக்கத்திலேயே உங்கள் கதைசொல்லிகள் தவிப்பதைக் காண முடிகிறது. பன்மைத்துவத்தில் கலக்க முடியாத இந்த ஒவ்வாமைக்கான காரணம் என்ன?

ஆம், நல்ல கேள்வி. ஏனென்றால், நாங்கள் தமிழர்கள். அவ்வளவேதான். சந்திர மண்டலத்தில் போய்க் குடியேறினாலும் தமிழ்ப் பண்பாட்டுடனும் தமிழ்க் கலாச்சாரத்துடனும்தான் வாழ்வோம். ஆனால், புலம்பெயரிகளின் அடுத்த தலைமுறையினர் அப்படியல்ல. அவர்கள் பல கலாச்சாரங்களை உள்வாங்கி வளர்கிறார்கள்.

அதனால்தான் புலம்பெயர் தேசங்களில் முதல் தலைமுறையினருக்கும் அவர்களது பிள்ளைகளான அடுத்த தலைமுறையினருக்கும் இடையில் பண்பாட்டுரீதியிலான மோதல்கள் தோன்றியிருக்கின்றன. இதனால், இரண்டு பகுதியினரும் பெரும் உளவியல் தாக்கங்களுக்குள் சிக்குண்டு கிடக்கிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல.

புலம்பெயர்ந்த குடும்பங்களின் மூன்று தலைமுறைகளுக்கு இடையேயான மனவெளியைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் இடைவெளிகள், அதனால் ஏற்படும் உறவுச் சிக்கல்கள் பற்றி உங்கள் கதைகள் பேசுகின்றன...

இதுவொரு முக்கியமான புள்ளியாக இருக்கிறது. புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினர் ‘நாங்கள் தமிழர்கள்’ என்ற அடையாளங்களுடனேயே வாழ்ந்து விட்டார்கள். தங்கள் பிள்ளைகளும் அதே அடையாளங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அது நடைமுறை சாத்தியமற்றது. இங்கேதான் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

முதல் தலைமுறையினர் பண்பாடு, கலாச்சாரம் என்று சொல்லிக்கொண்டு, சில பிற்போக்குத்தனங்களையும் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம்பெயர்த்திக் கொண்டுவந்து இருக்கிறார்கள். இது முதல் தலைமுறையினருக்கும் இரண்டாம் தலைமுறையினருக்கும் இடையில் இப்போது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் மூன்றாம், நான்காம் தலைமுறையினரிடம் தமிழ் அடையாளங்கள் அழிந்துபோவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

‘ஆகிதம்’ சிறுகதையின் நாயகன் சத்தியநாதனைப் போலவே மனச் சிதைவுச் சிக்கல்களை எதிர்கொண்டவர்கள் ஏராளம் பேர் இருப்பார்கள் அல்லவா…

ஆம். இங்கு மட்டுமல்ல, தாய்நாட்டிலும் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் முடிவிற்குப் பின் நான் அப்படிப்பட்ட பலரைச் சந்தித்து உரையாடியும் இருக்கின்றேன். அவர்கள் என் கதைகளுக்குள் கதைமாந்தர்களாக உலவுவது தவிர்க்க முடியாதது. அரசியல் தெளிவற்ற முப்பது வருடக்கால ஆயுதப் போராட்டத்தின் விளைவே இது.

முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்குப் பிறகு திராவிட இயக்கங்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால், ஷோபாசக்தியைப் போலவே, உங்கள் எழுத்துகளிலும் இந்த விமர்சனங்களை நிராகரிக்கும் போக்கு தெரிகிறதே...

ஏனென்றால், எங்களைப் போன்றவர்கள் யதார்த்தவாத நிலையிலிருந்தே அரசியலை நோக்குகின்றார்கள். யதார்த்தத்தை மீறிக் கனவுகள் காண்பதில்லை. காலங்கால மாக திராவிட இயக்கங்கள் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு நிறைய உதவிகளையும், நன்மைகளையுமே செய்திருக்கின்றன.

ஆனால், முள்ளிவாய்க்கால் சம்பவமானது அவர்களின் கைகளை மீறிய சம்பவம். புலிகளின் பல வரலாற்றுத் தவறுகளே இதற்கெல்லாம் காரணம். தொடர்ந்து எங்கள் தரப்புத் தவறுகளுக்கு மற்றவர்களைக் காரணம் சொல்லிக்கொண்டும், எங்கள் தவறுகளைப் புனித மண் போட்டு மூட முனைவதன் மூலமாகவும் இத்தகைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும். இதுவே என் போன்றவர்களின் கவலையாகும்.

- தொடர்புக்கு: devadasan.v@hindutamil.co.in

SCROLL FOR NEXT