புலம்பெயர் இலக்கியம் என்பது கடந்த 20 வருடங்களாக நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு ஆற்றல்மிக்க வகைமையாக, ஒரு புதுப் பிராந்தியமாக வலுவான தடம் பதித்துள்ளது. உலகின் திசையெங்கும் அகதிகளாகக் குடிபெயர்ந்த ஈழத் தமிழர்களின் எழுத்தியக்கம் அளித்த கொடை. தாய் நிலத்திலிருந்து புலம்பெயர்ந்தாக வேண்டிய நெருக்கடி நிலைகளும், அகதிகளாகத் தஞ்சமடைந்த நிலத்தின் அரசியல்-சமூக-கலாச்சாரப் பின்புலத்தில் இனம், மொழி, சமூகம் என்றான அடிப்படை வேறுபாடுகளுக்கிடையே வாழ்ந்தாக வேண்டிய நிர்பந்தங்களும் என மனித மன அவதிகள் வடிவமைக்கும் எழுத்துலகம். இது ஒருபுறம் எனில், 50 ஆண்டுகளுக்கும் முன்னரே புலம்பெயர் இலக்கியத்தைத் தமிழில் உருவாக்கிய முதல் மகத்தான படைப்பு சக்தி, ப.சிங்காரம். ஆனால், அகதியாக அல்ல. பிழைப்புக்காகத் தென்கிழக்காசிய நாடுகளில் சில ஆண்டுகள் தஞ்சம் புகுந்தவராக.
பிழைப்பு தேடிக் கடலோடியவர் ப.சிங்காரம். மதுரையை அடுத்த சிங்கம்புணரியில் பிறந்த இவர், தன்னுடைய 18-வது வயதில், 1938-ல், இந்தோனேசியாவின் மைடானுக்கு வட்டிக்கடையில் அடுத்தாளாக வேலைக்குச் சென்றார். (பெட்டிக்கடைப் பையன், அடுத்தாள், மேலாள் என்பன அத்தொழில் துறையின் படிநிலைகள்.) 1940-ல் இந்தோனேசியாவின் மராமத்துத் துறையில் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில்தான் இரண்டாம் உலக யுத்தத்தின் தொடர்ச்சியாகத் தென்கிழக்காசிய யுத்தம் மூண்டது. இச்சமயத்தில் இந்தோனேசிய ராணுவ அரசின் அனுமதி பெற்று பினாங்குக்குக் கப்பலில் சரக்குகள் அனுப்பும் வர்த்தகத்தைச் சில தமிழர்களோடு சேர்ந்து மேற்கொண்டார். இக்காலகட்டத்தில் அவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது. முதல் பிரசவத்தின்போது மனைவியும் குழந்தையும் இறந்துவிட்டனர். வாழ்வு அவர் மீது நிகழ்த்திய கொடூரத் தாக்குதல் இது. அதனைத் தொடர்ந்து, 1946-ல் ஊர் திரும்பிய ப.சிங்காரம், வாழ்நாள் முழுவதும் ஒரு தனிமைத் தீவை அமைத்துக்கொண்டு வாழ்ந்திருந்தார். 1950-களின் தொடக்கத்தில் ‘கடலுக்கு அப்பால்’ நாவலையும், 1960-களின் தொடக்கத்தில் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலையும் எழுதினார்.
வாழ்வாதாரத்துக்காகப் புலம்பெயர்ந்து வாழ்ந்த அந்த எட்டாண்டுகளில், யுத்த காலமாக அமைந்துவிட்ட, 1942-46 வரையான நான்கைந்தாண்டுகள்தான் அவருடைய இரு நாவல்களும் களனாகக் கொண்டிருக்கும் காலம். இந்தோனேசியாவில் தமிழர்கள் வட்டிக்கடை நடத்தும் செட்டித் தெருவில் சாதாரண பெட்டியடிப் பையன்களாக இருந்த பல தமிழ் இளைஞர்களுக்கு லட்சிய நோக்குடன் கூடிய சாகச வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு சாத்தியத்தை யுத்த காலம் அளித்தது. 1942-ன் தொடக்கத்தில் தென்கிழக்காசிய நாடுகளில் பிரிட்டிஷ் ராணுவத்தை அடிபணியச் செய்து, ஜப்பான் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இக்காலகட்டத்தில் நேதாஜி, இந்திய தேசிய ராணுவத்தை ஜப்பானின் ஆதரவோடு நிர்மாணிக்கிறார். அன்று தென்கிழக்காசிய நாடுகளில் வட்டித் தொழிலிலும் வர்த்தகத்திலும் ஈடுபட்டிருந்த தமிழர்கள் யுத்த கால அவதிகளில் நிலை குலைந்திருக்கின்றனர். இத்தருணத்தில் தோன்றியிருந்த இந்திய சுதந்திர சங்கத்தின் போர் உறுப்பான ‘ஆஸாத் ஹிந்த் ஃபவ்ஜ்’-ல் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சேர்ந்து போர்ப் பயிற்சி பெறுகின்றனர்.
1945 ஆகஸ்டில் மீண்டும் பிரிட்டிஷ் ராணுவம், ஜப்பான் ராணுவத்தை வீழ்த்தி, ஆட்சிப் பொறுப்பேற்கிறது. ஜப்பானிய ராணுவ ஆட்சியின் கடைசி நாட்களில்தான் விமான விபத்தில் நேதாஜியின் மரணமும் நேர்கிறது. இதனையடுத்து, இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் அதிலிருந்து வெளியேறி, பழைய மற்றும் புதிய பிழைப்புத் துறைகளுக்குத் திரும்புகிறார்கள். இக்காலச் சூழலின் விளைவாக, ‘கடலுக்கு அப்பால்’ நாவலில் செல்லையா தன் காதலி மரகதத்தை அடைய முடியாத பெரும் இழப்புக்கு ஆளாகிறான். ‘புயலிலே ஒரு தோணி’ பாண்டியன் அந்நிய மண்ணில் சுடப்பட்டு மரணமடைகிறான். ‘கடவுளால் கைவிடப்பட்ட உலகத்தின் காவிய ஆக்கமே நாவல்’ என்ற ஜார்ஜ் லூகாஸின் கருத்தை மெய்ப்பிக்கும் இரு நாவல்கள் இவை.
‘கடலுக்கு அப்பால்’ நாவல் இரண்டாம் உலக யுத்த கால நெருக்கடிகளின் பின்புலத்தில் ஓர் அழகிய காதல் கதையை ஊடுபாவாகக் கொண்டது. இரண்டாவது நாவலான ‘புயலிலே ஒரு தோணி’, தென்கிழக்காசிய நாடுகளின் யுத்த கால வரலாற்றைப் புனைவுத் தளத்தின் அதிகபட்ச சாத்தியங்களுடன் கைப்பற்றியது. புலம்பெயர்ந்த நாட்டில் இருப்பும், தாய் மண்ணின் ஏக்க அழைப்புகளும், யுத்த கால நெருக்கடிகளும், காலம் மனிதனுக்கு இடும் கட்டளைகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் மனோபாவங்களும், புதிய சாத்தியங்களில் தன்னை இருத்தும் சாகச வேட்கையும் என ஒரு காலகட்டத்திய வாழ்வைப் புனைவுலகு அனுமதிக்கும் எல்லா எல்லைகளுக்குள்ளும் அகப்படுத்தியிருக்கும் மகத்தான படைப்பு.
1970-களின் மத்தியில் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை வாசித்துவிட்டு பிரமிப்பின் உச்சத்தைத் தொட்டிருந்தேன். அது பற்றிய பேச்சாகவே இருந்துகொண்டிருந்தேன். அப்போது பெரியநாயகி அச்சகம் குமாரசாமியுடன் இணைந்து மதுரையில் தொடங்கியிருந்த பி.கே. புக்ஸ் என்ற பதிப்பக வேலைகள் தொடர்பாகத் தஞ்சை ப்ரகாஷ் அவ்வப்போது மதுரை வந்துகொண்டிருந்தார். அவர்தான், ப.சிங்காரம் ‘தினத்தந்தி’ நாளிதழின் மதுரை பதிப்பில் பணிபுரிகிறார் என்றும், ‘ஒய்எம்சிஏ’வில்தான் தங்கியிருக்கிறார் என்றும் சொன்னார். அதேசமயம், தான் ஒருமுறை பார்க்கச் சென்றது ஏமாற்றமளித்ததாகவும் யாரையும் சந்திக்கவோ பேசவோ சிங்காரம் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். இது என்னைச் சோர்வடையச் செய்து உடனடியாகச் சந்திக்கவிடாமல் தடுத்துவிட்டது.
1983 ஜூன் 2-ல் நான் மதுரையைவிட்டுச் சென்னைக்குக் குடிபெயர்வதற்குச் சில நாட்களுக்கு முன்பாக, அவரைப் பார்த்தே தீர்வது என்ற முடிவெடுத்தேன். ஒருநாள் மாலை ஒய்எம்சிஏ சென்று விசாரித்தறிந்து அவரது மாடி அறையை அடைந்தேன். கதவு வெறுமனே சாத்தியிருந்தது. லேசாகத் திறந்து, எட்டிப்பார்த்தேன். கட்டிலில் சட்டை போடாமல் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவர்தான் சிங்காரம் என்ற நிச்சயத்தோடு, ‘உங்களைத்தான் பார்க்க வந்தேன்’ என்றேன். ‘உள்ள வாங்க’ என்றார். எளிமையான, இணக்கமான சந்திப்பு. நவீனத் தமிழ் இலக்கியம், சிற்றிதழ் இயக்கம் என்ற என்னுடைய ஆவேசத்துக்கு அவரிடம் கிஞ்சித்தும் இடமிருக்கவில்லை. அது பற்றியெல்லாம் அவருக்கு எவ்வித ஆர்வமும் இல்லை. தன் கால இலக்கியப் போக்கோடு ஒட்டுறவு இல்லாமலேயே ஒரு படைப்பாளி ஒரு அற்புதத்தை நிகழ்த்த முடியும் என்பதையும், ஒரு சிறந்த படைப்பு படைப்பாளியைவிடவும் ஞானமிக்கது என்பதையும் பிரத்தியட்சமாக உணர்த்திய சந்திப்பு. பின்னர், நான் சென்னைக்குக் குடிபெயர்ந்த பிறகு, மதுரைக்குச் சென்ற ஒவ்வொருமுறையும் அவரைச் சந்திக்கத் தவறியதில்லை. அதேசமயம், வாய்ப்பு அமையும்போதெல்லாம் அவருடைய படைப்புகளின் மேன்மையைப் பற்றி, குறிப்பாகப் ‘புயலிலே ஒரு தோணி’ பற்றி, எழுதவும் உரையாடவும் செய்தேன். இதன் தொடர்ச்சியாக, எங்கள் உறவு, இலக்கியத்திலிருந்து கிளைத்து இலக்கியம் கடந்த ஒருவிதப் பாச உறவாகத் தன்னியல்பாக மலர்ந்தது. அவர் என் சந்திப்பை நேசித்தார். சரளமாகப் பேசத் தொடங்கினார்.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago