இலக்கியத்திலிருந்து திரைக்கு வந்திருக்கும் மற்றுமொரு படைப்பு ‘த சில்ரன்ஸ் டிரெயின்’ (The Children's Train). இத்தாலிய எழுத்தாளர் வியோலா ஆர்டன் எழுதி 2019இல் வெளியான இந்த நாவல், இதே பெயரில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கிறிஸ்டினா காமன்சினி இயக்கத்தில் படமாக வெளியாகியிருக்கிறது.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் இது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு 1940களின் இறுதியில் இத்தாலியில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் உலகப் போரில் முசோலினியும் பாசிசவாதிகளும் வீழ்த்தப்பட்டுவிட்டாலும் போரின் கோரத்தாண்டவத்தால் இத்தாலி மோசமாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, இத்தாலியின் தெற்குப் பகுதி. அதனால்,
அங்கிருந்த குழந்தைகள் வடக்குப் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு அனுப்பப்பட் டார்கள். அவர்களில் ஒரு சிறுவன் அமெரிகோ. ஆயிரக்கணக்கான சிறுவர்களோடு அமெரிகோவும் வடக்கு இத்தாலிக்குப் பயணப்படுகிறான். புதிய நிலம், புதிய வாழ்க்கை, புதிய நம்பிக்கை ஆகியவற்றைக் கைகொள்ளும் ஆவலோடு அவன் புறப்படுகிறான்.
போரின் சிதைவிலிருந்து மீண்டெழுகிற இத்தாலிய தீபகற்பம் அவனது கண்கள் வழியாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. உண்மையில் குடும்பம் என்றால் என்ன என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது. நம் எதிர்காலத்தையும் லட்சியத்தையும் அடைவதற்காக நாம் சில நேரம் தாயின் அன்பைக்கூடப் புறக்கணிக்க வேண்டியதிருக்கும் என்பதும் இந்தப் படத்தின் அடிநாதமாக ஒலிக்கிறது.